திருத்தந்தை ஆறாம் பவுல்

திருத்தந்தை ஆறாம் பவுல் (திருத்தந்தை ஆறாம் பவுல்) (இலத்தீன்: Paulus PP.

VI; இத்தாலியம்:Paolo VI)என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் 262ஆம் திருத்தந்தையும் உரோமை ஆயருமாக 1963இலிருந்து 1978 வரை பணியாற்றினார். திருமுழுக்கின்போது இவருக்கு வழங்கப்பட்டது "ஜோவான்னி பத்தீஸ்தா என்றிக்கோ அந்தோனியோ மரிய மொந்தீனி" (Giovanni Battista Enrico Antonio Maria Montini) என்னும் நீண்ட பெயராகும். 1897ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்த இவர் 1978ஆம் ஆண்டு ஆகத்து 6ஆம் நாள் இறந்தார். இவருக்கு முன் திருத்தந்தையாகப் பதவியிலிருந்தவர் இருபத்திமூன்றாம் யோவான் என்பவராகும். அவர் 1962இல் கூட்டியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை ஆறாம் பவுல் தொடர்ந்து நடத்தி நிறைவுக்குக் கொணர்ந்தார். மரபுவழி கிறித்தவ சபையோடும், புரடஸ்தாந்து சபைகளோடும் கத்தோலிக்க திருச்சபை நல்லுறவுகளை வளர்க்க இவர் பாடுபட்டார். இக்குறிக்கோளை அடைய இவர் பல திருச்சபைகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியதோடு அச்சபைகளோடு பல ஒப்பந்தங்களையும் செய்தார்.

அருளாளர்
ஆறாம் பவுல்
Paul VI
திருத்தந்தை ஆறாம் பவுல்
திருத்தந்தை ஆறாம் பவுல்
ஆட்சி துவக்கம்21 ஜூன் 1963
ஆட்சி முடிவு6 ஆகஸ்ட் 1978
முன்னிருந்தவர்இருபத்திமூன்றாம் யோவான்
பின்வந்தவர்முதலாம் யோவான் பவுல்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு29 மே 1920
ஜாச்சிந்தோ காஜ்ஜியா-ஆல்
ஆயர்நிலை திருப்பொழிவு12 டிசம்பர் 1954
யூஜீன் திஸ்ஸரான்-ஆல்
கர்தினாலாக உயர்த்தப்பட்டது15 டிசம்பர் 1958
திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்-ஆல்
பிற தகவல்கள்
இயற்பெயர்ஜோவான்னி பத்தீஸ்தா என்றிக்கோ அந்தோனியோ மரிய மொந்தீனி
பிறப்பு(1897-09-26)26 செப்டம்பர் 1897
கொன்சேசியோ, இத்தாலியா
இறப்பு6 ஆகத்து 1978(1978-08-06) (அகவை 80)
கந்தோல்ஃபோ கோட்டை, இத்தாலி
குறிக்கோளுரைCum Ipso in monte (With Him on the mount)
In nomine Domini (In the name of the Lord)
கையொப்பம்ஆறாம் பவுல் (திருத்தந்தை)-இன் கையொப்பம்
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா26 செப்டம்பர்
ஏற்கும் சபைகத்தோலிக்க திருச்சபை
பகுப்புதிருத்தந்தை
முத்திப்பேறு19 அக்டோபர் 2014
புனித பேதுரு சதுக்கம், வத்திக்கான் நகர்
திருத்தந்தை பிரான்சிசு-ஆல்
பவுல் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

19 அக்டோபர் 2014 அன்று வத்திக்கான் நகரின் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை பிரான்சிசு இவருக்கு அருளாளர் பட்டம் அளித்தார். இவரின் விழா நாள், இவரின் பிறந்த நாளான 26 செப்டம்பர் ஆகும்.

