சென்னை மாகாணம்: பிரித்தானிய இந்திய மாகாணம்

சென்னை மாகாணம் (Madras Presidency) பிரித்தானிய இந்தியாவின் ஓரு நிருவாகப் பிரிவு.

இது மெட்ராஸ் ராஜதானி, சென்னை ராஜதானி, மெட்ராஸ் மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. இது தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் மலபார் பிரதேசம், இலட்சத்தீவுகள், ஆந்திரப் பிரதேசத்தின் ஆந்திரா மற்றும் ராயலசீமை பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி பகுதிகள் ஆகியவை இம்மாகாணத்தில் அடங்கியிருந்தன. இதன் கோடைக்காலத் தலைநகரம் உதகமண்டலம், குளிர்காலத் தலைநகரம் சென்னை.

Madras Presidency
மெட்ராஸ் மாகாணம்
மாநிலம் (பிரித்தானிய இந்தியா)
சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல்
 
சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல்
1652–1947  
சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல்

Flag of Madras Presidency

கொடி

Location of Madras Presidency
Location of Madras Presidency
1913 இல் சென்னை மாகாணம்
வரலாற்றுக் காலம் புதிய ஏகாதிபத்தியம்
 •  நிறுவப்பட்டது 1652
 •  Disestablished 1947

தோற்றம்

ஆங்கிலேயர் வரவுக்கு முன்னால்

கற்காலத்திலிருந்து இந்தியாவின் தென் பகுதியில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். சென்னை மாகாணத்தின் பகுதிகளை முற்காலத்தில் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், களப்பிரர், சாதவாகனர் போன்ற பல அரச வம்சங்கள் ஆண்டு வந்தன. பொ.ஊ. 14–16-ம் நூற்றாண்டுகளில் விஜயநகரப் பேரரசு இப்பகுதிகளை ஆண்டது. விஜயநகரத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் முசுலிம் ஆட்சியாளர்களும், நாயக்க மன்னர்களும், பாளையக்காரர்களும், குறுநில மன்னர்களும் இதன் பல்வேறு பகுதிகளை ஆண்டு வந்தனர். 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் வாணிபம் செய்வதற்காக இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதிக்கு வந்தனர்.

ஆரம்பகால ஆங்கிலேய வர்த்தக நிலையங்கள்

டிசம்பர் 31, 1600 இல் இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் அரசி ஓர் ஆங்கிலேய வர்த்தகர் குழுமத்துக்கு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் என்னும் கூட்டுப் பங்கு நிறுவனத்தை உருவாக்க அனுமதி அளித்தார். இந்நிறுவனம் முதலாம் ஜேம்ஸ் மன்னரின் காலத்தில் இந்தியாவில் வர்த்தக நிலையங்களை அமைக்க முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அனுமதியைப் பெற்றது. முதலில் இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகளில் வர்த்தக நிலையங்கள் தொடங்கப்பட்டன. பின்னர் முக்கிய வர்த்தகப் பொருளான பருத்திக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதாலும் கோல்கொண்டா சுல்தானின் அதிகாரிகள் காலனிய வர்த்தகர்களுக்குத் தொல்லை தந்து வந்ததாலும் கிழக்குக் கடற்கரையில் மச்சிலிப்பட்டணத்திலிருந்த வர்த்தக மையத்தை மேலும் தெற்கு நோக்கி நகர்த்த கிழக்கிந்திய நிறுவனத்தார் முடிவு செய்தனர். சந்திரகிரி அரசரிடம் பேச்சு வார்த்தை நடத்திய கிழக்கிந்தியக் கம்பனி நிருவாகி சர் பிரான்சிசு டே, மதராசப்பட்டினம் எனும் கிராமத்தருகே ஒரு வர்த்தக நிலையத்தை நிறுவ நிலஉரிமை பெற்றார். அந்நிலத்தில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இங்கு எழுந்த குடியிருப்பை நிருவாகம் செய்ய ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு ஆண்ட்ரூ கூகன் அதன் முதல் முகவரானார். இந்த அமைப்புகள் அனைத்தும் சாவகத்தி்ல் அமைந்திருந்த பாண்டம் மாகாணத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. 1641 இல் மதராசப்பட்டினம் சோழமண்டலக் கடற்கரையில் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைமையிடமாக மாறியிருந்தது.

புனித ஜார்ஜ் கோட்டை முகமை

ஆண்ட்ரூ கோகனைத் தொடர்ந்து முறையே பிரான்சிசு டே, தாமசு ஐவி, தாமசு கிரீன்ஹில் ஆகியோர் ஜார்ஜ் கோட்டை முகவர்களாகப் பணியாற்றினர். கிரீன்ஹில்லின் பதவிக்காலம் 1653 ஆம் ஆண்டில் முடிவடைந்த பின்னர் ஜார்ஜ் கோட்டை ஒரு மாகாணமாகத் தரமுயர்த்தப்பட்டது; பாண்டம் மாகாணத்தின் மேற்பார்வையிலிருந்து விலக்கப்பட்டது. அதன் புதிய தலைவராக ஆரோன் பேக்கர் பதவி வகித்தார். ஆனால் 1655 இல் மீண்டும் முகமையாக தரமிறக்கப்பட்டு சூரத் வர்த்தக நிலையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. 1684 வரை இந்நிலை நீடித்தது. 1658 இல் ஜார்ஜ் கோட்டைக்கு அருகிலிருந்த திருவல்லிக்கேணி கிராமத்தை ஆங்கிலேயர் ஆக்கிரமித்தனர்.

வரலாறு

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
சென்னை மாகாணத்தின் வரைபடம் (1909)

விரிவாக்கம்

1684ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை மீண்டும் சென்னை மாகாணமாகத் தரமுயர்த்தப்பட்டது. வில்லியம் கிஃப்பர்ட் அதன் முதல் தலைவரானார். அப்போதிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தொடர்ச்சியாக விரிவடைந்தது. முகலாயர்கள், மராட்டியர்கள், கோல்கொண்டா நவாபுகள், கர்நாடக நவாபுகள் ஆகியோரின் தாக்குதல்களைச் சமாளித்து இந்த விரிவாக்கம் நடைபெற்றது. செப்டம்பர் 1784 இல் கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் நிருவாகத்தை ஒருங்கிணைக்க பிட்டின் இந்தியா சட்டம் (Pitt's India Act) இயற்றப்பட்டது. இதன் மூலம் சென்னை மாகாணத்தின் தலைவர் கல்கத்தாவிலிருந்து செயல்பட்ட தலைமை ஆளுனரின் அதிகாரத்துக்கு உட்பட்டவரானார். செப்டம்பர் 1746 இல் புனித ஜார்ஜ் கோட்டை பிரெஞ்சுப் படைகளால் கைப்பற்றப்பட்டு மூன்றாண்டுகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. 1749 இல் ஐக்ஸ்-லா-ஷாப்பெல் ஒப்பந்ததின்படி மீண்டும் ஆங்கிலேயர் வசமானது.

கம்பனி ஆட்சி

1774–1858 இல் சென்னை மாகாணம் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களால் நிருவாகம் செய்யப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வெகுவாக விரிவடைந்தது. கிழக்கிந்திய நிறுவனம், திப்பு சுல்தான், பாளையக்காரர்கள், இலங்கை அரசர்கள் ஆகியோரிடன் போரிட்டு வென்று பெரும் பகுதிகளைச் சென்னை மாகாணத்துடன் இணைத்தது. (1797–1804 காலகட்டத்தில் மட்டும் இலங்கை சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது). ஆர்தர் வெல்லஸ்லி உருவாக்கிய துணையாட்சிக் கூட்டணிகள் மூலம் பல உள்ளூர் சமஸ்தானங்கள் சென்னை ஆளுனருக்குக் கட்டுப்பட்டன. விசாகப்பட்டினம் மற்றும் கஞ்சம் ஆகியவையே இறுதியாகச் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டப் பகுதிகள். இக்காலகட்டத்தில் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சிக்கு எதிராக இப்பகுதியில் சில கலகங்கள் நடந்தன. 1806 இல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் எழுச்சி அவற்றுள் முதன்மையானது.. இது முதல் விடுதலைப் போர் என்றும் கூறப்படுகின்றது. வேலுத்தம்பி, பள்ளியத்து அச்சன் ஆகியோரின் புரட்சிகளும் இரு பாளையக்காரர் போர்களும் இக்காலகட்டத்தில் நடைபெற்ற பிற குறிப்பிடத்தக்க கலகங்கள். ஆனால் 1857 இல் வட இந்தியாவில் தீவிரமாக நடைபெற்ற சிப்பாய்க் கிளர்ச்சியால் சென்னை மாகாணம் அதிகமாக பாதிக்கப்படவில்லை. இதுவும் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என்று கூறப்படும் ஓர் எழுச்சி.

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
சென்னை மாகாண மாவட்டங்களைக் காட்டும் 1859 ஆம் ஆண்டு வரைபடம்.

அவகாசியிலிக் கொள்கையின் படி, மைசூர் அரசர் மும்மடி கிருஷ்ணராஜ உடையாரின் நிருவாகத்தில் முறைகேடுகள் மலிந்துவிட்டன என்று காரணம் காட்டி 1831 இல் கிழக்கிந்திய நிறுவனம், மைசூர் அரசை சென்னை மாகாணத்துடன் இணைத்தது. ஆனால் 1881ம் ஆண்டு கிருஷ்ணராஜ உடையாரின் பேரன் சாம்ராஜ் உடையாரிடம் மைசூரின் ஆட்சியை மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சாவூர் மராத்திய இராச்சியத்தின் கடைசி அரசர் இரண்டாம் சிவாஜி 1855 ம் ஆண்டு ஆண் வாரிசின்றி இறந்ததை அடுத்து, தஞ்சாவூரும் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.

விக்டோரியா காலம்

1858 இல் விக்டோரியா அரசியின் உத்தரவின் படி இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் பிரித்தானிய இந்தியா என்ற பெயரில் பிரித்தானிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன. ஹாரிஸ் பிரபு சென்னையின் முதல் ஆளுனராக பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். நாட்டின் நிருவாகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்திய கவுன்சில் சட்டம், 1861 ஆளுனரின் நிருவாகக் குழுவுக்கு சட்டமியற்றும் உரிமைகளை அளித்தது.. 1892 மற்றும் 1909 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட கவுன்சில் சட்டங்கள் ஆளுனரின் நிருவாகக் குழுவை மேலும் விரிவுபடுத்தி புனரமைத்தன. வி. சடகோபச்சாருலு இக்குழுவின் முதல் இந்திய உறுப்பினராவார். கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் சட்டத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். 1877 இல் டி. முத்துசாமி ஐயர், சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு ஆங்கிலோ இந்திய ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவரே சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதியாகவும் பணியற்றினார் (1893 இல்). 1906 இல் சி. சங்கரன் நாயர், தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரானார்.

இக்காலகட்டத்தில் பல சாலைகள், தொடருந்து இருப்புப் பாதைகள், அணைகள், கால்வாய்கள் போன்றவை சென்னை மாகாணத்தில் கட்டபட்டன. சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876–78, இந்தியப் பஞ்சம், 1896–97 ஆகிய இரு பெரும் பஞ்சங்கள் இக்காலகட்டத்தில் சென்னை மாகாணத்தைப் பீடித்தன. பஞ்சத்தின் பாதிப்பால் 1871 இல் 3.12 கோடியாக இருந்த மாகாண மக்கள் தொகை 1881 இல் 3.08 கோடியாகக் குறைந்தது. இப்பஞ்சங்களும் செங்கல்பட்டு உழவர் வழக்கு (1881–83), சேலம் கலவர வழக்கு (1882) ஆகிய நிகழ்வுகளைக் காலனிய அரசு கையாண்ட முறையும் மாகாண மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.

