அன்னை தெரேசா

அன்னை தெரேசா (Mother Teresa, 26 ஆகத்து 1910 – 5 செப்டம்பர் 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார்.

இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.

அன்னை தெரேசா
1986 இல் மேற்கு செருமனி, பான் நகரில் அன்னை தெரேசா
பதவிசபை தலைவர்
சுய தரவுகள்
பிறப்பு
ஆக்னசு கோஞ்சா போஜாஜியூ

(1910-08-26)26 ஆகத்து 1910
இறப்பு5 செப்டம்பர் 1997(1997-09-05) (அகவை 87)
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
தேசியம்இந்தியர்
துறவற சபைலொரெட்டோ சகோதரிகள்
(1928–1950)
பிறர் அன்பின் பணியாளர் சபை
(1950–1997)
பதவிகள்
பதவிக்காலம்1950–1997
பின் வந்தவர்அரு. சகோ. நிர்மலா ஜோஷி

1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

பல்வேறு நபர்கள், அரசுகள் மற்றும் அமைப்புகளெனப் பலர் இவரைப் புகழ்ந்து வந்தாலும், பலவிதமான விமர்சனங்களையும் இவர் சந்தித்தார். இத்தகைய விமர்சனங்கள் கிறித்தபர் ஃகிச்சின்சு, மைக்கேல் பேரன்டி, அரூப் சட்டர்ஜி போன்ற நபர்களாலும் விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளாலும் சாட்டப்பட்டது. இவர்கள் அன்னை தெரேசாவின் உறுதியான கருக்கலைப்பு எதிர்ப்பு நிலையையும், ஏழ்மை தரும் ஆன்மீக மேன்மையின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையையும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு அவர் ஞானஸ்நானம் அளிக்கிறார் எனவும் குற்றம் சாட்டினர். சில செய்தி ஊடகங்கள் அவரது நல்வாழ்வு மையங்களின் மருத்துவ வசதித் தரத்தைப் பற்றி விமர்சிப்பனவாகவும், நன்கொடைப் பணம் செலவு செய்யப்படுவதின் விதத்தைப் பற்றிக் கவலை எழுப்பியும் செய்திகளை வெளியிட்டன.

இவரின் இறப்புக்குப் பின் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் முக்திபேறு அடைந்தவராக அறிவிக்கப்பட்டு கொல்கத்தாவின் அருளாளர் தெரேசா என்று பட்டம் சூட்டப்பட்டார்.

தொடக்க வாழ்க்கை

ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ (கோன்ஜா என்பதற்கு அல்பேனிய மொழியில் "ரோஜா அரும்பு" என்று பொருள்) 1910 ஆகஸ்டு 26 அன்று ஓட்டோமான் பேரரசின் அஸ்கப் (தற்போது மாக்கடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜே) இல் பிறந்தார். ஆகஸ்டு 26 ஆம் தேதி பிறந்த போதிலும், அவர் திருமுழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27 ஆம் தேதியையே தனது உண்மைப் பிறந்தநாளாகக் கருதினார். அல்பேனியாவின் ஷ்கோடரில் வாழ்ந்து வந்த குடும்பமான நிக்கல் மற்றும் டிரானா போஜாக்சியுவின் குழந்தைகளில் இளையவர் இவர். அவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார். 1919 ஆம் ஆண்டில், ஸ்கோப்ஜே அல்பேனியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு ஆக்னஸுக்கு எட்டு வயதாயிருக்கும் போது காலமானார். அவரது மரணத்திற்குப் பின், அவரது தாயார் அவரை நல்லதொரு உரோமன் கத்தோலிக்கராக வளர்த்தார். ஜோன் கிராப் க்ளூகாசின் வாழ்க்கை வரலாற்றின்படி குழந்தைப் பருவத்தில் ஆக்னஸ் மறைப் பணியாளர்களாலும் அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதுக்குள் துறவறம் புக முடிவு செய்து கொண்டார். தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மறைப்பணியாளராகத் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை.

இந்தியாவின் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க லொரேட்டோ சகோதரிகள் பயன்படுத்தும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்பர்ன்காமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார் ஆக்னஸ். 1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்தடைந்து இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தனது துறவற புகுநிலையினருக்கான பயிற்சியினை ஆரம்பித்தார். தனது முதல் நிலை துறவற உறுதிமொழியினை அவர் 1931 மே 24 அன்று அளித்தார். அவ்வமயம் மறைப்பணியாளரின் பாதுகாவலரான லிசியே நகரின் தெரேசாவின் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். கிழக்குக் கல்கத்தாவின் லொரேட்டோ கன்னியர் மடப் பள்ளியில் தனது இறுதி துறவற உறுதிமொழியினை 1937, மே 14 ஆம் தேதி அளித்தார்.

பள்ளிக்கூடத்தில் பயிற்றுவிப்பதை தெரேசா விரும்பினாலும் கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாய் கலங்கச் செய்தது. 1943-ன் பஞ்சம் துயரத்தையும் சாவையும் அந்நகரத்துக்குக் கொணர்ந்தது என்றால் 1946-ன் இந்து/முஸ்லிம் வன்முறை அந்நகரத்தை நம்பிக்கையின்மையிலும் அச்சத்திலும் ஆழ்த்தியது.

பிறர் அன்பின் பணியாளர் சபை

அன்னை தெரேசா 
பிறர் அன்பின் பணியாளர் சபைத் துறவிகள்

செப்டம்பர் 10, 1946 இல் ஆண்டு தியானத்திற்காகக் கல்கத்தாவிலிருந்து, டார்ஜீலிங்கின் லொரேட்டோ கன்னிமடத்திற்கு தெரேசா பயணம் செய்த பொழுது அவருக்கு நேர்ந்த உள் உணர்வை அவர் பின்நாட்களில் "அழைப்பினுள் நிகழ்ந்த அழைப்பு" என அழைத்தார். "நான் கன்னியர் மடத்தை விட்டு வெளியேறி, ஏழைகள் மத்தியில் வாழ்ந்து கொண்டே அவர்களுக்கு உதவ வேண்டும். அது ஒரு கட்டளை. அதனைத் தவறுவது (இறை) நம்பிக்கையை மறுதலிப்பதற்கு ஒப்பானது." என்றார் அவர். 1948 ஆம் ஆண்டில் ஏழைகளுடனான தனது சேவையை ஆரம்பித்தார். லொரேட்டோ துறவற சபையின் உடைகளைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார். தொடக்கத்தில் மோதிஜில்லில் பள்ளிக்கூடம் ஆரம்பித்த அவர் பின்னர் ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அவரது முயற்சிகள் விரைவிலேயே பிரதமர் உட்பட இந்தியாவின் உயர் அதிகாரிகளின் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்து அவர்களது பாராட்டுதலைப் பெற்றுத்தந்தன.

தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதினார்.

1950 அக்டோபர் 7 ஆம் தேதி, பிறர் அன்பின் பணியாளர் சபையை மறைமாவட்ட அளவில் துவக்க தெரெசாவுக்கு கத்தோலிக்க திருச்சபையில் அனுமதி அளிக்கப்பட்டது. அச்சபையின் குறிக்கோளாக அவர் கூறியது, "உண்ண உணவற்றவர்கள், உடுத்த உடையற்றவர்கள், வீடற்றவர்கள், முடமானவர்கள், குருடர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களையும், தங்களை சமூகத்திற்கே தேவையற்றவர்களெனவும், அன்பு செய்யப்படாதவர்களெனவும், கவனிக்கப்படாதவர்களெனவும் எண்ணிக்கொண்டிருப்பவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமென்று எண்ணப்பட்டு அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவனித்தலே ஆகும்." கொல்கத்தாவில் 13 உறுப்பினர்களையே கொண்ட சிறியதொரு அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட இச்சபை, இன்று 6000க்கும் மேலான அருட்சகோதிரிகளால் நடத்தப்படும் அனாதை இல்லங்களையும், எய்ட்ஸ் நல்வாழ்வு மையங்களையும், தொண்டு மையங்களையும் தன்னகத்தே கொண்டு அகதிகள், குருடர், ஊனமுற்றோர், முதியோர், மது அடிமைகள், ஏழை எளியோர், வீடற்றோர், வெள்ளத்தினாலும், தொற்றுநோயாலும் பஞ்சத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களைக் கவனிக்கும் இடமாகவும் இருக்கிறது.

