செர்லக் ஓம்சு

செர்லக் ஓம்சு (ஷெர்லக் ஹோம்ஸ், Sherlock Holmes) என்பது இசுக்காட்லாந்திய மருத்துவர் மற்றும் எழுத்தாளர் ஆர்தர் கொனன் டாயிலால் உருவாக்கப்பட்ட ஒரு துப்பறிவாளர் கதாபாத்திரம்.

இலண்டன் நகரில் வாழ்ந்த ஓம்சு ஒரு தனியார் துப்பறிவாளர். தனது கூர்மையான தருக்க காரணமாய்தல், வேடமணியும் திறமை, தடயவியல் திறன் ஆகியவற்றைக் கொண்டு சிக்கலான குற்றங்களைப் புலனாய்வதில் வல்லவர்.

செர்லக் ஓம்சு
செர்லக் ஓம்சு
செர்லக் ஓம்சு (ஓவியம்- சிட்னி பாகெட்; ஆண்டு - 1904)
முதல் தோற்றம் 1887–1888
உருவாக்கியவர் ஆர்தர் கொனன் டொயில்
தகவல்
பால்ஆண்
தொழில்துப்பறிவாளர்
குடும்பம்மைக்கராஃப்ட் ஓம்சு (அண்ணன்)
தேசிய இனம்பிரித்தானியர்

1887-ம் ஆண்டு வெளியான எ ஸ்டடி இன் ஸ்கார்லெட் புதினத்தில் முதலில் தோன்றிய ஓம்சு, மொத்தம் நான்கு புதினங்கள் மற்றும் 56 சிறுகதைகளில் தோன்றியுள்ளார். எ ஸ்டடி இன் ஸ்கார்லெட் , பீடன்ஸ் கிருத்துமசு ஆன்னுவல் என்ற இதழிலும் ஓம்சின் அடுத்த புதினமான தி சைன் ஆஃப் ஃபோர், லிப்பின்காட்ஸ் மன்த்லி மேகசின் இதழில் 1891லும் வெளியாகின. 1891ல் சுட்ராண்ட் இதழில் ஓம்சு சிறுகதைகள் தொடராக வெளிவரத் தொடங்கியபின் ஓம்சு பாத்திரம் மக்களிடையே பெரும் புகழ்பெற்றது. 1927 வரை ஓம்சு தோன்றிய சிறுகதைகளும் புதினங்களும் தொடர்களாக வெளிவந்தன. அவை 1880–1914 காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளைச் சித்தரித்தன.

நான்கு சிறுகதைகளைத் தவிர பிற படைப்புகள் அனைத்தும் ஓம்சின் நண்பரும் அவரது வாழ்க்கை வரலாற்றாளருமான டாக்டர் ஜான். எச். வாட்சனது பார்வையிலிருந்து சொல்லப்பட்டுள்ளன. விதிவிலக்கான நான்கில் இரண்டு ஓம்சின் பார்வையிலிருந்தும் இரண்டு ஓம்சு வாட்சனுக்கு பழைய நிகழ்வுகளை நினைவு கூர்வது போலவும் சொல்லப்பட்டுள்ளன. மேலும் இரு புதினங்களில் சில பகுதிகள் வெளிப் பார்வையிலிருந்தும் சொல்லப்பட்டுள்ளன.

ஓம்சு கதைகள் துப்பறிவுப் புனைவுப் பாணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. பல துப்பறிவாளர் பாத்திரங்களில் ஓம்சின் தாக்கம் காணக் கிடைக்கிறது. பல முறை மறுபதிப்பு கண்ட இக்கதைகள் வெளியாகி ஒரு நூற்றாண்டுக்கு மேலாகியும் வாசகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. கோனன் டோயில் எழுதிய நூல்களைத் தவிர பல எழுத்தாளர்களும் ஓம்சு கதைகளை எழுதியுள்ளனர். ஓம்சின் கதைகளைக் களமாகக் கொண்டு பல நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் மட்டுமல்லாது தடயவியல், குற்றவியல் துறைகளிலும் ஓம்சு கதைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒம்சின் ரசிகர்களின் எண்ணிக்கை பல தலைமுறைகளைக் கடந்தும் குறையாது உள்ளது. பல மொழிகளில் மொழிபெயர்ப்புகள், ரசிகர் சங்கங்கள், அருங்காட்சியகங்கள் என இன்றளவும் ஓம்சின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது.

தூண்டுகாரணம்

டாயில் எடின்பர்க் வேந்திய மருத்துவமனையில் மருத்துவர் ஜோசப் பெல் என்பவரின் கீழ் எழுத்தராக வேலை பார்த்தார். பெல், சிறு சிறு விசயங்களை கவனிப்பதன் மூலம் நடந்தவற்றைக் கணிப்பதில் வல்லவர். மருத்துவர் பெல்லை அடிப்படையாகக் கொண்டே ஓம்சை உருவாக்கியதாக டாயில் கூறியுள்ளார். எடின்பர்க்கின் வேந்திய அறுவை சிகிச்சைக் கல்லூரியில் மருத்துவத் தடயவியல் மற்றும் பொது சுகாதார விரிவுரையாளராகப் பணியாற்றிய சர் என்றி லிட்டில்ஜான் என்பவரும் ஓம்சு பாத்திரத்துக்கு அடிப்படையென கருதப்படுகிறார். லிட்டில்ஜான் காவல்துறை மருத்துவராகவும் எடின்பர்க் சுகதாரத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியது, டாயில் மருத்துவப் புலனாய்வு மற்றும் குற்றவியல் களங்களை ஒன்றிணைத்து ஓம்சினைப் படைப்பதற்கு தூண்டுகோலாக அமைந்தது.