விடுதலை இயக்கத்தின் தொடக்க காலம்

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
1922 இல் அன்னி பெசண்ட்

19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் சென்னை மாகாண மக்களிடையே தேசியவாதம் தலைதூக்கியது. இம்மாகாணத்தில் தொடங்கப்பட்ட முதல் அரசியல் அமைப்பு, 1852 இல் கசுலு லட்சுமிநரசு செட்டி என்பவர் தொடங்கிய சென்னை மக்கள் சங்கம் (Madras Native Association) ஆகும். ஆனால் அவ்வமைப்பு நெடுநாட்கள் செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து மே 16, 1884 இல் சென்னை மகாஜன சங்கம் தொடங்கப்பட்டது. இந்திய தேசியக் காங்கிரசின் முதல் மாநாடு மும்பையில் நடைபெற்ற போது (டிசம்பர் 1885) அதில் கலந்து கொண்ட 72 மாநாட்டு உறுப்பினர்களில் 22 பேர் சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அந்த 22 பேரில் பலர் சென்னை மகாஜன சங்கத்தின் உறுப்பினர்கள். காங்கிரசின் மூன்றவது மாநாடு டிசம்பர் 1887 இல் சென்னை நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாகாணம் முழுவதிலிருந்தும் 362 பேர் இதில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் 1894, 1898, 1903, 1908, 1914 மற்றும் 1927 ஆகிய ஆண்டுகளிலும் காங்கிரசு மாநாடுகள் சென்னையில் நடைபெற்றன.

1882 இல் எலனா பிளவாத்ஸ்கி மற்றும் ஹென்றி ஆல்காட் ஆகியோர் பிரம்மஞான சபையின் தலைமையகத்தை அடையாறுக்கு மாற்றினர். இந்த சபையின் முக்கிய புள்ளியான அன்னி பெசண்ட் 1916 இல் இந்திய ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கினார். சென்னையிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட இந்த இயக்கத்துக்கு மாகாணம் முழுவதும் பெரும் ஆதரவு கிட்டியது. சென்னையிலிருந்து வெளியான தி இந்து, சுதேசமித்திரன், மாத்ருபூமி போன்ற தேசியவாத இதழ்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தன. திரு. வி.காவும், பி. பி. வாடியாவும் இணைந்து இந்தியாவின் முதல் தொழிலாளர் சங்கத்தை 1918 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவினர்.

இரட்டை ஆட்சி (1920–37)

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல்  சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
தியாகராய செட்டி (இடது) பிராமணரல்லாதோர் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்; பெரியார் (வலது) சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கியவர்

இந்திய அரசுச் சட்டம், 1919 இன் விளைவாக 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை உருவாக்கப்பட்டு முதன்முறையாக நேரடித் தேர்தல் நடைபெற்றது. இவ்வாட்சிமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும் ஆளுனரின் நிருவாகக் குழுவும் இணைந்து மாகாணத்தை நிருவகித்தன. பிராமணரல்லாதோரின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி முதல் தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்தது. அ. சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் பிரதமர் (முதலமைச்சர்) ஆனார். ஆனால் உடல்நலக் குறைப்பாடு காரணமாக விரைவில் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து பனகல் அரசர் முதல்வரானார். அவரது ஆட்சியில் அரசுப்பணிகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க முதல் அரசாணை (# 613) வெளியிடப்பட்டது. இது தான் இந்தியாவில் இட ஒதுக்கீடு பற்றிய முதல் அரசு நடவடிக்கையாகும். இரண்டாம் மாகாணத் தேர்தலிலும் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால் உட்கட்சிப் பூசல் காரணமாக விரைவில் பிளவடைந்தது. 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டது. பெரும்பான்மை இடங்களை வென்ற சுயாட்சிக் கட்சி அரசமைக்க மறுத்து விட்டதால், ஆளுனர் ஜார்ஜ் கோஷன், ப. சுப்பராயன் தலைமையிலான சுயேச்சைகளின் அரசை உருவாக்கினார். 1930 தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி வெற்றி பெற்று பி. முனுசாமி நாயுடு முதல்வரானார். உட்கட்சிப் பூசல் காரணமாக நவம்பர் 1932 இல் அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார்; அவருக்கு பதில் பொபிலி அரசர் முதல்வரானார். இந்திய அரசுச் சட்டம், 1935 இன் படி இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1937 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்து இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியைக் கைப்பற்றியது.

1920களிலும் 30களிலும் சென்னை மாகாணத்தில் பிராமண எதிர்ப்பு இயக்கம் உருவாகி வலுவடைந்தது. மாகாண காங்கிரசுக் கட்சியில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாமல் காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் ஈ. வே. ராமசாமி இதனைத் தொடங்கினார். பார்ப்பனர்கள், இந்து சமயம், சாதிப் பாகுபாடுகள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை தமது எழுத்துகளால் சாடினார்.

பிரித்தானிய ஆட்சியின் இறுதி நாட்கள்

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
ராஜாஜி, இந்திய தேசிய காங்கிரசு 1937 இல் ஆட்சியமைத்த போது முதல்வரானார்.

1937 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி சென்னை மாகாண பிரதமரானார் (முதலமைச்சர்). தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக் கோயில்களில் நுழைந்து வழிபடும் வகையில் ஆலய நுழைவுச் சட்டத்தை இயற்றினார். மதுவிலக்கு, விற்பனை வரி ஆகியவற்றையும் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தி மொழியைச் சென்னை மாகாணப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கினார். இக்கொள்கைக்கு மாகாண மக்களிடையே பரவலான எதிர்ப்பு இருந்தது; இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றைப் பெரியாரின் பகுத்தறிவு இயக்கமும், அ. தா. பன்னீர்செல்வத்தின் தலைமையில் நீதிக்கட்சியும் இப்போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றன. போராட்டங்களில் ஈடுபட்ட 1,200 ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சிறையிலடைக்கப்பட்டனர். தாளமுத்து, நடராசன் எனும் இரு போராட்டக்காரர்கள் மரணமடைந்தனர். 1939ம் ஆண்டு இந்தியா முழுவதும் பதவியிலிருந்த காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகின. இந்தியர்களைக் கலந்தாலோசிக்காமல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவைக் காலனிய அரசு ஈடுபடுத்தியது இம்முடிவுக்குக் காரணமாக இருந்தது. இதன் பின்னர் சென்னை மாகாணம், சென்னை ஆளுனரால் நேரடியாக நிருவாகம் செய்யப்பட்டது. பெப்ரவரி 21, 1940 இல் ஆளுனர் கட்டாய இந்தி அரசாணையை நீக்கினார்.

காங்கிரசின் பெரும்பான்மையான தலைவர்கள் 1942 இல் தீவிரமாக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றனர். 1944 இல் நீதிக்கட்சி பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து அதை விலக்கிக் கொண்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மீண்டும் காங்கிரசு தேர்தல்களில் போட்டியிட்டது. 1946 தேர்தலில் எளிதில் வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. த. பிரகாசம் 11 மாதங்கள் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். இந்தியா ஆகஸ்ட் 15, 1947 இல் விடுதலையடைந்தது. சென்னை மாகாணம் சென்னை மாநிலம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜனவரி 26, 1950 இல் இந்தியா குடியரசான பின்னர் குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக மாறியது.

மக்கள் தொகையியல்

1822 இல் சென்னை மாகாணத்தில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மாகாணத்தின் மக்கள் தொகை 13,476,923 எனக் கணக்கிடப்பட்டது. 1836–37 இல் நடைபெற்ற இரண்டாவது கணக்கெடுப்பில் மக்கள் தொகை 13,967,395 ஆக உயர்ந்திருந்தது. 1851 இல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் வழக்கம் ஆரம்பமானது. 1851–52 இல் நடைபெற்ற முதல் ஐந்தாண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் எண்ணிக்கை 22,031,697 ஆக இருந்தது. அடுத்த கணக்கெடுப்புகள் 1856–57, 1861–62 மற்றும் 1866–67 இல் நடைபெற்றன. மக்கள் தொகை, 1861–62 இல் 22,857,855 ஆகவும் 1866–67 இல் 24,656,509 ஆகவும் உயர்ந்திருந்தது.

பிரித்தானிய இந்தியாவில் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 1871 இல் நடைபெற்றது. அதன்படி சென்னை மாகாண மக்கள் தொகை 31,220,973. இதன் பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. பிரித்தானிய இந்தியாவில் இறுதியாக நடைபெற்ற கணக்கெடுப்பின்படி (1941) சென்னை மாகாண மக்கள் தொகை 49,341,810.

மொழிகள்

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
சென்னை மாகாணத்தின் மொழிப்பரவல் வரைபடம் (1913)

சென்னை மாகாணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, துளு, ஆங்கிலம் போன்ற மொழிகள் அதிக அளவில் பேசப்பட்டன. மாகாணத்தின் தென் மாவட்டங்களில் (சென்னை நகருக்கு வடக்கில் சில மைல்களில் தொடங்கி தெற்கில் கன்னியாகுமரி வரையும் மேற்கில் நீலகிரி / மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் வரையிலுமான பகுதி) தமிழ் பேசப்பட்டது. சென்னை நகருக்கு வடக்கிலும், பெல்லாரி, அனந்தபூர் மாவட்டங்களுக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளிலும் தெலுங்கு பேசப்பட்டது. தெற்கு கனரா மாவட்டம், பெல்லாரி மற்றும் அனந்தபூர் மாவட்டங்களின் மேற்கு பகுதிகள் மற்றும் மலபார் மாவட்டத்தின் சில பகுதிகளில் கன்னடம் பேசப்பட்டது. மலபார் மற்றும் தெற்கு கனரா மாவட்டம், திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் ஆகிய பகுதிகளில் மலையாளம் பேசப்பட்டது. தெற்கு கனரா மாவட்டத்தில் மட்டும் துளு பேசப்பட்டது.. கஞ்சாம் மாவட்டத்திலும் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஒடியா பேசப்பட்டது. ஆங்கிலோ இந்தியர்களும், ஆசிய-ஐரோப்பிய கலப்பின மக்களும் ஆங்கிலம் பேசினர். ஆங்கிலமே மாகாணத்தின் இணைப்பு மொழியாகவும் பிரித்தானிய இந்தியாவின் அலுவல் மொழியாகவும் விளங்கியது. அரசின் நிருவாகச் செயல்பாடுகளும் நீதிமன்ற வழக்குகளும் ஆங்கிலத்தில் நடைபெற்றன.

1871 கணக்கெடுப்பின் படி மாகாணத்தில் 14,715,000 தமிழ் பேசுவோர், 11,610,000 தெலுங்கு பேசுவோர், 2,324,000 மலையாளம் பேசுவோர், 1,699,000 கன்னடம் பேசுவோர், 640,000 ஒடியா பேசுவோர் மற்றும் 29,400 துளு பேசுவோர் இருந்தனர். 1901 கணக்கெடுப்பின் படி மாகாணத்தில் 15,182,957 தமிழ் பேசுவோர், 14,276,509 தெலுங்கு பேசுவோர், 2,861,297 மலையாளம் பேசுவோர், 1,518,579 கன்னடம் பேசுவோர், 1,809,314 ஒடியா பேசுவோ, 880,145 இந்துஸ்தானி பேசுவோர் இருந்தனர். இம்மொழிகளைத் தவிர 1,680,635 பேர் வேறு மொழிகளைப் பேசி வந்தனர். இந்தியா விடுதலை அடையும் தருவாயில் சென்னை மாகாண மக்களில் 78% பேர் தமிழ் அல்லது தெலுங்கு பேசுபவர்களாக இருந்தனர். எஞ்சியிருந்தோர் கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளைப் பேசி வந்தனர்.