1952 ஆம் ஆண்டில் கல்கத்தா நகரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிலிருப்போருக்கு, முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின் துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு இந்து கோயிலை ஏழைகளுக்கான நல்வாழ்வு மையமாக மாற்றி, அதற்கு இறப்பின் வாயிலிலிருப்போருக்கான காளிகாட் இல்லம் (Kalighat Home for the Dying) என்று பெயரிட்டார். பின்னர் அதனைத் தூய இதயமுடையோர்களின் காளிகாட் இல்லம் என்று மாற்று பெயரிட்டு அழைத்தார் (Kalighat, the Home of the Pure Heart (Nirmal Hriday)). இவ்வில்லத்திற்கு கொண்டு வரப்படுபவர்களுக்கு மருத்துவக் கவனிப்பும், அவர்களின் சொந்த சமயச்சடங்குகளுடனான இறப்பும் அடக்கமும் அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு திருக்குர்ஆனும், இந்துக்களுக்கு கங்கை நீரும், கத்தோலிக்கர்களுக்கு நோயில்பூசுதலும் கிடைத்தன. "அழகியதொரு மரணம் என்பது விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அன்புக்காட்பட்ட, பிறரால் வேண்டப்பட்ட தேவதூதர்களைப் போன்ற உணர்வைப் பெற்றபின் மரிப்பது." என்பதே அவரது கூற்றாகும். அன்னை தெரேசா விரைவில் தொழு நோயால் அவதிப்படுபவர்களுக்குரிய நலவாழ்வு மையமான ஷாந்தி நகரைத் (அமைதியின் நகரம்) துவக்கினார். பிறர் அன்பின் பணியாளர் சபை கல்கத்தா முழுவதும் மேலும் பல தொழுநோய்க் கூர்நோக்கு மருந்தகங்களைத் தோற்றுவித்து, அவற்றின்மூலம் மருந்துபொருட்கள், காயங்களைக் கட்டும் துணிகளையும், உணவையும் வழங்கி வந்தது.

பிறர் அன்பின் பணியாளர் தொலைந்து போன குழந்தைகளைப் பெருமளவில் ஏற்றுக்கொள்கையில், அக்குழந்தைகளுக்கென ஒரு இல்லத்தை அமைப்பதற்கான அவசியத்தை அன்னை தெரேசா உணர்ந்தார். 1955 ஆம் ஆண்டில் அவர் நிர்மலா சிசு பவனையும், மாசில்ல இருதய அன்னையின் குழந்தைகள் காப்பகத்தையும் அனாதைக் குழந்தைகளுக்காகவும், வீடற்ற இளையோருக்காகவும் தொடங்கினார்.

இவ்வமைப்பு விரைவிலேயே புது பணியாளர்களையும், நன்கொடைகளையும், ஈர்க்கத் தொடங்கி 1960 ஆம் ஆண்டுகளில் நல்வாழ்வு மையங்களையும், அநாதை இல்லங்களையும், தொழுநோயாளிகள் தங்குமிடங்களையும் இந்தியா முழுவதும் துவங்கியது. அன்னை தெரேசா பின்னர் இதனை உலகம் முழுவதும் நிறுவினார். இந்தியாவுக்கு வெளியே இவ்வமைப்புகளின் முதல் இல்லம் 1995 ஆம் ஆண்டில் வெனிசுவேலா நாட்டில் ஐந்து அருட்சகோதரிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1968 ஆம் ஆண்டில் ரோமிலும், தான்சானியாவிலும், ஆஸ்திரியாவிலும் தொடங்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டுகளில் இவ்வமைப்பு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த எண்ணற்ற நாடுகளில் இல்லங்களையும், கருணை இல்லங்களையும் நிறுவியது.

அவரது தத்துவமும், செயல்படுத்தும் விதமும் சிலரது விமர்சனத்திற்குள்ளாயின. அன்னை தெரேசாவை விமர்சித்தவர்கள் அவருக்கெதிராகக் காட்டுவதற்கு எள்ளளவேனும் ஆதாரம் இல்லை என்று கூறும்போதே டேவிட் ஸ்காட் அன்னை தெரேசா வறுமையை அடியோடு ஒழிக்க முனையாமல், மக்களை உயிர்வாழ வைப்பதோடு தன் சேவையை நிறுத்திக் கொண்டாரெனக் கூறுகிறார். வேதனையைப் பற்றிய அவரது கருத்துக்களைக் குறித்தும் அவர் விமர்சனத்திர்க்குள்ளானார். ஆல்பெர்டா ரிபோர்டின் ஆய்வுக்கட்டுரையின்படி வேதனை மக்களை இயேசுவுக்கு அகருகில் கொணரும் என்று அவர் நினைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில், நோய் முற்றிய நிலையிலிருக்கும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் கவனிப்பின் தரம், தி லேன்சட் ,தி பிரித்தானிய மெடிக்கல் ஜர்னல் போன்ற மருத்துவ பத்திரிகைகளின் விமர்சனத்துக்குள்ளானது. இவை ஊசிகளை மறு உபயோகிப்பதாகவும், அடிப்படை வசதிகளின்மையையும், குளிர்ந்த நீர் குளியலை அனைத்து நோயாளிகளுக்கும் பிரயோகிப்பதையும், முறையான நோய்க் கண்டறிதலைத் தடுக்கும் நடைமுறைக்கொவ்வாத அணுகுமுறையையும் இவ்வமைப்பு கொண்டிருப்பதாகக் குறைகூறின.

1963 ஆம் ஆண்டில் பிறர் அன்பின் பணியாளர் சபை சகோதரர்கள் என்ற அமைப்பு ஆண்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது. 1976 இல் அருட்சகோதரிகளின் தியானக் கிளை தோற்றுவிக்கப்பட்டது. பொதுநிலை கத்தோலிக்கர்களும், கத்தோலிக்கர் அல்லாதவர்களும், அன்னை தெரேசாவின் சக ஊழியர்களாகவும், நோய்வாய்ப்பட்ட அல்லது வேதனைப்படுகிற சக ஊழியர்களாகவும், பொதுநிலை பிறர் அன்பின் பணியாளர் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். கத்தோலிக்க குருக்கள் பலரின் கோரிக்கைகளை ஏற்று 1981 ஆம் ஆண்டில், குருக்களுக்கான கார்பஸ் கிறிஸ்டி இயக்கத்தையும், 1984 ஆம் ஆண்டில், தந்தை ஜோசப் லாங்போர்டுடன் இணைந்து பிறர் அன்பின் பணியாளர் சபை குருக்கள் என்ற துறவற சபையினையும் தொடங்கினார். இதன் நோக்கம் பிறர் அன்பின் பணியாளர் சபையின் பணிகளைக் குருத்துவ பணிகளோடு இணைப்பது ஆகும். 2007 ஆம் ஆண்டுக்குள் பிறர் அன்பின் பணியாளர் சபை ஏறத்தாழ 450 அருட்சகோதரர்களையும், 120 நாடுகளில் 60000 சேவை மையங்கள், பள்ளிகள் மற்றும் தங்குமிடங்களை இயக்கிக் கொண்டிருக்கும் 5000 அருட்சகோதரிகளையும் கொண்டிருந்தது.

அயல்நாட்டு தர்ம நிகழ்வுகள்

1982 இல் பெய்ரூட்டின் கடும் முற்றுகையைத் தொடர்ந்து, அன்னை தெரேசா இஸ்ராயேல படைகளுக்கும் பாலஸ்தீன கொரில்லாகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை செய்து தாக்குதலுக்குள்ளான ஒரு மருத்துவமனையினுள் சிக்கிக் கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார். செஞ்சிலுவை சங்கத்தாருடன் சேர்ந்து யுத்த பகுதியினூடே பாழ்படுத்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை வெளியேற்றினார்.