வாழ்க்கைக் குறிப்பு

கதைகளுக்கு முன்னால்

செர்லக் ஓம்சு 
முதல் தோற்றம், 1887

கதை நடக்கும் காலத்திற்கு முந்தைய ஓம்சின் வாழ்க்கை பற்றி டாயில் வெளிப்படையாக எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் கதைகளில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் துணுக்குகளைக் கொண்டு மருத்துவர் வாட்சனை சந்திக்கும் முன்னர் ஓம்சின் வாழ்வில் நடந்தவற்றை ஓரளவு கணிக்க முடிகிறது. 1914ம் ஆண்டு நடைபெறும் ஹிஸ் லாஸ்ட் போ என்ற சிறுகதையில் ஓம்சுக்கு வயது 60 என குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் அவரது பிறப்பாண்டு 1854 என்பதை அறியலாம். அவர் பிறந்த நாள் ஜனவரி 6ம் தேதி என பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனினும் அவரது பிறப்பாண்டு குறித்து வேறொரு கருத்தும் நிலவுகிறது. எழுத்தாளர் லாரி ஆர். கிங், அட்வென்ச்சர் ஆஃப் குளோரியா ஸ்காட் சிறுகதை மற்றும் எ ஸ்டடி இன் ஸ்கார்லட் புதினம் ஆகிய இரு படைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களில் இருந்து ஓம்சின் பிறப்பாண்டு 1861 என கணித்துள்ளார்.

ஓம்சு கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் படித்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. தனது துப்பறிவாளர் வாழ்வில் சக கல்லூரி மாணவர்களே தனக்கு முதல் வாடிக்கையாளர்களாக இருந்ததாக ஓம்சு குறிப்பிடுகிறார். தனது வகுப்பு நண்பர் ஒருவரது தந்தையைச் சந்தித்ததே தான் துப்பறிவாளராக மாறக் காரணமாக இருந்தது எனவும் ஓம்சு கூறுகிறார். பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு ஓம்சு ஆலோசனை வழங்கும் துப்பறிவாளராகப் பணியாற்றினார். பின் நிதி நெருக்கடி காரணமாக அறை வாடகையைப் பகிர்ந்து கொள்ள மருத்துவர் வாட்சனை தனது அறை நண்பராக ஏற்றுக் கொண்டார். வாட்சன் ஓம்சை சந்திப்பதிலிருந்து கதைக்காலம் ஆரம்பமாகிறது.

1881ம் ஆண்டு முதல் ஓம்சு லண்டனில் 221 பி, பேக்கர் தெரு என்ற முகவரியில் வசித்து வந்தார். 17 படிகளைத் தாண்டி இவ்வீட்டினை அடைய வேண்டும். தெருவின் ஒரு முனையில் இவ்வீடு இருந்ததாக டாயிலின் பழைய கையெழுத்துப் படி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாட்சன் ஓம்சோடு இணையும் வரை, ஓம்சு தனித்தே துப்பறிந்து வந்தார். அவ்வப்போது தனது துணைக்கு “பேக்கர் தெரு பொடியன்கள்” (Baker Street Irregulars) என்றழைக்கப்பட்ட சிறுவர் குழு ஒன்றை அவர் பயன்படுத்திக் கொள்வார். லண்டன் நகரின் அடித்தள சமூகத்தைச் சேர்ந்த அச்சிறுவர்கள் தகவல்களை சேகரித்து ஓம்சுக்கு துப்பு சொல்வார்கள். சைன் ஆஃப் ஃபோர், எ ஸ்டடி இன் ஸ்கார்லட், அட்வென்ச்சர் ஆஃப் தி குரூக்கட் மேன் ஆகிய மூன்று கதைகளில் இப்பொடியன்கள் தோன்றியுள்ளனர்.

ஓம்சின் குடும்பத்தைப் பற்றி குறைவான தகவல்களே அறியப்படுகின்றன. கதைகளில் அவரது பெற்றோர் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அவர்கள் ஊர்ப்புறத்தில் நாட்டாமைகளாக இருந்தனர் என்று ஓம்சு ஓரிடத்தில் சொல்லியுள்ளார். மேலும் பிரெஞ்சு ஓவியர் வெர்னே தனக்கு தாத்தா முறை வேண்டுமென்றும் சொல்லியுள்ளார். ஓம்சின் அண்ணன் மைக்கராஃப்ட் அவரை விட ஏழு வயது மூத்தவர். அவர் ஓர் அரசுப்பணியாளர். மூன்று கதைகளில் தோன்றும் அவர் மற்றுமொரு கதையிலும் குறிப்பிடப்படுகிறார். ஓம்சைக் காட்டிலும் அதிக துப்பறியும் திறமை கொண்ட அவர் அனைத்து கொள்கை விசயங்களையும் நினைவு கொள்ளும் ஒரு மனித நினைவு வங்கியாகப் பணியாற்றி வந்தார். ஓம்சைக் காட்டிலும் உய்த்துணர்வுத் திறமை அதிகமாக இருந்தாலும், ஓம்சிடம் உள்ள வேகமும் துடிப்பும் அவரிடம் கிடையாது. அவர் தனது ஓய்வு நேரத்தை, பிறருடன் ஒட்டிப் பழகாதவர்களுக்கான சங்கம் என்று வர்ணிக்கப்பட்ட ”டயோஜீன்சு சங்க”த்தில் கழிப்பது வழக்கம்.

மருத்துவர் வாட்சனுடன்

செர்லக் ஓம்சு 
வாட்சனும் ஓம்சும்

ஓம்சு துப்பறிவாளராக இருந்த காலத்தில் பெரும்பகுதியினைத் தனது நண்பர் மருத்துவர் வாட்சனுடன் கழித்துள்ளார். 1887 இல் வாடசனுக்குத் திருமணமாகும் வரையும், அவரது மனைவியின் மரணத்துக்குப் பின்னும் இருவரும் அறை நண்பர்களாக இருந்தனர். அவர்களது அறைகளை, அவர்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் திருமதி. அட்சன் பராமரித்து வந்தார். ஓம்சு கதைகளில் வாட்சனின் பணி இருமுகப்பட்டது. ஒன்று ஓம்சு துப்பறியும் போது அவரது வலக்கரமாக செயல்படுவது; நோட்டம் பார்த்தல், எதிரிகளைத் திசைதிருப்புதல், செய்தி கொண்டு செல்லுதல் ஆகிய முறைகளில் அவர் ஓம்சுக்கு உதவுவார். இரண்டாவது பணி, ஓம்சின் சாகசங்களைப் பதிவு செய்வது. ஓம்சு கதைகள் பெரும்பாலும் வாட்சனின் விவரிப்பாகவே அமைந்துள்ளன. ஆனால் வாட்சனின் விவரிக்கும் பாணி ஓம்சுக்குப் பிடிக்காது. துல்லியமாகவும் அறிவியல் பூர்வமாகவும் குற்றங்களை அணுகாமல், வெகுஜன பாணியில் படிப்பவரது பரபரப்பைத் தூண்டும் விதத்தில் வாட்சன் எழுதுவதாக ஓம்சு குறை சொல்வதுண்டு. ஓம்சு உணர்வுகளுக்கு இடம் தராமல் வாழ்க்கையை அறிவுப்பூர்வமாக அணுகுபவராக இருந்தாலும், வாட்சனின் மீது அவருக்குத் தனிப்பிரியம் உண்டு. தி அட்வென்ச்சர் ஆஃப் தி திரீ கர்ரிடெப்சு சிறுகதையில் வில்லனால் வாட்சன் சுடப்பட்டபோது ஓம்சு பதற்றப்பட்டது வாட்சன் மீது அவருக்கிருந்த நட்புணர்வை வெளிக்காட்டியது. ஓம்சு துப்பறிவாளராகப் பணியாற்றிய 23 வருடங்களில் 17 வருடங்கள் வாட்சன் அவருக்குத் துணையாக இருந்தார்.

