கீழடி அகழாய்வு மையம்

கீழடி தொல்லியல் களம் (Keezhadi excavation site) என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு தொடங்கப்பட்டு, பின்னர் தமிழ் நாடு தொல்லியல் துறையால் செயற்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும்.

இந்த அகழாய்வு மையம் தமிழ்நாட்டில் மதுரைக்குத் தென்கிழக்கில் 12 கி.மீ தொலைவில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், கீழடி ஊராட்சியில் உள்ள கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தைத் திடல் மேட்டுப்பகுதியில் உள்ளது.

கீழடி அகழாய்வுக் களம்
கீழடி அகழாய்வு மையம்
கீழடி அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட கட்டிடத் தொகுதிகள்
கீழடி அகழாய்வு மையம் is located in தமிழ் நாடு
கீழடி அகழாய்வு மையம்
Shown within India Tamil Nadu#India
கீழடி அகழாய்வு மையம் is located in இந்தியா
கீழடி அகழாய்வு மையம்
கீழடி அகழாய்வு மையம் (இந்தியா)
மாற்றுப் பெயர்வைகை சமவெளி நாகரிகம்
இருப்பிடம்கீழடி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பகுதிதிருப்புவனம்
ஆயத்தொலைகள்9°51′47″N 78°10′56″E / 9.8630727°N 78.1820931°E / 9.8630727; 78.1820931
வகைகுடியிருப்புப் பகுதிகள்
பரப்பளவு32.37 ha (80.0 ஏக்கர்கள்)
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 600– கிமு 500
கலாச்சாரம்சங்க காலம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்2015-தற்போது வரை
அகழாய்வாளர்கி. அமர்நாத் ராமகிருஷ்ணா
மேலாண்மைஇந்தியத் தொல்லியல் ஆய்வகம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
பொது அனுமதிYes

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழாய்வு இதுவேயாகும். இது வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை வெளிக்கொணர்கிறது. இத்தொல்லியல் களம் சுமார் கிமு 6 ஆம் நூற்றாண்டிற்கும், கிமு 5 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குரியது எனக்கணித்துள்ளனர். இந்த அகழ்வாய்வில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்புள்ளது.

அமைவிடம்

மதுரையிலிருந்து இராமநாதபுரத்தின்அழகன்குளம் துறைமுகத்துக்குச் செல்லும் பண்டைய வணிகப் பாதையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற ஊரின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் உள்ள பள்ளிச்சந்தைத் திடல் என்ற பெயரிலான மண்மேட்டில் இவ்வகழாய்வு தொடங்கப்பட்டது. இவ்விடத்தைச் சுற்றி நிலத்தை உழும்போது பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவந்த நிலையில், தரைமட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் அவ்வளவாக பாதிப்புக்குள்ளாகாது இருந்த இம்மேடு ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.தற்பொழுது அகழாய்வு செய்யப்பட்டுவரும் இடம் 3.5 கி.மீ சுற்றளவுடன் 80 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. தொன்மையான ஊர்களான கொந்தகை, மணலூர் மற்றும் அகரம் ஆகியவையும் இப்பகுதியோடு தொடர்ச்சியுற அமைந்துள்ளன.

களத்தின் காலம்

முதற்கட்டமாக, இந்தக் களம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த வசிப்பிடமாக கணிக்கப்பட்டது. மேலதிக உறுதிப்படுத்தல்களுக்காக இந்த அகழ்வாயில் இருந்து இரண்டு மாதிரிகள் (samples) கரிமத் தேதியிடல் முறையில் பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டது. சூலை 2017 இல் வெளிவந்த இதன் முடிவுகள் இந்த மையம் சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்னையது என்பதை உறுதிசெய்தன. நான்காம் கட்ட அகழ் வாய்வின் போது பெறப்பட்ட பொருட்களை கரிமத் தேதியிடல் முறையில் பகுப்பாய்வு செய்தபோது அதில் ஒரு கலைப்பொருள் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது.