1980களின் இறுதியில் கிழக்கு ஐரோப்பாவின் வரவேற்புக்குப் பின் ஆரம்பத்தில் பிறர் அன்பின் பணியாளர் சபை உதாசீனப்படுத்திய கம்யுனிச நாடுகளில் பல திட்டங்களை வகுத்துத் தனது முயற்சிகளை விரிவாக்கினார். கருக்கலைப்பு மற்றும் விவாகரத்துக்கு எதிரான அவரது உறுதியான நிலைப்பாட்டின் மீதான விமர்சனங்கள் அவரைப் பாதிக்கவில்லை. "யார் என்ன சொன்னாலும் சரி, நீங்கள் அதைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு உங்கள் வேலையைச் செய்தாக வேண்டும்" என்றார் அவர்.

அன்னை தெரேசா எத்தியோப்பியாவின் பசித்தோருக்கும், செர்னோபிலின் அணுக்கதிர்களின் தாக்கத்துக்காளானவர்களுக்கும், ஆர்மீனியாவின் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கும், உதவி செய்யவும் ஊழியஞ்செய்யவும் பயணித்தார். 1991-ல், முதன்முறையாகத் தனது பூர்வீகத்தை வந்தடைந்த அவர் அல்பேனியாவின் டிரானாவில் பிறர் அன்பின் பணியாளர் சபை அருட்சகோதரர்கள் இல்லத்தைத் தொடங்கினார்.

1996 க்குள் அவர் ஏறத்தாழ 100 நாடுகளில் 517 தொண்டு நிறுவனங்களை நடத்திவந்தார். நாளடைவில் ஏழைஎளியோருக்குத் தொண்டாற்றும் அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை வெறும் பன்னிரண்டு மையங்களிலிருந்து, உலகம் முழுவதும் 450 நாடுகளில் ஆயிரக்கணக்கான மையங்களாக வளர்ந்தது. அமெரிக்காவின் முதல் பிறர் அன்பின் பணியாளர் சபை தெற்கு பிராங்க்ஸிலும், நியு யார்க்கிலும் நிறுவப்பட்டது. 1984க்குள் இவ்வமைப்பு அந்த நாடு முழுவதும் 19 மையங்களை இயக்கியது.

விமர்சனங்கள்

அவர் நன்கொடை பணத்தை செலவழிக்கும் விதம் சிலரது விமர்சனத்துக்குள்ளானது. கிறித்தபர் ஃகிச்சின்சு மற்றும் ஜெர்மானிய சஞ்சிகையான, ஸ்டேர்ன் போன்றவை அன்னை தெரேசா நன்கொடைப்பணத்தை வறுமையை ஒழிப்பதற்கும், தனது நல்வாழ்வு மையங்களின் நிலைமையை உயர்த்துவதற்கும் பயன்படுத்த எண்ணாமல், புதிய கன்னியர் மடங்களைத் திறப்பதிலும் மதப்பிரசாரத்திற்கும் மட்டுமே பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.

மேலும் அன்னை தெரேசாவால் ஏற்கப்பட்ட சில நன்கொடைகள் வந்த விதமும் விமர்சனத்துக்குள்ளாயின. ஹைட்டியின் சர்வாதிகார, ஊழலில் சிக்கிய டியுவேலியேர் குடும்பத்திலிருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டு வெளிப்படையாக அவர்களைப் புகழ்ந்திருக்கிறார். கீட்டிங் பைவ் ஊழல் என்றழைக்கப்பட்ட ஏமாற்று சுரண்டல் திட்டத்தோடுத் தொடர்புடைய சார்லஸ் கீட்டிங்கிடமிருந்து 1.4 மில்லியன் டாலர்களைப் பெற்றுக் கொண்டு அவர் கைதாவதற்கு முன்னும் பின்னும் அவரை ஆதரித்தவர் அன்னை தெரேசா. லாஸ் ஏஞ்சல்ஸின் மாவட்ட துணை நீதியரசர் கீட்டிங்கால் திருடப்பட்டவர்களுக்கு அவரிடமிருந்து நன்கொடையாகப் பெற்ற பணத்தை திரும்பக் கொடுக்கக் கோரி எழுதினார். டர்லிக்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

கோலெட் லிவர்மூர் எனும் முன்னாள் பிறர் அன்பின் பணியாளர் சபை உறுப்பினர் அவ்வமைப்பை விட்டுத் தான் வெளியேறியதற்கான காரணங்களை அவரது புத்தகமான ஹோப் என்ட்யுர்ஸ்: லீவிங் மதர் தெரேசா, லூஸிங் பெய்த் அண்ட் ஸெர்ச்சிங் பார் மீனிங் என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார். அன்னை தெரேசா தைரியமானவராக இருந்தபோதிலும், அவரது துன்பத்தின் தத்துவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று லிவர்மோர் எண்ணினார். மதபோதனைகளை விடச் செயல்கள்மூலம் நற்செய்தியைப் பரப்புதலின் முக்கியத்துவத்தை அன்னை தெரேசா அவரது சீடர்களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தபோதிலும், அந்நிறுவனத்தின் சில நடைமுறைகளுடன் தான் ஒத்துப்போக முடியவில்லை என்று லிவர்மூர் கூறுகிறார். அதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுகளாவன, நியமிக்கப்பட்ட கால அட்டவணைக்கு மாறாக உதவி வேண்டுபவர்கள் அருட்சகோதரிகளை அணுகும்போது, உதவி செய்ய மறுத்தல், அவர்கள் சந்திக்கிற வியாதிகளைப் போக்குவதற்குத் தேவையான மருத்துவ பயிற்சிகளை அருட்சகோதரிகள் நாடுவதைத் தடைசெய்வது, மற்றும் நண்பர்களை விட்டுத் தொலைவில் தரப்படுகிற இடமாற்றம் போன்ற நியாயமற்ற தண்டனைகள் வழங்குவது. மதச்சார்பற்ற புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளைப் படிப்பதிலிருந்து தடைசெய்வதன்மூலமும், சுதந்திரமான எண்ணங்கள் மற்றும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் ஆகியவற்றை பொருட்படுத்தாத கீழ்படிதலை வலியுறுத்துவதன் மூலமும், பிறர் அன்பின் பணியாளர் சபை அதன் அருட்சகோதரிகளை குழந்தைகளைப் போல் மாற்றி விட்டது என்கிறார் லிவர்மூர்.

ஆரோக்கியக் குறைபாடும் மரணமும்

1983-ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை உரோமையில் சந்தித்த பொழுது அன்னை தெரெசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989-ல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்குச் செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டது. 1991-ல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். பிறர் அன்பின் பணியாளர் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வந்தார். ஆனால் இவ்வமைப்பின் அருட்சகோதரிகள் இரகசிய தேர்தலின் மூலம் அவர் அப்பணியிலேயே தொடர்ந்திருக்க செய்தனர்.

ஏப்ரல் 1996-ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்டில் மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாறினாலும் அவதிப்பட்டார்.இதய அறுவைசிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. அவரைப் பற்றிய இன்னொரு விமர்சனம், நோயில் விழுந்தபொழுது தனது மருத்துவ மனையில் சிகிச்சை பெறாமல், கலிபோர்னியாவின் அனைத்து வசதிகளுமுடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தது. மார்ச் 13, 1997 ல் அவர் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். செப்டம்பர் 5, 1997இல் மரணமடைந்தார். கல்கத்தாவின் பேராயர் ஹென்றி செபாஸ்டியன் டி சோசா, இதய கோளாறுகளினால், அன்னை தெரேசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபொழுது, அவர் அலகையின் பிடியில் இருக்கலாமெனத் அன்னை தெரேசா எண்ணிய காரணத்தால் அன்னை தெரேசாவின் அனுமதியோடு அவருக்குப் பேயோட்டும்படி ஒரு குருவைப் பணித்ததாகக் கூறியுள்ளார்.