திருத்தந்தை ஆவார் என்னும் எதிர்பார்ப்பு

குருத்துவப் பட்டம் பெற்றதும் தந்தை மொந்தீனி வத்திக்கான் நகரத்தின் வெளியுறவுத் துறையில் 1922இலிருந்து 1954 வரை பணியாற்றினார். அப்போது மொந்தீனியும் தார்தீனி என்னும் மற்றொரு குருவும் அன்று ஆட்சியிலிருந்த திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் என்பவருக்கு மிக நெருக்கமான உடனுழைப்பாளர்களாகக் கருதப்பட்டார்கள். பன்னிரண்டாம் பயஸ் மொந்தீனியை மிலான் நகரத்தின் பேராயராக உயர்த்தினார். வழக்கமாக, மிலான் உயர் மறைமாவட்டத்தின் ஆயர் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படுவதுண்டு. ஆனால் பன்னிரண்டாம் பயசின் ஆட்சிக்காலம் முழுவதும் மொந்தீனி கர்தினாலாக நியமிக்கப்படவில்லை. திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் இறந்தபின்னர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் யோவான் பேராயர் மொந்தீனியை 1958இல் கர்தினால் நிலைக்கு உயர்த்தினார். 1962இல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் இறந்ததும் கர்தினால் மொந்தீனி அவருக்குப் பின் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்னும் எதிர்பார்ப்பு வலுவாக இருந்தது.

பவுல் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தல்

கர்தினால் மொந்தீனி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் "பவுல்" என்னும் பெயரைத் தெரிந்துகொண்டார். கிபி முதல் நூற்றாண்டில் இயேசு கிறித்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் அயராது உழைத்த புனித பவுலைப் போல, தாமும் கிறித்துவின் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க அழைக்கப்பட்டதாகப் புதிய திருத்தந்தை உணர்ந்ததால் "பவுல்" என்னும் பெயரைத் தமதாக்கிக் கொண்டார். அவரது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே அவர் எடுத்த முக்கியமான முடிவு அவரது முன்னோடியாகிய இருபத்திமூன்றாம் யோவான் தொடங்கியிருந்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைத் தாம் தொடர்ந்து நடத்தப்போவதாக அவர் அறிவித்ததுதான்.

1965இல் பொதுச்சங்கம் நிறைவுற்றதும் அச்சங்கம் எடுத்த முடிவுகளையும் பரிந்துரைத்த கருத்துகளையும் செயல்படுத்தும் பெரும் பொறுப்பு ஆறாம் பவுல் கைகளில் சேர்ந்தது. பொதுச்சங்கம் முன்மொழிந்த சீர்திருத்தங்கள் யாவை என்று வரையறுப்பதில் கருத்துவேறுபாடுகள் எழுந்த பின்னணியில் ஆறாம் பவுல் தீவிரப் போக்குகளைத் தவிர்த்து நடுநிலை நின்று செயல்பட்டார்.

அன்னை மரியா மீது பக்தி

ஆறாம் பவுல் அன்னை மரியா மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலங்களை அவர் சென்று சந்தித்து அங்கு பல முறை உரையாற்றினார். அன்னை மரியா பற்றிச் சுற்றுமடல்கள் எழுதினார். அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் மிலான் நகரின் ஆயராக இருந்த புனித் அம்புரோசு என்பவரைப் போல, ஆறாம் பவுலும் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது மரியாவைத் "திருச்சபையின் தாய்" என்னும் சிறப்புப் பெயரால் அழைத்து பெருமைப்படுத்தினார்.

உலக மக்களோடு உரையாடல்

ஆறாம் பவுல் உலக மக்களோடும், கத்தோலிக்கரல்லாத பிற கிறித்தவர்களோடும், பிற சமயத்தவரோடும், ஏன், கடவுள் நம்பிக்கையற்றவர்களோடு கூட உரையாடலில் ஈடுபட முன்வந்தார். அவருடைய அணுகுமுறை எந்த மனிதரையும் விலக்கிவைக்கவில்லை. துன்பத்தில் உழல்கின்ற மனித இனத்திற்குப் பணிசெய்யும் எளிய ஊழியனாகக் கடவுள் தம்மைத் தேர்ந்தெடுத்ததாக அவர் உணர்ந்தார். எனவே "மூன்றாம் உலகம்" (Third World) என்று அழைக்கப்பட்ட ஏழை நாடுகளின் வளர்ச்சிக்குச் செல்வம் படைத்த நாடுகள் மனமுவந்து உதவிட வேண்டும் என்று அவர் அடிக்கடி கோரிக்கை விடுத்தார். செயற்கை முறைகளைப் பயன்படுத்தி குடும்பக் கட்டுப்பாடு செய்வது அறநெறிக்கு மாறானது என்று திருத்தந்தை 1968இல் தாம் எழுதிய "மானிட உயிர்" (Humanae Vitae) என்னும் சுற்றுமடலில் போதித்தார். அது மேற்கு ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. ஆயினும் கிழக்கு ஐரோப்பா, தெற்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் அப்போதனைக்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.

