மனித வரலாறு

மனித வரலாறு என்பது, உலகம் முழுவதிலும் ஓமோ சப்பியன்களால் பதிவுசெய்யப்பட்ட அவர்களது அனுபவங்கள் ஆகும்.

இது புவியின் எல்லா இடங்களிலும், பழைய கற்காலத்தில் தொடங்கி இன்று வரையான மனித இனத்தின் வரலாற்றைக் குறிக்கும். பண்டைய மனித வரலாறு, உலகின் பல்வேறிடங்களிலும் தனித்தனியாக எழுத்துமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் தொடங்குகிறது. எழுத்துமுறையின் கண்டுபிடிப்பு, மனித நினைவுகளை நிலைத்திருக்கக்கூடிய வகையில் துல்லியமாகப் பதிவு செய்வதற்கு உதவியதுடன், அறிவு உலகம் முழுதும் பரவுவதற்கும் உதவியது. எனினும், நாகரிகத்தின் அடிப்படை எழுத்துமுறையின் கண்டுபிடிப்புக்கும் முற்பட்டது. இது முன்வரலாறு எனப்படுகிறது. உலக வரலாறு தொடர்பான அறிவு, மிகப் பழங்காலம் தொடங்கி இன்றுவரையிலான எழுத்துமூல ஆவணங்களின் ஆய்வு, தொல்லியல் போன்ற பிற மூலங்களிலிருந்து பெறப்படும் அறிவு என்பவற்றை உள்ளடக்கியது.

மனித வரலாறு
அறியப்பட்டவற்றுள் மிகப் பழமையாக ஆப்பெழுத்து எழுத்துமுறை (Cuneiform Script).

மனித வரலாறு, படிப்படியான கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்கங்களினால் மட்டுமன்றிச் சடுதியான வளர்ச்சிகளினாலும், புரட்சிகரமான மாற்றங்களினாலும் கூடக் குறிக்கப்படுகின்றது. இவை மனிதனின் பொருள் மற்றும் ஆன்மீக வளர்ச்சிகள் தொடர்பான பல காலப்பகுதிகளை உள்ளடக்குகிறது. இத்தகைய காலப்பகுதிகளுள் ஒன்றுதான் வேளாண்மைப் புரட்சி. கிமு 8,500க்கும் 7,000க்கும் இடையில் முறையான தாவர வளர்ப்பிலும் விலங்கு வளர்ப்பிலும் மனிதர் ஈடுபட்டனர். இது இலேவண்டு, பண்டை மெசொப்பொத்தேமியா, பண்டைய எகித்து ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் நடைபெற்றது. இது அயலிலுள்ள பகுதிகளுக்கும் பரவியதுடன், சில பகுதிகளில் தனியாகவும் வளர்ச்சியடையலாயிற்று. இது பெரும்பாலான மனிதர்களை நிரந்தரமான குடியேற்றங்களை அமைத்து வேளாண்மை செய்பவர்களாக மாற்றியது. வேளாண்மை வழங்கிய, ஒப்பீட்டளவில் கூடிய பாதுகாப்பும், உற்பத்தித்திறன் அதிகரிப்பும் இவ்வாறான சமுதாயங்கள் வரிவடைய வழி வகுத்தன. தொடர்ச்சியாகப் போக்குவரத்து முறை வளர்ச்சி அடையவே அதற்கு இணையாகக் குடியேற்றங்களும் பெரியனவாக வளர்ந்தன.

மனித வரலாறு
பண்டை எகித்தியச் சுவரோவியம் ஒன்றில் மனிதர் விலங்குகளை வளர்த்துப் பால் கறக்கும் காட்சி

எல்லா மனிதருமே இவ்வாறு நாடோடி வாழ்க்கையைக் கைவிடவில்லை. சிறப்பாகத் தனிப்படுத்தப்பட்டவையும், வளர்க்கக்கூடிய தாவரங்களைக் கொண்டிராதனவுமான பகுதிகளில் வேளாண்மை வளர்ச்சியடையவில்லை. நாடோடி வாழ்க்கையை விட்ட மனிதர், உயிர் வாழ்வுக்கு இன்றியமையாத நீரைத் தருகின்ற ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை அண்டிய பரவலான குடியேற்றங்களில் வாழ்ந்தனர். கிமு 3000 ஆண்டை அண்டிய காலப்பகுதியில், இத்தகைய குடியேற்றங்கள், மையக் கிழக்குப் பகுதியைச் சேர்ந்ததும், இயூபிரட்டீசு, இடைகிரிசு ஆகிய ஆறுகளுக்கு இடைப்பட்டதுமான மெசொப்பொத்தேமியாவிலும், எகிப்தின் நைல் நதிக்கரையிலும், சிந்து நதியை அண்டிய சிந்துப் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் உருவாயின.

