ஆசீவகம்: மெய்யியல் கொள்கை

ஆசீவகம் (Ājīvika) என்பது ஒரு இந்திய மெய்யியல் கொள்கையும், துறவு வாழ்க்கையும் ஆகும்.

இது பொ.ஊ.மு. 6 ஆம் நூற்றாண்டில் புத்தர், மகாவீரர் ஆகியோருக்கு சமகாலத்தில் வாழ்ந்த மற்கலி கோசாலர் என்பவர் உருவாக்கிய ஒரு சமய நெறியாகும். இந்த ஆசீவக மெய்யியல் பற்றிய நூல்கள் கிடைக்கவில்லை. ஆயினும் பௌத்தம், சைனம் போன்ற சமய நூல்களில் இருந்தும், பிற தொல்பொருளியல் நூல்களிலிருந்தும் ஆசிவக தத்துவங்கள் பற்றிய சில கருத்துக்களை அறியமுடிகிறது. ஆசிவகம் ஊழ்வினையை அதிகம் வலியுறுத்துகிறது.

ஆசீவகம்: பெயர்க்காரணம், வேறு பெயர்கள், ஆசீவக நெறியும் மோரியப்(மௌரிய) பேரரசும்
மகாகாசியபர், அசீவகர் ஒருவரைச் சந்தித்து பரிநிர்வாணம் பற்றி அறிந்து கொள்கிறார்.

பெயர்க்காரணம்

ஆசீவகம் என்பது தமிழ்ச் சொல் எனக் கொண்டு ஆதி.சங்கரன் என்பவர் பின்வரும் விளக்கத்தினைக் கொடுத்துள்ளார். ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம்

ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென, ஈவு – தீர்வு அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.

ஆசீவகம் என்ற சொல்லின் வேரினை கணக்கியல் வழி நின்று விளக்குவோம். எட்டுக்குள் எத்தனை இரண்டுகள் உள்ளன என ஒருவர் அறிய விரும்புகிறார். வகுத்தல் முறையில் நான்கு எனக் கண்டு கொள்கிறார். எட்டு, இரண்டு என்பன அவரிடம் உள்ளவை. இவை, முறையே முதலி, வகுத்தியாம். அவற்றைக் கொண்டு அவர் பெற்ற விடை நான்கு. இதற்குப் பெயர் ஈவு. ஆக, எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணை, துறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்.

பண்டைக் கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப் படுமுன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

அவனுக்கும் அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. (உணவு தருமிடம் உணவகம் எனவும், மழிக்குமிடம் மழிப்பகம் எனவும் வழங்குதல் போன்று.) இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. கைம்மாறு கருதாத செம்மையான கவி ‘ஆசுகவி’ எனச் சிறப்பிக்கப் பட்டது போல், இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் சித்தர்கள் ஆவர்.

ஆசீவகம் என்பது தமிழ்ச் சொல்லா?

ஆசீவகம் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் மிகவும் அருகியே காணப்படுகின்றன. ஆசீவகம் பற்றி தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்த அறிஞர்கள் தமிழ் இலக்கியங்களில் ஆசீவகம் பற்றி கூறப்பட்டுள்ளவைகளைத் தொகுத்துக் கூறியுள்ளனர். ஆசீவகம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. சிலப்பதிகாரத்தில் ஒரு இடத்திலும் மணிமேகலையில் ஒரு இடத்திலும் மட்டுமே சமகாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஆசீவகர்களைக் குறிக்கும் வகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நீலகேசியிலும், சிவஞானசித்தியாரிலும் ஆசீவகக் கருத்துக்கள் கூறப்படுகின்றனவே தவிர சமகாலத்தில் வாழ்ந்த ஆசீவகர்களைக் குறிப்பதாக இல்லை. தக்கயாகப்பரணியின் உரையாசிரியர் கூறுவதும், நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் கூறுவதும், நிகண்டுகள் குறிப்பிடும் ஆசீவகர் என்ற சொல்லும் அத்தகையவே. கி.பி எட்டாம் நூற்றாண்டுக்குரிய, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டில் ஆசீவகர் பற்றிக் குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதைப் பற்றிக் குறிப்பிடும் அறிஞர்கள் (திரு டி.வி.மகாலிங்கம் மற்றும் திருமதி ர. விஜயலட்சுமி) அந்தக் கல்வெட்டின் வரிகளையோ அக்கல்வெட்டு தொல்லியல் துறையின் தொகுப்பில் இடம்பெற்று இருந்தால் அந்தத் தொகுப்பு எது என்பதையோ குறிப்பிடவில்லை.எனவே அக்கல்வெட்டில் என்ன கூறப்பட்டு உள்ளது என்பதை அறிய முடியவில்லை. தேவாரத்தில் சமண, பௌத்தர்கள் ஏராளமான இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆனால் ஆசீவகர் ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. எனவே ஆசீவகம் சங்க காலத்துக்குப் பின்பு தமிழ்நாட்டுக்கு வந்து திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் காலத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் மறைந்து விட்டது என்பது தெளிவாகிறது.சித்தர் பாடல்களிலும் ஒரு இடத்தில் கூட ஆசீவகம் என்ற சொல் இடம் பெறவில்லை. எனவே ஆசீவகம் தமிழ்நாட்டில் தோன்றியது என்பதும் ஆசீவகம் என்பது தமிழ்ச்சொல் எனக் கொண்டு பொருள் கூறுவதும், ஆசீவகர் தமிழ் சித்தர்கள் என்று கூறுவதும் பொருந்துமாறில்லை.