ஆய்வின் பின்புலமும், தற்போதைய நிலையும்

வைகையாறு தோன்றும் தேனி மாவட்டம் தொடங்கி கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரை வைகை ஆற்றங்கரையின் அருகமை பகுதிகளில் 2013-14இல் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின்போது தொல்லியல் எச்சங்கள் உள்ள 293 பகுதிகள் கண்டறியப்பட்டன. இவை களஞ்சியங்கள், வணிகத் தலங்கள், துறைமுகங்கள், வாழிடங்கள், கோயில்கள் என்ற வகையிலானவை. வருசநாட்டிலும், அழகங்குளத்திலும் சிறிய அளவிலான அகழாய்வுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பெரிய அளவிலான அகழாய்வுகள் இதுவரை நடந்திருக்கவில்லை. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அகழாய்வுப் பிரிவு-6, மார்ச் 2015 தொடங்கி இப்பகுதியில் ஆய்வு நடத்திவருகிறது. தற்போதைய கட்டம் செப்டெம்பர் 2015இல் நிறைவுபெற்றுவிடும் என்றாலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கியத்துவம் கருதி ஆய்வை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

தற்போதைய கீழடி அகழாய்வு தளமானது முதலில் தென்னந்தோப்பாக இருந்தது. வறட்சி காரணமாக அம்மரங்கள் கருகிப் போயின. பின்னர் அவ்விடத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக தோண்டிய போது ஒரு செங்கல் சுவர் தென்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அந்த இடத்தில் அகழாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அருங்காட்சியகம்

கீழடி அகழாய்வு மையம் 
கீழடி அருங்காட்சியகம்

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் 2018 முதல் நடந்த எட்டு கட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கொந்தகையில் தமிழ்நாடு அரசால் உருவாக்கபட்ட கீழடி அருங்காட்சியகம் 2023 மார்ச் 5 அன்று திறக்கபட்டது.

ஆய்வாளர்கள்

கீழடி அகழாய்வினை இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு முன்னெடுக்கின்றது. அப் பிரிவினைச் சார்ந்த கி. அமர்நாத் ராமகிருஷ்ணா கண்காணிப்பு தொல்பொருளியலாளராகத் தலைமை தாங்குகிறார். மேலும் கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறையினர் இந்த ஆய்வில் பங்கெடுக்கின்றார்கள். துணைப் பேராசிரியர் பி. வெங்டேசுவரன், கே. வடிவேல், கே. வசந்தகுமார். டி பாலாஜி, ஆர். மஞ்சுநாத், ஜி. கார்த்திக் ஆகியோரைக் கொண்ட வல்லுனர் குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.

கல்வெட்டியலாளர் வி. வேதாச்சலம் துறைசார் வல்லுனராகக் (Subject Matter Expert) கடமையாற்றுகிறார்.

கண்டுபிடிப்புகள்

கிட்டத்தட்ட 48 சதுரக் குழிகள் வெட்டப்பட்டு உறைகிணறுகள், செங்கற் சுவர்கள், கூரை ஓடுகள், மண்பாண்டங்கள், மிளிர்கல் அணிகலன்கள், எலும்புக் கருவிகள், இரும்பு வேல், தமிழ்ப் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடுகள் எனப் பல்வேறு தொல்லெச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பாண்டியர்களின் தொல்நகரான "பெருமணலூர்" இதுவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கட்டிடங்கள்

கீழடி அகழாய்வு மையம் 
அகழ்வாய்வில் கிடைத்த செங்கட்சுவர்

கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. "சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது".

சுடுமண் குழாய், கழிவுநீர் தொகுதிகள்

நீர் வழங்கலும், கழிவுநீர் அகற்றலும் நாகரிக வளர்ச்சியின் முக்கிய மைல்கல்களாகக் கருதப்படுவன. கீழடியில் "சுடுமண் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் வசதியுடன் கட்டிடங்கள் இருந்தது கண்டறியப் பட்டுள்ளன."