ஐரோப்பா, அண்மைக் கிழக்கு, வட ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பழைய உலகத்தின் வரலாறு,

  1. கிபி 476 வரையான தொல்பழங்காலம்;
  2. இசுலாமியப் பொற்காலம் (கிபி 750 - கிபி 1258), தொடக்க ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலம், ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடக்கிய 5 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையான நடுக் காலம்;
  3. அறிவொளிக் காலத்தை உள்ளடக்கிய, 15 தொடக்கம் 18 ஆம் நூற்றாண்டு வரையான தொடக்க நவீன காலம்,
  4. தொழிற் புரட்சி முதல் இன்று வரையான காலத்தை உள்ளடக்கிய பிந்திய நவீன காலம்

எனப் பல கட்டங்களாக வகுக்கப்படுகிறது. ஐரோப்பாவில், கிபி 476 இல் நிகழ்ந்த மேற்கத்திய உரோமப் பேரரசின் வீழ்ச்சி தொல்பழங்காலத்தின் முடிவையும், ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தை உருவாக்கிய நடுக் காலத்தின் தொடக்கத்தையும் குறிப்பதாகக் கொள்கின்றனர். 15 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அசையும் எழுத்துக்களைப் பயன்படுத்திய நவீன அச்சு முறையை யொகான்னசு குட்டன்பர்க் கண்டுபிடித்த பின்னர் தகவல் தொடர்பில் புரட்சிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இது, நடுக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நவீன காலம் உருவாகவும், அறிவியல் புரட்சி ஏற்படவும் வழி வகுத்தது. 18 நூற்றாண்டளவில், அறிவு, தொழினுட்பம் ஆகியவற்றின் திரட்சி, குறிப்பாக ஐரோப்பாவில், உய்நிலைப் பொருண்மையை எட்டியதன் மூலம் தொழிற்புரட்சியை உருவாக்கியது.

பண்டைய அண்மைக் கிழக்கு, பண்டைய சீனா, பண்டைய இந்தியா போன்ற உலகின் ஏனைய பகுதிகளில் வரலாற்றுக் காலக்கோடு வேறு விதமாக வளர்ச்சியடைந்தது. 18 ஆம் நூற்றாண்டை அண்டி விரிவடைந்த உலகளாவிய வணிகத்தினாலும், குடியேற்றங்களினாலும், பெரும்பாலான உலக நாகரிகங்களின் வரலாறுகள் ஒன்றுடன் ஒன்று இறுக்கமாகப் பின்னிப் பிணைந்து காணப்பட்டன. சென்ற ஆயிரவாண்டின் கடைசிக் காற்பகுதியில், அறிவு, தொழினுட்பம், வணிகம், போரின் அழிவுத்தன்மை என்பன வேகமாக வளர்ச்சியடைந்து இன்று மனித சமுதாயம் முகம் கொடுக்கும் வாய்ப்புக்களையும் ஆபத்துகளையும் ஏற்படுத்தியது..