சமயங்கள்

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
தஞ்சாவூரில் ஒரு குருகுலத்தில் ஐயங்கார் மாணவர்கள் (1909)
சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
ஐயனார் கோயில் திருப்பரங்குன்றம் (1911)
சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
ஒரு இஸ்லாமியச் சிறுவன் (1914)

1901 இல் சென்னை மாகாணத்தில் 37,026,471 இந்துக்கள், 2,732,931 முசுலிம்கள் மற்றும் 1,934,480 கிறித்தவர்கள் இருந்தனர். 1947 இல் இந்தியா விடுதலை அடையும் தருவாயில் சென்னை மாகாணத்தில் 49,799,822 இந்துக்கள், 3,896,452 முசுலிம்கள் மற்றும் 2,047,478 கிறித்தவர்கள் இருந்ததாக கணிக்கப்பட்டிருந்து. இந்து சமயம் மாகாணத்தின் தனிப்பெரும் சமயமாக இருந்தது. மக்களில் 88% பேர் இந்துக்களாக இருந்தனர். சைவர்கள், வைணவர்கள் மற்றும் லிங்காயத்துகள் இந்துக்களிடையே இருந்த முக்கிய உட்பிரிவுகள். பிராமணரிடையே சுமார்த்த வழிபாடு பிரபலமாக இருந்தது. நாட்டுப்புற மக்களிடையே சிறுதெய்வ வழிபாடு பரவலாக இருந்தது. காஞ்சி, சிருங்கேரி, அகோபிலம், திருப்பனந்தாள், தருமபுரம், திருவாவடுதுறை போன்ற பல இடங்களிலிருந்த மடங்கள் இந்து சமய மையங்களாக விளங்கின. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், திருப்பதி வேங்கடாசலபதி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், திருவிதாங்கூர் பத்மநாப சுவாமி கோவில் ஆகியவை புகழ்பெற்ற கோயில்களாக விளங்கின.

வர்த்தகம் செய்ய வந்த அரபு வர்த்தகர்களால் தென்னிந்தியாவில் இசுலாம் அறிமுகம் செய்யப்பட்டது. பொ.ஊ. 14ம் நூற்றாண்டில் மாலிக் கஃபூரின் படையெடுப்புக்குப் பின்னர் பலர் இசுலாத்திற்கு மாறினர். நாகூர் சென்னை மாகாண இசுலாமியரின் முக்கிய வழிபாட்டுத் தலமாக இருந்தது. இந்தியாவிலேயே மிகப் பழைமையான கிறித்தவ சமூகங்கள் சென்னை மாகாணத்தில் இருந்தன. புனித தோமாவால் மலபார் கடற்கரையில் கிபி 52 இல் நிறுவப்பட்டதாகக் கருதப்படும் சிரிய திருச்சபையின் பிரிவுகள் இவற்றில் அடங்கும். திருநெல்வேலி மற்றும் மலபார் மாவட்டங்களில் கிறித்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மக்கள் தொகையில் காற்பகுதிக்குப் மேல் கிறித்தவர்கள். நீலகிரி, பழனி, கஞ்சாம் பகுதிகளில் வாழ்ந்த தோடர், படகர், கொடவர், கோடர், யெருகலர், கோண்டுகள் போன்ற மலைவாழ் பழங்குடிகளும் இந்துக்களாகக் கருதப்பட்டனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை பறையர், சக்கிலியர், புலையர், மடிகா மற்றும் ஈழவர் போன்ற சாதியினர் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு வந்தனர். கோயில்களில் நுழைந்து வழிபடும் உரிமையும் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இந்திய பெண்களுக்கு உரிமையளிப்பு, சமூக அவலங்களை ஒழித்தல் போன்ற சமூக சீர்திருத்தங்களுடன் தீண்டாமையும் மெல்ல ஒழிக்கப்பட்டது. பொபிலி அரசரின் மாகாண அரசு (1932–36) தீண்டத்தகாதோர் எனப்பட்டவர்களைக் கோயில் அறங்காவலக் குழுக்களுக்கு நியமனம் செய்தது. 1939 இல் ராஜாஜியின் காங்கிரசு அரசு அவர்கள் கோயில்களுக்குள் நுழைந்து வழிபடலாம் என சட்டமியற்றியது. 1937 இல் திருவிதாங்கூர் அரசர் சித்திர திருநாள் தனது திவான் சி. பி. ராமசுவாமி ஐயரின் அறிவுரையின்படி இதே போன்ற ஒரு கோயில் நுழைவு சட்டத்தை இயற்றினார். 1920களில் பனகல் அரசரின் நீதிக்கட்சி அரசு இந்து அறநிலைச் சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட அறங்காவலர் குழுக்கள் இந்துக் கோயில்களை நிருவாகம் செய்யத் தொடங்கின.

நிருவாகம்

1784 ல் இயற்றப்பட்ட பிட்டின் இந்தியா சட்டம், மாகாண ஆளுனருக்குத் துணை புரிய சட்டமியற்றும் அதிகாரம் படைத்த ஒரு நிருவாகக் குழுவை உருவாக்கியது. தொடக்கத்தில் இக்குழு நான்கு பேர் கொண்டதாக இருந்தது. அதில் இரு இந்தியக் குடிமைப் பணி உறுப்பினர்களும் ஒரு குறிப்பிடத்தக்க இந்தியரும், சென்னைப் படையின் முதற்பெரும் தளபதியும் அடங்குவர். 1895 இல் சென்னைப் படை கலைக்கப்பட்டதால் நிருவாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கை மூன்றாகக் குறைந்தது. இந்திய அரசுச் சட்டம், 1833 இக்குழுவுக்கு அளிக்கப்பட்டிருந்த சட்டமியற்றும் அதிகாரத்தை ரத்து செய்தது. ஆளுனருக்கு ஆலோசனை வழங்கும் ஒரு குழுவாக மட்டும் அது செயல்படத் தொடங்கியது இந்திய கவுன்சில் சட்டம், 1861 நீக்கப்பட்ட இந்த அதிகாரத்தை மீண்டும் நிருவாகக்குழுவுக்கு வழங்கியது. அடுத்த பல பத்தாண்டுகளில் பல முறை விரிவுபடுத்தப்பட்டது. 1920 இல் நேரடித் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது. 1937 இல் சட்டமன்றம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஈரரங்க அவையாக மாறியது.

1640 இல் கிழக்கிந்திய நிறுவனம் மதராசப்பட்டினம் கிராமத்தை வாங்கியதிலிருந்து சென்னை மாகாணத்தின் வரலாறு துவங்குகிறது. அடுத்து 1690 இல் புனித டேவிட் கோட்டை வாங்கப்பட்டது. 1763 இல் வாங்கப்பட்டச் செங்கல்பட்டு மாவட்டம் (அக்காலத்தில் செங்கல்பட்டு ஜாகிர் எனப்பட்டது) சென்னை மாகாணத்தின் முதல் மாவட்டமானது. 1792 இல் திப்பு சுல்தானுக்கும் கிழக்கிந்திய நிறுவனத்துக்குமிடையே ஏற்பட்ட சீரங்கப்பட்டினம் ஒப்பந்தத்தை அடுத்து மலபார், சேலம் மாவட்டங்கள் சென்னை மாகாணத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. 1799 இல் நான்காம் மைசூர்ப் போரில் திப்புவை வென்ற ஆங்கிலேயப் படைகள் கனரா, கோயமுத்தூர் மாவட்டங்களை சென்னை மாகாணத்துடன் இணைத்தன. 1799 இல் தஞ்சாவூர் மராட்டிய இராச்சியத்தின் பகுதிகள், சென்னை மாகாணத்தின் அங்கமாகின. 1800 இல் ஐதராபாத் நிசாம் ஆங்கிலேயருக்குக் கொடுத்த பகுதிகள் பெல்லாரி, கடப்பா மாவட்டங்களாக மாறின. 1801 இல், கர்நாடக அரசின் வீழ்ச்சிக்குப் பின் அதன் பகுதிகள் வட ஆற்காடு, தென் ஆற்காடு, நெல்லூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களாக சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டன. ஜூன் 1805-ஆகஸ்ட் 1808 காலகட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தின் உட்பகுதியாக இருந்தது. பின் தனி மாவட்டமாக மீண்டும் மாற்றப்பட்டது. 1823 இல் ராஜமுந்திரி, மச்சிலிப்பட்டினம், குண்டூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1859 இல் இம்மூன்று மாவட்டங்களும் கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களாகப் மீளமைக்கப்பட்டன. 1925 இல் கோதாவரி மாவட்டம் கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 1839 இல் குர்னூல் அரசு சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டு தனி மாவட்டமானது. 1859 இல் கனரா மாவட்டம் நிருவாக இலகுக்காக தென் கனரா, வட கனரா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் வட கனரா மும்பை மாகாணத்துடன் 1862 இல் இணைக்கப்பட்டது. 1860களில் சென்னை மாவட்டமும் செங்கல்பட்டு மாவட்டமும் ஒன்றாக இணைக்கப்பட்டன. 1868 இல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. 1908 இல், சென்னை மாகாணத்தில் மொத்தம் 24 மாவட்டங்கள் இருந்தன. ஒவ்வொரு மாவட்டமும் இந்தியக் குடிமைப் பணியைச் சேர்ந்த ஒரு மாவட்ட ஆட்சியரால் நிருவாகம் செய்யப்பட்டன. சில மாவட்டங்கள் மேலும் பிரிக்கப்பட்டு அப்பிரிவுகள் துணை ஆட்சியர் ஒருவரால் நிருவாகம் செய்யப்பட்டன. மாவட்டப் பிரிவுகள் மேலும் தாலூகா, பஞ்சாயத்து ஒன்றியங்கள் அல்லது கிராமக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சில நேரங்களில் அடிக்கடி கலகங்கள் ஏற்பட்டு வந்த பகுதிகள் தனி முகமைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. சென்னை மாகாணத்தில் இருந்த இரு முக்கிய முகமைகள் - விசாகப்பட்டினம் மலைப்பகுதிகள் முகமையும் கஞ்சாம் மலைப்பகுதிகள் முகமையும் ஆகும். முன்னது விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரது கட்டுப்பாட்டிலும் பின்னது கஞ்சாம் மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. 1936 ஆம் ஆண்டு இவ்விரு முகமைகளும் மாவட்டங்களும் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரிசா மாகாணத்திற்கும் சென்னை மாகாணத்திற்குமிடையே பங்கிடப்பட்டன.

சென்னை மாகாணத்தின் அதிகாரத்துக்கு ஐந்து மன்னர் அரசுகள் (சமஸ்தானங்கள்) இருந்தன. அவையாவன பங்கனப்பள்ளி, கொச்சி, புதுக்கோட்டை, சந்தூர், திருவிதாங்கூர். இவ்வரசுகள் அனைத்தும் குறிப்பிடத்தக்க அளவு தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்தன. ஆனால் அவற்றின் வெளியுறவுக் கொள்கை, சென்னை ஆளுனரின் பிரதிநிதி ஒருவரின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வாறு பங்கனப்பள்ளி அரசின் கொள்கைப் பிரதிநிதியாக குர்னூல் மாவட்ட ஆட்சியரும் சந்தூரின் வெளியுறவுக் கொள்கைப் பிரதிநிதி பெல்லாரி மாவட்ட ஆட்சியரும் இருந்தனர். 1800–45 மற்றும் 1865–73 காலகட்டங்களில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டையின் வெளியுறவுத் துறைப் பிரதிநிதியாக இருந்தார். இடைப்பட்ட காலத்தில் அப்பொறுப்பு மதுரை ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 1873 முதல் 1947 வரை திருச்சிராப்பள்ளி ஆட்சியர் அப்பொறுப்பைப் பெற்றிருந்தார்.

படை

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
சென்னை இலகுரகக் குதிரைப்படையின் ஐரோப்பிய அதிகாரி.

1655 இல், கிழக்கிந்திய நிறுவனம் தனது குடியிருப்புகளைக் காக்க பாதுகாவல் படைகளை அமைக்கும் உரிமை பெற்றது. சென்னை மாகாணப் படையும் உருவானது. சென்னையை முகலாய, மராத்திய மற்றும் ஆற்காடு நவாபின் படைகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தமை சென்னைப் படையின் தொடக்க காலப் படை நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கது. 1713 இல் லெப்டினன்ட் ஜான் டி மார்கன் தலைமையிலான சென்னை மாகாணப் படைகள் புனித டேவிட் கோட்டை முற்றுகையை முறியடித்ததுடன், ரிச்சர்ட் ராவொர்த் தலைமையில் நடைபெற்ற கலகத்தையும் அடக்கின.