அவரது மரணத்தின் போது, அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை 123 நாடுகளின் 610 சேவை மையங்களை இயக்கி வரும் 4,000 க்கும் மேலான அருட்சகோதரிகளையும், 300 உறுப்பினர்களைக் கொண்ட சக அருட் சகோதர அமைப்பையும் , 10,000கும் மேலான பொதுநிலையினரையும் கொண்டிருந்தது. இவை எச் ஐ வி/எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான நலவாழ்வு மையங்களையும், இல்லங்களையும்,அன்னசத்திரங்களையும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனைமையங்களையும், தனி உதவியாளர்களையும், அநாதைமடங்களையும், பள்ளிகளையும் உள்ளடக்கியது.

உலக அங்கீகாரமும் வரவேற்பும்

இந்தியாவில் வரவேற்பு

1962 ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்பே இந்திய அரசால் அன்னை தெரேசா அடையாளங்காணப்பட்டுள்ளார். 1972-ல், பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது, 1980-ல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா உட்பட இந்திய உயர்விருதுகளை அடுத்த பத்தாண்டுகளில் பெற்றார். அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு 1992இல் வெளியிடப்பட்டது.

அன்னை தெரசாவைப் பற்றிய எல்லா இந்தியாரும் உயர்வாகப் பார்க்கவில்லை. கல்கத்தாவில் பிறந்து லண்டனில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது விமர்சகரான அரூப் ச்சேட்டர்ஜி அவர் வாழ்ந்த காலத்தில் கல்கத்தாவின் முக்கிய அங்கமாக இருக்கவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார். அன்னை தெரேசா தனது சொந்த ஊரான கல்கத்தாவின் புகழைக் குலைத்து விட்டதாகக் அவர் குறை கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி கிறிஸ்துவ தலித்துக்கள் விஷயத்தில், அவரோடு மோதிய போதிலும், அவரது மரணத்தின் போது அவரைப் புகழ்ந்து, இறுதி சடங்கிற்குத் தனது பதிளாளை அனுப்பியது. ஆனால் விஸ்வ ஹிந்து பரிஷத்தோ, அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கினை செய்யும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதன் நிர்வாகி கிரிராஜ் கிஷோர், "அவரது முதல் கடமை கிறிஸ்துவத்திற்கே இருந்தது" என்றுக் கூறினார். பொது நல சேவை தற்செயலானது. மேலும் அவர் கிறிஸ்துவர்களுக்கு சாதகமானவரென்றும், இறப்பின் வாயிலிலிருப்போருக்கு இரகசிய திருமுழுக்கை மேற்கொள்ளுபவரென்றும் குற்றஞ்சாட்டினார். ஆனால் ஃப்ரண்ட் லைன் பத்திரிகையளித்த முதல் பக்கமரியாதையில் இக்குற்றச்சாட்டுகளை அப்பட்டமான தவறாக நிராகரித்துள்ளது. அவரது சேவையைப் பற்றிய கல்கத்தாவாசிகளின் எண்ணத்தில், எந்தத் தாக்கத்தையும் இவை விளைவித்துவிடவில்லை என்றும் கூறியிருக்கிறது. இப்புகழ்மாலையை சூட்டிய ஆசிரியர் அவரது தன்னலமற்ற சேவை செய்யும் சக்தியையும், தைரியத்தையும் புகழ்ந்தபோதிலும், பொது கூட்டங்களில் அவர் கருக்கலைப்பை எதிர்ப்பதையும், அதை அரசியல் நோக்கமில்லாததாகக் காட்டிக்கொள்வதையும் குறை கூறியுள்ளார்.

அண்மையில், இந்திய நாளேடான தி டெலிக்ராப், அவர் வறியவர்களின் துன்பத்தைப் போக்க ஏதேனும் செய்தாரா அல்லது உணர்வுபூர்வமாக நெறிகளைத் தூண்டும் நோக்கத்தோடு, நோயாளிகளையும் இறப்போரையும் பராமரித்து வந்தாடு நின்று விட்டாரா என்பதைக் குறித்து விசாரிக்கும்படி உரோமைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.

செப்டம்பர் 1997 ல் இறுதிச்சடங்கிற்கு முன்னதாக ஒரு வார காலம் அன்னை தெரேசாவின் உடல் கொல்கத்தாவின் புனித தோமையார் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அனைத்து மத ஏழைகளுக்கும் அவர் ஆற்றிய தொண்டுக்குப் பரிகாரமாக, இந்திய அரசின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

ஏனைய உலக நாடுகளில் வரவேற்பு

அன்னை தெரேசா 
அமெரிக்க ஜனாதிபதி ரானல்ட் ரேகன் அன்னை தெரெசாவுக்கு விடுதலைக்கான அதிபரின் பதக்கத்தை 1985இல் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் வழங்கி கௌரவித்தார்.

தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக 1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் ரமன் மக்சேசே விருதைப் பெற்றார். அயல்நாடுகளில் தாழ்த்தப்பட்ட ஏழைகளின் மீதான கருணை நிறைந்த கவனத்தையும், அதற்காகவே அவர் வழிநடத்திச் செல்லும் புதிய சபையையும் இவ்விருதின் தீர்வுக்குழுமம் அங்கீகரிக்கிறது என்று விருதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 1970களின் தொடக்கத்திற்குள் அன்னை தெரேசா அனைத்துலகாலும் அறியப்பட்டார். 1969இன் ஆவணப்படமான மேல்கம் முக்கேரிட்ஜ்-ன், சம்திங்க் பியுடிபுல் பார் காட் -ம், அதே தலைப்புடைய அவரது புத்தகமும் அவரது புகழுக்கு வித்திட்டவைகளில் முக்கியமானவை ஆகும். முக்கேரிட்ஜ் அந்நேரத்தில் ஒரு ஆன்மீக பயணத்தில் ஆழ்ந்திருந்தார். அச்செய்திப்படத்தின் படப்பிடிப்பின் போது மோசமான ஒளியமைப்பு சூழலில், குறிப்பாக இறப்பின் வாயிலிலிருப்போருக்கான இல்லங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள் பயன்பாட்டுக்கு உகந்தவையாக இல்லையென அவர் முதலில் நினைத்தாலும், இந்தியாவிலிருந்து திரும்பிய பின்னர் அக்காட்சிதொகுப்பு மிக நல்ல ஒளியமைப்புடன் வந்திருந்தது. அன்னை தெரேசாவிடமிருந்தே வந்த தெய்வீக ஒளியர்ப்புதம் இது என முக்கேரிட்ஜ் பறைசாற்றினார். அப்படப்பிடிப்புக் குழுவின் மற்றவர்கள் அது புதுவித அதிநுண்ணிய வகை கோடாக் படச்சுருளால் ஏற்பட்ட விளைவு என்றெண்ணினர். முக்கேரிட்ஜ் பின்னர் கத்தோலிக்கராகச் சமயம் மாறினார்.

இவ்வேளையில் கத்தோலிக்கர் உலகம் முழுவதும் அன்னை தெரேசாவைப் வெளிப்படையாய் புகழ ஆரம்பித்தனர். 1971-ல் திருத்தந்தை ஆறாம் பவுல், அமைதிக்கான முதல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் பரிசை, அவரின் ஏழை எளியோருக்கான சேவையையும் கிறிஸ்துவ நெறியின் பறைசாற்றலையும், அமைதிக்கான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார். அதன் பிறகு பேசெம் இன் டெர்ரிஸ் விருதைப் பெற்றார். தான் மரித்தநாளிலிருந்து அன்னை தெரேசா புனிதத்துவத்தினை நோக்கி வேகமாக முன்னேறித் தற்பொழுது முக்தி பேறினை எட்டியிருக்கிறார்.