ஓய்வு காலம்

ஹிஸ் லாஸ்ட் போ சிறுகதையில் ஓம்சு 1903-04ம் ஆண்டு துப்பறிவுத் தொழிலிருந்து ஓய்வு பெற்று சஸ்செக்சு டவுன்சில் ஒரு தேனீ வளர்க்கும் தோட்டத்துக்கு சென்றுவிட்டதாகச் சொல்லபட்டுள்ளது. ஓய்வு நேரத்தை தேனீ வளர்ப்பில் செலவிடும் ஓம்சு அத்தொழில் குறித்து ஆய்வு நூலொன்றையும் எழுதியுள்ளார். முதலாம் உலகப் போரில் அரசுக்கு உதவுவதற்காக மீண்டுமொரு முறை துப்பறியும் தொழிலில் அவர் ஈடுபடுவதாக அச்சிறுகதை அமைந்துள்ளது. இதைத் தவிர ஓம்சு தனது ஓய்வுக் காலத்தில் துப்பறியும் தொழிலில் ஈடுபட்டது ஒரே ஒரு முறை தான் (தி அட்வென்ச்சர் ஆஃப் தி லயன்சு மேன்).

பழக்கவழக்கங்களும் பண்புகளும்

செர்லக் ஓம்சு 

வாட்சன் தந்துள்ள குறிப்புகளில் ஓம்சின் வாழ்க்கை முறையினை “பொகேமியன்” (Bohemian) என்று வர்ணிக்கிறார். இச்சொல்லுக்கு மரபுகளை மதிக்காதவர் / மீறுபவர் என்று பொருள். ஓம்சுக்கு சமகால வழமைகளைப் பற்றியும் பண்பாட்டினைப் பற்றியும் துளி கூட அக்கறை கிடையாது. தி மஸ்கிரேவ் ரிச்சுவல் சிறுகதையில் வாட்சன் ஓம்சை பின்வருமாறு வர்ணிக்கிறார்.

ஆனால் இவ்வளவு குழப்பங்களுக்கிடையிலும் ஓம்சின் அறை ஒரு தகவல் களஞ்சியமாகவே இருந்தது. தொடர் நெடுகப் பல முறை ஓம்சு தனது ஆவணக்குவியலுக்குள் துழாவி, தான் தேடிக் கொண்டிருந்த ஆவணத்தை எடுத்துள்ளார்.

ஓம்சின் உணவுப் பழக்கங்களும் புதிரானவை. தீவிர அறிவு சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, தன்னைத் தானே பட்டினி போட்டுக் கொள்ளும் வழக்கம் அவருக்கு உண்டு. தீவிரமாக யோசிக்கும் தருணங்களில் இப்படி உணவில்லாமல் இருப்பது அவரது வழக்கம். ஓம்சு சுருட்டு, புகையிலை, சிகரெட் போன்றவற்றைப் புகைப்பதை வாட்சன் ஒரு குறையாகச் சொல்வதில்லை. மேலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவுவதற்காக ஓம்சு அவ்வப்போது சட்டத்தை மீறுவதையும் வாட்சன் கண்டிப்பதில்லை. அறத்தின் அடிப்படையில் அவற்றை நியாயப்படுத்துகிறார். ஆனால் வாட்சனின் பொறுமைக்கும் எல்லையொன்று உண்டு. ஓம்சு அதிக அளவில் புகையிலையினைப் பயன்படுத்தி அறையில் புகை மூட்டம் மண்டினாலோ, தன் துப்பறியும் தொழிலில் அப்பாவிகளை ஏமாற்றினாலோ வாட்சன் அவரைக் கண்டிப்பதுண்டு. அரசுக்கு பல முறை உதவி செய்யும் ஓம்சு ஒரு நாட்டுப் பற்றாளனாக சித்தரிக்கப்படுகிறார். அரசுக்காக ஒற்று முறியடிப்பு நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டதுண்டு. அவர் எப்போதும் புகழை விரும்புவதில்லை. பல முறை தான் முடிச்சவிழ்த்த குற்றங்களை காவல் துறையினர் கண்டுபிடித்ததாக அறிவிக்கச் சொல்லி விடுவார். அக்குற்றங்களில் ஓம்சின் ஈடுபாடு வெளியில் தெரிந்த பின்னரே அவை பற்றிய வாட்சனின் குறிப்புகள் பதிப்புக்குச் செல்லும். ஆனால் ஓம்சுக்குத் தன்னடக்கம் கிடையாது. ஓம்சு ஒரு தனிமை விரும்பி; எளிதில் யாருடனும் நட்பு கொள்ளமாட்டார். அவர் கல்லூரியில் கழித்த ஆண்டுகளில் அவருக்கு ஒரே ஒரு புது நண்பர் தான் கிடைத்தார்.

ஓம்சு பாத்திரத்தின் உளவியலும் மனநிலையும் ஆண்டாண்டுகளாக ஆராயப்பட்டுள்ளன. ஓம்சுக்கு என்ன விதமான மனநோய் இருக்கலாம் என்பது சூடாக விவாதிக்கப்பட்டுள்ளது. வாசகர்களும், உளவியல் ஆராய்ச்சியாளர்களும் அவருக்கு வெறி ஏக்க உளநோய் (manic depression) அல்லது ஆஸ்பெர்கர் நோய்க்கூட்டறிகுறி போன்றவற்றுள் ஏதேனும் ஒன்று இருக்கலாம் என ஊகித்துள்ளனர்.