உலகில் நிகழ்ந்த பெரும் மாற்றங்கள்

ஆறாம் பவுல் திருத்தந்தையாகப் பணியாற்றிய காலம் அரசியல், கலாச்சாரம், சமூக உறவுகள் ஆகிய பல துறைகளிலும் பெரிய மாற்றங்களைச் சந்தித்த காலம் ஆகும். 1960களில் வெடித்த மாணவர் போராட்டம் , வியத்நாம் போருக்கு எதிர்ப்பு, மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட போராட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிற்கு நடுவே கத்தோலிக்க திருச்சபையின் போதனையை எடுத்துரைத்து, மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஆறாம் பவுல் ஆற்றவேண்டியிருந்தது.

இறப்பு

திருத்தந்தை ஆறாம் பவுல் 1978ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6ஆம் நாள் இயேசு கிறித்து தோற்றம் மாறிய திருவிழாவன்று இறந்தார். அவரைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் 1993இல் தொடங்கப்பட்டன.

ஆறாம் பவுலின் இளமைப் பருவம்

ஜோவான்னி பத்தீஸ்தா மொந்தீனி இத்தாலி நாட்டில் லொம்பார்டி என்னும் மாநிலத்தில், ப்ரேஷ்யா பகுதியில் அமைந்துள்ள கொன்சேசியோ என்னும் ஊரில் பிறந்தார். அவர்தம் தந்தை ஜோர்ஜியோ மொந்தீனி வழக்குரைநராகவும், நிருபராகவும் பணியாற்றியதோடு, கத்தோலிக்க சேவை (Catholic Action) என்னும் இயக்கத்தில் தலைவராகவும் இத்தாலிய நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும் செயல்பட்டார். அவர்தம் தாயின் பெயர் ஜூதேத்தா அல்கீசி என்பதாகும். அவர் வேளாண்மைப் பகுதி உயர்குடியில் பிறந்தவர். ஜோவான்னி பத்தீஸ்தா மொந்தீனிக்கு இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களுள் ஒருவர் பெயர் பிரான்சேஸ்கோ மொந்தீனி. அவர் மருத்துவப் பணியை மேற்கொண்டார். மற்றொரு சகோதரர், லுதோவிக்கோ மொந்தீனி வழக்குரைநராகவும் அரசியல் தலைவராகவும் பணியாற்றினார்.

ஜோவான்னி பத்தீஸ்தா மொந்தீனிக்கு 1897, செப்டம்பர் மாதம் 30ஆம் நாள் திருமுழுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட பெயர் "ஜோவான்னி பத்தீஸ்தா என்றிக்கோ அந்தோனியோ மரிய மொந்தீனி" (Giovanni Battista Enrico Antonio Maria Montini) என்பதாகும். இயேசு சபையினர் நடத்திய பள்ளியில் பயின்றபின்னர், 1916இல் பொதுப் பள்ளிக்கூடத்தில் பட்டயம் பெற்றார். பள்ளி நாள்களின்போது பலமுறை அவர் நோய்வாய்ப்பட்டதுண்டு. 1916இல், தமது 19ஆம் வயதில் அவர் குருவாகும் எண்ணம் கொண்டு குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அவருக்கு 1920ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் குருப்பட்டம் வழங்கப்பட்டது. அவர் முதல் திருப்பலியை கொன்சேசியோ ஊரில் தம் பெற்றோரின் வீட்டுக்கு அருகிலிருந்த "அருள்நிறை அன்னை மரியா" (Madonna delle Grazie) கோவிலில் நிறைவேற்றினார். அதே ஆண்டு மொந்தீனி திருச்சபைச் சட்டம் என்னும் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் மொந்தீனி உரோமை நகர் சென்று அங்கு கிரகோரியன் பல்கலைக்கழகத்திலும், லா ஸ்ப்பியேன்ஸா (La Sapienza) பல்கலைக்கழகத்திலும் பயின்றார். ஜுசேப்பே பித்சார்தோ என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்கி மொந்தீனி உரோமையில் "திருச்சபைத் தலைவர்கள் கல்லூரி" (Accademia dei Nobili Ecclesiastici) என்னும் நிறுவனத்தில் கல்விபயின்றார். பின்னர் வத்திக்கான் வெளியுறவுத் துறையில் பித்சார்தோவின் கீழ் அவர் 1922இலிருந்து பணியாற்றினார். அப்போது அவரோடு சேர்ந்து பணியாற்றியவர்களுள் அல்ஃப்ரேதோ ஒட்டவியானி, தொமேனிக்கோ தார்தீனி, ஃபிரான்சிஸ் ஸ்பெல்மன் ஆகியோர் அடங்குவர்.