அன்னை தெரேசா அரசாங்கங்களாலும், மக்கள் அமைப்புகளாலும் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய சமுதாயத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் செய்த சேவைக்காக, 1982-ல் அவர் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் கௌரவ தோழர் என்ற விருதைப் பெற்றார். இங்கிலாந்தும், அமெரிக்காவும் அடுத்தடுத்து விருதுகள் வழங்கின. 1983-ல், இங்கிலாந்தின் ஆர்டர் அப் மெரிட் என்ற விருதும், நவம்பர் 16 1996 ல், அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமையும் கிடைத்தன. அன்னை தெரேசாவின் பூர்விகமான அல்பேனியா நாடு அவருக்கு 1994 ஆம் ஆண்டு தேசத்தின் தங்க மரியாதையை அளித்துக் கௌரவப்படுத்தியதோடல்லாமல் 1991-ல் குடியுரிமையும் அளித்திருந்தது. இதையும் ஹைதி அரசளித்த இன்னொரு விருதையும் அவர் ஏற்றுக்கொண்டது விமர்சனத்துக்குள்ளானது. அன்னை தெரேசா டியுவேலியர்களையும், சுரண்டலுக்குப் பேர் போன தொழிலதிபர்களான சார்லஸ் கீட்டிங் மற்றும் ராபர்ட் மேக்ஸ்வல் போன்றோர்களையும் ஆதரித்ததால் இடதுசாரிகள் உட்பட அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளானார். கீட்டிங்கின் விவகாரத்தில் அவ்வழக்கின் நீதிபதியிடம் இரக்கத்தைக் காட்ட வலியுறுத்தி எழுதினார்.

மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களும் இந்திய பல்கலைக்கழகங்களும் அவருக்குக் கௌரவப் பட்டங்களை அளித்தன. மனிதநேயம் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துக்காகப் பல்சான் பரிசினையும் (1978), ஆல்பர்ட் ஷ்வேத்ஸரின் (1975) அனைத்துலக விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.

1979 ல், அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அமைதியின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பாரம்பரிய விருந்தை மறுத்த அவர் அதற்காகும் $192,000 நிதியை இந்தியாவின் ஏழைகளுக்குக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அவர் கொடுத்த காரணம் இவ்வுலக விருதுகள் உலகத்தின் ஏழைகளுக்கு உதவ வழிகோலும் பட்சத்தில் மட்டுமே முக்கியமானதாகக் கருதப்படும் என்பதே. அன்னை தெரேசா பரிசைப் பெற்ற பொழுது அவரிடம் ,"உலக சாமாதானத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?", என்றுக் கேட்டனர்.அதற்கு அவர்,"வீட்டிற்கு போய் உங்கள் குடும்பத்தை அன்பு செய்யுங்கள்"என்று கூறினார். இக்கருத்தை வலியுறுத்தித் தனது நோபல் நன்றியுரையில். "உலகம் முழுவதும், ஏழை நாடுகளில் மட்டுமல்ல மேற்கத்திய நாடுகளிலும் கூட, ஏழ்மையானது அகற்றுவதற்கு மிகக் கடினமானதாகவே இருக்கிறது" என்றுரைத்தார். "தெருவில் பசித்திருக்கும் மனிதன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்கு ஒரு தட்டு சாதமோ, ஒரு ரொட்டித்துண்டையோ கொடுத்து நான் திருப்திப்பட்டுக் கொள்ளலாம். அவனது பசியைத் நான் தீர்த்து விட்டேன். ஆனால் வெளியேற்றப்பட்ட ஒரு மனிதன், யாருக்கும் தேவையற்றவனாக, அன்பு செய்யப்படாதவனாக, கலங்கியவனாக, சமுதாயத்தை விட்டு ஒதுக்கப்பட்டவனாக இருக்கும் போது அத்தகையதொரு ஏழ்மையே என்னை அதிகம் பாதிக்கிறது. அதையே நான் மிகக் கடினமாக உணர்கிறேன்." என்றார். மேலும் அவர் கருக்கலைப்பு உலக சமாதானத்தை அழிக்கும் மிகப் பெரிய காரணியெனக் கூறி வந்தார்.

அவரது இறுதி நாட்களில் மேலை நாடுகளின் ஊடகங்களிடையே சில எதிர்மறை விளைவுகளை ஈர்க்க நேர்ந்தது. பத்திரிகையாளர் கிறித்தபர் ஃகிச்சின்சு அன்னை தெரேசாவின் கடும் விமர்சகராவார். பிரித்தானிய சேனல் 4க்காக, அன்னை தெரேசாவைப் பற்றிய விளக்கப்படமான ஹெல்'ஸ் ஏஞ்சல்ஸ்இன் சக எழுத்தாளராகவும் வர்ணனையாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். இது அரூப் சேட்டர்ஜீயின் தூண்டுதலால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சியாக இருந்த போதிலும், படத்தின் உணர்வுபூர்வமான அணுகுமுறை அவருக்கு மனநிறைவை தரவில்லை. அவரது விமர்சனங்களை ஹிச்சன்ஸ் 1995 ஆம் ஆண்டுப் புத்தகமான தி மிஷினரி பொசிஷன் என்ற நூலில் விவரித்துள்ளார்.

உயிரோடிருக்கும்பொழுது அன்னை தெரேசாவும் அவரது அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்றெழுத்தாளர்களும், தனது விசாரணைகளில் பங்கெடுக்க மறுத்ததாகவும், அவர் மேலை நாட்டு பத்திரிகையாளர்களின் விமர்சன கருத்துகளுக்கு எதிராகத் தன்னைப் பாதுகாக்கத் தவறிவிட்டார் என்றும் சேட்டர்ஜி கூறுகிறார். எடுத்துக்காட்டாக, அவர் பிரிட்டனின் தி கார்டியனில் வெளிவந்த, "அன்னை தெரேசாவின் அநாதை இல்லங்களில் காணப்படும் ஒட்டுமொத்த உதாசீனத்தையும், உடல் மற்றும் உணர்ச்சிகளின் தவறான பிரயோகத்தையும்", கடுமையாகத் தாக்கி எழுதப்பட்ட விரிவான செய்தியையும், மற்றொரு விளக்கப்படமான மதர் தெரேசா: டைம் ஃபார் சேஞ்ச்? என்னும் படமும் பல ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. சேட்டர்ஜி, ஹிச்சன்ஸ் இருவருமே தங்களது கருத்துக்களுக்காக விமர்சனத்துக்குள்ளாயினர்.

ஸ்டேர்ன் எனும் ஜெர்மானிய இதழ் அன்னை தெரேசாவின் முதல் நினைவுநாளில் நன்கொடைகள் செலவு செய்யப்பட்ட விதத்தைக்குறித்து ஒரு விமர்சனக் கட்டுரையை வெளியிட்டது. மருத்துவப் பத்திரிகைகளும் வெவ்வேறானக் கண்ணோட்டங்களிலிருந்து, நோயாளியின் தேவைகளில் முதன்மையானவற்றைக் கருதுவதினால் எழும் விமர்சனங்களை அவரை மையமாக வைத்து வெளியிட்டன. நியு லெஃப்ட் ரெவியு பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினரான தாரிக் அலி மற்றும் அயர்லாந்தில் பிறந்த புலன் விசாரணைப் பத்திரிகையாளரான டோனல் மேக்கின்டைர் போன்றோர் இவரின் ஏனைய விமர்சகர்களாவர்.