கல்வெட்டுகளில் ஆசீவகருக்கு வரிவிதிப்பா?

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள கல்வெட்டுகளில் 'ஆசுவக் கடமை' முதலிய பெயர்களில் குறிப்பிடப்படும் வரி ஆசீவகர்க்குப் போடப்பட்ட வரி எனக் கருதிய ஏ.எல். பாஷம் அதைக் கொண்டு ஆசீவகர்கள் தமிழ்நாட்டில் பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்ததாக முடிவு செய்தார். இந்திய மரபைப் பொருத்தவரை தொழில் மூலம் ஈட்டும் வருவாய்க்குத்தான் வரிவிதிக்கப்படுமே தவிர பின்பற்றும் மதத்துக்காக வரிவிதிக்கப்பட மாட்டாது. கல்வெட்டுகளில் பற்பல தொழில் செய்வோருக்கான வரிகளைக் கூறும்போது ஆசுவ வரியும் கூறப்பட்டுள்ளது. ஆசீவகர்கள் அப்படி 14 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்தால் அவர்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்று இருக்கும். ஆனால் அப்படிக் குறிப்புகள் இல்லை. சமண, பௌத்தர்களைப் பற்றி எண்ணற்ற குறிப்புகள் உள்ளன. எனவே ஏ.எல். பாஷம் அவர்கள் கருத்துப்படி தமிழ்நாட்டில் ஆசீவகர்கள் 14 ஆம் நூற்றாண்டு வரை வாழவில்லை என்பது தெளிவாகிறது. ஆசுவ வரி என்பது உண்மையில் குதிரைக்காரர்களுக்குப் போடப்பட்ட வரியே என்பதை அறிஞர் விஜயலட்சுமி தனது 'தமிழகத்தில் ஆசீவகர்கள்' என்ற நூலில் ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

தவறான பெயர்க்காரணம்

தமிழ் மொழியில் 'சீவகம்' எனும் சொல்லிற்கு 'வாழ்தல்' என்று பொருள். ஆசீவகம்(ஆ+சீவகம்) எனும் சொல்லிற்கு 'இறத்தல்' என்றும் 'வாழ்தல்' என்றும் பெயர்க்காரணங்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளது

வேறு பெயர்கள்

ஆசீவக நெறியைப் பின்பற்றுபவர்கள் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார்கள். அப்பெயர்களாவன:

  1. ஆசீவகர்
  2. மற்கலியர்
  3. ஏகாந்த வாதி
  4. சித்தர் (அ) ஆசீவக சித்தர்
  5. அண்ணர் (அ) அண்ணல் - சித்தன்னவாசல்(அண்ணல் வாயில், சித்தர் அண்ணல் வாயில்), திருவண்ணாமலை(திரு அண்ணர் மலை), அண்ணமங்கலம்(அண்ணல் மங்கலம்), கருப்பண்ண சாமி(தன்னைவிட அறிவில் முதிர்ந்தோரையும் வயதில் முதிர்ந்தோரையும் அண்ணன் என்று அழைக்கும் வழக்கமும் இதனடியே தோன்றியதேயாகும்.).
  6. போதி சத்துவர்
  7. தீர்த்தங்கரர் (தீர்த்தம்+கரர்)
  8. தீர்த்தவிடங்கர்

