விலங்குரிமை

விலங்குரிமை (ஆங்கிலம்: Animal rights) என்பது அனைத்து வலியுணர் விலங்குகளும் மனிதப் பயன்பாட்டுக்கு உட்படாமலிருக்கும் தார்மீக சுயமதிப்பையும் சுதந்திரத்தையும் கொண்டவை என்றும் துன்பத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டிய அடிப்படை உரிமையைக் கொண்டவை என்றும் மனிதர்களுக்கிணையாக வாழ்வின் அடிப்படை நலத்தேவைகளைப் பெறும் உரிமையைக் கொண்டவை என்றும் கூறும் மெய்யியல் ஆகும்.

பொதுவாகக் கூறின், உலகவழக்கில் "விலங்குரிமை" என்னும் சொல் "விலங்கினப் பாதுகாப்பு" என்றும் "விலங்கின விடுதலை" என்றும் கொள்ளப்படுகிறது. சுருங்கக் கூறின், தனிமனிதனுக்குத் தரப்படும் வாழத் தேவையான அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பும் – அஃதாவது எக்காரணத்தைக் கொண்டும் விலக்கில்லாத வாழுரிமை, சுதந்திரம், வலியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை முதலியன – அனைத்து உணர்வுள்ள விலங்குகளுக்கும் நல்கப்பட வேண்டும் என்பதாகும்.

விலங்குரிமை
அடிமைப்படுத்தப்பட்ட ஒரு குரங்கை வைத்து பிச்சையெடுக்கும் ஒரு மனிதர்
விலங்குரிமை
கோழிப்பண்ணையொன்றில் கூண்டுக்குள் திணிக்கப்பட்ட வண்ணம் அடைக்கப்பட்ட கோழிகள்

ஒரு விலங்கின் இனத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அந்த இன விலங்குக்கு தார்மீக உரிமைகளும் பாதுகாப்பும் வழங்கப்படுவதை அறிஞர்களும் விலங்குரிமை ஆர்வலர்களும் எதிர்க்கின்றனர். இதை அவர்கள் விலங்கினவாதம் என்று அழைக்கின்றனர். இச்சொல் 1970-ம் ஆண்டு ரிச்சர்ட் டி. ரைடர் என்ற அறிஞரால் முதலில் பயன்படுத்தப்பட்டது. விலங்கினவாதம் என்பது மற்ற ஓரவஞ்சனைகளைப் போலப் பகுத்தறிவற்ற பிழைபட்ட சிந்தனை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். விலங்குகள் இனியும் ஒரு பயன்பாட்டுப் பொருட்களாகப் பார்க்கப்படக்கூடாது என்றும் உணவு, உடை, அறிவியல் ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, பொதிசுமத்தல் என எதற்காகவும் விலங்குகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவர்கள் உரைக்கின்றனர். ஜைனம், தாவோயிசம், இந்து மதம், பௌத்தம், ஷின்டோயிசம், ஆனிமிசம் (இயற்கை வழிபாடு) போன்ற உலகெங்கிலும் உள்ள பல கலாச்சார மரபுகள் பல வகைகளில் விலங்குரிமையை ஆதரிக்கின்றன.

தார்மீக உரிமைகள் பற்றிய விவாதத்திற்கு இணையாக, வட அமெரிக்காவில் உள்ள சட்டப் பள்ளிகள் இப்போது விலங்குச் சட்டத்தைக் கற்பிக்கின்றன. ஸ்டீவன் எம். வைஸ், கேரி எல். பிரான்சியோனி போன்ற பல சட்ட அறிஞர்கள் மனிதர்களுக்கு இருக்கும் சட்டபூர்வமான அடிப்படை உரிமைகளும் தனிநபர் அந்தஸ்தும் விலங்குகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டுமென்ற விரிவாக்கத்தை ஆதரிக்கின்றனர். மனிதனை ஒத்த ஹோமினிட்களே இதுவரை இதுபோன்ற விவாதங்களில் பெரும்பாலும் சுட்டப்பட்டு வந்திருக்கின்றன. இதற்குக் காரணம் இவ்வாதங்கள் அவ்விலங்குகளின் வலியுணர்த் தன்மையைக் கருத்திற்கொள்ளாது அவற்றின் அறிவுத்திறனை மட்டுமே மையப்படுத்தி அதன் அடிப்படையில் அவற்றின் உரிமைகளைத் தீர்மானிக்க முயல்வதுதான் என்பதால் தற்கால அறிஞர்கள் இதைத் தவறென்று கூறுகின்றனர். நவம்பர் 2019 நிலவரப்படி, உலகில் 29 நாடுகள் ஹோமினாய்டுகளின் மீது பரிசோதனை செய்வதற்குத் தடை விதித்துள்ளன. அர்ஜென்டினா 2014 முதல் சிறைபிடிக்கப்பட்ட ஒராங்குட்டான்களுக்கு அடிப்படை மனித உரிமைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதனி வரிசையைச் சார்ந்த விலங்குகளுக்கு அடுத்தபடியாக பாலூட்டிகள்தான் விலங்குரிமை விவாதங்கள் பெரும்பாலும் பேசப்பட்டு வந்துள்ளன. மற்ற விலங்குகள் குறைவான உணர்வுள்ளவையாகக் கருதப்பட்டு கருத்தில் கொள்ளப்படாமலே இருந்து வந்துள்ளன. சமண மதத்தில் பூச்சிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் மற்ற இடங்களில் ஒப்பீட்டளவில் அவை சிறிய அளவில் மட்டுமே பேசப்பட்டு வந்துள்ளன.

சமயங்களில் விலங்குரிமை

விலங்குரிமை 
தெற்காசியாவில் விலங்குரிமை இயக்கத்திற்கு வித்தாக அமைந்தது பொ.ஊ.மு. 9-ம் நூற்றாண்டில் சமண மதத்தின் 23-வது தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் சமணம் மற்றும் அகிம்சை குறித்த வலியுறுத்தலே ஆகும்.
விலங்குரிமை 
பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த தமிழ்ப் புலவரான வள்ளுவர் தனிநபர் ஒழுக்கங்களாக அகிம்சையையும் தார்மீக சைவத்தையும் வலியுறுத்தினார். திருவள்ளூரில் ஒரு விலங்குகள் சரணாலயத்தில் காணப்படும் வள்ளுவரது இந்தச் சிலையின் கல்வெட்டில் குறளின் பிரதான போதனைகளான அகிம்சையும் கொல்லாமையும் அவற்றின் நீட்சியான நனிசைவத்தின் வரையறையும் பொறிக்கப்பட்டுள்ளன.

விலங்குரிமையின் அடிப்படையானது மதங்களிலும் விலங்கு வழிபாட்டிலும் (அல்லது பொதுவான இயற்கை வழிபாட்டிலும்) காணப்படுவதாக சிலர் கருதுகின்றனர். சில மதங்கள் விலங்குகளைக் கொல்வதை முழுமையாகத் தடை செய்கையில், வேறு சில மதங்களில் குறிப்பிட்ட சில விலங்குகள் மட்டும் அசுத்தமாகக் கருதப்பட்டு அவற்றைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்து, பௌத்தம் உள்ளிட்ட இந்திய சமய சமூகங்கள் பொ.ஊ.மு. 3-ம் நூற்றாண்டு முதற்கொண்டே விலங்கு பலியைக் கைவிட்டு சைவ உணவுப் பழக்கத்தை ஏற்றுக்கொண்டன. சமண, இந்து, மற்றும் பௌத்த வாழ்வியல்கள் அகிம்சை என்ற தங்களது பொதுச் சிந்தனையின் அடிப்படையில் இவ்வாறு உயிரழிப்புச் செயல்களைத் துறந்து இயங்கத் துவங்கின. பௌத்த நம்பிக்கையின்படி மற்ற உயிரினங்களை விட மனிதர்கள் எவ்வகையிலும் முன்னுரிமை பெறத் தக்கவர்கள் அல்லர். இந்தச் சிந்தனையின் வாயிலாக விளையும் தார்மீகக் கோட்பாடு எந்த ஒரு உயிரினத்தையும் கொல்லுவதை தடை செய்கிறது. இந்திய மதங்களின் இந்த தார்மீக சிந்தனைகளின் பிரதிபலிப்பினை திருக்குறள் உள்ளிட்ட பண்டைய இந்தியப் படைப்புகளில் காணமுடிகிறது.