வரலாற்றுக்கு முந்திய காலம்

மனித வரலாறு 
பிரான்சின் லாசுக்காக்சு என்னும் இடத்தில் உள்ள குகை ஓவியம்

ஓமோ இரெக்டசு போன்ற பிற ஒமினிடுகளும் எளிமையான கருவிகளைப் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளன. எனினும், காலப்போக்கில், கருவிகள் கூடிய செம்மை உடையனவாகவும், சிக்கல்தன்மை வாய்ந்தனவாகவும் வளர்ச்சியுற்றன. ஒரு நிலையில் மனிதர் வெப்பத்துக்காகவும், சமைப்பதற்கும் தீயைப் பயன்படுத்தத் தொடங்கினர். பழையகற்காலத்தில் அவர்கள் மொழியையும் உருவாக்கி வளர்த்தனர். அத்துடன், இறந்தவர்களைப் புதைப்பதற்கான ஒழுங்குமுறை, பல்வேறு வகை அணிகள் போன்றவற்றையும் வளர்த்தெடுத்தனர். தொடக்ககால அழகியல் வெளிப்பாட்டைக் குகை ஓவியங்களிலும், மரத்தையும் எலும்புகளையும் பயன்படுத்திச் செய்த சிற்பங்களிலும் காண முடிகிறது. இக் காலத்தில் எல்லா மனிதருமே வேடர்-உணவு சேகரிப்போர் ஆகவே இருந்ததுடன், பொதுவாக அவர்கள் நாடோடி வாழ்க்கையே வாழ்ந்தனர்.

நவீன மனிதர் ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியாவுக்கும், பனியற்ற ஐரோப்பாவின் பகுதிகளுக்கும் பரவினர். இன்றைய மிதவெப்பப் பகுதிகள் மனித வாழ்க்கைக்கு உகந்தவையாக இல்லாதிருந்த, கடைசிப் பனிக்கட்டிக் காலத்தில் உச்ச நிலையில், வட அமெரிக்கா, ஓசானியா ஆகிய பகுதிகளை நோக்கி மனிதர் வேகமாகப் பரவினர். பனிக்கட்டிக் கால முடிவில், ஏறத்தாழ 12,000 ஆண்டுகளுக்கு முன், புவியில் பனிக்கட்டி இல்லாத பகுதிகள் முழுவதிலும் மனிதர் பரவிவிட்டனர்.

கிமு 8000 ஆண்டுக் காலப்பகுதியில் உருவான வேளாண்மைப் புரட்சியால், வேளாண்மை வளர்ச்சியுற்றது. இது, மக்கள் முன்னரிலும் பெருமளவு கூடிய அடர்த்தியாக வாழ்வதற்கு இடமளித்தது. காலப்போக்கில் இவ்வாறான குடியேற்றங்கள் நாடுகளாக ஒழுங்கமைவு பெற்றன. வேளாண்மையின் வளர்ச்சியினால், மிகையான உணவு உற்பத்தி ஏற்பட்டதால், நேரடியாக உணவு உற்பத்தியில் ஈடுபடாதவர்களையும் தாங்கக் கூடிய நிலை சமுதாயத்துக்கு வாய்த்தது. இதனால் பல்வேறு வகைத் தொழில்களும் சிறப்பாக்கம் பெற்று வளர்ச்சியுற்றன. வேளாண்மை விருத்தியே உலகின் முதல் நகரங்கள் தோன்றுவதற்குக் காலாக அமைந்தது. தமக்கென வேளாண்மை உற்பத்தி நடவடிக்கைகள் எதையுமே கொண்டிராமல், இத்தகைய நகரங்கள், வணிகம், உற்பத்தித் துறை, அரசியல் ஆதிக்கம் என்பவற்றுக்கான மையங்களாக விளங்கின. நகரங்கள், சூழவுள்ள நாட்டுப்புறப் பகுதிகளுடன் ஒரு கூட்டு வாழ்க்கை முறையை ஏற்படுத்தின. அவை, நாட்டுப் புறங்களின் மிகை வேண்மை உற்பத்திகளைப் பெற்றுக்கொண்டு, பிற உற்பத்திப் பொருட்களை அவற்றுக்கு வழங்கியதுடன், பல்வேறுபட்ட அளவுகளில் நாட்டுப்புறங்களின் மீது கட்டுப்பாட்டையும், பாதுகாப்பு அளிக்கும் கடப்பாட்டையும் கொண்டிருந்தன.

மனித வரலாறு 
துருக்கியில் உள்ள கொபெக்லி தேப்பே, 11,500 வருடங்களுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் சமயத் தொடர்பான அமைப்பு.