உறை கிணறுகள்

இங்கு பழங்கால சுடுமண் உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பட்டினப்பாலை கூறும் 'உறைகிணற்றுப் புறச்சேரி' என்ற தொடருக்குச் சான்று பகர்வனவாகவும், ஆற்றங்கரைகளிலும், பெரிய குளக்கரைகளிலும் இவ்வாறு உறைகிணறுகள் அமைத்து நீரெடுக்கும் தமிழரின் பண்டைய வழக்கத்தை எடுத்துக்காட்டுவனவாகவும் உள்ளதாகத் தொல்லியல் அறிஞர் வெ. வேதாச்சலம் குறிப்பிடுகிறார்.

செங்கற்சுவர்கள்

கீழடி அகழாய்வு மையம் 
அகழ்வாய்வில் கண்ட செங்கற்சுவர்

வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிதாகக் கருதப்படும் நிலையில் இங்கு பெருமளவில் செங்கல் கட்டிடங்கள் உள்ளது ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

மண்பாண்டங்கள்

கீழடி அகழாய்வு மையம் 
மட்பாண்டம்

ரோமப் பேரரசுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை மெய்ப்பிக்கும்படியான, வணிகர்களால் கொண்டுவரப்பட்ட ரௌலட் (rouletted), அரிட்டைன் (arretine) வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அழகங்குளத்திலும் இத்தகைய பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வரலாற்றின் தொடக்ககாலத்தைச் சேர்ந்தவையான கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கருப்பு, சிவப்பு மண்பாண்டத் துண்டுகள், செம்பழுப்பு நிற கலவை பூசப்பட்ட மண்பாண்டத் துண்டுகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் செம்பழுப்பு நிற ரசட் (russet) கலவை பூசப்பட்ட பாண்டங்கள் இதுவரை கொங்குப் பகுதியிலேயே கிடைத்திருப்பதைக் கொண்டு இப்பகுதி கொங்குப் பகுதியுடனும் வாணிபத் தொடர்பிலிருந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழ் பிராமி எழுத்துக்கள்

'ஆதன்', 'உதிரன்', 'திசன்' போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அணிகலன்கள்

இங்கு சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன. யானைத் தந்தத்தினாலான தாயக்கட்டைகள், தாமிரத்தாலான கண் மை தீட்டும் கம்பி ஆகியவையும் கிடைத்துள்ளன.

அரிய தொல்பொருட்கள்

இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

கீழடி அகழாய்வின் கால வரிசை

முதல் கட்டம்

கீழடியில் ஆனி மாதம், தி.பி 2046 ஆம் ஆண்டு(சூன்,2015) வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு முதல் கட்ட அகழ்வாய்வைத் தொடங்கியது.

இரண்டாம் கட்டம்

தி.பி 2047,மன்மத ஆண்டு, மார்கழி மாதம் (2 சனவரி, 2016) அன்று இரண்டாம் கட்ட அகழாய்வு தொடங்கியது. இதில் மருத்துவ குடுவைகள், பழங்கால உறை கிணறுகள், தொழிற்சாலை, அரசு முத்திரை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கிடைத்தன.

இரண்டாம் கட்ட அகழாய்வின் முடிவில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. இவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியபோது 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தைச் சேர்ந்தவை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டம்

மூன்றாம் கட்ட அகழாய்வு தி.பி 2048, தை மாதம் (சனவரி, 2017) முதல் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் நடைபெற்றது. இப்பணி தி.பி 2048, புரட்டாசி மாதம் (30 செப்டம்பர் 2017) முடிந்தது. மூன்றாம் கட்டப் பணியில் 400 சதுர மீட்டர் அளவுக்கு 16 குழிகள் தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