இஸ்லாத்தில் முதன்முறையாக விலங்குரிமை ஷரியா சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. குர்ஆனில் விலங்குகளைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. குறிப்பாக அவைகளுக்கு ஆத்மாக்கள் உள்ளன என்றும் அவைகள் சமூகங்களாக வாழக்கூடியவை என்றும், கடவுளுடன் தொடர்பு கொள்ளக்கூடியவை என்றும், தங்களுக்கே உரிய வழியில் கடவுளை அவை வணங்குகின்றன என்றும் அதில் கூறப்படுகிறது. முகம்மது எந்த விலங்குக்கும் தீங்கிழைக்ககூடாது என்று தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஆணை பிறப்பித்து விலங்குகளின் உரிமைகளை மதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

கிறித்துவ சித்தாந்தத்தின் படி சிறியது முதல் பெரியது வரையிலான அனைத்து விலங்குகளும் கடவுளால் பராமரிக்கப்பட்டு நேசிக்கப்படுகின்றன. "கர்த்தர் உரிய நேரத்தில் தங்களுக்கு உணவளிப்பார் என இந்த விலங்குகள் அனைத்தும் அவருக்காகக் காத்திருந்தன. கர்த்தர் அவற்றிற்கு உணவு கொடுக்கிறார்; அவைகளும் அதைப் பெறுகின்றன. கர்த்தர் தம் கைகளைத் திறக்கிறார்; அதில் நல்லன யாவும் நிரப்பப்படுகின்றன" என்று விவிலியம் கூறுகிறது. "கடவுள் விலங்குகளுக்கு உணவு அளித்தார்" என்றும் "காகங்களை கரைய வைத்தார்" என்றும் அது மேலும் கூறுகிறது.

மெய்யியலும் சட்ட அணுகுமுறைகளும்

விலங்குரிமை 
சிகாகோ பல்கலைக்கழக சட்ட மற்றும் நெறிமுறைப் பேராசிரியர் மார்த்தா நஸ்பாம் செயல்வல்லமை அணுகுமுறை வாயிலாக விலங்குரிமையை முன்னெடுப்பவர்.

விலங்கு நெறிமுறைகளுக்கான இரண்டு முக்கிய மெய்யியல் அணுகுமுறைகள் பயனெறிமுறை மற்றும் உரிமைகள் சார்ந்தவையாகும். முந்தையது பீட்டர் சிங்கர் என்பவராலும் பிந்தையது டாம் ரீகன், கேரி பிரான்சியோனி ஆகியோராலும் விரித்துரைக்கப்பட்டவை. இவ்விரண்டின் வேறுபாடுகள், ஒரு செயலின் முறையான தன்மையை அதன் விளைவுகளால் தீர்மானிக்கும் நெறிமுறைக் கோட்பாடுகளுக்கும் (பின்விளைவுவாத நெறிமுறைகள் [consequentialism] அல்லது பயனெறிமுறைக் கோட்பாடு [utilitarianism]), கிட்டத்தட்ட விளைவுகளைப் பொருட்படுத்தாது செயலுக்குப் பின்னால் உள்ள கொள்கையை மையப்படுத்தும் கோட்பாடுகளுக்கும் (கடமையியல் [deontological] நெறிமுறைகள்) இடையே உள்ள வேறுபாட்டை பிரதிபலிக்கின்றன. செய்யத் தவறினால் மோசமான விளைவு நேரிடும் என்ற பின்னரும் கூட நாம் செய்யக்கூடாத செயல்கள் சில உள்ளன என்று கடமையியல் அறிஞர்கள் உரைக்கின்றனர்.

பின்விளைவுவாத நெறிமுறைகளைக் கொண்டும் கடமையியல் நெறிமுறைகளைக் கொண்டும் விளக்கப்படும் பல நிலைப்பாடுகள் விலங்குரிமையை விவரிக்க வல்லவை. இவற்றில் மார்த்தா நஸ்பாம் எடுத்துரைக்கும் செயல்வல்லமை அணுகுமுறை (capabilities approach), இங்மார் பெர்சன் மற்றும் பீட்டர் வாலன்டைன் ஆகியோரால் ஆராயப்பட்ட சமத்துவ அணுகுமுறை ஆகியவை அடங்கும். செயல்வல்லமை அணுகுமுறை என்பது தனது செயல்வல்லமையை (திறன்களை) நிறைவேற்றுவதற்கு ஒரு தனிநபருக்கு (மனிதனுக்கோ அல்லது விலங்கிற்கோ) என்ன தேவை என்பதை ஆராய்கிறது: விலங்குகளுக்கு வாழ்வதற்கான உரிமை, தங்களது சுற்றுச்சூழல் மீதான சில ஆதிக்க உரிமை, துணை தேடும் உரிமை, விளையாடும் உரிமை, உடல்நல உரிமை ஆகிய உரிமைகள் தேவை என்று நஸ்பாம் (2006) வாதாடுகிறார்.

விலங்குகள் அவற்றின் இனத் தேவைக்கேற்ப வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஸ்டீபன் ஆர். எல். கிளார்க், மேரி மிட்க்லே, பெர்னார்ட் ரோலின் ஆகியோர் விலங்குரிமையை விளக்குகின்றனர். அனைத்து தனிநபர்களிடையேயும் மகிழ்ச்சி சமமாகப் பகிரப்பட வேண்டும் என்று சமத்துவவாதம் விதிக்கிறது. இதன்படி நல்ல நிலையில் உள்ளவரது நலன்களை விட மோசமான நிலையில் உள்ளவரது நலன்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளும்போது செயல்படுபவரது குணாதிசயங்களையும் நாம் எப்படிப்பட்ட தார்மீக முகவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நல்லொழுக்க நெறிமுறைகள் எனப்படும் மற்றொரு அணுகுமுறை கூறுகிறது. ரோசாலிண்ட் ஹர்ஸ்ட்ஹவுஸ் இந்த நல்லொழுக்க நெறிமுறைகளின் அடிப்படையில் விலங்குரிமைக்கான அணுகுமுறையை பரிந்துரைக்கிறார். மார்க் ரோலண்ட்ஸ் ஒரு ஒப்பந்தவாத அணுகுமுறையை முன்மொழிகிறார்.

பயனெறிமுறைக் கோட்பாடு

விலங்குரிமை 
பீட்டர் சிங்கர்: நலத்தேவைகள் என்பவை துன்பத்துக்கு ஆட்படும் தன்மையைக் கொண்டே கணிக்கப்படுகின்றன.