வத்திக்கான் வெளியுறவுத் துறையில் பணி

மொந்தீனி வத்திக்கான் வெளியுறவுத் துறையில் பணியாற்றியபோது வெளிநாட்டு அனுபவம் பெற்றது போலந்து நாட்டில் மட்டுமே ஆகும். அங்கு அவர் 1923ஆம் ஆண்டு சென்றார். அப்போது அங்கு "தேசிய உணர்வு" (Nationalism) மிதமிஞ்சி வெளிப்பட்டது. "இந்த வகையான தேசிய உணர்வு அயல் நாட்டவர் யாராயினும் அவர்களை எதிரியாகக் கருதுகின்றது. குறிப்பாக அந்த அயல் நாட்டவர் தம் அண்டை நாட்டைச் சார்ந்தவராக இருந்தால் நிலைமை உண்மையிலேயே மோசமாகவே உள்ளது. தன் சொந்த நாடு அண்டை நாட்டை ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்னும் உணர்வு அங்கே மேலோங்குகிறது. இதனால் மக்கள் எப்பக்கத்திலிருந்தும் நெருக்கப்படுகிறார்கள். அப்போது சமாதானம் என்பது போர்களுக்கு இடைப்பட்ட காலமாக மாறிவிடுகிறது"

இப்பின்னணியில் மொந்தீனி போலந்திலிருந்து உரோமைக்குத் திருப்பி அழைக்கப்பட்டபோது அவர் உண்மையிலேயே மகிழ்ந்தார். "போலந்து அனுபவம் என் வாழ்க்கையில் பயனுள்ள ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆயினும், அந்த அனுபவம் எப்போதுமே மகிழ்ச்சியான ஒன்றாக இருந்தது என்று சொல்வதற்கில்லை". பின்னர் மொந்தீனி வத்திக்கானில் பணிபுரியத் தொடங்கினார்.

பிற்காலத்தில், திருத்தந்தை ஆன பிறகு அவர் போலந்தில் அன்னை மரியாவின் திருத்தலத்திற்குத் திருப்பயணியாகத் திரும்பிச் செல்ல விழைந்தார். ஆனால் அங்கு பதவியிலிருந்த பொதுவுடைமை அரசு அவருக்கு இசைவு வழங்க மறுத்துவிட்டது. ஆனால் அதே அரசு பல ஆண்டுகளுக்குப் பின் மண்ணின் மைந்தராக வந்த திருத்தந்ததை இரண்டாம் யோவான் பவுலுக்கு அனுமதி மறுக்க இயலாமல் போயிற்று என்பது வரலாறு.

திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் காலத்தில் மொந்தீனி

உரோமைத் தலைமைச் செயலகத்தில் மொந்தீனி பெற்ற அனுபவம் அவருக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்தது. 1931இல் கர்தினால் பச்சேல்லி (பிற்கால திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்) மொந்தீனியை திருத்தந்தை தூதுவர் கல்லூரியில் (Papal Academy for Diplomats) வரலாற்றுப் பேராசிரியராக நியமித்தார். 1937இல் மொந்தீனியின் புரவலர் ஜுசேப்பே பித்சார்தோ கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவருடைய பொறுப்பை தொமேனிக்கோ தார்தீனி ஏற்றார். அப்போது திருத்தந்தையாக இருந்த பதினொன்றாம் பயசுக்கு வெளியுறவுச் செயலராகப் பணியாற்றிய கர்தினால் பச்சேல்லியின் தலைமையின் கீழ் அவருடைய "பொதுக் காரியங்களுக்கான பதில் இயக்குநராக" (Substitute for Ordinary Affairs) மொந்தீனியை நியமித்தார்.