1748 இல் பிரெஞ்சு இந்தியாவின் ஆளுனர் டூப்ளே இந்தியர்களைக் கொண்டு பட்டாலியன்களை உருவாக்கத் தொடங்கினார். அவரைப் பின்பற்றி ஆங்கிலேயர்கள் சென்னை ரெஜிமெண்ட்டை உருவாக்கினர். இது போன்ற இந்தியர் பணியாற்றும் படைப்பிரிவுகள் இந்தியாவின் வேறு பகுதிகளிலும் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை ஒன்றுக்கொன்று அருகாமையில் இல்லாத காரணத்தால், மூன்று மாகாணப் படைகளின் அமைப்பிலும் கோட்பாடுகளிலும் நிறைய வேறுபாடுகள் உருவாகின. சென்னைப் படையில் மலபார் மாவட்டத்தின் மாப்பிளைகளும் குடகுப் பகுதியைச் சேர்ந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தனர்.

1795 இல் சென்னைப் படை முதல் முறையாக சீரமைக்கப்பட்டது. அதில் பின்வரும் படைப்பிரிவுகள் இடம் பெற்றிருந்தன:

  • ஐரோப்பிய காலாட்படை – இரு பட்டாலியன்கள் (ஒவ்வொன்றிலும் 10 கம்பனிகள்)
  • பீரங்கிப்படை – இரு ஐரோப்பிய பட்டாலியன்கள் (ஒவ்வொன்றிலும் ஐந்து கம்பனிகள்) மற்றும் பதினைந்து லாஸ்கர் கம்பனிகள்
  • இந்திய குதிரைப்படை – நான்கு ரெஜிமன்டுகள்.
  • இந்திய காலாட்படை – இரு பட்டாலியன்களைச் சேர்ந்த பதினோறு ரெஜிமன்டுகள்.
சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
20வது ஜமாதார் குதிரைப்படைப் பிரிவின் ஜமாதார் (துணை அதிகாரி)

1824 இல், மீண்டும் ஒரு படைச் சீரமைப்பு நடைபெற்றது. பல இரட்டை பட்டாலியன்கள் கலைக்கப்பட்டு, எஞ்சியிருந்தவைக்கு புது எண்கள் அளிக்கப்பட்டன. அப்போது சென்னைப் படையில் ஒரு ஐரோப்பிய பிரிகேடும் ஒரு இந்திய குதிரை-இழு பீரங்கிப்படை பிரிகேடும், மூன்று பீரங்கிப்படை பட்டாலியன்களும், மூன்று இலகுரகக் குதிரைப்படை பட்டாலியன்களும், இரு பயனியர் கோர் படைப்பிரிவுகளும், இரு ஐரோப்பிய காலாட்படை பட்டாலியன்களும் 52 இந்திய காலாட்படை பட்டாலியன்களும் 3 உள்ளூர் காலாட்படை பட்டாலியன்களும் இடம் பெற்றிருந்தன.

1748–1895 காலகட்டத்தில், சென்னை, வங்காளம், மும்பை ஆகிய மூன்று மாகாணங்களின் படைகளுக்கும் முதற்பெரும் படைத்தலைவர்கள் இருந்தனர். சென்னைப் படையின் படைத்தலைவர் சென்னை ஆளுனரின் அதிகாரத்துக்கு உட்பட்டவராக இருந்தார்; ஆளுனரின் நிருவாகக் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். சென்னைப் படை 1762 இல் நடைபெற்ற மணிலா சண்டை, 1795 இல் இலங்கையில் ஒல்லாந்துருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் நறுமணப் பொருள் தீவுகள் மீதான படையெடுப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்றன. கர்நாடகப் போர்கள், ஆங்கில மைசூர்ப் போர்கள், மொரிசியசு படையெடுப்பு (1810), சாவகப் படையெடுப்பு (1811), இரண்டாம் ஆங்கில மராட்டியப் போரில் கட்டாக்கின் மீதான தாக்குதல், 1857 சிப்பாய் கலகத்தின் போது லக்னௌ முற்றுகை, மூன்றாம் ஆங்கில பர்மியப் போரின் போது மேல் பர்மா படையெடுப்பு ஆகியவை சென்னைப் படை பங்கேற்ற பிற போர் நிகழ்வுகள்.

1857 சிப்பாய் கலகத்தின் விளைவாக வங்காள மற்றும் மும்பை மாகாணப் படைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் சென்னைப் படையில் அவ்வாறு எதுவும் நிகழவில்லை. 1895 இல் மாகாணப் படைகள் கலைக்கப்பட்டு, சென்னைப் படையின் படைப்பிரிவுகள் பிரித்தானிய இந்தியாவின் முதற்பெரும் படைத்தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன.

நிலம்

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
சென்னை மாகாணத்தில் “ரயாட்வாரி” நிலவரி முறையை அறிமுகப்படுத்திய சர் தோமஸ் முன்ரோவின் சிலை (சென்னை)

நில வாடகை வருவாய் மற்றும் நிலத்தின் மூலம் அதன் உரிமையாளருக்குக் கிட்டும் நிகர லாபத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்ட வருமான வரி இவை இரண்டுமே சென்னை மாகாணத்தின் முக்கிய வருவாய் மூலங்களாக இருந்தன.

பண்டையக் காலங்களில் நிலம் சமுதாயத்தின் கூட்டுச்சொத்தாக இருந்ததால், எந்த தனிப்பட்ட நபரும் பிற உரிமையாளர்களின் அனுமதியன்றி அதை விற்க முடியாதிருந்தது. ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பே தனிமனித சொத்துரிமை என்ற கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. எனவே சென்னை மாகாணத்தின் நில வருவாய் முறை அதற்கு முன்பிருந்த முறையிலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை. ஆனால் நில உரிமையாளர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தின் பிற உறுப்பினர்களின் இசைவு பெற்ற பின்னரே நிலத்தை விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இத்தகைய கூட்டுச் சொத்துரிமை முறை வெள்ளாளர்களால் காணியாட்சி என்றும், பார்ப்பனர்களால் சுவஸ்தியம் என்றும், கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியரால் மிராசி என்றும் அழைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருந்த அனைத்து மிராசிகளும் ஒரு தனி நபரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவர் “ஏகபோகம்” என்றழைக்கப்பட்டார். இந்த மிராசுதார்கள் கிராம நிருவாகத்துக்காக குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். இது ”மிரை” என்றழைக்கப்பட்டது. மேலும் அரசுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலுத்தி வந்தனர். இதற்கு பிரதிபலனாக அரசு கிராமங்களின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று எதிர்பார்த்தனர்.

மலபார் மாவட்டத்திலும் கொச்சி மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானங்களில் இந்தக் கூட்டுச் சொத்துரிமை முறை பின்பற்றப்படவில்லை. மாறாக நம்பூதிரி, நாயர் மற்றும் மாப்பிளை சாதிகளைச் சேர்ந்தவர்களே நில உரிமையாளர்களாக இருந்தனர். அவர்கள் அரசுக்கு நில வரி செலுத்தவில்லை. அதற்கு பதிலாக நாயர்கள் போர்க்காலங்களில் அரசனின் படைக்கு ஆட்களை அனுப்பினர், நம்பூதிரிகள் கோயில் பராமரிப்புப் பணிகளைச் செய்தனர். நிலச்சுவான்தார்கள் ஓரளவு தன்னிறைவு பெற்றிருந்ததுடன் தாங்களே சொந்தமாக காவல் மற்றும் நீதித்துறைகளை நடத்தி வந்தனர். இதனால் அரசரின் நிருவாகச் செலவுகள் வெகுவாகக் குறைந்தன. ஆனால் நிலம் விற்கப்பட்டால் இந்த வருமான வரி விலக்கு ரத்தாகி விடும். இதனால் நிலத்தை விற்பதைக் காட்டிலும் அடகு வைப்பதே பரவலாக நடைபெற்றது. தெலுங்கு பேசும் மாவட்டங்களின் ஊர்த்தலைவர்கள் பல ஆண்டுகளுக்குச் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தனர். போர்க்காலத்தில் அரசருக்கு படைகளும் தளவாடங்களும் தந்துதவுவதற்குப் பிரதிபலனாக தங்கள் நில வருவாயை முழுமையாக தாங்களே வைத்துக்கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். பிரித்தானிய ஆட்சிகாலத்தில் சென்னை மாகாணத்தில் வட மாவட்டங்களில் பெரும்பகுதி இத்தகைய குறுநில மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இசுலாமியப் படையெடுப்புகளால் நில உரிமை முறைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்து நில உரிமையாளர்களுக்கு வரிகள் உயர்த்தப்பட்டன, நில உரிமை அளவும் குறைந்து போனது.

சென்னை மாகாண நிருவாகம் ஆங்கிலேயரிடம் வந்த போது அவர்கள் நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்த நில உடைமை முறையை மாற்றவில்லை. சமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலங்களிலிருந்து வரி வசூல் செய்ய இடைத்தரகர்களை நியமித்தனர். ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த இடைத்தரகர்கள் உழவர்களின் நலனைப் பற்றிச் சிந்திக்காமல் அவர்களைக் கூடிய மட்டும் சுரண்டிப் பிழைத்தனர். இந்த சிக்கலைத் தீர்க்க 1786 இல் அமைக்கப்பட்ட வருவாய் வாரியத்தால் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இக்காலகட்டத்தில் வங்காள மாகாணத்தில் கார்ன்வாலிசு பிரபு ஏற்படுத்திய சமீன்தாரி முறை வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. எனவே அது 1799 முதல் சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் வங்காளத்தில் வெற்றி பெற்ற அளவுக்கு அம்முறை சென்னையில் வெற்றி பெறவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு கிழக்கிந்திய நிறுவனத்துக்கு லாபம் கிட்டாததால், 1804–1814 காலகட்டத்தில் “கிராம முறை” என்ற ஒரு புதிய முறை திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, கோயமுத்தூர், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில் நிறுவனம் பெரும் நிலச்சுவான்தார்கள் நிறுவனத்திடமிருந்து நிலத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து அதனைப் பிரித்து குறு விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விட்டனர். ஆனால் இம்முறையும் விரைவில் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக தோமஸ் முன்ரோ ரயாட்வாரி முறையை 1820–27 காலகட்டத்தில் நடைமுறைப்படுத்தினார். இம்முறையின் கீழ் உழவர்கள் (ரயாட்டுகள், Ryots) தங்கள் குத்தகைத் தொகையை நேரடியாக அரசுக்குச் செலுத்தினர். அரசே நிலத்தை அளந்து, விளைச்சலைக் கணித்து உழவர்கள் கட்ட வேண்டிய வரியை நிர்ணயித்தது. ஆனால் இம்முறையிலும் உழவர்களுக்குப் பல பாதிப்புகள் இருந்தன. 1833 இல் வில்லியம் பென்டிங்க் மகல்வாரி முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில் நிலச்சுவான்தார்களும் உழவர்களும் செலுத்தவேண்டிய வரி குறித்து அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

1911 வாக்கில், சென்னை மாகாணத்தின் பெருவாரியான நிலப்பகுதி உழவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் அரசுக்கு நேரடியாக வரியைச் செலுத்தினர். மாகாண நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கு (26 மில்லியன் ஏக்கர்கள்) சமீன்தார்களிடம் இருந்தது. அரசுக்குச் செலுத்த வேண்டிய நிரந்தர வரி (”பேஷ்காஷ்”) ஆண்டொன்றுக்கு 3,30,000 பவுண்டுகளாக இருந்தது. சமய அமைப்புகளால் கொடையளிக்கப்பட்ட நிலங்களும் அரசு சேவைக்காக வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்களும் “இனாம்”கள் என்றழைக்கப்பட்டன. அவற்றின் மொத்த அளவு: 8 மில்லியன் ஏக்கர்கள். In 1945–46 காலகட்டத்தில், சென்னை மாகாணத்தில் 2,09,45,456 ஏக்கர் சமீன் நிலங்களும் (வரி வருவாய்: ரூ. 97,83,167) 5,89,04,798 ரயாட்வாரி நிலங்களும் (வரி வருவாய்: ரூ. 7,26,65,330) இருந்தன. இவை தவிர மாகாணத்தில் 15,782 சதுர மைல் நிலப்பரப்பு காடுகளாக இருந்தது.