ஜெரமி பெந்தாம் மற்றும் ஜான் ஸ்டூவர்ட் மில் ஆகியோரில் தொடங்கி, பயனெறிமுறைக் கோட்பாடானது (Utilitarianism) மற்ற நெறிமுறைக் கோட்பாடுகளை விட விலங்குகளின் தார்மீக அந்தஸ்து நிலையை அங்கீகரிப்பதில் அதிக பங்களிப்பை அளித்துள்ளது என்று நஸ்பாம் (2004) எழுதுகிறார். பயனெறிமுறைக் கோட்பாட்டு மெய்யியலில் விலங்குரிமையுடன் மிகவும் தொடர்புடைய மெய்யியலாளராகக் கருதப்படுபவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல் நெறிமுறைப் பேராசிரியரான பீட்டர் சிங்கர் ஆவார். சிங்கர் ஒரு உரிமைக் கோட்பாட்டாளர் அல்ல என்றபோதும் தனிநபர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றி விவாதிக்க உரிமை சார்ந்த மொழியைப் பயன்படுத்துகிறார். அவர் ஒரு செயலின் முறையான தன்மையை அச்செயலால் பாதிக்கப்படுபவர்களின் விருப்பு வெறுப்புகளை (நலத் தேவைகளை) அது எந்த அளவிற்கு நிறைவேற்றுகிறது என்பதை கொண்டே தீர்மானிக்க இயலும் என்று கூறும் ஒரு விருப்பப் பயனெறிமுறைக் கோட்பாட்டாளராவார்.

சமத்துவக் கொள்கை ஒரே மாதிரியான (அதாவது, சமமான) நடத்துதலை பரிந்துரைக்கவில்லை என்றபோதும், மனிதர்கள் மற்றும் மனிதரல்லா விலங்குகளின் (non-human animals) நலத்தேவைகளுக்கு சமமான மதிப்பு தரக்கூடாது என்று கருதுவதற்கு தக்க காரணமேதும் இல்லை என்பது சிங்கரின் நிலைப்பாடு. ஒரு எலி, ஒரு மனிதன் இருவருக்குமே தாங்கள் தாக்கப்படாமல் இருக்கவேண்டும் என்ற பொதுவான நலத்தேவை உண்டு. இருவருக்கும் உள்ள இந்த அடிப்படை நலத்தேவையை சமமாகக் கருதாமல் இருப்பதற்கோ அல்லது அதற்கு இணங்கத் தவறுவதற்கோ தார்மீக அடிப்படையிலான அல்லது தர்க்கரீதியான காரணங்கள் ஏதுமில்லை. ஒருவரது (மனிதனோ அல்லது விலங்கோ) நலத்தேவைகள் என்பவை அந்நபரது துன்பத்துக்கு ஆட்படும் தன்மையைக் கொண்டே கணிக்கப்படுகின்றன என்பதாலும் அதற்கு மேல் எதுவும் இல்லை என்பதாலும், அவரது நலத்தேவைகள் கண்டறியப்பட்டு நிறுவப்பட்டவுடன் அந்த நலத்தேவைகளுக்கு சமமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். "பிரபஞ்சத்தின் பார்வையில் எந்தவொரு தனிநபரின் நன்மையும் மற்றவரின் நன்மையைக் காட்டிலும் முக்கியத்துவம் பெற்றதாகாது" என்று சிங்கர் ஆங்கில மெய்யியல் அறிஞரான ஹென்றி சிட்விக் (1838-1900) என்பவரின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார்.

சமமாக பாவிப்பது என்பது ஒரு பரிந்துரையாகும் என்றும் அது உண்மையை வலியுறுத்துவதற்கான கருவி அல்ல என்றும் சிங்கர் வாதிடுகிறார். ஆண்களும் பெண்களும் அறிவில் சமமானவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில் மட்டுமே பாலின சமத்துவம் அமைந்திருக்குமேயானால், பிறிதொரு கட்டத்தில் இக்கருத்து தவறானது என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் நாம் பாலின சமத்துவத்தைக் கைவிட வேண்டியிருக்கும். ஆனால் தார்மீக ரீதியில் சமத்துவம் என்பது புத்திசாலித்தனம், உடல் வலிமை, தார்மீகத் திறன் போன்ற உண்மை விடயங்களைச் சார்ந்து அல்ல. எனவே சமத்துவம் என்பது மனிதரல்லா விலங்குகளின் அறிவுத்திறன் பற்றிய அறிவியல் ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் அமையப் பெறுவது அல்ல. விலங்குகளால் துன்பத்தை அனுபவிக்கும் தன்மை கொண்டவையா என்பதுதான் அங்கு முதன்மை பெறுகிறது.

விலங்குகள் வலியை உணரக்கூடியவை மற்றும் துன்பத்திற்கு ஆட்படக்கூடியவை என்ற அறிவியல் உண்மையை விலங்குரிமை விவாதத்தின் அனைத்து தரப்பினரும் இன்று ஏற்றுக்கொண்டு விட்டனர். ஆனால் வரலாற்றில் எப்போதும் இதுபோன்று இருந்ததில்லை என்றே கூறவேண்டும். 17-ம் நூற்றாண்டு பிரெஞ்சு அறிஞரான ரெனே டேக்கார்ட்டின் செல்வாக்கு 1980-கள் வரை தொடர்ந்து நீடித்தது என்றும் அதனால் அவரது தவறான சித்தாந்தம் சமீபகாலம் வரை அனைவராலும் நம்பப்பட்டும் ஏற்கப்பட்டும் வந்தது என்றும் கொலராடோ மாநிலப் பல்கலைக்கழக தத்துவ, விலங்கு அறிவியல், மற்றும் உயிரியல்சார் மருத்துவ அறிவியல் பேராசிரியரான பெர்னார்ட் ரோலின் கூறுகிறார். அமெரிக்காவில் 1989-ம் ஆண்டுக்கு முன்பு வரை பயிற்சி பெற்ற கால்நடை மருத்துவர்கள் விலங்குகளின் வலியைப் புறக்கணிக்கக் கற்பிக்கப்பட்டனர் என்று கூறும் ரோலின், மேலும் 1960-களில் விலங்குகளின் வலியைக் கட்டுப்படுத்துவதற்கான மயக்க மருந்து மற்றும் வலி நிவாரணி ஆகியவைகளை தனது இருப்பில் வைத்திறாத ஒரு பெரிய கால்நடை மருத்துவமனையையும் எடுத்துக்காட்டாகச் சுட்டுகிறார். அன்றைய அறிவியல் அறிஞர்களுடனான தனது விவாதங்கள் பலவற்றில் விலங்குகள் உணர்வுள்ளவை என்பதை "நிரூபிக்க" வேண்டியும் அவைகளால் வலியை உணர முடியும் என்பதற்கான அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்களை வழங்குமாறும் தனக்கு சவால் விடப்பட்டதையும் ரோலின் நினைவுகூறுகிறார்.

1980-களில் இருந்து பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் விலங்குகள் வலியை உணரக்கூடியவை என்றும் அவை துன்பப்படும் தன்மையுடையவை என்பதையும் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று அறிவியல் வெளியீடுகள் தெளிவுபடுத்தியுள்ளன. இருப்பினும் விலங்குகள் மனிதர்களைப் போன்ற அச்சத்தை எதிர்நோக்கியிருக்கும் தன்மை இல்லாதவை, அவை மனிதனின் அளவுக்கு அவற்றின் துன்பத்தை நினைவில் இருத்திக் கொள்ளாதவை போன்ற நம்பிக்கைகள் இன்றும் தொடர்வதால் விலங்குகள் குறைந்த துன்பத்தையே அனுபவிக்கின்றன என்பது போன்ற வாதங்கள் இன்றும் முன்வைக்கப்படுகின்றன. அளவீட்டில் சற்றே வேறுபாடு இருக்கும் என்று வைத்துக்கொண்டாலும் கூட, அனைத்து விலங்குகளிடமும் பொதுவாகக் காணப்படும் வலியுணரும் தன்மையே சிங்கரின் சமபாவனைக் கருத்திற்கு அடிப்படையாக அமைகிறது. விலங்குகளின் துன்பமும் அவற்றின் உணர்வுநிலையும் குறைவாகவே மதிப்பிடப்படுவதற்கு முதன்மையான காரணம் விலங்குகளுக்கு மொழி இல்லை என்ற வாதம்தான். வலியால் துன்பப்படும் ஒரு மனிதனின் நடத்தையை அவதானித்து அதன் அடிப்படையில் அவ்வலியை ஓரளவுக்கு யூகித்துக் கணக்கிடமுடியும் என்றாலும், வலியை வெளிப்படுத்த மொழி கட்டாயம் தேவையென்றால் மனிதர்கள் எப்போது வலியுற்று இருக்கிறார்கள் என்பதை நாம் அறியவே முடியாது போகும் என்பதை சிங்கர் சுட்டுகிறார். வலியுற்ற விலங்குகளின் நடத்தை வலியுற்ற மனிதர்களின் நடத்தையிலிருந்து வேறுபட்ட பொருளைக் கொண்டிருக்கும் என்று கருதுவதற்கு எந்த ஒரு முகாந்தரமும் இல்லை என்று அவர் மேலும் வாதிடுகிறார்.