ஆசீவக நெறியின் மெய்யியல் கோட்பாட்டின் படி, ஊழ்க மெய்யியலில்(யோகம்) உள்ள நிலைகளுள் இறுதி நிலையான ஐயநிலை (நல்வெள்ளை நிலை (அ) கழிவெண் பிறப்பு (அ) பரமசுக்க நிலை) என்பது ஆண்நாடியா அல்லது பெண் நாடியா எனப் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாகும். இந்த நிலையினை கைவரப் பெற்றவர்களே, வீடுபேறடைந்து, ஐயன் (சாத்தன்) என்றும், ஆர் என்னும் சிறப்பு விகுதி சேர்த்து ஐயனார்(கோழிக்கொடியோன், சாதவாகனன், சாத்தனார், காரி, நல்வெள்ளையார்) என்றும் வழங்கப் பெற்று, இச்சிறப்புத் தகுதி நிலையினால் தமிழரால் வணங்கப்படும் சிறப்புப் பெற்றவர்களாவர். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் இருபுலவர்கள் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார், முக்கல் ஆசான் நல்வெள்ளையார் எனும் பெயரில் உள்ளனர் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. நாளடைவில் சிறப்புக்குரிய சான்றோர்களையும் தகுதி நிலையில் உயர்ந்தவர்களையும் கூட "ஐயா" எனும் விளி குறிப்பதாயிற்று. இருபொருள்களின் மயக்குத் தோற்றநிலையினை ஐயம் (ஐயுறவு) எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாகும்.ஐயர் மற்றும் ஐயங்கார் ஆகிய சொற்களும் இதிலிருந்து தோன்றியவையாகும்.

மதிப்பிற்கும் சிறப்பிற்கும் உரிய பெரியோரை என்று குறிக்கும் வழக்கு சங்ககாலம் தொட்டே இருந்து வந்துள்ளதனை திருவள்ளுவர் தமது 771ஆம் குறளில் நெடுமொழி வஞ்சியில் பாடியுள்ளதன் மூலம் அறியலாம்.

   என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை    முன்நின்று கல்நின் றவர்                             - படைச்செருக்கு(1), பொருட்பால், திருக்குறள், திருவள்ளுவர்        என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ    முன்நின்று கல் நின்றவர்                           எனப் பிரித்துப் படிக்கவும்.        பொருள்: போர்களத்து வீரன் ஒருவன், பகைவர்களே என் தலைவனை எதிர்த்து நிற்காதீர்;    அவனை எதிர்த்து நடுகல்லாய்ப் போனவர்கள் பலர் என முழங்குகிறான். 

ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். போதனைகள் எனும் நன்னெறிகளை ஈந்த இடமாகையால் பிற்காலத்தில் இக் கற்படுக்கைகளை அபகரித்தவர்களும் போதி சத்துவர் முதலிய பெயர் பெற்றனர். போதித்தலில் சத்துவ குணமுடையவர்; அதாவது கற்பித்தலில் சிறந்தவர் அறிவு மென்மை கொண்டவர் எனும் பொருளிலேயே திசைச் சொற்களால் வழங்கப் பெற்றனர். ஆசீவகத்தினரின் கற்படுக்கைகளை அணி செய்த ஒரு பிரிவினர் மாதங்கர் என்பவராவார். மாதங்கர் எனும் பெயர், மாதங்கி எனும் ஆசீவகப் பெண்பாலுக்கு இணையான ஆண்பாற் பெயராகும். கச்சியப்ப மாதங்கர் (காச்யப மதங்கர்) என்பாரும் இவ்வழி வந்தோரே. தீர்வுகளும் வினைதீர்த்தலும் செய்த காரணத்தினால் தீர்த்தவிடங்கர் எனும் பெயராலும் அதைச் சார்ந்த பிற சொற்களாலும்(தீர்த்தங்கரர்(தீர்த்தம்+கரர்)) வழங்கப் பெற்றனர்.