போதைப் பழக்கமும் நிதி நிலையும்

ஓம்சு அவ்வப்போது போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதுண்டு. கோகோயின் பயன்படுத்தினால் மூளையின் சிந்தனைத்திறன் தூண்டப்படும் என்று நம்பியதால், அதனை ஊசி மூலம் உட்கொள்ளும் பழக்கம் கொண்டிருந்தார். எப்போதாவது மார்ஃபின் உட்கொள்ளுவதுமுண்டு. இப்பொருட்கள் அனைத்தும் 19ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் சட்டப்படி தடைசெய்யப்பட்டவை அல்ல. வாட்சனும் ஓம்சும் தொடர் புகையிலை பயன்பாட்டாளர்கள். சுருட்டு, சிகரெட், புகையிலைக் குழாய் ஆகியவற்றைப் பயன்படுத்தி புகையிலை உட்கொள்ளுபவர்கள். ஆனால் ஓம்சின் கோக்கைன் பழக்கம் வாட்சனுக்குப் பிடிக்காது. தன் நண்பரிடம் உள்ள ஒரே கெட்ட பழக்கம் கோக்கெய்ன் தான் என்று அவர் குறிப்பிடுகிறார். அதனால் ஓம்சின் அறிவு குன்றிவிடுமோ என்றும் அஞ்சுகிறார். பிற்காலக் கதைகளில் ஓம்சைப் போதைக் பழக்கத்திலிருந்து மீட்டு விட்டதாகவும் வாட்சன் தெரிவிக்கிறார். எனினும் அப்பழக்கம் முழுமையாக ஒழிக்கப்படவில்லை, ஓம்சினுள் உறங்கிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

ஓம்சு தனது சேவைகளுக்காக வழக்கமாக எவ்வளவு ஊதியம் வாங்குவார் என்று கதைகளில் குறிப்பிடப்படவில்லை. கதைத்தொடரின் ஆரம்பத்தில், வாட்சனை அறை நண்பனாக சேர்த்துக் கொள்ளுவது வாடகையைப் பகிர்ந்து கொள்வதற்காக என்று குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் ஆரம்பத்தில் அவர் வருமானம் குறைவாக இருந்தது எனக் கொள்ளலாம். ஆனால் காலப்போக்கில் அவரது தொழிலில் நல்ல வருமானம் கிட்டலாயிற்று. தி அட்வென்ச்சர் ஆஃப் தி டையிங் டிடெக்டிவ் கதையில், ஓம்சு வாடகை கொடுக்கும் காசுக்கு அந்த வீட்டை விலைக்கே வாங்கி விடலாம் என்று வாட்சன் தெரிவிப்பதன் மூலம் அவர் வருமானம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. எ சுகேண்டல் இன் பொஃகேமியா கதையில் மிக அதிக பட்சமான தொகையான ஆயிரம் பவுண்டுகளை ஊதியமாகக் கேட்டுப் பெறுகிறார். தி பிராப்ளம் ஆஃப் தி தார் பிரிட்ஜ் கதையில், “நான் என் சம்பளத்தை மாற்றுவதில்லை. சம்பளமே வேண்டாம் என்று சொன்னாலொழிய ஒரே தொகை தான் வாங்குகிறேன்” என்று குறிப்பிடுகிறார். ஆனால் பணக்கார வாடிக்கையாளர்கள் அவருக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிகம் ஊதியம் வழங்கியதும் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பிய அரசுகள், அரச குடும்பத்தினருக்காகத் தான் புரிந்த சேவைகளுக்குக் கிட்டிய வெகுமதியைக் கொண்டு தான் எளிதாக ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார் ஓம்சு.

பெண்களும் ஓம்சும்

பெண்கள் ஓம்சை கவருவதில்லை. இது குறித்து டாயில் “ஓம்சு பாபேஜின் கணினி போன்றவர்; அவர் காதல் கொள்வதெல்லாம் சாத்தியமில்லை” என்று கூறியுள்ளார். பெண்களின் அழகையும் துடிப்பையும் அவர் ரசித்தாலும் அவருக்கு பெண்களென்றால் ஒருவித வெறுப்புண்டு என்று கூறுகிறார் வாட்சன். பெண்களைப் பற்றி தன் எண்ணங்களை வாடசனிடம் கூறும் போது.. “அவர்களின் மனங்கள் புதிரானவை, புதைகுழி போன்றவை, அவற்றை நம்பி நான் எப்படி உறவுகளை வளர்த்துக் கொள்ள முடியும்” என்றும் ”பெண்களில் எவரையும் நம்ப முடியாது, அவர்களில் சிறந்தவர்கள் கூட நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் அல்லர்” என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் பெண்கள் பற்றிய ஓம்சின் மனநிலை தெரிய வருகிறது. ஆனால் தனக்கு வாடிக்கையாளர்களாக வரும் பெண்களை ஓம்சு மதிப்புடன் நடத்தி அவர்களுக்கு உதவுகிறார். தன் வீட்டு உரிமையாளர் திருமதி அட்சனிடம் கனிவாக இருக்கிறார். எ ஸ்காண்டல் இன் பொகேமியா கதையில் ஐரீன் ஆட்லர் என்ற பெண் ஓம்சினை தன் மதியூகத்தால் வென்று அவரது பெருமதிப்பைப் பெறுகிறார். தன்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு சில பெண்களுள் ஐரீனும் ஒருத்தி என ஓம்சு குறிப்பிட்டுள்ளார்.

துப்பறியும் முறைகள்

ஓம்சின் உய்த்துணர்தல்

செர்லக் ஓம்சு 
ரெய்க்கான்பாக் அருவியில் பேராசிரியர் மொரியார்ட்டியுடன் மோதும் ஓம்சு

குற்றங்களைக் கண்டுபிடிக்க ஓம்சு பெரும்பாலும் உய்த்துணர்தல் முறையைக் கடைபிடிக்கிறார்.