ஒரு-வாழ்வின்-குடிகள் கோட்பாடு

விலங்குரிமை 
டாம் ரீகன்: "விலங்குகளனைத்தும் ஒரு-வாழ்வின்-குடிகள்".
விலங்குரிமை 
கேரி பிரான்சியோனி: "விலங்குகளுக்கு வேண்டியதெல்லாம் பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்கப்படக் கூடாது என்ற உரிமை மட்டுமே".

வட கரொலைனா மாகாண பல்கலைக்கழக மெய்யியல் பேராசிரியர் டாம் ரீகன் தனது தி கேஸ் ஃபார் அனிமல் ரைட்ஸ் (1983) என்ற நூலில் மனிதரல்லா விலங்குகளை "ஒரு வாழ்வின் குடிகள்" ("subjects-of-a-life") என்று பெயரிட்டு அழைத்து அவற்றிற்கு பிறவியிலேயே உரிமை உண்டு என்கிறார். அறிதிற ஆற்றல் சார்ந்த திறன்கள் உள்ளதனாலேயே மனிதர்களுக்கு தார்மீக உரிமை உண்டென்று நாம் கருதுவதால் அதற்கு ஒத்த அறிவாற்றல் திறன் கொண்ட உணர்திற உயிர்களான மனிதரல்லா விலங்குகளுக்கும் தாரிமீக உரிமைகள் உண்டு என்று அவர் நிறுவுகிறார். மனிதர்கள் மட்டுமே தார்மீக முகவர்களாக செயல்பட்டாலும், கைக்குழந்தைகள் போன்ற தார்மீக உரிமை விடயத்தில் விளிம்புநிலையிலுள்ள மனிதர்களும் குறைந்தபட்சம் அதற்கு ஒத்த விலங்குகளும் "தார்மீக சிகிச்சைக்குக் காத்திருப்போர்" அல்லது "தார்மீக நோயாளிகள்" என்ற அந்தஸ்தைப் பெறுகிறார்கள்.

தார்மீக நோயாளிகள் தார்மீகக் கொள்கைகளை உருவாக்க இயலாதவர்கள் ஆவர். அவ்வகையில் தாங்கள் செய்வது நன்மையையோ தீங்கையோ விளைவிக்க வல்லவை என்றபோதும் அவர்களால் நன்மையையோ தீமையையோ செய்ய இயலாது. தார்மீக முகவர்களால் மட்டுமே தார்மீக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். விலங்குகள் ஒரு-வாழ்வின்-குடிகள் என்ற வகையில் "உள்ளார்ந்த மதிப்பைக்" கொண்டுள்ளவை ஆகும் என்று ரீகன் துணிகிறார். இவ்வாறு வாழ்க்கை என்ற ஒன்றைத் தங்களுக்கே உரிய குறிக்கோளாகக் கொண்டுள்ள விலங்குகள் என்றுமே மனிதர்களுக்கு அவர்களது குறிக்கோள்களை அடைய உதவும் கருவிகள் ஆகமாட்டா. இக்கருத்தே ரீகனை ஒழிப்புவாத விலங்குரிமைக் கோட்பாட்டினர் வரிசையில் நிலைத்திருக்க வைக்கிறது. ரீகனின் கோட்பாடு ஒரு-வாழ்வின்-குடிகள் என்று அவர் கருதும் விலங்குகளுக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது. குறைந்தபட்சம் ஒரு வயதுடைய அனைத்து சாதாரண பாலூட்டிகளும் இத்தகுதியைப் பெறும் என்று கீழ்க்காண்டவாறு அவர் வாதிடுகிறார்:

அடிப்படையில் விலங்குகளை நாம் நடத்தும் விதம் மேம்பட வேண்டும் என்றும், சில அனுமான சூழ்நிலைகளில், மனிதன் உட்பட விலங்குகளின் நியாயமான நலனுக்குப் தனிப்பட்ட சில விலங்குகள் பயன்படலாம் என்றும் சிங்கர் கருதுகையில், நாம் மனிதர்களை நடத்துவது போலவே மனிதரல்லா விலங்குகளையும் நடத்த வேண்டும் என்று ரீகன் கூறுகிறார். விலங்குகளுக்கும் வாழ்க்கை என்ற தனிப்பட்ட குறிக்கோள் உண்டென்பதால் அது மதிக்கப்பட வேண்டும் என்றும் அதனாலேயே விலங்குகள் மனிதர்களின் தேவைக்குப் பயன்படும் கருவிகளாகக் கருதப்படக்கூடாது என்றும் கூறுவதன் வாயிலாக இம்மானுவேல் காந்து மனிதர்களுக்கு மட்டுமே பயன்படுத்திய சிந்தனையை ரீகன் விலங்குகளுக்கும் நீட்டிக்கிறார்.

ஒழிப்புவாதக் கோட்பாடு

பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்கப்படாமலிருக்கும் உரிமை தான் விலங்குகளுக்கு வேண்டிய ஒரே உரிமை என்று நேவார்க்கில் உள்ள ரட்கர்ஸ் சட்டப் பள்ளியில் சட்டம் மற்றும் தத்துவப் பேராசிரியரும் முன்னணி ஒழிப்புவாத (abolitionism) எழுத்தாளருமான கேரி பிரான்சியோனி கூறுகிறார். மற்ற அனைத்தும் அந்த முன்னுதாரண மாற்றத்திலிருந்து தன்னால் வெளிப்படும் என்பது அவரது துணிபு. விலங்குகள் தவறாக நடத்தப்படுவதைப் பெரும்பாலான மக்கள் கண்டிக்க முற்பட்டாலும், உலகெங்கிலும் அக்கண்டனத்தைப் பிரதிபலிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும், "சட்ட அமைப்பானது நடைமுறையில் விலங்குகளைப் பயன்படுத்தும் செயல்களை, அச்செயல்கள் எவ்வளவு வெறுக்கத்தக்கதாக இருந்தாலும் கூட, அனுமதிக்கத் தான் செய்கிறது" என்று அவர் ஆதங்கப்படுகிறார். விலங்குகளுக்கு நாம் தரும் எந்தவொரு துன்பமும் "தேவையற்றதாக" இருக்கக்கூடாது என்பது மட்டுமே அத்துன்பங்களை விலங்குகளுக்கு அனுமதிக்கும் சட்டத்தின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த "தேவையற்றது" எது என்பதைத் தீர்மானிப்பதில் விலங்குகளின் நலத்தேவைகளைவிட மனிதர்களின் சுயநலத்தேவைகளே சட்டத்தால் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