சமீன்களில் உழவர்களைச் சுரண்டலில் இருந்து பாதுகாக்க 1808 நில உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி உழவர்கள் தங்கள் நிலங்களில் நிரந்தரமாகத் தங்க வேண்டும். ஆனால் ஒடியா மொழி பேசும் மாவட்டங்களில், உழவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களது நலனுக்குக் கேடாக அமைந்தது. 1933 இல் இச்சட்டம் திருத்தப்பட்டது. சமீன்தார்களின் உரிமைகள் குறைக்கப்பட்டு உழவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.

வேளாண்மையும் நீர்ப்பாசனமும்

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
சென்னை மாகாணத்தின் அரிசி கிடங்குகள் வரைபடம் (1936)

சென்னை மாகாண மக்கள் தொகையில் 71 விழுக்காட்டினர் வேளாண் தொழில் செய்து வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூலை 1ம் தேதி வேளாண் பருவம் தொடங்கியது. அரிசி, சோளம், கம்பு, ராகி போன்ற தானியங்களும் கத்திரி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெண்டை, வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளும், மிளகாய், மிளகு, இஞ்சி போன்ற மசாலாப் பொருட்களும், நெல்லி, வாழை, பலா, மா, பப்பாளி, சீதா போன்ற பழவகைகளும் பயிரிடப்பட்டன. இவை தவிர ஆமணக்கு, நிலக்கடலை ஆகியவையும் பயிரிடப்பட்டன. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பிற நிலப்பகுதிகளில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இலைக்கோசு, பூக்கோசு, வெற்றிலை மிளகு, திராட்சை போன்ற பயிர்களும் சென்னை மாகாணத்தில் விளைந்தன. மொத்த விளைநிலப்பரப்பில் 80 விழுக்காட்டில் உணவுப் பயிர்களும் 15 விழுக்காட்டில் பணப்பயிர்களும் பயிரிடப்பட்டன. அரிசி, கம்பு, ராகி, சோளம் போன்ற பயிர்கள் முறையே 26.4, 10, 5.4, 13.8 விழுக்காடு நிலப்பரப்பில் பயிரிடப்பட்டன. பருத்தி 17,40,000 ஏக்கர் நிலப்பரப்பிலும் எண்ணெய் வித்துகள் 20 லட்சம் ஏக்கரிலும் மசாலாப் பயிர்கள் 4 லட்சம் ஏக்கரிலும் அவுரி இரண்டு லட்சம் ஏக்கரிலும் பயிரிடப்பட்டன. 1898 ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் 2.8 கோடி மக்கள், 2,15,70,000 ஏக்கர் நிலப்பரப்பில் 74.7 கோடி மில்லியன் டன் உணவு தானியங்களை விளைவித்தனர். அரிசி விளைச்சல் ஏக்கருக்கு 7 முதல் 10 cwt. ஆக இருந்தது. சோளம், கம்பு மற்றும் ராகி விளைச்சல்கள் ஏக்கருக்கு முறையே 3.5-6.25, 3.25-5, 4.25-5 cwt. ஆக இருந்தன. உணவுப் பயிர்களுக்கான மொத்த சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 6.93 cwt. ஆக இருந்தது. (1 cwt = 112 பவுண்டுகள்).

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
முல்லைப்பெரியாறு அணையின் கட்டுமானப்பணிகள் நடைபெறுகின்றன

மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் நீர்ப்பாசனத்துக்காக ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளும், ஏரிகளும், பாசனக் குளங்களும் பயன்படுத்தப்பட்டன. மேற்கில் கோவை மாவட்டத்தில் குளங்களே நீர்ப்பாசனத்துக்குப் பெரிதும் பயன்பட்டன.

1884ம் ஆண்டு இயற்றப்பட்ட நில விருத்தி மற்றும் வேளாண் கடன் சட்டம், கிணறுகள் வெட்டி தரிசு நிலங்களை விளைநிலங்களாக்க நிதி ஒதுக்கீடு செய்தது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மின் ஏற்றிகளைக் கொண்டு நீரிறைக்க ஒரு தனி அரசுத்துறை உருவாக்கப்பட்டது.. மேட்டூர் அணை, முல்லைப்பெரியாறு அணை, கடப்பா-கர்நூல் கால்வாய், ருசிகுல்யாத் திட்டம் போன்றவை சென்னை மாகாண அரசு மேற்கொண்ட பெரும் நீர்ப்பாசனத் திட்டங்களில் சில. 1934 இல் கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணை மாகாணத்தின் மேற்கு மாவட்டங்களின் நீர்ப்பாசனத் தேவையைப் பூர்த்தி செய்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லையில் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை பெரியாறு நீரை வைகை வழியாக தென் மாவட்டங்களுக்குத் திருப்பிவிட்டது. கஞ்சம் மாவட்டத்தில் பாய்ந்த ருசிகுல்யா ஆற்று நீரைப் பயன்படுத்த ருசிகுல்யா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 1,42,000 நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கிட்டியது. இவை தவிர பல அணைக்கட்டுகளையும் கால்வாய்களையும் மாகாண அரசு கட்டியது. திருவரங்கம் தீவு அருகே கொள்ளிடத்தின் குறுக்கே ஒரு அணை, கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலேசுவரம் அணை, வைநேத்யம் கோதாவரியில் நீர்க்கட்டுக் கால்வாய், கர்நூல்-கடப்பா கால்வாய், மற்றும் கிருஷ்ணா அணை ஆகியவை மாகாண அரசால் கட்டப்பட்ட பெரும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள். 1946–47, காலகட்டத்தில் சென்னை மாகாணத்தில் 97,36,974 ஏக்கர் நிலம் நீர்ப்பாசன வசதி பெற்றிருந்தது. அரசு நீர்ப்பாசனத்தில் செய்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 6.94% வருவாய் கிட்டியது.

வர்த்தகமும் தொழிற்துறையும்

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
தூத்துக்குடி துறைமுகம்
சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
எம். வி. கண்ணையா செட்டி அன் சன்ஸ் துணிக்கடை (1914)
சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
கைத்தறி நெசவாளர்கள் (1913)
சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
பாரி அன் கோ சர்க்கரை சுத்திகரிப்பு ஆலை, சமல்கோட்டா (1914)
சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
சென்னை தானுந்து நிறுவனத்தின் பணிமனை (1914)

சென்னை மாகாணத்தில் நடைபெற்ற வர்த்தகத்தில் 93% வெளிவர்த்தகம் (பிற மாநிலங்களுடனும் நாடுகளுடனும்). எஞ்சிய 7 % உள்வர்த்தகம். வெளி வர்த்தகத்தில் 70 % பிற நாடுகளுடனான வர்த்தகம், 23 % பிரித்தானிய இந்தியாவின் பிற மாகாணங்களுடன் நடைபெற்ற வர்த்தகம். 1900–01, இல் பிற மாகாணங்களில் இருந்து ரூ. 13.43 கோடி மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. பிற மாகாணங்களுக்கு ரூ. 11.52 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே ஆண்டு பிற நாடுகளுக்கு ரூ 11.74 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன; பிற நாடுகளில் இருந்து ரூ 6.62 கோடி மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்தியா விடுதலை அடைந்த போது மாகாணத்தின் இறக்குமதிகளின் மதிப்பு ரூ 71.32 கோடியாகவும் ஏற்றுமதிகளின் மதிப்பு ரூ. 64.51 கோடியாகவும் இருந்தன. மாகாணத்தின் மொத்த வர்த்தகத்தில் 31.54 % ஐக்கிய இராச்சியத்துடன் நடைபெற்றது. வர்த்தகத்தில் 49% சென்னை நகரின் துறைமுகம் வழியாக நடைபெற்றது.

பருத்தித் துணித்துண்டுகள், நூல், உலோகங்கள், மண்ணெண்ணெய் ஆகியவை முக்கிய இறக்குமதிப் பொருட்கள். விலங்குத் தோல்கள், பஞ்சு, காபி, துணித்துண்டுகள் ஆகியவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். கடல் வழி வணிகத்தின் பெரும் பகுதி சென்னை நகரத் துறைமுகத்தின் மூலம் நடைபெற்றது. கோபால்பூர், காளிங்கப்பட்டனம், பீம்லிபட்டனம், கிழக்குக் கடற்கரையில் விசாகப்பட்டனம், மச்சிலிப்பட்டினம், காக்கிநாடா, கடலூர், பாம்பன், தூத்துக்குடி ஆகியனவும் மேற்குக் கடற்கரையில் மங்களூர், கண்ணனூர், கோழிக்கோடு, தளிச்சேரி, கொச்சி, ஆலப்புழா, கொல்லம், குளச்சல் ஆகியனவும் சென்னை மாகாணத்தின் பிற முக்கிய துறைமுகங்களாக இருந்தன. ஆகஸ்ட் 1, 1936 முதல் இந்திய அரசே கொச்சித் துறைமுகத்தின் நிருவாகத்தை ஏற்று நடத்தத் தொடங்கியது. அது போல் ஏப்ரல் 1, 1937 முதல் சென்னைத் துறைமுகமும் அரசுக் கட்டுப்பாட்டில் வந்தது. சென்னை, கொச்சி மற்றும் காக்கிநாடாவில் வர்த்தகர் சங்கங்கள் இயங்கி வந்தன. இவை சென்னை சட்டமன்றத்துக்கு தலா ஒரு நியமன உறுப்பினரைப் பரிந்துரை செய்யும் உரிமையும் பெற்றிருந்தன.

பருத்திக் கொட்டை நீக்குதலும், நெய்தலும் சென்னை மாகாணத்தின் இரு முக்கிய தொழில்கள். பெல்லாரி மாவட்டத்தில் அதிக அளவில் விளைந்த பருத்தி சென்னை, ஜார்ஜ் டவுன் பகுதியில் அழுத்தப்பட்டது. அமெரிக்க உள்நாட்டுப் போர் காரணமாக இங்கிலாந்து, லங்கசயரில் பருத்தித் தட்டுப்பாடு ஏற்பட்டது. இப்ப்பற்றாக்குறையை ஈடு செய்ய சென்னை மாகாணமெங்கும் பருத்தி பயிரிடலும் பருத்தி அழுத்திகளை இயக்குவதும் ஊக்குவிக்கப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கோயமுத்தூர் பகுதி பருத்தி சார் தொழில்களின் முக்கிய மையமாகியது; ”தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்ற பட்டத்தையும் பெற்றது. கோதாவரி, விசாகப்பட்டனம், கிருஷ்ணா போன்ற வட மாவட்டங்களிலும் பருத்தி நெய்தல் பெருமளவில் நடைபெற்றது. கஞ்சாம் மாவட்டத்தில் அஸ்கா என்னுமிடத்திலும் தென்னாற்காடு மாவட்டத்தில் நெல்லிக்குப்பத்திலும் சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்தன. தெலுங்கு பேசும் வட மாவட்டங்களில் பெருமளவில் விளைந்த புகையிலையில் இருந்து சுருட்டுகள் தயாரிக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி, சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகியவை முக்கிய சுருட்டு தயாரிப்பு தொழில் மையங்கள். செயற்கை அனிலீன் மற்றும் அலிசாரீன் சாயங்கள் கண்டுபிடிக்கப்படும் வரை, சென்னை மாகாணத்தில் இயற்கைச் (காய்கறி) சாயத் தொழில்துறை நன்கு இயங்கி வந்தது. அலுமினியக் கலன்கள் செய்வதற்காகப் பெருமளவில் அலுமினியம் இறக்குமதி செய்யப்பட்டது. உயர்ரகத் தோல்பொருட்களை உற்பத்தி செய்ய 20 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஒரு குரோம் தோல் பதப்படுத்தும் தொழிற்சாலையை அரசு நிறுவியது. 1826ம் ஆண்டு மாகாணத்தின் முதல் மது வடிப்பாலை நீலகிரியில் தொடங்கப்பட்டது; வயநாடு, குடகு, மைசூர்ப் பகுதிகளில் காப்பி பயிரிடப்பட்டது. நீலகிரி மலைத்தொடர்ப் பகுதிகளில் டீ பயிரிடப்பட்டது. திருவிதாங்கூரிலும் காப்பித் தோட்டங்கள் இருந்தன. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட ஒரு கருகல் நோய்த் தாக்குதலால் அவை அழிந்து போயின. காப்பி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் கோழிக்கோடு, தளிச்சேரி, மங்களூர், கோயமுத்தூர் போன்ற இடங்களில் அமைந்திருந்தன. 1947 இல், சென்னை மாகாணத்தில் மொத்தம் 3,761 ஆலைகளும் 2,76,586 தொழிலாளர்களும் இருந்தனர்.