மொந்தீனி திருத்தந்தை பதினொன்றாம் பயசைத் தலைசிறந்த தலைவராகக் கருதினார். அவரிடமிருந்து கீழ்வரும் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக அவரே கூறியுள்ளார்:

மொந்தீனி வத்திக்கானில் தார்தீனியின் நேரடிப் பார்வையின் கீழ் பணியாற்றினார். இருவருக்குமிடையே நல்லுறவு நிலவியது. அப்போது 1939 இல் பச்சேல்லி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பன்னிரண்டாம் பயஸ் என்னும் பெயரைச் சூடிக்கொண்டார். அவர் திருத்தந்தை ஆவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. தம் இறுதி நாள்களில் திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் பச்சேல்லிக்கு ஆதரவளிப்பதை வெளிப்படையாகவே தெரிவித்தார். பச்சேல்லி திருத்தந்தையானது மொந்தீனிக்கு மகிழ்ச்சியளித்தது. அவர் ஏற்கனவே செய்த பணியில் (பொதுக் காரியங்களுக்கான பதில்-இயக்குநர்) உறுதிப்படுத்தப்பட்டார். அவருக்கு மேலதிகாரியாக, வெளியுறவுச் செயலர் பதவிக்கு கர்தினால் லூயிஜி மலியோனே (Cardinal Luigi Maglione) நியமிக்கப்பட்டார். மொந்தீனி 1954 ஆம் ஆண்டு வரையிலும் ஒவ்வொரு நாள் காலையிலும் திருத்தந்தை பன்னிரண்டாம் பயசை சந்தித்து அவரோடு திருச்சபை ஆட்சி, நாடுகளோடு உறவு போன்ற பொருள்கள் பற்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்திகொண்டு வந்தார். இருவருக்கும் இடையே நல்லுறவு வளர்ந்தது.

திருத்தந்தை பன்னிரண்டாம் பயசோடு தமக்கிருந்த உறவு பற்றி மொந்தீனி கீழ்வருமாறு கூறியுள்ளார்:

இரண்டாம் உலகப்போரின் போது

இரண்டாம் உலகப்போர் தொடங்கியதிலிருந்து போரில் ஈடுபட்ட நாடுகளிலிருந்து வத்திக்கானுக்கு தூதுவர் முறைச் செய்திகளும் பிற செய்திகளும் வருவதும் போவதுமாய் இருந்தன. அவ்வமயம் வத்திக்கானின் வெளியுறவுத் துறையில் முக்கியமான அலுவலர்களாக விளங்கியவர்கள் மொந்தீனியும் அவர்தம் மேலாளர் கர்தினால் மாலியோனேயும் தான். வத்திக்கான் வெளியுறவுத் துறையின் "அன்றாட காரியங்களை" ("ordinary affairs") கவனிக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. வார நாள்களில் காலை நேரம் முழுவதும் அவர் இக்காரியங்களைக் கவனிப்பதில் செலவிட்டார். பிற்பகலில் அவர் திருத்தந்தை பன்னிரண்டாம் பயசின் தனிச் செயலரின் அலுவலகத்திற்குச் செல்வார். அது திருத்தந்தை அரண்மனையின் மூன்றாம் மாடியில் உளது. செயலர் தொடர்பான அலுவல்களைத் திருத்தந்தை பயஸ் வெளியுறவுத் துறைச் செயலரிடமே ஒப்படைப்பது வழக்கம்.