பிரான்சியோனியின் அனிமல்ஸ், ப்ராபர்டி, அண்டு தி லா (1995) என்ற நூலே விலங்குரிமைகளுக்கான சட்டவியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட முதல் விரிவான புத்தகமாகும். அதில் அமெரிக்காவில் அடிமைகள் நடத்தப்பட்ட விதத்தோடு விலங்குகளின் நிலையை பிரான்சியோனி ஒப்பிடுகிறார். அமெரிக்காவில் அடிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தன என்றபோதும் அடிமைத்தனம் என்ற சமூக அமைப்பே அப்பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாதபடி ஆக்கியிருந்ததையும் இவ்வுண்மையை நீதிமன்றங்கள் கூடப் புறக்கணித்தன என்ற தகவலையும் பிரான்சியோனி அப்புத்தகத்தில் குறிப்பிடுகிறார். இந்நிலைக்கு இன்றைய எடுத்துக்காட்டாக அவர் அமெரிக்க விலங்குகள் நலச் சட்டத்தைச் சுட்டுகிறார். அமெரிக்க விலங்குகள் நலச் சட்டமானது வெறும் விலங்குகள் நலன் குறித்த பொதுமக்களின் பொதுவான ஆதங்கத்தைத் தணிக்கும் நோக்கில் இயற்றப்பட்ட, ஆனால் செயல்படுத்த இயலாத, ஒரு குறியீட்டுச் சட்டம் என்று அவர் கூறுகிறார்.

விலங்குரிமையை விடுத்து விலங்கு நலனில் கவனம் செலுத்துவது என்பது பொதுமக்களிடையே விலங்குகளைப் பயன்படுத்து சரியே என்ற எண்ணத்தை மேலும் வலுப்பெறச் செய்து விலங்குகள் வெறும் பயன்பாட்டுப் பொருட்களாகப் பார்க்கப்படும் வழக்கத்தை மென்மேலும் வேரூன்ற வைக்கிறது. இதன் காரணமாக விலங்குகளின் இன்றைய அடிமை நிலை மேலும் மோசமடையக் கூடும். விலங்குரிமை இயக்கங்களாக இருந்து விலங்கு நலனுக்கு தங்களைக் குறைத்துக் கொண்டு செயல்படும் பீட்டா (PETA) போன்ற இயக்கங்களை "நவீன நலனாளர்கள்" என்று பிரான்சியோனி அழைக்கிறார். நவீன விலங்குரிமை இயக்கத்தின் தரத்திற்கு ஒத்து இல்லாமல் ஏதோ 19-ம் நூற்றாண்டின் விலங்கு நலக் பாதுகாவலர்களைப் போல் இவ்வியக்கங்கள் இன்று தரம் குறைந்து செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். உண்மையைக் கூறவேண்டுமெனில் "விலங்குரிமை" என்ற முழுமுதற் சிந்தனை கைவிடப்பட்டு "விலங்கு நலன் காத்தல்", "விலங்குப் பாதுகாப்பு", "பாதுகாப்புவாதம்" போன்ற பெரிதும் பயனற்ற சொற்கள் இவ்வியகங்களால் இன்று அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 1996-ல் பிரான்சியோனி தன் நிலைப்பாட்டினைப் பற்றிக் குறிப்பிடுகையில் "அமெரிக்காவில் விலங்குரிமை இயக்கம் என்பது அறவே இல்லை" என்று கூறினார்.

ஒப்பந்தவாதம்

ஜான் ராவ்ல்ஸின் எ தியரி ஆஃப் ஜஸ்டிஸ் (1971) என்ற நூலில் புளோரிடா பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியரான மார்க் ரோலண்ட்ஸ் விலங்குரிமைக்கான ஒரு ஒப்பந்த அணுகுமுறையை முன்மொழிந்தார். இது நீதி, நேர்மை ஆகியன குறித்து நமக்கு இருக்கும் உள்ளுணர்வை சோதிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "அறியாமைத் திரை" எனப்படும் சிந்தனைப் பரிசோதனையைக் கொண்டதாகும். இதன்படி பிறக்கப்போகும் ஒரு நபரை அவர் எப்படிப்பட்டவராகப் பிறக்கப்போகிறார் என்ற விவரங்களை அறிவிக்காமல் மேற்கூறிய "அறியாமைத் திரை" கொண்டு மூடி அவரது உள்ளுணர்வின் நீர்க்கப்படாத அசல் நிலையைக் மட்டுமே கொண்டு அவரை விட்டே சமூக நெறிமுறைகளை வரையறை செய்யச் சொல்லப்படுகிறது. அவ்வறியாமைத் திரையின் காரணமாக அந்நபருக்கு தான் பிறந்தபின் தன்னிடம் அமையவுள்ள தனிப்பட்ட குணாதிசயங்கள் என்னென்ன; தனது குலம், நிறம், பாலினம், வர்க்கம், அறிவுத்திறன் போன்றவை யாது; தான் திறமையுள்ளவரா அல்லது ஊனமுற்றவரா; பணக்காரரா அல்லது ஏழையா போன்ற எதுவுமே தெரியாது என்பதால் தான் உருவாக்கவிருக்கும் சமூகத்தில் தான் எந்தப் பாத்திரத்தை வகிக்கப்போகிறோம் என்பதையும் அறியாதிருப்பார். இப்படிப்பட்ட ஒரு அசல் உள்ளுணர்வு நிலையில் எப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்குவது, அதிலுள்ளவர்களின் முதன்மைத் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது, சமூகப் பொருட்களை அனைவருக்கும் எவ்வாறு சமமாகப் பகிர்ந்தளிப்பது போன்ற விடயங்களில் அந்நபர் முழுக்க முழுக்க நீதியின் அடிப்படையில் மட்டுமே செயல்படும் இயல்பு கொண்டவராக இருப்பார்.

"அறியாமைத் திரைக்குப்" பின்னாலிருந்து செயல்படுகையில் அந்நபர் தான் என்னவாகப் பிறக்கப் போகிறோம் என்பதை மையமாகக் கொள்ளாமல் நீதியையும் நியாயத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தான் வரையறை செய்த ஒரு சமூக ஒப்பந்தத்தை ஏற்பார் என்பதே இவ்வணுகுமுறையின் கருத்து. அந்நபர் பிறக்கவிருக்கும் விலங்கு இனத்தை (அதாவது அவர் மனிதனாகவோ வேறு எந்த விலங்காகவோ பிறப்பார் என்ற இனத் தகவலை) அசல் உள்ளுணர்வோடு மட்டுமே முடிவெடுக்கும் இந்நபரின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட பண்புகளின் பட்டியலில் ரால்ஸ் சேர்க்கவில்லை. இந்த அறியாமைத் திரையின் பின்னால் மறைக்கப்பட்ட குணாதிசயங்களின் பட்டியலை விரிவுபடுத்தும் நோக்கில் அதில் பகுத்தறிவையும் சேர்க்க வேண்டும் என்று ரோலண்ட்ஸ் முன்மொழிகிறார். குலம், நிறம், பாலினம், அறிவாற்றல் ஆகியவற்றின் வரிசையில் பகுத்தறிவும் வருவதாக அவர் கருதுகிறார்.