நான்காம் கட்டம்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ள, தமிழ்நாடு அரசு, பிப்ரவரி, 2018-இல் ரூபாய் 55 இலட்சம் ஒதுக்கி ஆணையிட்டுள்ளது. நான்காம் கட்ட அகழாய்வு பணிகள் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் 5,820 பொருட்கள் கிடைத்தன. இதற்கு முந்தைய மூன்று அகழ்வாய்வு பணிகளையும் இந்திய தொல்லியல்துறை நடத்தியிருந்த நிலையில் நான்காம் கட்ட அகழாய்வை தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை நடத்தியது. நான்காம் கட்ட அகழாய்வில் பெறப்பட்ட 6 மாதிரிகள் ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரின் பீட்டா அனாலிடிக் என்ற நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. இந்த ஆய்வுகளில் பதினோரு அடி ஆழத்தில் பெறப்பட்ட ஒரு மாதிரி கி.மு. 580 ஆம் ஆண்டை சேர்ந்தது என கண்டறியப்பட்டது. இந்த அகழ்வாய்வின் போது பெறப்பட்ட பொருட்களில் உள்ள எழுத்து வடிவங்கள் சிந்து சமவெளி நாகரிக எழுத்து வடிவம் மற்றும் தமிழ் பிராமி எழுத்து வடிவங்களுக்கு இடையில் உள்ள ஒரு குறிப்பை நமக்கு காட்டுவதாக அமைந்துள்ளன.

ஐந்தாம் கட்டம்

2019ஆம் ஆண்டு சூன் மாதத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆர். சிவானந்தம் தலைமையில் ஐந்தாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடங்கியது. இப்பணிகள் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு நடக்கும். இதில் 15 அகழிகளை தோண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஐந்தாம் கட்ட அகழாய்வில் எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணி, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அரவைக் கல், பானை ஓடுகள், சதுரங்கக் காய்கள், சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் பகடைக் காய்கள், மண் குடுவை, பவள மணிகள், சுடு மண் வார்ப்பு, காளையின் தலை, மனித உடல் பாகம், மனித தலை உருவம் போன்றவைகளும் கண்டறியப்பட்டுள்ளன. கறுப்பு சிவப்பு நிறப் பானை, கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள், நூல் நூற்கும் தக்களிகள் (ஆபரண மணிகளைக் கோர்க்கும் கருவி), தங்க அணிகலன்கள், மணிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன குறிப்பாக 520க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள், சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 35 காதணிகள், மூன்று விலங்கு உருவங்கள், தங்கம், இரும்பு, செம்பு உலோக தொல்பொருட்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சன்னமான களிமண், செங்கல், சுண்ணாம்புச் சாந்து, இரும்பு ஆணிகள் பயன்படுத்தி கட்டுமானத் தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புப்படி இத்தொல்லியல் களம் கிமு 600 காலத்தவை என அறியப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகைக் கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழ்வாராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளன

மேலும் ஐந்தாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. YD6/3 என்ற ஆய்வுக் குழியில் பணிகள் நடந்தபோது 47 சென்டிமீட்டர் ஆழத்தில் பானையின் விளிம்பு போன்ற அமைப்பு தென்பட்டது. அதனை கவனமாக தொடர்ந்து வெளிப்படுத்தியபோது, சிவப்பு வண்ணத்தில் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றோடு ஒன்று பொருந்திய நிலையில் கிடைத்தன. இந்தக் குழாய்கள் 60 சென்டி மீட்டர் நீளமும் 20 சென்டி மீட்டர் அகலமும் கொண்டிருந்தன. இந்தக் குழாய்கள் ஒவ்வொன்றிலும் விளிம்புகளைப் போல ஐந்து வளையங்கள் உள்ளன. இந்த இரு குழாய்களும் ஒன்றோடு ஒன்று நன்கு பொருத்தப்பட்டிருப்பதால், நீரைப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல இவை பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என அகழாய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த சுடுமண் குழாய்க்குக் கீழே, பீப்பாய் வடிவிலான மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில் காணப்பட்டன. ஆகவே இந்த இரண்டு குழாய்ப் பாதைகளும் வெவ்வேறுவிதமான பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. பீப்பாய் வடிவிலான குழாயில் வடிகட்டி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழாயின் இறுதிப் பகுதி இரண்டடுக்குப் பானை ஒன்றில் சேர்கிறது. ஆகவே இந்தப் பீப்பாய் வடிவிலான குழாய் மூலம் அந்தப் பானையில் திரவப் பொருளைச் சேகரித்திருக்கலாம் என கள ஆய்வாளர்கள் கருதுகின்றன.