நகரங்களின் வளர்ச்சி, நாகரிக வளர்ச்சியுடன் ஒத்திசைவு கொண்டது. தொடக்க நாகரிகங்கள் முதலில் கீழ் மெசொப்பொத்தேமியாவிலும், பின்னர் நைல் ஆற்றை அண்டி எகிப்திய நாகரிகமும், சிந்துப் பள்ளத்தாக்குப் பகுதியில் அரப்பா நாகரிகமும் தோன்றி வளர்ந்தன. விரிவான நகரங்கள், உயரளவான சமூக, பொருளியல் சிக்கல்தன்மையுடன் வளர்ச்சியடைந்தன. இந்நாகரிகங்கள் தம்முள் பெருமளவு வேறுபாடுகளைக் கொண்டிருப்பதனால் அவை, தனித்தனியாக மற்றவற்றைச் சாராமலேயே தோன்றி வளர்ந்தன என்று கூறமுடியும். நகரங்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக எழுத்து முறைகளும், விரிவான வணிகமும் வளர்ச்சியுற்றன.

இக் கால கட்டத்திலேயே சிக்கலான சமயங்களும் தோன்றின. இக் காலகட்டத்தில், தாய்க் கடவுள், வானத் தந்தை, சூரியன், சந்திரன் போன்ற கடவுளரை வணங்குவதே மத நம்பிக்கையின் முக்கிய பகுதியாக இருந்தது. சிறிய வழிபாட்டிடங்கள் தோன்றி, அவை பின் பெரிய கோயில் தொகுதிகளாக வளர்ச்சியுற்றன. இவை பல்வேறு தரநிலைகளைக் கொண்ட மத குருக்களையும், பிற செயல்பாட்டாளர்களையும் கொண்டிருந்தன. விலங்கு-மனித உருவங்களைக் கொண்ட கடவுளரை வணங்குவது புதிய கற்காலத்தில் பரவலாகக் காணப்பட்டது. தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய எழுத்துமூல சமய நூல்களுள், பிரமிடு உரைகள் என்னும் பண்டை எகிப்திய நூல்கள் அடங்கும். இவை கிமு 2400 - 2300 காலப் பகுதியைச் சேர்ந்தவை. தென் துருக்கியைச் சேர்ந்த கொபெக்லி தேப்பே என்னும் 11,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் கோயில் தொகுதி ஒன்றில் இடம் பெற்றுவரும் தொல்லியல் ஆய்வுகளின் படி சமயம், வேளாண்மைப் புரட்சிக்கு முற்பட்டது என்னும் கருத்தைச் சில தொல்லியலாளர்கள் முன்வைத்துள்ளனர்.

தொல்பழங்காலம்

நாகரிகத்தின் தொட்டில்கள்

மனித வரலாறு 
பண்டை எகிப்தியர் கட்டிய கீசாவின் பெரிய பிரமிடு.

உலகின் சில பகுதிகளில், நாகரிகத்தின் தொடக்ககால வரலாற்றை விளக்கும் வகையிலான முக்கால முறையில் வெண்கலக் காலமும் அடங்கும். கற்காலம், இரும்புக் காலம் என்பவை ஏனைய இரண்டு காலப் பகுதிகள். இக் காலப் பகுதியில் உலகின் பெரும்பாலான வளமான பகுதிகளில் நகர அரசுகளும், முதல் நாகரிகங்களும் தோன்றலாயின. இவை மெசொப்பொத்தேமியாவின் இயூபிரட்டீசு, டைகிரிசு ஆறுகள்; எகிப்தின் நைல் ஆறு; இந்தியாவின் சிந்து ஆறு; சீனாவின் யாங்சே, மஞ்சள் ஆறுகள் போன்ற ஆறுகளை அண்டி அடர்த்தியாகக் காணப்பட்டன.

மெசொப்பொத்தேமியாவில் கிமு நான்காவது ஆயிரவாண்டில் நகர அரசுகள் தோன்றின. இந்த நகர அரசுகளிலேயே, அறியப்பட்டவற்றுள் மிகப் பழமையான ஆப்பெழுத்துக்கள் கிமு 3000 ஆண்டளவில் தோன்றின. இந்த எழுத்துமுறை ஒரு படவெழுத்து முறையாகவே தோன்றியது. படக் குறிப்புகள் நாளடைவில் எளிமையாகி பண்பாக்கம் பெற்றன. ஆப்பெழுத்துக்களைக் களிமண் பலகைகளில் மழுங்கிய நுனிகளோடு கூடிய புற்களை எழுத்தாணியாகப் பயன்படுத்தி எழுதினர். எழுத்துமுறையின் வளர்ச்சி பெரிய பரப்பில் அமைந்த நாடுகளை நிர்வாகம் செய்வதை எளிதாக்கியது.