முதற்பார்வை உரிமைக் கோட்பாடு

அமெரிக்க மெய்யியல் அறிஞரான திமோதி கேரி மனிதரல்லா விலங்குகளை முதற்பார்வை உரிமைகளுக்கு (prima facie rights) தகுதியானதாகக் கருதும் அணுகுமுறையொன்றை முன்மொழிந்துள்ளார். இலத்தீன் மொழியில் ப்ரைமா ஃபேசி (prima facie) என்பதற்கு "ஒன்றின் முகத்தில்" அல்லது "முதல் பார்வையில்" என்று பொருள். தத்துவ ரீதியாக ஒரு முதற்பார்வை உரிமை என்பது முதல் பார்வையில் பொருந்தக்கூடியதாகத் தோன்றும் உரிமையாகும். இவ்வகை உரிமைகளை மேலும் நெருக்கமாக ஆய்வு செய்யின் அவை மற்ற கருத்தாய்வுகளால் மிஞ்சப்பட்டு ஒரு கட்டத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டும் கூடப் போகலாம். லாரன்ஸ் ஹின்மேன் தனது எதிக்ஸ்: எ ப்ளூரலிஸ்டிக் அப்ரோச் டு மாரல் தியரி என்ற நூலில் "இவ்வகை உரிமைகள் உண்மையானவை தான் என்றாலும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அது பொருந்துமா என்ற கேள்வியை எழுப்ப வல்லவை" என்று குறிப்பிடுகிறார். மனிதரல்லா விலங்குகள் முதற்பார்வை உரிமைகளுக்குத் தகுதியானவை என்ற கருத்து ஒரு வகையில் விலங்குகளுக்கு உள்ள உரிமைகள் எப்போதெல்லாம் மனித வாழ்க்கைத் தேவைகளான மனித சுதந்திரம், சொத்துரிமை, மனித மகிழ்வுச் செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு முரணாகவோ, தடையாகவோ இருக்கின்றனவோ அப்போதெல்லாம் அவை மறுக்கப்படலாம் என்பதாக உள்ளது. கேரி கீழ்கண்டவாறு தனது நிலைபாட்டினை உறுதிப்படுத்துகிறார்:

மொத்தத்தில், மனிதர்களுக்கு விலங்குகளிடம் ஆற்றவேண்டிய கடமைகள் இருப்பதாகவும் விலங்குகளுக்கு மனிதர்களுக்கு எதிராக மீற முடியாத உரிமைகள் இல்லை என்றும் கேரி கூறுகிறார்.

பெண்ணியமும் விலங்குரிமையும்

விலங்குரிமை 
அமெரிக்க சுற்றுச்சூழல் பெண்ணியவாதியான கரோல் ஆடம்ஸ், தி செக்ஷூவல் பாலிடிக்ஸ் ஆஃப் மீட் (1990) என்ற தனது நூலில் தொடங்கி பெண்ணியத்திற்கும் விலங்குரிமைகளுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி பெருமளவில் எழுதியுள்ளார்.

19-ம் நூற்றாண்டிலிருந்து விலங்குரிமை போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் பெண்களின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்து வந்திருக்கிறது. 19வது நூற்றாண்டிலும் 20வது நூற்றாண்டின் முற்பகுதியிலும் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் மலர்ந்த உடற்கூறாய்வு ஆராய்ச்சிகளுக்கு எதிரான இயக்கம் (anti-vivisection movement) பெரும்பாலும் பெண்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இவ்வியக்கத்தின் முன்னணிப் பெண்களில் ஃபிரான்சஸ் பவர் கோப், அன்னா கிங்ஸ்ஃபோர்ட், லிஸ்ஸி லிண்ட் அஃப் ஹேக்பி, கரோலின் ஏர்ல் வைட் (1833-1916) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஃபிரான்சஸ் பவர் கோப் அவர்களால் தொடங்கப்பட்ட உடற்கூறாய்வு எதிர்ப்புக் குழுவான விக்டோரியா ஸ்ட்ரீட் சொசைட்டியின் உறுப்பினர்களில் 70 சதவீதம் பேர் பெண்களாவர் என்று கார்னர் குறிப்பிடுகிறார். 1900-ல் பிரித்தானிய ஆர்.எஸ்.பி.சி.ஏ. (RSPCA) அமைப்பின் உறுப்பினர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் கார்னரின் குறிப்புகளில் காணப்படுகிறது.

இவற்றிற்கு ஒத்த அளவில் இன்றைய நவீன விலங்குரிமை இயக்கத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் காணமுடிகிறது. இருப்பினும் பெரும்பாலும் தலைமைப் பொருப்புகளில் பெண்கள் இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக 1990-ம் ஆண்டு அதுவரை அமெரிக்காவில் விலங்குகளுக்கான உரிமை குறித்த நிகழ்வுகளில் மிகப் பெரியதான வாஷிங்டன், டி.சி. நகரில் நடந்த விலங்குரிமைப் பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். எனினும் அங்கு மேடையில் பேசியவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாகவே இருந்தனர். இவை ஒருபுறம் இவ்வாறு இருப்பினும், செல்வாக்குமிக்க பல விலங்குரிமை அமைப்புகளும் விலங்கு நல அமைப்புகளும் பெண்களால் நிறுவப்பட்டுள்ளது இங்கு நோக்கத்தக்கது. 1898-ல் லண்டனில் கோப் நிறுவிய உடற்கூறாய்வு ஆராய்ச்சிகளை ஒழிக்கும் பிரித்தானிய ஒன்றியம் (British Union for the Abolition of Vivisection), 1962-ல் ருக்மிணி தேவி அருண்டேல் நிறுவிய இந்திய விலங்கு நல வாரியம் (Animal Welfare Board of India); 1980-ல் இங்க்ரிட் நியூகர்க்கால் இணைந்து நிறுவப்பட்ட பீட்டா ஆகியவை இதற்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும். நெதர்லாந்தில் 2006-ல் மரியன்னே தீம், எஸ்தர் ஓவேஹாண்ட் ஆகியோர் விலங்குகளுக்கான நாடாளுமன்றக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி (Parliamentary group for Animals) நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இன்றைய விலங்குரிமை இயக்கத்தில் பெருகிவரும் பெண்களின் மேலாதிக்கம் பெண்ணியத்திற்கும் விலங்குரிமைகளுக்கும் உள்ள தொடர்பினை ஆராயும் புதிய துறை ஒன்று கல்வித்துறையில் உருவாவதற்கு வழிவகுத்துள்ளது. பெண்ணியத்தோடு சைவ மற்றும் நனிசைவ வாழ்வுமுறைகளுக்கு உள்ள தொடர்பினையும், பெண்களும் விலங்குகளும் ஒடுக்குமுறைக்கு ஆளாவது குறித்தும், பெண்களையும் விலங்குகளையும் அறிவுசார் தொடர்பின்றி வெறும் அவர்களின் இயல்பு சார்ந்தும் உணர்ச்சிகள் சார்ந்தும் ஆண்வருக்கம் தொடர்பு படுத்துவது குறித்தும் இப்புதிய துறை இன்று பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இன்று பல பெண்ணிய எழுத்தாளர்கள் பெண்களை வெறும் உணர்ச்சி சார்ந்து மட்டுமல்லாது அறிவாற்றல் சார்ந்தும் தொடர்பு படுத்தத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆணாதிக்க சமூகத்தில் பெண்களும் விலங்குகளும் ஒரே குறியீட்டுச் செயல்பாட்டைச் சித்தரிக்கின்றனர் என்று லோரி க்ரூன் கூறுகிறார்: அதாவது, இருவருமே "பயன்படுத்தப்படுபவர்கள்", ஆதிக்கம் செலுத்தப்படுபவர்கள், அடிபணிந்த வருக்கத்தினர். பிரித்தானிய பெண்ணியவாதியான மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் (1759-1797) எ விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் உமன் (1792) என்ற தலைப்பில் பெண்ணுரிமைகளுக்கான நியாயங்களைப் பதிப்பித்து வெளியிட்டபோது, அதை அநாமதேயமாகக் கிண்டலடிக்கும் வகையில் கேம்பிரிட்ஜ் மெய்யியலாளரான தாமஸ் டெய்லர் (1758-1835) என்பவர் எ விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் ப்ருட்ஸ் என்ற தலைப்பில் நையாண்டி பதிலுரை ஒன்றைப் பதிப்பித்தார். பெண்களின் உரிமை என்ற சிந்தனையானது அன்றைய காலம் வரை யாராலும் ஏற்கப்படாத விலங்குரிமை என்ற சிந்தனைக்கு ஒத்த அபத்தம் என்று கருதிய அவர், "பெண்களின் உரிமைகளுக்கான வோல்ஸ்டோன்கிராஃப்டின் வாதங்களை விலங்குகளின் உரிமைகளுக்கும் சமமாகப் பயன்படுத்தப்படலாம்" என்று தனதந்தப் பதிப்பில் நக்கலாகக் கூறியிருந்தார். தனது தி செக்சுவல் பாலிடிக்ஸ் ஆஃப் மீட்: எ ஃபெமினிஸ்ட்-வெஜிடேரியன் கிரிட்டிகல் தியரி (1990) மற்றும் தி போர்னோகிராபி ஆஃப் மீட் (2004) உள்ளிட்ட நூல்களில் பெண்களை ஒடுக்குவதற்கும் விலங்குகளை ஒடுக்குவதற்கும் இடையே உள்ள தொடர்புகளை கரோல் ஆடம்ஸ் விளக்குகிறார்.