இரண்டாம் உலகப்போர் நடந்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கடிதங்கள் உலகெங்கிலுமிருந்து வத்திக்கான் நகருக்கு வந்தவண்ணம் இருந்தன. அக்கடிதங்கள் எல்லாம் திருத்தந்தையின் கவனத்திற்குக் கொண்டுவரப்படும். பெரும்பான்மையான கடிதங்கள் திருத்தந்தை தங்களுக்காக இறைவேண்டல் செய்யவேண்டும் என்றும், தங்கள் நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், வேறு உதவி செய்யவேண்டும் என்னும் பாணியில் அமைந்தன. திருத்தந்தையின் பெயரால் அக்கடிதங்களுக்குப் பதில் எழுதும் பொறுப்பு மொந்தீனியிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்கடிதங்களை அனுப்பியவர்களுக்குத் திருத்தந்தை தம் கரிசனையைத் தெரிவிக்கிறார் என்றும், அவர்களின் துன்பங்களைப் புரிந்துகொண்டு அவற்றில் அவரும் பங்கேற்கிறார் என்றும், தேவைப்படும் இடத்து அவர் உதவிட முன்வருகிறார் என்றும் திருத்தந்தையின் பெயரால் மொந்தீனி பதில்கள் அனுப்பினார்.

திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, மொந்தீனி "போர்க்கைதிகள் மற்றும் அகதிகள் தகவல் மையம்" (information office for prisoners of war and refugees) என்றொரு அலுவலகத்தை ஏற்படுத்தினார். இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலமாகிய 1939-1947 ஆண்டுகளில் அத்தகவல் மையத்தில் ஏறக்குறைய ஒரு கோடி (98,91,497) கடிதங்கள் வந்து குவிந்தன. அக்கடிதங்களுக்கு, போர்க்காலத்தில் காணாமற்போன ஆள்கள் பற்றி ஒரு கோடியே பன்னிரண்டு இலட்சத்துக்கு (1,12,93,511) அதிகமான பதில் கடிதங்கள் வத்திக்கானிலிருந்து அனுப்பப்பட்டன.

போர்க்காலத்தில் இத்தாலியில் பாசிச அரசுக்குத் தலைவராக இருந்த பெனிட்டோ முசொலீனியும் அவரது அரசும் மொந்தீனி ஓர் அரசியல்வாதி என்றும், அரசியலில் தேவையின்றித் தலையிடுகிறார் என்றும் கூறிப் பலமுறை தாக்கியதுண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் அவருக்கு ஆதரவாகப் பேச வத்திக்கானில் அதிகாரிகள் இருந்தனர்.

1944இல் மொந்தீனியின் மேலதிகாரியாகவும் வெளியுறவுத் துறைச் செயலராகவும் இருந்த கர்தினால் லூயிஜி மாலியோனே காலமானார். திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் அப்பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை. மாறாக, தம்மோடு நெருங்கி ஒத்துழைத்த மொந்தீனி, தார்தீனி ஆகிய இருவருக்குமே பதவி உயர்வு அளித்து, இருவரையுமே வத்திக்கான் வெளியுறவுத் துறைத் தலைமைப் பதவிக்கு நியமித்தார்.

மொந்தீனி திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் மட்டில் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார். அவர்களுக்கிடையிலான உறவு ஓரளவு தந்தை-மகன் உறவுபோல இருந்தது என்பதற்குக் கீழ்வரும் மேற்கோள் சான்று:

திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் பண்பட்ட உள்ளத்தினர்; சிந்தனையிலும் ஆய்விலும் சிறந்த அறிவாளர். எனவே, அவர் பராக்குகளுக்கும் தேவையற்ற ஓய்வுகளுக்கும் இடம் கொடுக்கவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய துன்பதுயரச் சூழலில் அவர் தம்மையே முழுமையாக ஈடுபடுத்திட விழைந்தார். தாமும் அந்த துயர வரலாற்றின் ஒரு பகுதியாக இருப்பதாக அவர் ஆழ உணர்ந்திருந்தார். அந்த வரலாற்றில் அவர் முழுமையாகப் பங்கேற்றார். தம் உள்ளத்திலும் ஆன்மாவிலும் தம் துயரத்தை இருத்திக்கொண்டார்.