என்று தன் துப்பறியும் முறையைப் பற்றி ஓம்சு குறிப்பிடுகிறார். நிகழ்வுகளையும் சூழ்நிலையையும் கூர்ந்து ஆழமாக கவனிக்கும் ஒம்சு தன் பரந்த அறிவினைப் பயன்படுத்தி அவற்றிலிருந்து தடயங்களை அறிகிறார். பின் தருக்கவியலைப் பயன்படுத்தி அவற்றிலிருந்து உண்மையைக் கண்டறிகிறார். அறிவியல், புவியியல், சமூகவியல் குற்றவியல் துறைகளில் அவரது அறிவு இதற்கு துணை போகிறது. சுருட்டுகளின் கரியிலிருந்து அவற்றின் வகையைக் கண்டுபிடித்தல், காலணிகளில் ஒட்டியிருக்கும் சேற்றிலிருந்து அவற்றை அணிந்தவர் இலண்டனின் எந்த இடத்தில் இருந்து வந்துள்ளார் என்பதை கண்டுபிடித்தல் போன்றவை அவரது பரந்த அறிவிற்கு சில சான்றுகள். ஒருவரது உடைகள், தொப்பி, ஊன்றுகோல், புகையிலைக் குழாய் போன்றவற்றைக் கொண்டே அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவரது சமூக பின்புலம் என்ன, அவரது தொழில் என்ன என்பவற்றை ஓம்சால் ஊகிக்க இயலும்.

தன் முறையைப் பற்றி அவர் அடிக்கடி வாட்சனிடம் பின்வருமாறு சொல்வதுண்டு

ஆனால் ஓம்சு எல்லாம் வல்லவராக டாயிலால் சித்தரிக்கப்படவில்லை. ஓம்சின் உய்த்துணர்தல் தோற்கும் கதைகளும் உள்ளன. இப்படி ஓம்சு துப்பறிந்து கணித்தது பொய்த்துப் போகும் தி அட்வென்ச்சர் ஆஃப் தி யெல்லோ பேஸ் என்ற கதையின் இறுதியில், தான் அனைத்துமறிந்தவன் அல்ல என்பதை ஓம்சு தன்னடக்கத்துடன் ஒப்புக் கொள்கிறார். தனக்கு தன் திறமைகளின் மீது அதீத நம்பிக்கை ஏற்படும் போதெல்லாம் அந்த சம்பவத்தைத் தனக்கு நினைவு படுத்தும்படி வாட்சனைக் கேட்டுக் கொள்கிறார்.

மாறுவேடங்கள், ஆயுதங்கள் மற்றும் தற்காப்புக் கலைகள்

செர்லக் ஓம்சு 
தி டையிங் டிடெக்டிவ் - மரணப்படுக்கையில் இருப்பது போல நடிக்கும் ஓம்சு

ஓம்சு ஒரு மாறுவேட வல்லுனர்; நடிப்பிலும் திறமைசாலி. தன் நடிப்பாற்றலாலும், ஒப்பனைத் திறனாலும் நெருங்கிய நண்பர்கள் கூட அடையாளம் காண முடியாதவாறு தன் தோற்றத்தை மாற்ற வல்லவர். இத்திறனை தனது துப்பறியும் தொழிலில் பல முறை பயன்படுத்தியுள்ளார். ஒரு முறை தான் மரணப் படுக்கையில் இருப்பது போல நடித்து வாட்சனையும் கதையின் வில்லனையும் ஏமாற்றியுள்ளார்.

ஓம்சுக்கு தற்காப்புக் கலைகளிலும் நல்ல பயிற்சி உண்டு. வெறுங்கை குத்துச்சண்டையில் விழைஞராக சில காலம் அவர் பங்கேற்றதுண்டு. ஜப்பானிய மல்யுத்தக் கலையான பரித்சுவில் தான் பயிற்சி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல கதைகளில் வில்லன்களுடனும் குற்றவாளிகளுடனும் சண்டையிட்டு அவர்களை வீழ்த்தியுள்ளார். அவரது மிகப்பெரும் எதிரியான பேராசிரியர் மோரியார்ட்டியுடன் சுவிட்சர்லாந்தின் ரெய்க்கென்பாக் அருவியின் மேல் சண்டையிட்டு மொரியார்ட்டியை வீழ்த்தினார். மேலும் அவர் தனது கைத்தடியை சிலம்பமாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர். வாட்சண்டையிலும் அவர் திறமைசாலி என்று வாட்சன் குறிப்பிட்டுள்ளார். ஓம்சின் துப்பறியும் வாழ்க்கை ஆபத்து நிறைந்தது. அவரது எதிரிகள் பல முறை அவரைக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.

அறிவும் திறனும்

ஓம்சு கதைத்தொடரின் முதல் புதினமான எ ஸ்டடி இன் ஸ்கார்லெட் இல் அவரைப் பற்றிய பல குறிப்புகள் தரப்பட்டுள்ளன. 1881 ஆம் ஆண்டின் துவக்கத்தில், அவர் தனிப்பட்ட முறையில் வேதியியல் பயில்பவராகக் காட்டப்படுகிறார். இதைத் தவிர தனது துப்பறியும் திறனை வளர்த்துக் கொள்வதற்காக மேலும் பல துறைகளில் ஆய்வு செய்து வருகிறார். தனது தொழிலுக்கு நேரடியாகப் பயன்படாத எந்த விசயத்தையும் தான் கண்டு கொள்வதில்லை என வாட்சனிடம் கூறுகிறார். பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று வாட்சன் அவரிடம் சொல்லும் போது, அது தனக்குப் புதிய விசயமென்றும், தொழிலுக்கு சம்பந்தமில்லாத ஒன்றாகையால் அதனை உடனடியாக மறக்க முயலப்போவதாகவும் சொல்லுகிறார். தனது மூளையில் தரவுகளை சேமிக்க ஒரு குறிப்பிட்ட கொள்ளளவு மட்டுமே இருப்பதாகவும், தனக்கு பயனற்ற விசயங்களை அங்கே சேர்த்து வைப்பது தன் திறனுக்கு ஊறு விளைவிக்கும் என்று கருதுகிறார். இக்கதையில் வாட்சன் அவரது அறிவைப் பற்றி எழுதிய சிறு குறிப்பு பின்வருமாறு:

      1. இலக்கிய அறிவு - பூச்சியம்
      2. மெய்யியல் அறிவு - பூச்சியம்
      3. வானியல் அறிவு - பூச்சியம்
      4. அரசியல் அறிவு - மிகக் குறைவு
      5. தாவரவியல் அறிவு - நச்சுப்பூண்டு, அபின் போன்ற நச்சுப் பொருட்கள் பற்றி நல்ல அறிவுள்ளது ஆனால் நடைமுறை தோட்டக்கலைப் பற்றி ஒன்றும் தெரியாது
      6. நிலவியல் அறிவு - நல்ல நடைமுறை அறிவு; பலவகை மண்களை ஒரே பார்வையில் அடையாளம் காண்கிறார்; லண்டனைச் சுற்றி நடந்து விட்டு வந்து தனது காற்சட்டையில் ஒட்டியுள்ள பல சேற்றுக் கறைகளைக் காட்டி நகரின் எப்பகுதியைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடித்துச் சொல்லுகிறார்.
      7. வேதியியல் அறிவு - அளப்பரியது
      8. உடற் கூற்றியல் அறிவு - கச்சிதமானது; ஆனால் முறைப்படி இல்லை
      9. பரபரப்பு இலக்கிய அறிவு - பரந்தது; இந்த நூற்றாண்டில் நடந்துள்ள கொடிய குற்றங்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் அத்துபடி
      10. வயலின் நன்றாக வாசிக்கிறார்
      11. கம்புச்சண்டை, குத்துச்சண்டை மற்றும் வாட்சண்டை வல்லுனர்
      12. பிரித்தானிய சட்டத்தைப் பற்றி நல்ல அனுபவ அறிவு உள்ளது.

ஆனால் பிற்காலக் கதைகளில் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டவைக்கு முரணான தகவல்கள் உள்ளன. பிற கதைகளில் ஓம்சின் அரசியல், இலக்கிய மற்றும் மொழித்திறன் வெளியாகின்றன. தேவையற்றதைப் படிப்பதில்லை என்ற கூற்றுக்கு முரணாக ஓம்சே ”அனைத்து வகை அறிவும் ஒரு துப்பறிவாளனுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் பயன்படக்கூடியவையே” என்று சொல்லுகிறார். கண்டதையும் படித்து சின்னச் சின்ன விசயங்களையும் நினைவில் வைத்திருப்பதாகவும் சொல்லுகிறார். மறைமொழியியல், கைரேகைகள், சுடுகலன் தடயவியல், உளவியல் என தனது பன்முக அறிவைக் கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கின்றார்.

தாக்கம்

தடயவியல்

செர்லக் ஓம்சு 
வாட்சனுக்கு விளக்கமளிக்கும் ஓம்சு

தற்காலத் தடயவியல் துறையின் வளர்ச்சிக்கு ஓம்சு கதைகள் பெரும் தூண்டுகோலாக இருந்துள்ளன. ஓம்சு பயன்படுத்தும் தடய முறைமைகள் பல பின்னாளில் தனி அறிவியல் துறைகளாக வளர்ச்சியடைந்துள்ளன. நுண் தடயவியல், கைரேகை ஆய்வு, துப்பாக்கி குண்டு எறியியல், கையெழுத்து ஆய்வு, குருதிப் படிவு ஆய்வு, நச்சியல் போன்றவை இவற்றுள் சில. குற்றம் நிகழ்விடத்தை பூதக்கண்ணாடி, நுண்ணோக்கிகள் கொண்டு கூர்மையாக ஆயும் ஓம்சின் முறைமை இன்று உலக காவல் துறையினரால் பின்பற்றப்படுகிறது. குற்றம் நிகழ்ந்த இடத்தை பிறர் நடமாடி பாழாக்கி விட்டனர் என்று ஓம்சு தன் கதைகளில் அடிக்கடி புலம்புவதுண்டு. இதன் முக்கியத்துவம் பின்னாளில் காவல் துறையினருக்குப் புலனானதால், குற்றம் நிகழ்ந்த இடத்தில் பலர் நடமாடாதபடி காப்பது காவல்துறை வழமையானது. தடயவியல் மற்றும் பகுப்பாய்வு வேதியலை வெகுசன இலக்கியத்தில் பயன்படுத்தியமைக்காக 2002ம் ஆண்டு வேந்திய வேதியியல் கழகம் ஓம்சுக்கு மதிப்புறு ஆய்வுறுப்பினர் ஏற்பை வழங்கி சிறப்பித்தது. இதுவரை இந்த சிறப்பு வழங்கப்பட்ட ஒரே கற்பனைக் கதைமாந்தர் ஓம்சு மட்டுமே.

துப்பறிவுப் புனைவு

துப்பறிவுப் புனைவு இலக்கியத்தில் ஓம்சின் தாக்கம் மிகப்பெரியது. துப்பறிவுப் புனைவின் முதல் துப்பறிவாளர் ஓம்சு கிடையாது. எட்கர் ஆலன் போவின் அகஸ்டே டூபின், எமீல் கபோரியோவின் மான்சியூர் லீகாக் போன்றவர்கள் ஓம்சை காலத்தால் முந்தைய துப்பறிவாளர் பாத்திரங்கள். இவர்களது தாக்கம் ஓம்சிடம் காணப்பட்டாலும், அவரே துப்பறிவாளர் பாத்திரத்துக்கு முன்னுதாரணமாக ஆகிவிட்டார். துப்பறியும் கதைகளில் தற்போது காணப்படும் பல வழமைகள் ஓம்சின் கதைகளில் இருந்தே தொடங்கின. (எ.கா.) துப்பறிவாளரின் விசுவாசமான ஆனால் அவரை விட அறிவு குறைவான நண்பன் பாத்திரத்துக்கு மருத்துவர் வாட்சன் தான் முன்னோடி. கானன் டாயிலின் வெற்றியைப் பின்பற்றி அகதா கிறிஸ்டி, டாரத்தி சாயெர்ஸ் போன்ற எழுத்தாளர்களும் பல வெற்றிகரமான துப்பறிவாளர் பாத்திரங்களை உருவாக்கினர்.

ஆய்வுக் கட்டுரைகளில் ஓம்சு

ஓம்சின் அறிவு, அவரது துப்பறியும் முறைகள் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் இதுவரை வெளியாகியுள்ளன. ஜான் ராட்ஃபர்ட் என்ற ஆய்வாளர் 1999ல் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் ஓம்சின் நுண்ணறிவு எண் 190 என மதிப்பிட்டுள்ளார். மேலும் சில கட்டுரைகள் தற்கால அறிவியல் வளர்ச்சியினைத் துணைகொண்டு, ஓம்சு பயன்படுத்திய முறைகளை ஆய்வு செய்கின்றன.