மதசார்பற்ற சமூகங்களிலும் மதவாத சமூகங்களிலும் அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிட்ட இரங்கல் செய்தியில் உயரிய குறிகோள்களுடன் அதிக நாள் வாழ்ந்த ஒரு அரிய, தனித்தன்மை பெற்ற நபர் அன்னை தெரேசா எனவும் ஏழை எளியோர், நோயாளிகள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காக அவரது வாழ்க்கை முழுவதுமான உழைப்பும் மனிதகுல மேம்பாட்டிற்கான சேவைகளின் மிகப் பெரிய எடுத்துக்காட்டாகும்." எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் ஐ நா சபையின் பொதுச் செயலாளர் ஜேவியேர் பெரேஸ் டி கியுல்லர்,"அவரே ஐ நா சபையாவார், அவர் உலகத்தின் சமாதானமாக இருந்தார்" என்று கூறினார். அவரது வாழ்ந்த காலத்திலும், மறைந்த பின்னும் அன்னைத் தெரேசாவை அமெரிக்காவில் பரவலாகப் புகழப்பட்ட தனிப்பெரும் நபரெனக் கேல்லப் போல் எனப்படும் கருத்துக்கணிப்பு காலங்காலமாகக் கணித்து வந்திருக்கிறது. 1999-ல், அமெரிக்காவில் நடத்தப்பட்ட மற்றொரு கருத்துக்கணிப்பில் இருபதாம் நூற்றாண்டின் அதிகமாகப் புகழப்பட்ட பெண்மணியெனக் கணிக்கப்பட்டுள்ளார். இதில் மிகக் குறைந்த வயதில் புகழ் பெற்றவர் என்னும் அணியைத் தவிர பிற அணிகள் அனைத்திலும் இவர் முதலிடம் பிடித்தார்.

ஆன்மீக வாழ்வு

அவரது செயல்களையும், சாதனைகளையும் பகுத்தாய்ந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், "மானுட சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தத் தேவையான பலனும் விடாமுயற்சியும் அன்னை தெரெசாவுக்கு எங்கிருந்து வந்தது? அவர் அதனைப் பிரார்த்தனையிலும் இயேசு கிறிஸ்துவையும் அவரது இறைவார்த்தையையும், அவரின் திருஇருதயதையும் தியானிப்பதிலிருந்து பெற்றுக் கொண்டார்." என்றார் தனிப்பட்ட முறையில் அன்னை தெரேசா தனது மத நம்பிக்கைகளில் அநேக சந்தேகங்களையும் போராட்டங்களையும் கொண்டிருந்தார். இது ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் அவரது வாழ்க்கையின் முடிவு வரை நீடித்தது. அவ்வமயம், "அவர் தனது மனதினுள்ளோ, நற்கருணையினுல்லோ எவ்வித தெய்வீகப் பிரசன்னத்தையும் உணர்ந்ததில்லை." என்கிறார், அவரது புனிதத்துவத்துக்காகப் நடவடிக்கைகளைக் கண்கானிக்கும் அருட் தந்தை பிரையன் கொலோடிச்சக். அன்னை தெரேசா இறைபிரசன்னத்தைக் குறித்தும் தனது விசுவாசத்தைக்குறித்தும் ஆழமான சந்தேகங்களைக் கொண்டிருந்தார்.

[103]

அன்னை தெரேசா 
ச்செக் குடியரசின் ஒலோமோக்கில் உள்ள வென்செஸ்லஸ் சதுக்கத்தின் ஒரு கட்டடத்தில் அமைந்த அன்னை தெரேசாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவு பலகை

இக்கூற்றினை முன்னிட்டு அருட் தந்தை.பிரையன் கொலோடிச்சக் அவரது வாழ்க்கையின் அர்த்தத்தைச் சிலர் தவறாகப் புரிந்துகொள்ளும் அபாயமிருப்பதாகவும், ஆனாலும் ஆண்டவர் அவர் மூலமாகச் செயலாற்றுகிறார் என்ற அவரது விசுவாசம் எள்ளளவேனும் குறையவில்லை எனவும் ஆண்டவரின் அருகாமையிலிருக்கிறோம் என்ற உணர்ச்சி குறைபாட்டால் அவர் புலம்பினாலும் அவரது பிரசன்னத்தைக் குறித்து அவர் கேள்வியெழுப்பியதில்லையெனத் தெரிவித்துள்ளார். வேறு சில புனிதர்களுக்கும் இத்தகைய இருண்ட காலங்கள் இருந்ததுண்டு. இவற்றைச் சோதனைகளாகக் கத்தோலிக்கர்கள் கருதுகின்றனர். அவிலா தெரேசா மற்றும் லிசியே நகரின் தெரேசாவுக்கு ஏற்பட்ட ஒன்றுமில்லாத இரவுகள் (நைட் ஆப் நத்திங்க்னஸ்) இதைப் போன்றதாகும். அவர் வெளிக்காட்டிய சந்தேகங்கள் அவரது புனிதத்துவத்துக்கு இடையூறாக இல்லாமல் அவரின் புனிதத்துவத்துக்கு சான்றாக அமைகின்றன.

பத்துவருடம் இவ்வாறு அவதியுற்றப்பின் அன்னை தெரேசா ஒரு குறைந்த கால விசுவாச மீட்சியை பெற்றார். 1958இன் இலையுதிர்காலத்தில் திருத்தந்தை பன்னிரண்டாம் பையஸ் மரணத்தின் பொழுது, அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக நடத்தப்பெற்ற திருப்பலியில் அவர், தான் நீண்ட இருளிலிருந்தும், இனம்புரியாத பாடுகளிலிருந்தும் விடுவிக்கப்பெற்று விட்டதாகக் கூறினார். எனினும் ஐந்து வாரங்களுக்குப் பிறகு மீண்டும் பழைய நிலைக்கே சென்று விட்டதாகவும் விவரித்தார்.

அன்னை தெரேசா தனது ஆன்ம குருவுக்கும் மேலாளர்களுக்கும், 66 ஆண்டுகளாகப் பல கடிதங்கள் எழுதியுள்ளார். தனது கடிதங்களைப் பற்றி மக்கள் அறியவரும் போது, "இறை இயேசுவைக் காட்டிலும் என்னைப் பற்றிய எண்ணத்தின் ஆக்கிரமிப்பிலாழ்ந்து விடுவர்", என்ற கவலையுடையவராய் அவற்றை அழித்து விடக் கேட்டுக் கொண்டார். எனினும் இக்கோரிக்கைகளுக்கு பிறகும் இத்தகைய கடிதத் தொடர்புகள் தொகுக்கப்பட்டு மதர் தெரேசா: கம் பி மை லைட் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. அவரின் நண்பர் ஒருவரான அருட்திரு.மைக்கேல் வேன் டெர் பீட்டுக்கு எழுதிய கடிதத்தில் அவர், "இறை இயேசு உம்மீது தனிப்பட்ட அன்பை உடையவராயிருக்கிறார். ஆனால் எனக்கோ, என்னைச் சூழ்ந்துள்ள அளப்பறிய நிசப்தமும் வெறுமையும் என்னைப் பார்த்தும் பார்க்காதவளைப் போலவும், கேட்டும் கேட்காதவளைப் போலவும், ஜெபத்தில் நாவை அசைத்தும் பேச்சற்றவளாகவும் இருக்கச் செய்கின்றன. ஆண்டவரது செயலே என்னுள் ஓங்கும்படிச் செய்ய எனக்காக உம்மை இறைவேண்டல் புறிய வேண்டுகிறேன்.

பல புதிய கருத்துக்கள் அன்னை தெரேசாவின் எழுத்துக்களை விசுவாசத்தின் இக்கட்டின் அடையாளமாகக் குறிப்பிடுகின்றன. கிறிஸ்டோபர் ஹிச்சென்ஸ் போன்ற அன்னை தெரேசாவின் விமர்சகர்கள், அன்னை தெரேசாவின் எழுத்துக்களை, அவரது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கும் செயல்களுக்கும் மாறாக விளம்பரத்துக்காக உருவாக்கப்பட்ட பொய்யான வெளித்தோற்றத்திற்கான ஆதாரங்களெனக் கருதுகின்றனர். ஹிச்சன்ஸ், "எது நிதர்சனமானது: தங்கள் நயகிகளுள் ஒருவர் தனது விசுவாசத்தின் சுவடுகளை இழந்துவிட்டார் எனும் உண்மையை விசுவாசிகள் தைரியமாக எதிர்கொள்வதா அல்லது விசுவசிப்பதை நிறுத்திவிட்ட ஒரு குழம்பிய மூதாட்டியை விளம்பர முத்திரையாகக் கொண்டு தொடர்ந்து சபை நிடத்துவதா?" எனக்கேள்வி எழுப்பினார் ஆனால் கம் பி மை லைட் -ன் பதிப்பாசிரியர் பிரையன் கொலோடிச்சக் போன்றவர்கள், 16 ஆம் நூற்றாண்டு ஆன்மீகவாதியான புனித சிலுவை அருளப்பர் "ஆன்மாவின் இருண்ட காலத்தை" சில ஆன்மீகவாதிகளின் வளர்ச்சியின் குறிப்பிட்டதொரு நிலையாகக் கருதியதுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறானர். இக்கடிதங்கள் அவர் புனிதத்துவத்தை எட்டுவதற்குத் தடையாக இருக்கப்போவதில்லையென வத்திக்கான் தெரிவித்துள்ளது.