சென்னை மாகாணத்தின் மீன்பிடித் தொழில்கள் வெற்றிகரமாக இயங்கின. மீன்பிடி தவிர, சுறா துடுப்புகள், மீன் குடல்கள், மீன்கள் போன்றவற்றை பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் மீனவர்களின் முக்கிய வருவாய் மூலங்களாக இருந்தன. தூத்துக்குடித் துறைமுகம் சங்கு பிடி தொழிலின் முக்கிய மையமாக இருந்தது. சென்னையும், இலங்கையும் முத்துக் குளித்தலுக்கு பெயர் பெற்றிருந்தன.

1946–47 இல் சென்னை மாகாணத்தின் மொத்த வருவாய் ரூ. 57 கோடிகள். இதில் நிலவருவாய், சுங்கத் தீர்வை, வருமான வரி, பதிவு வரி, காடுகளில் இருந்து கிட்டிய வருவாய், இதர வரிகள், திட்டமிடாத வருவாய் மற்றும் வருவாய் நிதி ஆகியவை முறையே 8.53, 14.68, 4.48, 4.38, 1.61, 8.45, 2.36 மற்றும் 5.02 கோடி ரூபாய்களாக இருந்தன. 1946–47 ஆண்டுகளில் மொத்த செலவு ரூ. 56.99 கோடிகள். 1948 இல் 208,675 கிலோவாட் அம்பியர் மின்சாரம் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. இதில் 98% அரசு உடைமையாக இருந்தது. மொத்தம் 467 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

1920 ம் ஆண்டு சென்னை நகரில் 100 உறுப்பினர்களுடன் சென்னைப் பங்குச் சந்தை தொடங்கப்பட்டது. ஆனால் வேகமாக உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து 1923 இல் மூன்று பேர் மட்டுமே எஞ்சியிருந்ததால் அது மூடப்பட்டது. செப்டம்பர் 1937 இல் மீண்டும் தொடங்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஈஐடி பாரி, பின்னி அன் கோ, அர்புத்னாட் வங்கி ஆகியவை சென்னை மாகாணத்தின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களாக இருந்தன. பாரி நிறுவனம் வேதி உரப்பொருட்களும் சர்க்கரையும் உற்பத்தி செய்தது. பின்னி நிறுவனம் பருத்தி ஆடைகளையும் சீருடைகளையும் ஒட்டேரியில் உள்ள தனது பக்கிங்காம் கர்னாடிக் நூற்பு ஆலையில் உற்பத்தி செய்தது. 1913–14 காலகட்டத்தில் சென்னை நகரில் 247 வணிக நிறுவனங்கள் இருந்தன. இந்திய விடுதலையின் போது பதிவுசெய்யப்பட்ட ஆலைகள் சென்னை நகரில் பெருமளவு இருந்தாலும் மொத்த முதலீட்டில் 62 விழுக்காட்டை மட்டுமே பயன்படுத்தின.

ஜூன் 21, 1683 இல் அமைக்கப்பட்ட சென்னை வங்கியே சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்ட முதல் மேற்கத்திய பாணி வங்கி. அதன் மொத்த முதலீடு ஒரு லட்சம் பிரித்தானியப் பவுண்டுகள். அதனைத் தொடர்ந்து 1788 இல் கர்நாடக வங்கியும் 1795 இல் சென்னையின் வங்கியும் 1804 இல் ஆசிய வங்கியும் தொடங்கப்பட்டன. 1843 இல் இந்த வங்கிகள் அனைத்தும் சென்னையின் வங்கி என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டன. மாகாணத்தின் முக்கிய நகரங்களிலும் மன்னர் அரசுகளிலும் இவ்வங்கிக்குக் கிளைகள் இருந்தன. 1921இல் இவ்வங்கி மும்பையின் வங்கி மற்றும் வங்காளத்தின் வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்டு இந்தியாவின் வேந்திய வங்கி (Imperial Bank of India) உருவாக்கப்பட்டது. 1906 ம் ஆண்டு வரை அர்புத்னாட் குடும்பத்தாரின் அர்புத்னாட் வங்கியே சென்னை மாகாணத்தின் மிகப்பெரிய வங்கியாக இருந்தது. 1906 இல் அது திவாலானது. இதனால் தங்கள் முதலீடுகளை இழந்து வறுமையில் தள்ளப்பட்ட இவ்வங்கியின் இந்திய முதலீட்டாளர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியினர் உதவியுடன் இந்தியன் வங்கியை உருவாக்கினர். சிட்டி யூனியன் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேசன் வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, கரூர் வைசியா வங்கி, கத்தோலிக்க சிரிய வங்கி, கர்நாடகா வங்கி, செட்டிநாடு வங்கி, ஆந்திரா வங்கி,வைசியா வங்கி, விஜயா வங்கி, இந்திய ஓவர்சீஸ் வங்கி மதுரா வங்கி போன்றவை சென்னை மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட வங்கிகளுள் முக்கியமானவை.

போக்குவரத்து

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
சென்னை மற்றும் தெற்கு மராத்தா தொடருந்து நிறுவனத்தின் இருப்புப்பாதை வரைபடம்

கிழக்கிந்திய நிறுவனத்தின் தொடக்க நாட்களில் பல்லக்குகளும், “ஜட்கா” என்று அழைக்கப்பட்ட மாட்டு வண்டிகளும் மட்டும் மாகாணத்தில் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. மாகாணத்தில் சாலைகள் உருவாக்குவதில் திப்பு சுல்தான் ஒரு முன்னோடியாகக் கருதப்பட்டார். அக்காலத்தில் இருந்த சென்னை-கல்கத்தா சாலை, சென்னை-திருவிதாங்கூர் சாலைகளின் முக்கிய நோக்கு மக்கள் போக்குவரத்தல்ல. போர்க்காலத்தில் படைகளையும் தளவாடங்களையும் விரைவாக நகர்த்துவதற்கு அவை பயன்பட்டன. 20 ஆம் நூற்றாண்டு முதல் மிதிவண்டிகள், தானுந்து வாகனங்கள், பேருந்துகள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்தது. பெரும்பாலான பேருந்துகள் தனியாரால் இயக்கப்பட்டன. மாகாணப் போக்குவரத்து (Presidency Transport), நகர மோட்டார் சேவைகள் (City Motor Service) ஆகிய நிறுவனங்கள் பேருந்துகள் இயக்கத்தில் முன்னோடிகளாக இருந்தன. 1910ம் ஆண்டு முதல் அவை சிம்சன் அன் கோ உற்பத்தி செய்த பேருந்துகளை இயக்கி வந்தன. 1925–28 காலகட்டத்தில் சென்னை டிராம்வேஸ் நிறுவனம் இயக்கிய பேருந்து சேவையே சென்னை நகரின் முதல் ஒருங்கிணைந்த பேருந்து சேவையாகும். மோட்டார் வாகனச் சட்டம், 1939 பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டப் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்குப் பல புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
நீலகிரி மலைத் தொடருந்து.
சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
மலபார் மாவட்ட நீர்வழிகள் (1913)

மாகாணத்தில் புதிய சாலைகள் போடவும், பழைய சாலைகளைப் பரமாரிக்கவும் 1845 இல் முதல் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சாலை பராமரிப்புக்கென ஒரு தனி அதிகாரி நியமிக்கப்பட்டார். சென்னை-பெங்களூர் சாலை, சென்னை-திருச்சிராப்பள்ளி சாலை, சென்னை-கல்கத்தா சாலை, சென்னை-கடப்பா சாலை, சும்பாஜீ மலைச் சாலை போன்றவை அவரது மேற்பார்வையின் கீழிருந்தன. 1852 இல் தல்ஹவுசிப் பிரபு பொதுப் பணிகளுக்கென ஒரு தனித்துறையை உருவக்கினார். 1855 இல் போக்குவரத்து வசதிக்காகக் கிழக்குக் கடற்கரைக் கால்வாய் கட்டப்பட்டது. ஆளுனரின் பொதுப்பணிகளுக்கான நிருவாகக் குழு உறுப்பினரின் மேற்பார்வையில் செயல்பட்ட பொதுப்பணித்துறை செயலகம் சாலைப் பணிகளை மேற்கொண்டது. சென்னை-கல்கத்தா சாலை, சென்னை-திருவிதாங்கூர் சாலை, சென்னை-கோழிக்கோடு சாலை ஆகியவை சென்னை மாகாணத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளாக இருந்தன. 1946–47 இல் சென்னை மாகாணத்தில் 26,201 மைல் சரளைக் கல் சாலைகளும், 14,406 கல்பதிக்காத சாலைகளும், 1,403 மைல் படகுப் போக்குவரத்துக்கு உகந்த கால்வாய்களும் இருந்தன.

தென்னிந்தியாவின் முதல் தொடருந்து இருப்புப் பாதை சென்னைக்கும் ஆற்காட்டுக்கும் இடையே அமைக்கப்பட்டு, ஜூலை 1, 1856 இல் தொடருந்துப் போக்குவரத்து தொடங்கியது. 1845 இல் நிறுவப்பட்ட சென்னை தொடருந்து நிறுவனத்தால் இந்தப் பாதை உருவாக்கப்பட்டது. 1853 இல் தென்னிந்தியாவின் முதல் தொடருந்து நிலையம் ராயபுரத்தில் அமைக்கப்பட்டது; சென்னை தொடருந்து நிறுவனத்தின் தலைமையகவாகவும் செயல்பட்டது. 1853 இல் ஐக்கிய இராச்சியத்தில் பெரும் தென்னிந்தியத் தொடருந்து நிறுவனம் நிறுவப்பட்டது. திருச்சியைத் தலைமையகமாகக் கொண்ட இந்நிறுவனம் திருச்சிக்கும் நாகப்பட்டனத்துக்கும் இடையே தனது முதல் இருப்புப் பாதையை 1859 இல் உருவாக்கியது. சென்னைத் தொடருந்து நிறுவனம் அகல இருப்புப் பாதைகளையும் பெரும் தென்னிந்தியத் தொடருந்து நிறுவனம் மீட்டர் இருப்புப் பாதைகளையும் அமைத்தன. 1874 இல் பெரும் தென்னிந்தியத் தொடருந்து நிறுவனம் கர்நாடக தொடருந்து நிறுவனத்துடன் (நிறுவல் 1864) ஒன்றிணைக்கப்பட்டு, தென்னிந்தியத் தொடருந்து நிறுவனம் உருவானது. இப்புதிய நிறுவனம் 1891 இல் பாண்டிச்சேரி தொடருந்து நிறுவனத்துடன் இணைந்தது. 1908 இல் சென்னைத் தொடருந்து நிறுவனம் தெற்கு மராத்தா தொடருந்து நிறுவனத்துடன் இணைந்து சென்னை மற்றும் தெற்கு மராத்தா தொடருந்து நிறுவனம் உருவானது. இப்புதிய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக சென்னை எழும்பூரில் ஒரு புதிய முனையம் கட்டப்பட்டது. 1927 இல் தென்னிந்தியத் தொடருந்து நிறுவனத்தின் தலைமையகம் மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நகர்த்தப்பட்டது. 1931 இல் இந்நிறுவனம் சென்னை புறநகர் இருப்புவழி சேவையைத் தொடங்கியது. ஏப்ரல் 1944 இல் சென்னை மற்றும் தெற்கு மராத்தா தொடருந்து நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்டது. 1947 இல் சென்னை மாகாணத்தில் 4961 மைல் தொடருந்து இருப்புப் பாதைகள் இருந்தன. சென்னை நகர், மும்பை, கல்கத்தா போன்ற பிற இந்திய நகரங்களுடனும், இலங்கையுடனும் நன்கு இணைக்கப்பட்டிருந்தது.. 1914 இல் இந்தியப் பெருநிலப்பரப்பைப் பாம்பன் தீவுடன் இணைக்கும் பாம்பன் பாலம் திறக்கப்பட்டது. 1899 இல் மேட்டுப்பாளையம்-உதகமண்டலம் இடையேயான நீலகிரி மலை இரயில் பாதை செயல்படத் தொடங்கியது. அட்சிசன் அன் கோவின் ஆதரவில் இயங்கிய சென்னை டிராம்வேஸ் நிறுவனம் 1895 முதல் சென்னை நகரில் செயல்படத் தொடங்கியது. சென்னை நகரின் ஆறு தூரமான பகுதிகள் இடையே மொத்தம் 17 மைல் தூரம் டிராம் வண்டிகள் இயங்கின. 1953 இல் சென்னை டிராம் சேவை நிறுத்தப்பட்டது.