ரசிகர் வட்டம்

செர்லக் ஓம்சு 
எடின்பர்க் நகரில் ஓம்சு சிலை

ஓம்சின் ரசிகர் வட்டம் மிகப்பெரியது. டாயில் எழுதிய 56 சிறுகதைகளும், 4 புதினங்களும் “திருமுறை”கள் (canon) என ரசிகர்களால் கருதப்பட்டு, கூர்மையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பிரிட்டனின் ரொனால்ட் நாக்சு, நியூ யார்க்கின் கிரிஸ்டோஃபர் மார்லே ஆகியோர் ஆரம்பகால ஓம்சு திருமுறை ஆய்வாளர்களுள் சிலர். இவர்களுள் மார்லே முதல் ஓம்சு திருமுறை ஆய்வு சங்கமான ”பேக்கர் ஸ்ட்ரீட் இர்ரெகுலர்ஸ்” என்ற அமைப்பை 1934 ஆம் ஆண்டு நிறுவியவர். கதைகள் வெளிவந்து கொண்டிருந்த போதே ஓம்சுக்கு பெறும் ரசிகர் குழாமொன்று இருந்தது. 1893 இல் ஓம்சு கதைகளை எழுதி சலித்துப் போன டாயில், ஓம்சு தனது பெரும் எதிரி பேராசிரியர் மொரியார்ட்டியுடன் சண்டையிட்டு சுவிட்சர்லாந்தின் ரெய்க்கன்பாக் அருவியில் விழுந்து மாண்டதாக எழுதி ஓம்சின் வாழ்வை முடித்து விட்டார். அடுத்த எட்டாண்டுகளுக்கு ஓம்சு கதைகள் வெளியாகவில்லை. இதனை ஏற்றுக் கொள்ளாத ஓம்சு ரசிகர்கள், டாயிலுக்கு விடாது கடிதங்கள் எழுதியும், செய்தித்தாள்கள்களில் வேண்டுகோள் விடுத்தும் ஓம்சை மீண்டும் உயிர்ப்பிக்கும் படி மன்றாடினர். இதனால் மீண்டும் 1901ல் ஓம்சு கதைகளை மீண்டும் எழுதத் தொடங்கினார். ஓம்சு அருவியில் விழுந்து இறக்கவில்லையென்றும், மாறாக தான் இறந்தது போலப் பிறரை நம்பச் செய்து மூன்றாண்டுகள் ஆசியாவில் சுற்றுப் பயணம் செய்தார் என்றும் விளக்கம் அளித்தார்.

நினைவுச் சின்னங்கள்

டாயில் ஓம்சு கதைகள் எழுதுவதை நிறுத்திய பின்னரும் ஓம்சின் ரசிகர் எண்ணிக்கை குறையவில்லை. வாசகர் மத்தியில் ஓம்சு கதைகளுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே போனது. 1934ல் லண்டனில் ஓம்சு சங்கமும் நியூயார்க்கில் பேக்கர் ஸ்ட்ரீட் இர்ரெகுலர்ஸ் அமைப்பும் உருவாக்கப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர பிற நாடுகளிலும் ஓம்சு ரசிகர் சங்க அமைப்புகள் தோன்றியுள்ளன. 1951ல் நடைபெற்ற பிரிட்டன் திருவிழாவில் ஓம்சின் வரவேற்பறை போன்று ஒரு காட்சியரங்கு உருவாக்கப்பட்டு ஓம்சு தொடர்பான பொருட்களும் ஆவணங்களும் காட்சிப் படுத்தப்பட்டன. திருவிழா முடிந்த பின்னர் பிற இடங்களுக்கு நகர்த்தப்பட்ட இந்த காட்சியகம் இன்றுவரை பொது மக்கள் பார்வைக்காக திறந்துள்ளது. 1990ம் ஆண்டு லண்டன் நகரின் பேக்கர் தெருவில் ஒம்சு அருங்காட்சியகம் ஒன்று திறக்கப்பட்டது. போர்ட்ஸ்மவுத் நகர அருங்காட்சியகத்திலும் டாயிலின் பல ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர ஓம்சுக்கு உலகின் பல நகரங்களில் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இலக்கியத் தடம்

ஊக இலக்கியங்கள்

டாயில் எழுதிய “திருமுறை”கள் தவிர வேறு பல எழுத்தாளர்களும் ஓம்சு கதைகளை எழுதியுள்ளனர். டாயிலும் தனது பிற படைப்புகள் சிலவற்றில் பெயர் குறிப்பிடாமலும் அங்கதமாகவும் ஓம்சு-வாட்சன் கதைகளைப் பகடி செய்துள்ளார். ஆங்கிலத்தில் மட்டுமல்லாது பிரெஞ்சு, இடாய்ச்சு போன்ற மொழிகளிலும் ஓம்சு கதைகள் விரைவில் தோன்றத் தொடங்கின. ஓம்சு கதைகளின் பல கூறுகள் இப்படி பிற எழுத்தாளர்கள் ஓம்சைக் கொண்டு சொந்தமாகக் கதை எழுதுவதற்குச் சாதகமாக அமைந்தன. குறிப்பாக தான் இறந்து விட்டதாக பிறரை நம்பவைத்து மூன்றாண்டுகள் இங்கிலாந்தை விட்டு வெளியேறி ஓம்சு ஆசியாவில் பயணம் செய்ததாக டாயில் கூறிய விளக்கம், பிற எழுத்தாளர்களால் நன்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. ஓம்சின் வாழ்க்கைக் காலக்கோட்டில் ”பெரும் இடைவெளி” (the great hiatus) என்றறியப்படும் இம்மூன்று ஆண்டுகளில் (1891–1894) அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்து பல படைப்புகள் வெளியாகியுள்ளன. இது தவிர, ஓம்சின் இளமைக் காலம், முதுமைக் காலம், ஓம்சு கதைகளின் பிற பாத்திரங்கள் (ஐரீன் ஆட்லர், மைக்கிராஃப்ட் ஓம்சு, மருத்துவர் வாட்சன் போன்றோர்), ஆகியவற்றைக் களமாகக் கொண்டும் பல படைப்புகள் வெளியாகியுள்ளன.