புனிதர் பட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் அருளாளர் பட்டம் வழங்கப்படுதலும்

1978இல் இறந்த திருத்தந்தை ஆறாம் பவுலுக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கான ஆய்வுமுயற்சி 1993இல் தொடங்கி, இன்னும் தொடர்கிறது. முதல் ஆய்வு மறைமாவட்ட அளவில் மே 11, 1993இல் தொடங்கி மே 18, 1998இல் முடிவுற்றது. 2011ஆம் ஆண்டு புனிதர் பட்ட ஆய்வு ஆவணங்கள் உரோமைக்கு அனுப்பப்பட்டன. அவற்றைப் பரிசீலித்த பிறகு, அவர் வியத்தகு முறையில் கிறித்தவப் பண்புகள் கொண்டவராக வாழ்ந்தார் (heroic virtue) என்று உறுதிப்படுத்தினர். எனவே திசம்பர் 20, 2012இல் ஆறாம் பவுலுக்கு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் “வணக்கத்துக்கு உரியவர்” என்னும் பட்டம் அளித்தார்.

ஆறாம் பவுலை நோக்கி வேண்டுதல் செய்ததின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்தது என்று உரோமைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒரு பெண்மணி கருவுற்றிருந்த போது அக்கரு ஊனமுற்றிருப்பதாகவும், அப்பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தை ஊனமுற்றே பிறக்கும் என்றும் மருத்துவர் கருத்துத் தெரிவித்தனர். மேலும் கருச்சிதைவுதான் வழி என்றும் அவர்கள் கூறினர். ஆனால் அப்பெண் தனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தை யாதொரு ஊனமும் இன்றிப் பிறக்க வேண்டும் என்று ஆறாம் பவுலை நோக்கி வேண்டுதல் செய்ததாகவும், அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டு, அப்பெண் ஈன்ற குழந்தை ஊனமின்றி நலமாகப் பிறந்ததாகவும் உரோமைக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அதை ஒரு மருத்துவக் குழு ஆய்வுசெய்து, மருத்துவ அறிவுக்கு அப்பாற்பட்ட விதத்தில் அது நடந்திருக்க வேண்டும் என்று முடிவுசெய்தது. அதன் அடிப்படையில் மற்றொரு இறையியல் குழு, அது ஒரு புதுமை என்று அறிவித்தது.

2014, மே மாதம் 9ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு மேற்கூறிய புதுமை நிகழ்ந்தது உண்மையே என்று அங்கீகாரம் அளித்தார். அதன் அடிப்படையில் திருத்தந்தை ஆறாம் பவுலுக்கு “அருளாளர்” என்னும் பட்டம் வழங்கப்படும் என்றும், அவ்வாறு வழங்குவதற்கான சடங்கு நிகழ்ச்சி 2014, அக்டோபர் 19ஆம் நாள் நிகழும் என்றும் அறிவித்தார்.

அருளாளர் பட்டம் வழங்கப்படுதல்

வத்திக்கான் நகரில், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 70,000 மக்கள் முன்னிலையில் திருத்தந்தை பிரான்சிசு ஆறாம் பவுல் என்னும் திருத்தந்தைக்கு “அருளாளர்” பட்டம் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ஆயர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் 2014, அக்டோபர் 5-19 நாள்களில் வத்திக்கானில் கூடி “இன்றைய உலகில் குடும்பங்கள்” என்னும் பொருள்பற்றி ஆயர் மன்றமாக விவாதங்கள் நிகழ்த்தியிருந்தனர். அந்த ஆயர் மன்றக் கூட்டத்தின் இறுதி நிகழ்ச்சியாக அருளாளர் பட்டம் வழங்கல் நடந்தது.

திருச்சபை நற்செய்தி அறிவிப்புப் பணியில் இயல்பாகவே ஈடுபட வேண்டும் என்றும், இன்றைய உலகோடு உரையாடுவதில் எப்போதுமே ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் கூறிய திருத்தந்தை ஆறாம் பவுல், திருச்சபையில் பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தவர் ஆவார். அவர் தொடங்கிய பல சீர்திருத்தங்களை திருத்தந்தை பிரான்சிசு தொடர்கிறார்.