கடவுள் அன்பாய் இருக்கிறார் என்ற தனது முதலாம் சுற்றுமடலில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கல்கத்தாவின் அன்னை தெரேசாவைப் பற்றி மூன்று முறை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது சுற்றுமடலில் முக்கிய கருத்து ஒன்றை தெளிவுபடுத்த அவரது வாழ்க்கையை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியுள்ளார். "கல்கத்தாவின் ஆசீர்வதிக்கப்பட்ட தெரேசாவின் சான்றில், ஆண்டவருக்கு ஒதுக்கப்படும் ஜெப நேரம் நம்மைச் சுற்றியிருப்போருக்காற்றும் உபயோகமுள்ள அன்புப் பணியிலிருந்து விலகிவிடாமல் நம்மைக் காப்பதோடல்லாமல் அப்பணியின் குறைவற்ற ஊற்றாகும்." என்றார். அன்னை தெரேசா போலத் தியானத்திலும், விவிலிய வாசிப்பாலும் மட்டுமே பிரார்த்தனையெனும் வெகுமதியை நாம் பயிரிட முடியும் என்கிறார்.

அன்னை தெரேசாவின் சபைக்கும் பிரான்சிஸ்கன் சபைகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லாத போதிலும் புனித அசிசியின் பிரான்சிசுவின் தீவிர பக்தையாய் இருந்த காரணத்தால், அவரது வாழ்க்கையும் செயல்களும் பிரான்சிஸ்கன் சபையின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. பிறர் அன்பின் பணியாளர் சபையின் அருட்சகோதரிகள் அமைதிக்கான அசிசி பிரான்சிசுவின் செபத்தினை நற்கருணைக்குப் பின் சொல்லும் நன்றியறிதலின் போழுது பயன்படுதும் படி அன்னை தெரேசா கூறியுள்ளார். மேலும் பல பிரமாணங்களும், பரிந்துரைகளும் இவ்விரு சபைகளுக்கும் பொதுவானவையே. புனித பிரான்சிஸ் அசிஸியாரைப்போல இவரும் ஏழ்மையையும், புனிதத்தையும், கீழ்படிதலையும் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தலையும் வலியுறுத்தினார்.

அற்புதமும் முக்திபேறும்

கல்கத்தாவின் புனித தெரேசா
அன்னை தெரேசா 
புனித தோமையார் மலை தேவாலயத்தில் உள்ள அன்னை தெரேசாவின் திரு உருவச்சிலை
கன்னியர்
பிறப்பு(1910-08-26)ஆகத்து 26, 1910
அஸ்கப், ஓட்டோமான் பேரரசு (இன்றய ஸ்கோப்ஜி, மாக்கடோனியக் குடியரசு)
இறப்பு5 செப்டம்பர் 1997(1997-09-05) (அகவை 87)
கொல்கத்தா, இந்தியா
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்அக்டோபர் 19, 2003, வத்திக்கான் நகர் by திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
புனிதர் பட்டம்செப்டம்பர் 4,2016, வத்திக்கான் நகர் by திருத்தந்தை பிரான்சிஸ்
முக்கிய திருத்தலங்கள்பிறர் அன்பின் பணியாளர் சபைத் தலமையகம், கொல்கத்தா, இந்தியா
திருவிழாசெப்டம்பர் 5
பாதுகாவல்உலக இளையோர் நாள்

1997 இல், அன்னை தெரேசாவின் மரணத்துக்குப் பின் புனிதர் பட்டத்தின் முந்தைய நிலையான முக்திப்பேறு நிலையை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இச்செயல் அன்னைதெரேசாவின் பரிந்துரையால் நிகழ்ந்த அற்புதத்தின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை உள்ளடக்கியது. 2002 இல், மோனிகா பேஸ்ரா என்ற இந்திய பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி அன்னை தெரேசா உருவம் பதிக்கப்பட்ட பதக்கத்தை அணிந்ததும் குணமாகிவிட்டதை அற்புதமாகக் கத்தோலிக்க திருச்சபை அங்கிகரித்தது. அன்னையின் உருவத்திலிருந்து புறப்பட்ட ஒளிவெள்ளம் புற்றுநோய்க்கட்டியைக் குணப்படுத்தியதாக மோனிகா பேஸ்ரா கூறினார். மோனிகா பேஸ்ராவின் மருத்துவ ஊழியர்கள் சிலரும், தொடக்கத்தில் அவரது கணவரும் கூடப் பேஸ்ராவுக்க அளிக்கப்பட மருத்துவ சிகிச்சையே கட்டியைக் குணப்படுத்தியதாகக் கூறினர். மோனிகாவின் மருத்துவ அறிக்கைகள், மேல்நிலையொலியறிக்கைகளையும், மருந்துச் சீட்டுகளையும், மருத்துவக் குறிப்புகளையும் கொண்டிருப்பதால் அதை வைத்து அவர் குணமானது அற்புதமா இல்லையா என்பதை நிரூபித்து விடலாம் என்பதே எதிரணியினரின் கருத்தாகும். இவை அனைத்தும் மோனிகா, பிறர் அன்பின் பணியாளர் சபையின் அருட்சகோதரி பெட்டா என்பவரிடம் கொடுத்துள்ளதாகக் கூறினார். இதற்கு அருட்சகோதரி பெட்டாவிடமிருந்து, "விளக்கம் எதுவுமில்லை" என்ற பதில் மட்டுமே அளிக்கப்பட்டது. மோனிகா சிகிச்சை பெற்று வந்த பாலர்காட் மருத்துவமனை அதிகாரிகள் அவருக்குக் கிடைத்த சுகத்தை அற்புதமாக அறிவிக்கக் கோரி தங்களுக்கு பிறர் அன்பின் பணியாளர் சபையிடமிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதாகக் குறை கூறியுள்ளனர்.

பாரம்பரியமான நடைமுறையான புனிதர் பட்டம் கொடுப்பதை எதிர்ப்பவர் பாத்திரத்தை வத்திகான் பல காலமாக நீக்கி விட்டதால், கிறித்தபர் ஃகிச்சின்சு மட்டுமே வாடிகனால் அன்னை தெரேசாவின் முக்திபேற்றிற்கும் புனிதர் பட்டமளிப்புக்கும் எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அழைக்கப்பட்டவர். ஹிச்சென்ஸ், "அவரது நோக்கம் மக்களுக்கு உதவி செய்வதல்ல" என்று வாதாடினார். மேலும் அவர் அன்னை தெரேசா கொடையாளர்களிடம் அவர்களது நன்கொடைகளின் உபயோகத்தைப் பற்றிப் பொய் கூறினார் என்று குற்றம் சாட்டினார். அவருடன் உரையாடியபொழுதுதான் அவரது உறுதியான நிலையை நான் கண்டுபிடிக்க நேர்ந்தது. அவர் ஏழ்மையைப் போக்க முயற்சிக்கவில்லை. அவர் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதிலேயே குறியாயிருந்தார். அவர் மேலும், "நான் சமூக சேவகி அல்ல", என்றும், "நான் சமூகசேவைக்காக இவற்றைச் செய்யவில்லை, கிறிஸ்துவுக்காவே இதைச் செய்கிறேன்" என்றும் அன்னை தெரேசா குறியதாகவும் கூறினார்.