நாடகங்கள் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்

செர்லக் ஓம்சு 
1900 - முதல் ஓம்சு நாடகத் தோற்றம்

ஓம்சு கதைகளின் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கணக்கான நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வெளியாகியுள்ளன. ஓம்சு இன்றுவரை மக்களிடையே புகழ் பெற்றிருக்க இதுவும் ஒரு காரணம். ஓம்சு தான் உலகில் மிக அதிகமான முறை நடிகர்களால் சித்தரிக்கப்பட்ட திரைப்படக் கதாப்பாத்திரம் என்று கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் கூறுகின்றது. இதுவரை 75 நடிகர்கள் 211க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஓம்சாக நடித்துள்ளனர். 1900ம் ஆண்டே ஓம்சு தோன்றிய முதல் திரைப்படம் வெளியாகிவிட்டது. 1899ல் பல ஓம்சு கதைகளை ஒன்றிணைத்து வில்லியம் ஜில்லெட் ஒரு நாடகத்தை எழுதினார். புகழ்பெற்ற அந்நாடகம் 1916ல் திரைப்படமாகவும் வெளியானது. 1939–1946 காலகட்டத்தில் பேசில் ராத்போன் ஓம்சாக நடித்த பதினான்கு திரைப்படங்கள் வெளியாகின. ஓம்சு திரைப்படங்களில் அதிக அளவில் திரையிடப்பட்டவை இவையே. இதற்குப் பின் பலமுறை ஓம்சு கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டிருந்தாலும் 1984–94 காலகட்டத்தில் ஜெரெமி பிரெட் ஓம்சாக நடித்த திரைப்படங்களே அவற்றுள் சிறந்தனவாகக் கருதப்படுகின்றன. ஓம்சு வேடமிட்டவர்களுள் பிரெட்டே மிகப் பொருத்தமானவர் என்றும் கருதப்படுகிறார். அமெரிக்கா, பிரிட்டன் தவிர பிற நாடுகளிலும் ஓம்சு கதைகள் திரையாக்கம் செய்யப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக 1979–86 காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் அரசு தொலைக்காட்சியில் வெளியான பதினோரு படங்களைக் கொள்ளலாம். 21ம் நூற்றாண்டிலும் ஓம்சு தோன்றும் திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் வெளியாகி வருகின்றன. 2009ல் வெளியான ஹாலிவுட் திரைப்படமும் 2010ல் வெளியான பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.,

ஓம்சு திருமுறைப் பட்டியல்

டாயில் எழுதிய நான்கு புதினங்களும் 56 சிறுகதைகளும் ஓம்சு இரசிகர்களால் “திருமுறை”களாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் 56 சிறுகதைகள் பிற்காலத்தில் 5 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    புதினங்கள்
  • எ ஸ்டடி இன் ஸ்கார்லெட் (A Study in Scarlet, 1887)
  • தி சைன் ஆஃப் ஃபோர் (The Sign of the Four, 1890)
  • தி ஹவுண்ட் ஆஃப் பாஸ்கர்வில்லீஸ் (The Hound of the Baskervilles, 1901–1902)
  • தி வேலி ஆஃப் பியர் (The Valley of Fear, 1914–1915)
    சிறுகதைத் தொகுப்புகள்
  • தி அட்வென்ச்சர் ஆஃப் ஷெர்லக் ஹோம்ஸ் (The Adventures of Sherlock Holmes, 1891–1892)
  • தி மெமயர்ஸ் ஆஃப் ஷெர்லக் ஹோம்ஸ் (The Memoirs of Sherlock Holmes, 1892–1893)
  • தி ரிட்டர்ன் ஆஃப் ஷெர்லக் ஹோம்ஸ் (The Return of Sherlock Holmes, 1903–1904)
  • தி ரெமினசன்ஸ் ஆஃப் ஷெர்லக் ஹோம்ஸ் (His Last Bow, 1908–1913 மற்றும் 1917)
  • தி கேஸ்புக் ஆஃப் ஷெர்லக் ஹோம்ஸ் (The Case-Book of Sherlock Holmes, 1921–1927)

குறிப்புகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Tags:

செர்லக் ஓம்சு தூண்டுகாரணம்செர்லக் ஓம்சு வாழ்க்கைக் குறிப்புசெர்லக் ஓம்சு பழக்கவழக்கங்களும் பண்புகளும்செர்லக் ஓம்சு துப்பறியும் முறைகள்செர்லக் ஓம்சு தாக்கம்செர்லக் ஓம்சு இலக்கியத் தடம்செர்லக் ஓம்சு குறிப்புகள்செர்லக் ஓம்சு மேலும் படிக்கசெர்லக் ஓம்சு வெளி இணைப்புகள்செர்லக் ஓம்சுஆர்தர் கொனன் டொயில்இலண்டன்ஸ்கொட்லாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாரிசுபதுருப் போர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சிலப்பதிகாரம்இமயமலைநபிபெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்அகநானூறுவெளிச் சோதனை முறை கருக்கட்டல்கோயம்புத்தூர்பெயர்ச்சொல்யூதர்களின் வரலாறுபாரிசீவக சிந்தாமணிராதிகா சரத்குமார்மதராசபட்டினம் (திரைப்படம்)தமிழர் நிலத்திணைகள்இந்திய தேசியக் கொடிஉப்புச் சத்தியாகிரகம்சேவல் சண்டைமாத்திரை (தமிழ் இலக்கணம்)யாதவர்நீர்முக்குலத்தோர்ரக்அத்பிளிப்கார்ட்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்கொல்லி மலைதொகைச்சொல்நான் சிரித்தால்இரைப்பை அழற்சிசிவன்நாளிதழ்தற்கொலை முறைகள்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)யாழ்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கணிதம்ஜிமெயில்மனித மூளைகீழடி அகழாய்வு மையம்திருக்கோயிலூர்அம்லோடிபின்அயோத்தி தாசர்கிருட்டிணன்முனியர் சவுத்ரிவிந்துஎல். இராஜாபங்குச்சந்தைபுறாபவுனு பவுனுதான்கிராம ஊராட்சிநவரத்தினங்கள்நரேந்திர மோதிஆற்றுப்படைஅன்புஜீனடின் ஜிதேன்செவ்வாய் (கோள்)என்டர் த டிராகன்குதுப் நினைவுச்சின்னங்கள்தமிழர் பண்பாடுதமிழர் கலைகள்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிஅமீதா ஒசைன்காதலும் கடந்து போகும்பங்குனி உத்தரம்கரிகால் சோழன்புதினம் (இலக்கியம்)அமேசான் பிரைம் வீடியோம. கோ. இராமச்சந்திரன்தமிழரசன்திருச்சிராப்பள்ளிதமிழ்நாடுகுமரகுருபரர்ஜெ. ஜெயலலிதாமேற்கு வங்காளம்காதலன் (திரைப்படம்)🡆 More