மீவுமனிதத்துவம்

சில மீவுமனிதத்துவவாதிகள் (transhumanists) விலங்குரிமை, விலங்கின விடுதலை, மற்றும் விலங்கு உணர்வுநிலையை இயந்திரங்களாக "மேம்படுத்துதல்" ஆகியவற்றை ஆதரித்துப் பேசுகின்றனர். மீவுமனிதத்துவமானது விலங்குரிமையை மனித உரிமை, உணர்வுநிலையுடன் கூடிய செயற்கை நுண்ணறிவுகளின் உரிமைகள் (மீவுமனித உரிமைகள்) உள்ளிட்ட பிற வகையான உணர்திற உரிமைகளுடனான ஒரு நிறமாலை போன்ற அமைப்பில் வைத்துப் பார்க்கிறது.

பொதுவுடைமைக் கோட்பாடும் முதலாளித்துவ எதிர்ப்பும்

உலக முதலாளித்துவத்தின் பிடியில் நடக்கும் மனித ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான மிகவும் பொதுவான போராட்டத்துடன் இணைந்தே விலங்கின விடுதலைக்கான போராட்டம் நடைபெறவேண்டும் என்று விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளர் டேவிட் நிபர்ட் கருதுகிறார். "பொருளாதார ஜனநாயகம் மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் வெகுஜன ஊடகங்களைக் கொண்டு தற்போதையதை விட அதிக நியாயமான மற்றும் அமைதியான ஒழுங்கினை உருவாக்க முனையும்" ஒரு மிகவும் சமத்துவ ஜனநாயக பொது உடைமைக் கோட்பாட்டு அமைப்பின் கீழ், முக்கிய உலகளாவிய சிக்கல்களைப் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்கும் "மற்ற விலங்குகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒழிப்புவாதப் பிரச்சாரங்களுக்குமான" சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்று நிபர்ட் கூறுகிறார். விலங்கு விடுதலை முன்னணி மற்றும் அதன் பல்வேறு கிளைகளால் வகைப்படுத்தப்படும் விலங்கின விடுதலை இயக்கமானது "உலக முதலாளித்துவ மூலதனத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது" என்று எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் அறிஞரான ஸ்டீவன் பெஸ்ட் கூறுகிறார்.

மக்களின் மனப்பான்மை

ஹரால்ட் ஹெர்சாக், லோர்னா டார் ஆகியோரால் 2000-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, விலங்குரிமை குறித்த பொதுமக்களின் மனப்பான்மையை அல்லது சிந்தனையை ஆராய்ந்த முந்தைய ஆய்வுகளனைத்தும் சிறிய மாதிரி அளவுகளையும் (sample sizes) சம்பந்தப்படாத குழுக்களிடம் கேட்கப்பட்டவையாகவும் இருந்திருந்தன. இருப்பினும், விலங்குகள் மற்றும் விலங்குரிமை தொடர்பான தனிநபர்களின் அணுகுமுறையானது அந்நபரின் பாலினம், வயது, தொழில், மதம், கல்வியறிவு உள்ளிட்ட பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது என்பது தெரியவந்தது. செல்லப்பிராணிகளுடன் வாழ்ந்த அனுபவமும் விலங்குரிமை குறித்த மக்களின் மனப்பான்மைக்கு ஒரு காரணியாக இருக்கிறது என்பதற்கான ஆய்வுச் சான்றுகளும் உள்ளன.

ஆண்களை விட பெண்களே விலங்குரிமைக் கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு அதற்கு அதிகம் ஆதரவு நல்குவதை காணமுடிகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1996-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் பெண்களிடையே காணப்படும் இந்த புரிதலுக்கு பெண்ணியம், அறிவியல், அறிவியல்சார்ந்த கல்வியறிவு, உள்ளார்ந்த இரக்க குணத்திற்கு பெண்கள் தரும் முக்கியத்துவம் ஆகியவை சில காரணிகளாக இருக்கக் கூடும் என்று கருதியது.

விலங்குரிமை என்ற கருத்தாக்கத்தில் மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளிட்ட சட்ட உரிமைகளை வழங்கவேண்டி விலங்குரிமை ஆர்வலர்கள் கோருவதாக பொதுமக்களில் சிலரிடம் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. உண்மையில் விலங்குகளின் நலத்தேவைகளைக் கருத்தில் கொண்டே அவற்றின் உரிமைகள் கோரப்படுகிறது. அவ்வகையில் விலங்குரிமை என்பது மனிதர்களோடு கூட விலங்குகளை சமபாவனையோடு (equal consideration) நடத்தச் சொல்கிறதேயன்றி சமநடத்தையோடு (equal treatment) அல்ல (எடுத்துக்காட்டாக, பூனைகளுக்கு வாக்களிப்பதில் ஆர்வமும் இருப்பதில்லை என்பதோடு மட்டுமன்றி வாக்களிப்பது என்பது பூனைகளின் நலத்தேவையும் அல்ல. எனவே பூனைகள் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை). 2016-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் விலங்குகளின் மீதான அறிவியல் பரிசோதனைகள் நிகழ்த்தப்படுவதற்கு தக்க மெய்யியல் காரணங்கள் ஏதும் இல்லை என்றும் இது மேலும் வெளிப்படையான விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்றும் வலியுறுத்தியது.

உலகம் (கடவுளால்) படைக்கப்பட்டது என்ற நம்புபவர்கள், சமய நம்பிக்கை உள்ளவர்கள் ஆகியோரைக் காட்டிலும் பரிணாம சித்தாந்தத்தை நம்புபவர்கள் விலங்குரிமையை பெரிதும் ஆதரிக்கிறார்களா என்று 2007-ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் அது பெரும்பாலும் உண்மைதான் என்று கண்டறியப்பட்டது. அவ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி உலகம் கடவுளின் படைப்பு என்று தீவிரமாக நம்பும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் மற்றவர்களைக் காட்டிலும் விலங்குரிமைகளுக்குக் குறைவாகவே மதிப்பளிக்கின்றனர். இது 48% விலங்குரிமை ஆர்வலர்கள் நாத்திகர்களாகவோ அஞ்ஞானவாதிகளாகவோ இருக்கின்றனர் என்று கூறிய 1992-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வுக்கு வலுசேர்ப்பதாக இருந்தது. 2019-ம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான ஆய்வுவொன்றில் விலங்குகளின் உரிமைகளை ஆதரிப்பவர்களாகவும் அது குறித்த நேர்மறையான மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பவர்கள் உலகளாவிய சுகாதாரம்; கறுப்பர்கள், எல்ஜிபிடி (LGBT) சமூகம் எனப்படும் மூன்றாம் மற்றும் பிற பாலினத்தவர்கள், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்கள் ஆகியோரை ஆதரித்து அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்தல்; ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கும் சாதகமாகவே உள்ளனர் என்று கண்டறியப்பட்டது.