மனித வரலாறு 
சிந்துவெளி நாகரிகத்தைச் சேர்ந்த மொகெஞ்சதாரோ நகர அழிபாடுகள்

ஆறுகள், கடல் போன்ற நீர்வழிகள் போக்குவரத்துக்கு உதவின. மூன்று கண்டங்களின் சந்திப்பில் அமைந்திருந்த நடுநிலக் கடல், படை வல்லமையின் விரிவாக்கத்தையும்; பண்டங்கள், எண்ணங்கள், கண்டுபிடிப்புக்கள் போன்றவற்றின் பரிமாற்றத்தையும் ஊக்குவித்தது. இக்காலப் பகுதியில், நிலம்சார்ந்த போக்குவரத்துத் தொழில்நுட்பமும் வளர்ச்சியுற்றது. குதிரைகள், தேர்கள் போன்றவை படைகள் விரைவாக நகர்வதற்கு உதவின. இந்த வளர்ச்சிகள் பேரரசுகள் உருவாக வழி சமைத்தன. பெரிய நிலப்பரப்பையும், பல நகரங்களையும் தன்னுள் அடக்கிய முதலாவது பேரரசு எகிப்தில் உருவாகியது. கிமு 3100ல் கீழ் எகிப்தும் மேல் எகிப்தும் இணைக்கப்பட்டதன் மூலம் இது சாத்தியமாகியது. அடுத்த ஆயிரவாண்டில், பிற ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் முடியாட்சிப் பேரரசுகள் உருவாயின. கிமு 24 ஆம் நூற்றாண்டில் மெசொப்பொத்தேமியாவில் அக்காடியப் பேரரசும், கிமு 2200 அளவில் சீனாவில் சியா வம்ச ஆட்சியின் கீழான பேரரசும் அமைந்தன.

தொடர்ந்த ஆயிரவாண்டில், உலகம் முழுதும் நாகரிகங்கள் வளர்ந்தன. வணிகம் அதிகாரத்தின் மூலமாக வளர்ந்து வந்தது. முக்கியமான வளங்களைப் பெறக்கூடிய நிலையில் இருந்த அல்லது முக்கியமான வணிக வழிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசுகள் முன்னிலைக்கு வந்தன. கிமு 2500 அளவில், எகிப்துக்குத் தெற்கே சூடானில் கெர்மா இராச்சியம் தோன்றியது. இன்றைய துருக்கி இருக்கும் பகுதியில் இட்டைட்டுகள் பெரிய பேரரசு ஒன்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கிமு 1600ல், மைசீனியக் கிரேக்கம் வளர்ச்சி பெறத் தொடங்கியது. இக்காலம் இந்தியாவில் வேதகாலம். கிமு 6 ஆம் நூற்றாண்டில் முடிவடைந்த இக் காலத்திலேயே இந்து சமயத்தினதும், இந்தியச் சமூகத்தின் தொடக்ககாலப் பண்பாட்டு அம்சங்களினதும் அடிப்படைகள் உருவாயின. கிமு 550 ஆண்டை அண்டிய காலத்தில் இருந்து மகாசனபாதங்கள் (பெரு நாடுகள்) எனப்பட்ட அரசுகளும், குடியரசுகளும் வட இந்தியப் பகுதிகளில் தோன்றின. கிமு முதல் ஆயிரவாண்டின் இறுதியில், அமெரிக்காக்களில், மாயா, சப்போட்டெக், மோச்சே, நாசுக்கா ஆகிய நாகரிகங்கள் இடையமெரிக்காவிலும், பெருவிலும் தோன்றின.

மனித வரலாறு 
கிமு 6 ஆம் நூற்றாண்டில் புத்த சமயத்தை உருவாக்கிய கௌதம புத்தர்

அச்சாணிக் காலம்

கிமு 7 ஆம் நூற்றாண்டில் தொடங்கி "அச்சாணிக் காலம்" என அழைக்கப்படும் காலத்தில் மாற்றங்களை உருவாக்கிய சமயம், மெய்யியல் ஆகியவை சார்ந்த எண்ணக்கருக்கள் பல, தனித்தனியாகப் பல இடங்களில் உருவாயின. கிமு ஆறாம் நூற்றாண்டில், சீனாவின் கொன்பியூசியனியம்; இந்தியாவின் பௌத்தம், சமணம்; பாரசீகத்தின் சோரோவாசுத்திரியனியம்; யூதர்களின் ஓரிறைவாதம் என்பன எல்லாமே தோன்றின. கிமு 5 ஆம் நூற்றாண்டில், சோக்கிரட்டீசு, பிளேட்டோ ஆகியோர் பண்டைக் கிரேக்க மெய்யியலுக்கு அடித்தளம் இட்டனர்.