முக்திப்பேற்றை அடையச் செய்வதற்கும், புனிதராக்குவதற்கும், கர்தினால்களின் குழு அவரது வாழ்க்கையைக் குறித்தும் பணிகளைக் குறித்தும் வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத எல்லா விமர்சனங்களுக்கான ஆவணங்களைப் பரிசீலித்தது. ஹிச்சன்ஸின் குற்றச்சாட்டுகள் புனிதர் பட்ட நடவடிக்கைகளுக்கான உரோமைச் செயலகத்தால் விசாரிக்கப்பட்டதாகவும் அன்னை தெரேசாவின் முக்திப்பேற்றிற்கு எவ்வித தடையும் இல்லையெனும் முடிவுக்கு அவர்கள் வந்ததாகவும் வத்திக்கான் அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்மீதான தாக்குதல்களினிமித்தம் சில கத்தோலிக்க எழுத்தாளர்கள் அவரை முரண்பாடுகளின் அடையாளம் என அழைத்திருக்கின்றனர். அக்டோபர் 19, 2003 ல் அன்னை தெரேசாவிற்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்டது. அவர் புனிதர் பட்டம் பெற இரண்டாவது அற்புதம் ஒன்று நிகழ வேண்டும்.

பிரேசில் நாட்டில்மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்ட நோயாளியின் குடும்பத்தினர், அன்னை தெரசாவை மனமுருக பிரார்த்தனை செய்து வந்துள்ளனர். அதன்பின் அவர் பூரண குணமடைந்துள்ளார். இந்த இரண்டாவது அற்புதத்தையும் போப் பிரான்சிஸ் அங்கீகரித்து அருளாளர் அன்னை தெராவிற்கு புனிதர் பட்டத்தை அன்னையின் பிறந்த நாளானா 5 செப்டம்பர் 2016-க்கு முந்தைய நாளான 4 செப்டம்பர் 2016-இல் வழங்க ஒப்புதல் அளித்தார்.

புனிதர் பட்டமளிப்பு

திசம்பர் 17, 2015இல் இவரால் இரண்டாவது அற்புதம் நிகழ்ந்ததை திருத்தந்தை பிரான்சிசு ஏறுக்கொண்டதாக வாத்திகன் அறிவித்தது; பிரேசிலியர் ஒருவரது பல மூளைக் கட்டிகள் இவரால் குணமடைந்ததாக ஏற்கப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 4, 2016இல் வாத்திகன் நகரத்தின் புனித பேதுரு சதுக்கத்தில் நடந்த விழாவொன்றில் திருத்தந்தை பிரான்சிசு அன்னை தெரசாவிற்கு புனிதர் பட்டமளித்தார். இந்தக் கூட்டத்தில் 15 அடங்கிய அரசு அலுவல்முறை சார்பாளர் குழு, இத்தாலியின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வீடற்ற 1500 மக்கள் உட்பட பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர். இப்புனித விழா வாத்திகன் அலைவரிசையில் நிகழ்நேரக் காட்சியாக ஒளிபரப்பப்பட்டதோடன்றி இணையவழியாகவும் உடனடியாக பரப்பப்பட்டது. அன்னை தெரசாவின் சொந்த ஊரான இசுகாப்யேவில் ஒரு வாரத்திற்கு கொண்டாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், கொல்கத்தாவிலுள்ள அவரது சேவை இல்லத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

நினைவு அஞ்சலி

அன்னை தெரெசாவுக்கு பல விதங்களில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவருக்கு அருங்காட்சியகங்கள் அமைத்ததன் மூலமாகவும், பல்வேறு சபைகளின் பாதுகாவலராக ஏற்கப்பட்டதன் மூலமாகவும், பல கட்டிடங்களுக்கும் சாலைகளுக்கு அவரது பெயரை இட்டதன் மூலமாகவும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்ட பல புகழ் மாலைகள் இந்திய நாளேடுகளிலும், இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன, மேலும், இந்திய அரசு 2010-ல் அவரது நூற்றாண்டிற்காக அவரின் உருவம் பதித்த 5 ருபாய் நாணயம் வெளியிட்டு கௌரவித்துள்ளது.

மேற்கோள்கள்

கூடுதல் வாசிப்பு

புற இணைப்புகள்

அன்னை தெரேசா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அன்னை தெரசா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
புதிய உருவாக்கம் பிறர் அன்பின் பணியாளர் சபைத்தலைவி
1950–1997
பின்னர்
அருட்சகோதரி நிர்மலா ஜோஷி
விருதுகள்
முன்னர்
Genevieve Caulfield
மக்சேசே பரிசு
1962
பின்னர்
Peace Corps
புதிய பரிசு டெம்பிள்டன் பரிசு
1973
பின்னர்
Frère Roger
முன்னர்
அன்வர் சாதாத், மெனசெம் பெகின்
அமைதிக்கான நோபல் பரிசு
1979
பின்னர்
Adolfo Pérez Esquivel
முன்னர்
காமராசர்
பாரத ரத்னா
1980
பின்னர்
வினோபா பாவே

Tags:

அன்னை தெரேசா தொடக்க வாழ்க்கைஅன்னை தெரேசா பிறர் அன்பின் பணியாளர் சபைஅன்னை தெரேசா அயல்நாட்டு தர்ம நிகழ்வுகள்அன்னை தெரேசா விமர்சனங்கள்அன்னை தெரேசா ஆரோக்கியக் குறைபாடும் மரணமும்அன்னை தெரேசா உலக அங்கீகாரமும் வரவேற்பும்அன்னை தெரேசா ஆன்மீக வாழ்வுஅன்னை தெரேசா அற்புதமும் முக்திபேறும்அன்னை தெரேசா நினைவு அஞ்சலிஅன்னை தெரேசா மேற்கோள்கள்அன்னை தெரேசா கூடுதல் வாசிப்புஅன்னை தெரேசா புற இணைப்புகள்அன்னை தெரேசா1950அல்பேனியாகொல்கத்தா

🔥 Trending searches on Wiki தமிழ்:

போக்குவரத்துஓமியோபதிபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்வல்லினம் மிகும் இடங்கள்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்குடலிறக்கம்நாயக்கர்பொன்னுக்கு வீங்கிசுற்றுச்சூழல் பாதுகாப்புகடல்இளங்கோவடிகள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்திணைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்வெ. இறையன்புதிருமலை நாயக்கர்குற்றியலுகரம்தமிழக வரலாறுகாவிரிப்பூம்பட்டினம்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அன்மொழித் தொகைசைவத் திருமுறைகள்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021வீட்டுக்கு வீடு வாசப்படிஇங்கிலீஷ் பிரீமியர் லீக்கள்ளுசப்ஜா விதைஅன்னை தெரேசாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதூது (பாட்டியல்)இராமாயணம்தமிழ் எழுத்துருக்களின் பட்டியல்ரத்னம் (திரைப்படம்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்திருத்தணி முருகன் கோயில்அண்ணாமலை குப்புசாமிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்இளையராஜாபோக்கிரி (திரைப்படம்)தரணிஇன்ஸ்ட்டாகிராம்பாசிப் பயறுஇந்திய மக்களவைத் தொகுதிகள்முருகன்விஷால்சாகித்திய அகாதமி விருதுமுத்துராமலிங்கத் தேவர்மூகாம்பிகை கோயில்பூலித்தேவன்எட்டுத்தொகை தொகுப்புஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பறையர்அகரவரிசைசேக்கிழார்ஐம்பூதங்கள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்குலசேகர ஆழ்வார்அய்யா வைகுண்டர்மொழிகலிங்கத்துப்பரணிபுங்கைஉமறுப் புலவர்விலங்குசிறுநீரகம்கஞ்சாசெண்டிமீட்டர்யாழ்சங்ககாலத் தமிழக நாணயவியல்விவேகானந்தர்சிவாஜி (பேரரசர்)புதுமைப்பித்தன்மனித மூளைமறவர் (இனக் குழுமம்)மாத்திரை (தமிழ் இலக்கணம்)மாரியம்மன்நிணநீர்க்கணு🡆 More