சர்ச்சை

2017 இல் வி. அரசு (சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் முன்னாள் தலைமை பேராசிரியர்) முதலிய கல்வியாளர்கள் மத்திய அரசு வேண்டுமென்றே கீழடி அகழ்வாய்வு பணிகளை நிறுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். கீழடி அகழ்வாய்வு மையம் "தென்னிந்தியாவில் மதச்சார்பற்ற கலாச்சாரம் இருந்ததற்கான தவிர்க்கமுடியாத ஆதாரத்தை" கொடுத்ததன் காரணமாக அதன் அகழ்வாய்வு பணிகளை நிறுத்த முயல்வதாக கூறினார்.

இந்திய தொல்லியல் துறை பொதுவாக பெரிய அகழாய்வு தளங்களில் அகழாய்வுப் பணிகளை 5 கட்டங்களுக்கு (ஆண்டுகள்) நடத்தும். 2016–17 ஆம் ஆண்டில் கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்த பிறகு இந்திய தொல்லியல் துறை, தொல்லியல் துறை கண்காணிப்பாளரான கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவைக் கவுகாத்தி வட்டத்திற்கு இடமாற்றம் செய்தது. இதன் காரணமாக கீழடி அகழ்வாய்வு பணிகளை நிறுத்துவதற்காக இந்திய தொல்லியல் துறை வேண்டுமென்றே தொல்லியல் கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. கீழடி அகழ்வாய்வு பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறிய கே. அமர்நாத் ராமகிருஷ்ணா மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தனது இடமாற்றத்தை எதிர்த்து முறையிட்டார்.

இடமாற்றமானது தொல்லியல் துறையின் விதிகளுக்கு உட்பட்டே செய்யப்பட்டதாக இந்திய தொல்லியல் துறை விளக்கம் அளித்தது. ஒரு தொல்லியல் வட்டத்தில் ஒரு தொல்லியல் கண்காணிப்பாளரின் பணிக்காலம் அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் என்ற விதியை சுட்டிக்காட்டியது. கே. அமர்நாத் ராமகிருஷ்ணா கீழடி அகழ்வாய்வு தளத்தை உள்ளடக்கிய பெங்களூர் வட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்ததால் இட மாற்றம் செய்யப்பட்டதாக கூறியது. இந்திய தொல்லியல் துறை ஜோத்பூர் வட்டத்தில் துணை தொல்லியல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பி. எஸ். ஸ்ரீராமனை கீழடி அகழ்வாய்வு தளத்தின் தொல்லியல் கண்காணிப்பாளராக நியமித்தது. "கே. அமர்நாத் ராமகிருஷ்ணன் மட்டும் இடமாற்றம் செய்யப்படவில்லை. நாடு முழுவதும் 26 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், புதிதாக நியமிக்கப்பட்ட தொல்லியல் கண்காணிப்பாளரான பி. எஸ். ஸ்ரீராமனும் தமிழ்நாட்டை சேர்ந்தவராவார்" என மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறினார்.

நூல்கள்

கீழடி அகழாய்வு தொடங்கியது முதல் அது குறித்து பல்வேறு நூல்கள் எழுதப்பட்டு வருகின்றன அவை பின் வருமாறு

கீழடி அகழாய்வு குறித்த நூல்கள்
நூல் ஆசிரியர் பதிப்பகம்
கீழடி வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
வைகை நதி நாகரிகம் கீழடி குறித்த பதிவுகள் சு. வெங்கடேசன் விகடன் பிரசுரம்
ஆதிச்சநல்லூர் கீழடி காட்டும் தமிழரின் தொன்மை கோ. உத்திராடம் நாம் தமிழர் பதிப்பகம்
ஆதிச்சநல்லூர்-கீழடி மண்மூடிய மகத்தான நாகரிகம் அமுதன் தினத்தந்தி பதிப்பகம்
கீழடி: தமிழ் இனத்தின் முதல் காலடி நீ. சு. பெருமாள் மேன்மை வெளியீடு
தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் கீழடி வரை சி. இளங்கோ அலைகள் வெளியீட்டகம்
கீழடி-மதுரை:சங்க கால தமிழர் நாகரிகம் ஓர் அறிமுகம் காந்திராஜன் கருத்து =பட்டறை வெளியீடு