கிழக்கில், நவீன காலம் வரையில் சீனாவின் சிந்தனையில் மூன்று சிந்தனைப் பிரிவுகள் முன்னிலையில் இருந்தன. இவை, தாவோயியம், சட்டநெறிவாதம், கொன்பியூசியனியம் என்பன. இவற்றுள் முதன்மை பெற்ற கொன்பியூசியனியம், அரசியல் ஒழுக்கநெறியை வலியுறுத்தியது. இது சட்டத்தின் வலிமையையன்றி, மரபுகளின் வலிமையையும் எடுத்துக்காட்டுகளையுமே முன்னிறுத்தியது. இது பின்னர் கொரியத் தீவக்குறைக்கும், சப்பானுக்கும் பரவியது.

மேற்கில், சோக்கிரட்டீசு, பிளேட்டோ, அரிசுட்டாட்டில் ஆகியோரை அடிப்படையாகக் கொண்ட கிரேக்க மெய்யியல் மரபு, கிமு நான்காம் நூற்றாண்டில், பேரரசர் அலெக்சாந்தர் எனப் பரவலாக அறியப்படும், மசிடோனின் மூன்றாம் அலெக்சாந்தரின் படையெடுப்புக்கள் ஊடாக, ஐரோப்பா முழுவதற்கும், மையக் கிழக்குப் பகுதிகளுக்கும் பரவியது.

இவற்றையும் காணவும்

மேற்கோள்கள்

Tags:

மனித வரலாறு வரலாற்றுக்கு முந்திய காலம்மனித வரலாறு தொல்பழங்காலம்மனித வரலாறு இவற்றையும் காணவும்மனித வரலாறு மேற்கோள்கள்மனித வரலாறுஅறிவுஎழுத்துமுறைமனிதர்வரலாறு

🔥 Trending searches on Wiki தமிழ்:

பால் கனகராஜ்ஆளுமைஉன்னாலே உன்னாலேபாரத ரத்னாதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மாலைத்தீவுகள்விசயகாந்துகனிமொழி கருணாநிதிநவரத்தினங்கள்நிர்மலா சீதாராமன்ஈரோடு தமிழன்பன்வேலூர் மக்களவைத் தொகுதிஆழ்வார்கள்சிவகங்கை மக்களவைத் தொகுதிவிருத்தாச்சலம்இயற்கை வளம்பெருங்கடல்சாத்தான்குளம்ராச்மாசுக்ராச்சாரியார்யாவரும் நலம்சிற்பி பாலசுப்ரமணியம்மலைபடுகடாம்வெந்தயம்மண்ணீரல்ஜோதிமணிகரூர் மக்களவைத் தொகுதிபுலிபஞ்சதந்திரம் (திரைப்படம்)பூக்கள் பட்டியல்அகமுடையார்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்அருந்ததியர்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிமதயானைக் கூட்டம்இடைச்சொல்மாதவிடாய்கருப்பைசவூதி அரேபியாநாடாளுமன்றம்தனுசு (சோதிடம்)மு. வரதராசன்கேபிபாராதிருவாசகம்ஏ. ஆர். ரகுமான்திருவிளையாடல் புராணம்பொதுவாக எம்மனசு தங்கம்கல்லீரல்சென்னைபொருநராற்றுப்படைதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிபசுமைப் புரட்சிபந்தலூர் வட்டம்திராவிட மொழிக் குடும்பம்தேம்பாவணிஎலுமிச்சைசித்திரைஇராவணன்லைலத்துல் கத்ர்2014 உலகக்கோப்பை காற்பந்துமண் பானைஅம்பேத்கர்திருநங்கைகௌதம புத்தர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஈரோடு மக்களவைத் தொகுதிபணவீக்கம்டி. எம். செல்வகணபதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிதேனி மக்களவைத் தொகுதிஉருசியாஆசிரியர்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஇந்திதங்கம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்🡆 More