மேல் ஆய்வுக்கு

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

திருத்தந்தை ஆறாம் பவுல் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆறாம் பவுல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
    பிற ஊடகங்கள் - இத்தாலியம்-ஆங்கிலம் - யூட்யூப்
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ஆல்ஃப்ரேதோ இதெல்ஃபோன்சோ ஷூஸ்டர்
மிலான் மறைமாவட்டத்தின் பேராயர்
1953 – 1963
பின்னர்
ஜோவான்னி கொலோம்போ
முன்னர்
இருபத்திமூன்றாம் யோவான்
திருத்தந்தை
1963 – 1978
பின்னர்
முதலாம் யோவான் பவுல்


Tags:

திருத்தந்தை ஆறாம் பவுல் திருத்தந்தை ஆவார் என்னும் எதிர்பார்ப்புதிருத்தந்தை ஆறாம் பவுல் பவுல் என்னும் பெயரைத் தேர்ந்தெடுத்தல்திருத்தந்தை ஆறாம் பவுல் அன்னை மரியா மீது பக்திதிருத்தந்தை ஆறாம் பவுல் உலக மக்களோடு உரையாடல்திருத்தந்தை ஆறாம் பவுல் உலகில் நிகழ்ந்த பெரும் மாற்றங்கள்திருத்தந்தை ஆறாம் பவுல் இறப்புதிருத்தந்தை ஆறாம் பவுல் ஆறாம் பவுலின் இளமைப் பருவம்திருத்தந்தை ஆறாம் பவுல் வத்திக்கான் வெளியுறவுத் துறையில் பணிதிருத்தந்தை ஆறாம் பவுல் திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் காலத்தில் மொந்தீனிதிருத்தந்தை ஆறாம் பவுல் இரண்டாம் உலகப்போரின் போதுதிருத்தந்தை ஆறாம் பவுல் புனிதர் பட்டம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் அருளாளர் பட்டம் வழங்கப்படுதலும்திருத்தந்தை ஆறாம் பவுல் அருளாளர் பட்டம் வழங்கப்படுதல்திருத்தந்தை ஆறாம் பவுல் மேல் ஆய்வுக்குதிருத்தந்தை ஆறாம் பவுல் ஆதாரங்கள்திருத்தந்தை ஆறாம் பவுல் வெளி இணைப்புகள்திருத்தந்தை ஆறாம் பவுல்இத்தாலியம்இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)இலத்தீன் மொழிகத்தோலிக்க திருச்சபை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மெட்பார்மின்பால் (இலக்கணம்)குமரகுருபரர்பெரியபுராணம்ம. பொ. சிவஞானம்குண்டலகேசிவிருந்தோம்பல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கிராம ஊராட்சிமாணிக்கவாசகர்தோட்டம்இமாம் ஷாஃபிஈநம்மாழ்வார் (ஆழ்வார்)நூஹ்டொயோட்டாவில்லங்க சான்றிதழ்கணையம்தொல். திருமாவளவன்புதினம் (இலக்கியம்)விவேகானந்தர்இந்தியாவில் இட ஒதுக்கீடுநீரிழிவு நோய்இந்திய நாடாளுமன்றம்மதுரைக் காஞ்சிநெல்அரபு மொழிஉருவக அணிவிநாயக் தாமோதர் சாவர்க்கர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்மாலை நேரத்து மயக்கம்இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்குணங்குடி மஸ்தான் சாகிபுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்திருக்கோயிலூர்பறவைசூர்யா (நடிகர்)வேதம்தஞ்சாவூர்ஈரோடு மாவட்டம்மேற்கு வங்காளம்சித்தர்வெள்ளி (கோள்)தேம்பாவணிவிளம்பரம்இந்தியப் பிரதமர்ஒரு காதலன் ஒரு காதலிஜவகர்லால் நேருஇருட்டு அறையில் முரட்டு குத்துஐந்து எஸ்கழுகுதனுசு (சோதிடம்)சிங்கப்பூர்பாஞ்சாலி சபதம்நாட்டுப்புறக் கலைஇந்திய விண்வெளி ஆய்வு மையம்தலைவி (திரைப்படம்)மனோன்மணீயம்ம. கோ. இராமச்சந்திரன்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இந்திய புவிசார் குறியீடுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுரைக்காய்ஆறுமுக நாவலர்பகாசுரன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)முகலாயப் பேரரசுதமிழ்விடு தூதுசீரடி சாயி பாபாதிருமந்திரம்முன்மார்பு குத்தல்பஞ்சாங்கம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்சிறுகதைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நாடார்ராம் சரண்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்மக்களாட்சி🡆 More