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

கீழடி அகழாய்வு மையம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Keezhadi archeological site
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

கீழடி அகழாய்வு மையம் அமைவிடம்கீழடி அகழாய்வு மையம் களத்தின் காலம்கீழடி அகழாய்வு மையம் ஆய்வின் பின்புலமும், தற்போதைய நிலையும்கீழடி அகழாய்வு மையம் அருங்காட்சியகம்கீழடி அகழாய்வு மையம் ஆய்வாளர்கள்கீழடி அகழாய்வு மையம் கண்டுபிடிப்புகள்கீழடி அகழாய்வு மையம் கீழடி அகழாய்வின் கால வரிசைகீழடி அகழாய்வு மையம் சர்ச்சைகீழடி அகழாய்வு மையம் நூல்கள்கீழடி அகழாய்வு மையம் இதனையும் காண்ககீழடி அகழாய்வு மையம் மேற்கோள்கள்கீழடி அகழாய்வு மையம் வெளி இணைப்புகள்கீழடி அகழாய்வு மையம்அகழ்வாய்வுஇந்தியத் தொல்லியல் ஆய்வகம்கீழடி ஊராட்சிகீழடி, சிவகங்கை மாவட்டம்சங்க காலம்சிவகங்கை மாவட்டம்தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைதிருப்புவனம் ஊராட்சி ஒன்றியம்திருப்புவனம் வட்டம்மதுரை

🔥 Trending searches on Wiki தமிழ்:

கருப்பை நார்த்திசுக் கட்டிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சீவக சிந்தாமணிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இரசினிகாந்துமறவர் (இனக் குழுமம்)ஆறுமுக நாவலர்சூர்யா (நடிகர்)தர்மா (1998 திரைப்படம்)குலசேகர ஆழ்வார்சிவம் துபேசுடலை மாடன்தற்கொலை முறைகள்தாவரம்காற்றுஇந்தியாசே குவேராஇளையராஜாதிருவிளையாடல் புராணம்நஞ்சுக்கொடி தகர்வுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சேக்கிழார்ஜி. யு. போப்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கிராம சபைக் கூட்டம்அங்குலம்சோழர்இந்தியத் தேர்தல் ஆணையம்அனுமன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பதிற்றுப்பத்துகருட புராணம்பால் (இலக்கணம்)முதற் பக்கம்அறம்ஆசிரியர்ஆனைக்கொய்யாவானிலைமாணிக்கவாசகர்சிறுபஞ்சமூலம்அன்புமணி ராமதாஸ்காகம் (பேரினம்)எச்.ஐ.விஇயோசிநாடிபிரியங்கா காந்திதிராவிடர்திருமலை நாயக்கர்தமிழ் நாடக வரலாறுபாசிப் பயறுகுதிரைஅமேசான்.காம்ஆறாம் பத்து (பதிற்றுப்பத்து)சித்த மருத்துவம்வளையாபதிநான் அவனில்லை (2007 திரைப்படம்)கி. ராஜநாராயணன்பெண் தமிழ்ப் பெயர்கள்பழமுதிர்சோலை முருகன் கோயில்கடவுள்ராஜா ராணி (1956 திரைப்படம்)சிங்கம்கண் (உடல் உறுப்பு)சிட்டுக்குருவியாழ்சங்ககால மலர்கள்அகரவரிசைதமிழ் தேசம் (திரைப்படம்)சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிஅறுவகைப் பெயர்ச்சொற்கள்புதினம் (இலக்கியம்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பாவலரேறு பெருஞ்சித்திரனார்நம்ம வீட்டு பிள்ளைஅகத்தியர்தாராபாரதிதிருக்குறள்அயோத்தி தாசர்பாட்ஷா🡆 More