நேரடி நடவடிக்கை உள்ளிட்ட விலங்குரிமை குறித்த சீரிய செயற்பாடுகளின் மீதான பார்வை விலங்குரிமை ஆர்வலர்களிடையே மிகவும் பரந்துபட்டு காணப்படுகிறது என்று இருவேறு ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. ஏறக்குறைய பாதிக்குப்பாதி (50% என்று ஒரு கருத்துக்கணிப்பிலும் 39% என்று மற்றொரு கருத்துக்கணிப்பிலும்) ஆர்வலர்கள் இந்நேரடி நடவடிக்கைகளை ஆதரிப்பதில்லை என்று அவ்வாய்வுகள் கூறுகின்றன. "விலங்குரிமை ஆர்வலர்களை ஒரே மாதிரியாக சித்தரிப்பது தவறு" என்று ஒரு கணக்கெடுப்பு தன் முடிவினை அறிவித்தது.

ஐக்கிய அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90% பேர் அன்றாடம் இறைச்சி உட்கொள்பவர்களாக இருந்தாலும், அவர்களில் சுமார் பாதி பேர் வதைகூடங்களைத் தடை செய்வதை ஆதரிப்பவர்களாக உள்ளனர். ஐக்கிய அமெரிக்காவின் "சென்ஷியன்ஸ் இன்ஸ்டிட்யூட்" (Sentience Institute) அமைப்பு 2017-ம் ஆண்டு 1,094 நபர்களிடம் விலங்கு வளர்ப்பு குறித்து நடத்திய கணக்கெடுப்பில் 49% பேர் விலங்குத் தொழிற்பண்ணைகளைத் தடை செய்வதையும், 47% பேர் வதைகூடங்களைத் தடை செய்வதையும், 33% விலங்குகள் வேளாண்மையைத் தடை செய்வதையும் ஆதரிப்பது தெரியவந்தது. இந்த 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பினை ஒத்து ஓக்லஹோமா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேலும் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளிலும் இதே முடிவுகள் வெளிவந்தன. அக்கணக்கெடுப்புகளில் பதிலளித்தவர்களில் 73% பேர் "கால்நடைகள் யாவும் வதைகூடத்தில் கொல்லப்பட்டே இறைச்சியாக மாற்றப்பட்டும் பதப்படுத்தப்பட்டும் நமக்கு உணவாக வருகின்றன என்பதும் வதைகூடங்களின்றி இன்று நம்மால் இறைச்சி பெற இயலாது என்பதும் தெரியுமா?" என்ற கேள்விக்கு "ஆம்" என்று பதிலளித்தனர்.

ஐக்கிய அமெரிக்காவில், 1960-களின் பிற்பகுதியிலும் 1970-களின் முற்பகுதியிலும் தேசிய விவசாயிகள் அமைப்பால் பல பொது எதிர்ப்பு விலங்கறுப்புகள் (அஃதாவது எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கில் பொதுவெளியில் நடத்தப்படும் விலங்கு அறுப்புகள்) நடத்தப்பட்டன. இறைச்சிகளுக்கான விற்பனை விலை குறைவாக உள்ளதை எதிர்த்து விலங்கு வளர்பபு விவசாயிகள் ஊடகங்களின் முன்னிலையில் தங்கள் கால்நடைகளை கொன்று குவித்தனர். அவையாவும் இறைச்சி எடுக்கப்படாமல் சடலங்களாகப் போடப்பட்டும் உண்ணப்படாமலும் வீணடிக்கப்பட்டன. விலங்குகள் தேவையின்றி வீணாகக் கொல்லப்படுவதைத் தொலைக்காட்சியில் பார்த்த பொது மக்கள் அதிருப்தியும் கோபமும் அடைந்ததால் இப்போராட்டங்கள் தோல்வியில் முடிந்தன.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

மேற்கோள் தரவுகள்

நூல்கள் மற்றும் ஆய்வுத்தாள்கள் அடிக்குறிப்புகளில் குறுகிய வடிவத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இங்கே அவற்றின் முழு மேற்கோள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. செய்தித்தாள் தரவுகளும் பிற ஆதாரங்களும் அடிக்குறிப்பில் முழுமையாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Tags:

விலங்குரிமை சமயங்களில் விலங்குரிமை மெய்யியலும் சட்ட அணுகுமுறைகளும்விலங்குரிமை மக்களின் மனப்பான்மைவிலங்குரிமை இவற்றையும் பார்க்கவும்விலங்குரிமை மேற்கோள்கள்விலங்குரிமை மேற்கோள் தரவுகள்விலங்குரிமை மேலும் படிக்கவிலங்குரிமை வெளியிணைப்புகள்விலங்குரிமைஅடிப்படை உரிமைகள்ஆங்கிலம்உணர்திறன்உரிமைசுதந்திரம்மெய்யியல்வாழுரிமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இன்ஸ்ட்டாகிராம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்ஆந்திரப் பிரதேசம்கொங்கு வேளாளர்உரைநடைகுண்டூர் காரம்தனுசு (சோதிடம்)திருவரங்கக் கலம்பகம்வாகைத் திணைதமிழ் மன்னர்களின் பட்டியல்மேற்குத் தொடர்ச்சி மலைவிடுதலை பகுதி 1காடுவெட்டி குருஅடல் ஓய்வூதியத் திட்டம்சிறுபாணாற்றுப்படைஐஞ்சிறு காப்பியங்கள்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஐம்பூதங்கள்காதல் கோட்டைஅம்மனின் பெயர்களின் பட்டியல்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்மரபுச்சொற்கள்பி. காளியம்மாள்தமிழ்ஒளிவேலுப்பிள்ளை பிரபாகரன்கிராம ஊராட்சிபோயர்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்உயிர்மெய் எழுத்துகள்முரசொலி மாறன்சேரர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுமலையாளம்சிறுதானியம்திரிசாஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கிருட்டிணன்திவ்யா துரைசாமிமீன் வகைகள் பட்டியல்தமிழ்நாட்டின் அடையாளங்கள்சங்க இலக்கியம்மீனா (நடிகை)இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்கிழவனும் கடலும்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)நவக்கிரகம்கணம் (கணிதம்)தமிழ் எண்கள்நரேந்திர மோதிதேர்தல்தமிழர் நிலத்திணைகள்குணங்குடி மஸ்தான் சாகிபுதொல்லியல்திதி, பஞ்சாங்கம்இரசினிகாந்துவிஷால்அத்தி (தாவரம்)திருமூலர்மதுரைசுந்தரமூர்த்தி நாயனார்பொருநராற்றுப்படைதைராய்டு சுரப்புக் குறைவிவேகானந்தர்அவதாரம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)சிலம்பம்கிளைமொழிகள்நீர்ப்பறவை (திரைப்படம்)கல்விஇராபர்ட்டு கால்டுவெல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழச்சி தங்கப்பாண்டியன்திருவிழாஐந்திணைகளும் உரிப்பொருளும்மதுரை வீரன்கண்ணப்ப நாயனார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)திரைப்படம்🡆 More