கோதாவரி மற்றும் கிருஷ்ணா வடிநிலப்பகுதிகளில் இருந்த கால்வாய்களே சென்னை மாகாணத்தின் படகுப் போக்குவரத்துக்கு உகந்த முக்கிய நீர்வழிகளாக இருந்தன. 1806ம் ஆண்டு 90 லட்ச வெள்ளி செலவில் பக்கிங்காம் கால்வாய் வெட்டப்பட்டது. இது சென்னை நகரை கிருஷ்ணா வடிநிலப்பகுதியில் உள்ள பெட்டகஞ்சத்துடன் இணைத்தது. பிரித்தானிய இந்தியாவின் நீராவிக் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் கப்பல்கள் சென்னைக்கு அடிக்கடி வருகை தந்தன. சென்னை நகரை மும்பை, கல்கத்தா, கொழும்பு, ரங்கூன் போன்ற நகரங்களுடன் இணைத்தன.

1917 இல் சிம்சன் அன் கோ சென்னையில் முதல் சோதனை வானூர்தி ஓட்டத்தை நிகழ்த்தியது. அக்டோபர் 1929 இல் ஜி. விளாஸ்டோ என்ற விமானி சென்னைப் பரங்கிமலை குழிப்பந்தாட்ட சங்க மைதானத்தில் ஒரு பறப்போர் சங்கத்தைத் தொடங்கினார். இவ்விடம் பின்பு சென்னை வானூர்தி நிலையமாகப் பயன்பட்டது. இச்சங்கத்தின் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவரான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் தனது சொந்த ஊர்ப்புறமான செட்டிநாட்டுப் பகுதியில் மற்றுமொரு விமான நிலையத்தை உருவாக்கினார். அக்டோபர் 15, 1932 இல் நெவில் வின்சண்ட் என்கிற வேந்திய வான்படை விமானி ஜே. ஆர். டி. டாட்டாவுக்கு சொந்தமான ஒரு விமானத்தில் வான் அஞ்சல் கடிதங்களை ஏற்றிக் கொண்டு மும்பையிலிருந்து பெல்லாரி வழியாக சென்னையில் வந்திறங்கினார். இதுவே டாட்டா வான்சேவை நிறுவனத்தின் கராச்சி-சென்னை பயணிகள் மற்றும் வான் அஞ்சல் சேவையின் தொடக்கமாக அமைந்தது. பின்னர் ஐதராபாத் வழியாகத் திருப்பிவிடப்பட்ட இச்சேவை வாரம் இருமுறையாக விரிவுபடுத்தப்பட்டது. நவம்பர் 26, 1935, இல் டாட்டா சன்ஸ் நிறுவனம் கோவா, கண்ணனூர் வழியாக மும்பை-திருவனந்தபுரம் வான்சேவை ஒன்றை சோதனை அடிப்படையில் தொடங்கியது. பெப்ரவரி 28, 1938 முதல் சென்னை, திருச்சிராப்பள்ளி வழியாக கராச்சி-கொழும்பு இடையே ஒரு வான் அஞ்சல் சேவையொன்றையும் புதிதாகத் தொடங்கியது. மார்ச் 2, 1938 இல் மும்பை-திருவனந்தபுரம் வான்சேவை திருச்சி வரை நீட்டிக்கப்பட்டது.

சென்னை மாகாணத்தில் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அஞ்சல் சேவை சென்னை-கல்கத்தா இடையே 1712 ஆம் ஆண்டு சென்னை ஆளுனர் எட்வர்ட் ஹாரிசனால் தொடங்கப்பட்டது. ஜூன் 1, 1786 இல் இச்சேவை மறுசீரமைக்கப்பட்டு சர் ஆர்ச்சிபால்டு கேம்பலால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி சென்னை மாகாணம் மூன்று அஞ்சல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது - 1) சென்னை நகரின் வடக்கே கஞ்சாம் வரை சென்னை வடக்கு, 2) தென்மேற்கில் திருவிதாங்கூர் வரை சென்னை தென்மேற்கு மற்றும் 3) மேற்கே வேலூர் வரை சென்னை மேற்கு. அதே ஆண்டு மும்பையுடன் ஒரு அஞ்சல் தொடர்பும் ஏற்படுத்தப்பட்டது. 1837 ஆம் ஆண்டு சென்னை, மும்பை மற்றும் வங்காள மாகாணங்களின் அஞ்சல் துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு அனைத்திந்திய அஞ்சல் துறை உருவாக்கப்பட்டது. அக்டோபர் 1, 1854 இல் வேந்திய அஞ்சல் சேவை முதல் அஞ்சல் தலைகளை வெளியிட்டது. 1872–73, இல் சென்னை-ரங்கூன் இடையே ஒரு மாதமிருமுறை கடல் அஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னைக்கும் பிற கிழக்கு கடற்கரை துறைமுகங்களுக்கும் இடையே அஞ்சல் சேவைகள் தொடங்கப்பட்டன.

தொலைதொடர்பு

1853 இல் சென்னை உலகின் பிற பகுதிகளுடன் தந்தி மூலம் இணைக்கப்பட்டது. பெப்ரவரி 1, 1855 இல் பொதுமக்களுக்கான தந்திச் சேவை தொடங்கப்பட்டது. வெகு விரைவில் சென்னை, உதகமண்டலம் ஆகிய ஊர்களுக்கும் இந்தியாவின் பிற ஊர்களுக்குமிடையே தந்தி இணைப்புகள் உருவாக்கப்பட்டன. 1854 இல் சென்னைத் தந்தித்துறை உருவாக்கப்பட்டது. கொழும்பு-தலைமன்னார் இடையே 1858 இல் உருவாக்கப்பட்ட தந்தி இணைப்புத் 1882 இல் சென்னை வரை விரிவாக்கப்பட்டது. 1881 இல் சென்னை மாகாணத்தில் தொலைபேசிச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. நவம்பர் 19, 1981 இல் சென்னை எர்ரபாலு தெருவில் தொலைபேசி இணைப்பகம் ஒன்று உருவாக்கப்பட்டது. 1920 இல் சென்னை-போர்ட் பிளையர் இடையே கம்பியில்லாத் தந்திச் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 1936 இல் சென்னை ரங்கூன் இடையே வானொலி தொலைபேசிச் சேவை தொடங்கப்பட்டது.

கல்வி

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதி

மேற்கத்திய வகைக் கல்வியளிக்கும் பள்ளிகள் 18ம் நூற்றாண்டில் சென்னை மாகாணத்தில் தொடங்கப்பட்டன. 1822 இல் சர் தாமசு முன்ரோவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு பொதுக்கல்வி வாரியம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இந்திய மொழிகளில் கல்வி கற்பிக்கும் பள்ளிகள் தொடங்கப்பட்டன. முன்ரோவின் திட்டப்படி சென்னையில் ஒரு மையப் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியடைந்ததால் 1836 இல் கல்விக் கொள்கை மாற்றப்பட்டது. மீண்டும் ஐரோப்பிய இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகியவற்றுக்கு கல்வியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. பொதுக் கல்வி வாரியத்திற்கு பதில் இந்தியர் கல்விக்கான குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜனவரி 1840 இல், எல்லன்பரோ பிரபு அரச பிரதிநிதியாக இருந்த போது ஒரு பல்கலைக்கழக வாரியம் உருவாக்கப்பட்டது. அலெக்சாந்தர் அர்புத்நாட் பொதுக்கல்வித்துறையின் இணை இயக்குனராகப் பதவியேற்றார். ஏப்ரல் 1841 இல் சென்னை மையப் பள்ளி, உயர்நிலைப்பள்ளியாகத் தரமுயர்த்தப்பட்டது. 1853 இல் ஒரு கல்லூரிப் பிரிவு உருவாக்கப்பட்ட பின்னர் சென்னை மாநிலக் கல்லூரி என பெயர்மாற்றம் பெற்றது. செப்டம்பர் 5, 1857 இல் லண்டன் பல்கலைக்கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகம் என்ற தேர்வு அமைப்பு உருவாக்கப்பட்டது. பெப்ரவரி 1858 இல் முதல் கல்லூரித் தேர்வுகள் நடைபெற்றன. இலங்கையைச் சேர்ந்த சி. வை. தாமோதரம்பிள்ளையும் கரோல் வி. விசுவநாத பிள்ளையும் சென்னைப் பல்கலைகழகத்தி,ல் தேர்ச்சி பெற்ற முதல் பட்டதாரிகளாவர். சர் எஸ். சுப்ரமணிய ஐயர் இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியராவார்.

சென்னை நகருக்கு வெளியே தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுள் கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியும் ஒன்று. 1794 இல் சென்னை மாகாணத்தின் முதல் பொறியியல் கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஒரு நில அளவையாளர் பள்ளியாக இருந்த இது 1861 இல் கட்டுமானப் பொறியியல் கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. 1827 இல் சென்னை மாகாணத்தின் முதல் மருத்தவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1856 இல் சைதாபேட்டையில் அரசு ஆசிரியர் பள்ளி தொடங்கப்பட்டது. 1925 இல் ஆந்திரப் பல்கலைக்கழகச் சட்டம் இயற்றப்பட்டதன் விளைவாக ஆந்திரா பல்கலைக்கழகம் உருவானது. 1937ல் இல் திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 1842 இல் சென்னை மாகாணத்தின் முதல் இந்து தனியார் கல்வி நிறுவனமான பச்சையப்பன் கல்லூரி தொடங்கப்பட்டது. 1929 இல் செட்டிநாட்டில் அண்ணாமலை செட்டியார் தொடங்கிய அண்ணாமலை பல்கலைக்கழகம் மாகாணத்தில் மாணவர் தங்குவிடுதி வசதி கொண்ட முதல் கல்வி நிறுவனமாக அமைந்தது. சென்னை மாகாணத்தில் கல்விப்பணி செய்வதில் கிறித்தவ மிசனரிகள் முன்னோடிகளாக இருந்தனர். சென்னை கிருத்துவக் கல்லூரி, மங்களூர் புனித அலோசியசு கல்லூரி, சென்னை லயோலாக் கல்லூரி, தஞ்சை புனித பீட்டல் கல்லூரி ஆகியவை கிறித்தவ மிசனரிகள் தொடங்கிய கல்வி நிறுவனங்களுள் சில.

பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களில் சென்னையில் தான் படிப்பறிவு விகிதம் மிக அதிகமாக இருந்தது. 1901 இல் சென்னை மாகாணத்தின் 11.9 % ஆண்களும் 0.9 % பெண்களும் படிப்பறிவு பெற்றிருந்தனர். 1950 இல் (சென்னை மாகாணம், சென்னை மாநிலமாக மாறிய போது) அதன் படிப்பறிவு விகிதம் 18 % ஆக இருந்தது. இது இந்திய தேசிய சராசரியை விட சற்று அதிகம். 1901 இல் மாகாணத்தில் மொத்தம் 26,771 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இருந்தன. அவற்றில் 784,621 ஆண்களும் 139,139 பெண்களும் (மொத்தம் 923,760 பேர்) படித்தனர். 1947 இல் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 37,811 ஆக உயர்ந்திருந்தது; மொத்த மாணாக்கர் எண்ணிக்கையும் 3,989,686 ஆக அதிகரித்திருந்தது. கல்லூரிகளைத் தவிர ஆண்களுக்காக 31,975 அரசு தொடக்கப்பள்ளிகளும், 720 இடைநிலைப்பள்ளிகளும் பெண்களுக்காக 4,173 தொடக்கப்பள்ளிகளும் 181 இடைநிலைப்பள்ளிகளும் இருந்தன. தொடக்ககாலத்தில் படித்துப் பட்டம் பெறுவோரில் பெரும்பான்மையானவர்கள் பார்ப்பனர்களாக இருந்தனர். கல்வி நிறுவனங்களிலும் அரசு நிருவாகப் பணிகளிலும் பார்ப்பனர்கள் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தியது சென்னை மாகாணத்தில் பிராமண எதிர்ப்பு இயக்கம் உருவாக முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். மேலும் பிரித்தானிய இந்தியாவில் சாதி வாரி இடஒதுக்கீடு முதன் முதலாக சென்னை மாகாணத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

பண்பாடும் சமூகமும்

சென்னை மாகாணத்தில் வாழ்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் இந்தியக் கிறித்தவர்களும் கூட்டுக் குடும்ப முறையைப் பின்பற்றினர். மாகாணத்தில் தந்தை வழிக் குடும்பமுறை பரவலாகப் பின்பற்றப்பட்டது; குடும்பத்தின் மூத்த ஆண் உறுப்பினரே குடும்பத்தலைவராக இருந்தார். மலபார் மாவட்டம், கொச்சி-திருவிதாங்கூர் மன்னர் அரசுகளில் மட்டும் மருமக்கதாயம் என்னும் தாய்வழி முறை பின்பற்றப்பட்டது. பெண்கள் வீட்டு வேலைகளிலும் குடும்பப் பராமரிப்பிலும் மட்டும் ஈடுபட்டு வந்தனர். உயர்சாதி இந்துப் பெண்களும், முஸ்லிம் பெண்களும் பர்தா அணியும் பழக்கம் கொண்டிருந்தனர். பெண் குழந்தைகள் வீட்டு வேலைகளில் தங்கள் தாயாருக்குத் துணையாக இருந்தனர். திருமணத்துக்குப் பின்னர் கணவன் வீட்டுக்கு இடம்பெயர்ந்து, அவனுக்கும் அவனது வயது முதிர்ந்த குடும்பத்தாருக்கும் பணிவிடை செய்தனர். மருமகள்கள் கணவன் குடும்பத்தினரால் கொடுமைப் படுத்தப்பட்ட பல சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிராமண விதவைகள் தங்கள் தலைகளை மொட்டையடித்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்கள் மேலும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

கிராமங்களில் பல சாதிகளைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்தனர். பார்ப்பனர்கள் அக்கிரகாரங்கள் என்றழைக்கப்பட்ட தனித் தெருக்களில் வாழ்ந்தனர். தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்டவர்கள் கிராம எல்லைக்கு வெளியே சேரிக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். அவர்கள் கிராம எல்லைக்குள் வாழ்வதும் கோயில்களுக்குள் நுழைவதும், உயர் சாதி இந்துக்களுக்கு அருகே செல்வதும் தடை செய்யப்பட்டிருந்தது.

19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்து சமுதாயத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1896 மலபார் திருமணச் சட்டம், சம்மந்த முறை திருமணங்களுக்கு சட்டஏற்பு அளித்தது. 1933 இல் இயற்றப்பட்ட மருமக்கதாயம் சட்டம் மருமக்கதாயம் முறையை ஒழித்தது. பட்டியல் பிரிவு மக்களின் வாழ்வை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1933 இல் இயற்றப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான சட்டம், கோயில் நிருவாகத்தில் பட்டியல் பிரிவினருக்கு இடமளித்தது. 1939 இல் சென்னை மாகாணத்திலும் 1936 இல் திருவிதாங்கூர் அரசிலும் பட்டியல் பிரிவினர் கோயில் நுழைவு உரிமை அளிக்க சட்டங்கள் இயற்றப்பட்டன. 1872 இல் டி. முத்துசாமி ஐயர் விதவை மறுமண சங்கத்தை உருவாக்கி, பிராமண விதவைகளின் மறுமணத்துக்காகப் பாடுபட்டார். கோதாவரி மாவட்டத்தில் கந்துகுரி வீரசலிங்கம் விதவை மறுமண இயக்கத்தை முன்னின்று நடத்தினர். 1947 இல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. பெரும்பாலான சமூக சீர்திருத்தவாதிகள் இந்திய தேசியவாதிகளாகவும் இருந்தனர்.

சேவல் சண்டை, ஏறு தழுவல், கிராமத் திருவிழாக்கள், நாடகங்கள் போன்றவை கிராமப்புற மக்களால் விரும்பப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளாக இருந்தன. நகரவாசிகள் பொழுதுபோக்கு மன்றங்கள், இசைக் கச்சேரிகள், நாடகங்கள் போன்றவற்றை நாடினர். மேல் மற்றும் மேல் நடுத்தரத் தட்டு மக்கள் கருநாடக இசையையும் பரதநாட்டியத்தையும் விரும்பினர். பிரித்தானியர் அறிமுகப்படுத்திய விளையாட்டுகளில் கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து, ஹாக்கி போன்றவை பிரபலமாகின. ஆண்டுதோறும் பொங்கல் அன்று இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் இடையே சென்னை மாகாணப் போட்டி என்றழைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது.

சென்னை மாகாணத்தின் முதல் செய்தித்தாளான மெட்ராஸ் கொரியர் 1785 இல் தொடங்கப்பட்டது. 1844 இல் விடுதலைப் போராட்ட வீரர் கசுலு லட்சுமி நரசு செட்டியால் தொடங்கப்பட்ட தி மெட்ராஸ் கிரசெண்ட் இந்தியர் ஒருவரால் நடத்தப்பட்ட முதல் ஆங்கில நாளிதழ். 1948 இல் மொத்தம் 841 இதழ்கள் சென்னை மாகாணத்தில் வெளியாகின. 1938 இல் ஆல் இந்தியா ரேடியோ சென்னையில் ஒரு வானொலி நிலையத்தைத் தொடங்கி வானொலி ஒலிபரப்புச் சேவையை அறிமுகப்படுத்தியது. 1930 களில் திரைப்படங்கள் மக்களிடையே பிரபலமாகின. சென்னை, கோவை, சேலம், காரைக்குடி ஆகிய ஊர்களில் திரைப்பட ஸ்டுடியோக்கள் தொடங்கப்பட்டன. 1940-களிலிருந்து சென்னை மாகாணத்தின் திரைப்படத் தலைநகராக உருவெடுத்தது.

பரவலர் ஊடகங்களில்

சென்னை மாகாணத்தின் தலைநகரான மதராசப்பட்டினத்தை பின்புலமாகக் கொண்டே மதராசபட்டினம் என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் 1945-1947ல் இருந்த சென்னை மாகாணம், அப்போது நடந்த அரசியல் சம்பவங்கள் போன்றவை படமாக்கப்பட்டிருந்தன.

மேலும் பார்க்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
Provincial Geographies of India, சென்னைப் பதிப்பின் முன்னட்டை
    அரசு வெளியீடுகள்
  • எட்கர் தர்ஸ்டன் (1913). Provincial Geographies of India:The Madras Presidency with Mysore, Coorg and Associated States. Cambridge University. https://archive.org/details/provincialgeogra01holluoft. 
  • The Imperial Gazetteer of India 1908–1931. 
  • Thurston, Edgar; K. Rangachari (1909). Castes and Tribes of Southern India Vol. I to VII. Government of Madras. 
  • Madras District Gazetteers
  • Slater, Gilbert (1918). Economic Studies Vol I:Some South Indian villages. https://archive.org/details/in.ernet.dli.2015.84329. 
  • Raghavaiyangar, Srinivasa (1893). Memorandum of progress of the Madras Presidency during the last forty years of British Administration. Government of Madras. 
  • MaClean, C. D. (1877). Standing Information regarding the Official Administration of Madras Presidency. Government of Madras. 
  • Great Britain India Office (1905). The India List and India Office List. London: Harrison and Sons. 
  • Illustrated Guide to the South Indian Railway (Incorporated in England): Including the Tanjore District Board, Pondicherry, Peralam-Karaikkal, Travancore State, Cochin State, Coimbatore District Board, Tinnevelly-Tiruchendur, and the Nilgiri Railways. Madras: South Indian Railway Company. 1926. 
  • Tercentenary Madras Staff (1939). Madras Tercentenary Celebration Committee Commemoration Volume. Indian Branch, Oxford Press. 
  • Talboys-Wheeler, James (1862). Hand-book to the cotton cultivation in the Madras presidency. J. Higginbotham and Pharaoh and Co.. 
    பிற வெளியீடுகள்
    Contemporary publications

வெளி இணைப்புகள்

சென்னை மாகாணம்: தோற்றம், வரலாறு, மக்கள் தொகையியல் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Madras Presidency
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



Tags:

சென்னை மாகாணம் தோற்றம்சென்னை மாகாணம் வரலாறுசென்னை மாகாணம் மக்கள் தொகையியல்சென்னை மாகாணம் மொழிகள்சென்னை மாகாணம் சமயங்கள்சென்னை மாகாணம் நிருவாகம்சென்னை மாகாணம் படைசென்னை மாகாணம் நிலம்சென்னை மாகாணம் வேளாண்மையும் நீர்ப்பாசனமும்சென்னை மாகாணம் வர்த்தகமும் தொழிற்துறையும்சென்னை மாகாணம் போக்குவரத்துசென்னை மாகாணம் தொலைதொடர்புசென்னை மாகாணம் கல்விசென்னை மாகாணம் பண்பாடும் சமூகமும்சென்னை மாகாணம் பரவலர் ஊடகங்களில்சென்னை மாகாணம் மேலும் பார்க்கசென்னை மாகாணம் குறிப்புகள்சென்னை மாகாணம் மேற்கோள்கள்சென்னை மாகாணம் வெளி இணைப்புகள்சென்னை மாகாணம்ஆந்திரப் பிரதேசம்இலட்சத்தீவுகள்உதகமண்டலம்கர்நாடகாகேரளாசென்னைதமிழ்நாடுதென்னிந்தியாபிரித்தானியாவின் இந்தியப் பேரரசுமலபார் பிரதேசம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாச்சியார் திருமொழிசப்ஜா விதைதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சிற்பி பாலசுப்ரமணியம்வைகைசங்க காலம்கரிசலாங்கண்ணிகுற்றாலக் குறவஞ்சிஏப்ரல் 26எட்டுத்தொகை தொகுப்புபொன்னுக்கு வீங்கிகடையெழு வள்ளல்கள்பறவைஇந்திய அரசியலமைப்புதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இராமாயணம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்உரைநடைகா. ந. அண்ணாதுரைசயாம் மரண இரயில்பாதைசெம்மொழிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஆறுமுக நாவலர்கல்லணைசாத்துகுடிமருதம் (திணை)ஆறும. பொ. சிவஞானம்குணங்குடி மஸ்தான் சாகிபுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்புனித யோசேப்புதமிழர்தமிழக வரலாறுமரபுச்சொற்கள்நல்லெண்ணெய்பாண்டியர்இசுலாமிய வரலாறுஅயோத்தி தாசர்வே. செந்தில்பாலாஜிகலம்பகம் (இலக்கியம்)செயற்கை நுண்ணறிவுசீமான் (அரசியல்வாதி)தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மேகக் கணிமைநீ வருவாய் எனபெண்கணையம்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இராசேந்திர சோழன்எலுமிச்சைரச்சித்தா மகாலட்சுமிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பிரேமம் (திரைப்படம்)பூப்புனித நீராட்டு விழாவடிவேலு (நடிகர்)தேசிக விநாயகம் பிள்ளைஇதயம்சோமசுந்தரப் புலவர்யாதவர்அத்தி (தாவரம்)தமிழ் இலக்கியம்திருக்குர்ஆன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்நக்கீரர், சங்கப்புலவர்பல்லவர்தற்கொலை முறைகள்நன்னூல்அதிமதுரம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபணவீக்கம்முத்துலட்சுமி ரெட்டிமருதமலைபுதுக்கவிதைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்வேற்றுமைத்தொகைபால் (இலக்கணம்)தங்கராசு நடராசன்அவுரி (தாவரம்)🡆 More