ஆசீவக நெறியும் மோரியப்(மௌரிய) பேரரசும்

பிந்துசாரர்

தன் தந்தை சந்திரகுப்த மோரியர் போல இல்லாமல், பிந்துசாரர் ஆசீவக நெறி மேல் நாட்டம் கொண்டிருந்தார். பிந்துசாரரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துவிட்ட சில காலத்திற்குப் பின்பு சந்திரகுப்த மோரியர், சைன நெறியைப் பின்பற்றித் துறவுபூண்டார். பிந்துசாரரின் மனைவிகளுள் ஒருவரான சம்பாவைச்(தற்போதைய பாகல்பூர் மாவட்டம்) சேர்ந்த ராணி சுபதாரங்கியும் (அக்கமகேசி) ஆசீவக நெறியைச் சேர்ந்த அந்தணர் ஆவார். பிந்துசாரரின் குருவான பிங்கலவட்சவரும் (சனசனர்) ஆசீவக நெறியை சேர்ந்த அந்தணர். பிந்துசாரர், அந்தணர் வசிக்கும் மடங்களுக்கு பல்வேறு நிலதானங்களை (பிராமணபட்டோ) செய்தார். பொ.ஊ.மு. 4ஆம் நூற்றாண்டுக்கு முன்பே ஆசீவக நெறி பண்டைய தமிழகம் மட்டுமில்லாமல் பண்டைய இந்தியா முழுவதும் இருந்தாலும், பிந்துசாரின் ஆட்சியின் போது, வடஇந்தியாவில் ஆசீவக நெறி புகழின் உச்சியை அடைந்தது.

அசோகர்

பிந்துசாரருக்குப் பின் ஆட்சி பொறுப்பை ஏற்ற அவரது மகன் அசோகரின்(பொ.ஊ.மு. 232 அல்லது பொ.ஊ.மு. 273) காலத்தில் பல்வேறு ஆசீவக பாறைவெட்டுக் குகைகள், பிகார் மாநிலத்தின் ஜகானாபாத்(Jahanabad) மாவட்டத்தில் உள்ள பராபர்(Barabar) எனும் ஊரில் கட்டப்பட்டது. பொ.ஊ. 2 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனத்தின் படி, அசோகர் பௌத்த நெறியைப் பின்பற்றிய பின்பு கொல்லாமையை பின்பற்றவில்லை எனக்குறிப்பிடுகிறது.பிற்காலத்தில் சிறிது சிறிதாக பௌத்த நெறியில் நாட்டம் கொண்ட அசோகர், புந்தரவர்தனம்(Pundravardhana) எனும் இடத்தில் பௌத்த நெறியைச் சேராத ஒருவர், புத்தரை நிர்கரந்தா ஜனதிபுத்திரரின்(மகாவீரர் என அடையாளம் கூறப்படுகிறது) காலில் வணங்குவதைப் போன்றதொரு ஓவியத்தை வரைந்ததைத் தொடர்ந்து, பௌத்தர் ஒருவர் அசோகரிடம் முறையிட்டார். இதனால் அசோகர், அவ்வோவியத்தை வரைந்தவரை கைது செய்ய ஆணைபிறப்பித்து பின்பு புந்தரவர்தனத்தில் இருந்த 18,000 ஆசீவகர்களைக் கொன்றார். சிறிது காலம் கழித்து, பாட்டலிபுத்திரத்தில் (Pataliputra) மற்றொரு நிர்கரந்தாவைப் பின்பற்றுபவர், இதேபோன்றதொரு ஓவியம் வரைந்ததால், அசோகர் அவரையும் அவரது முழு குடும்பத்தையும் சேர்த்து வீட்டோடு எரித்தார். இதைத் தொடர்ந்து, நிர்கரந்தாவைப் பின்பற்றுபவரின் தலையைக் கொண்டுவருபவருக்கு ஒரு தினாரா(வெள்ளி நாணயம்) பரிசாக வழங்குவதாக அறிவித்தார். இதனால், சமண நெறியில் உள்ள ஆசீவக, ஜைன நெறிகள் வடஇந்தியாவில் அழிந்தது. இதன் விளைவாக, அசோகரது சொந்த தமையனையே ஒரு கும்பல் தவறாக நிர்கரந்தர் என நினைத்து கொன்றனர் என்றும் அசோகவதனம் குறிப்பிடுகிறது.

பிற்காலத்தில், பொ.ஊ.மு. 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மோரியப் பேரரசின் கடைசி அரசனான பிரிகத்ரதா மோரியரின் (Brihadratha Maurya) படைத்தளபதியாக இருந்த புஷ்யமித்ர சுங்கன், பிரிகத்ரதாவைக் கொன்று சுங்கர் அரசை உருவாக்கினார்.அவர், அசோகர் ஆசீவகத்தையும் ஜைனத்தையும் அழிக்கப் பயன்படுத்திய அதே முறையைக் கொண்டு பௌத்த நெறியை வடஇந்தியாவில் அழித்தார் என அசோகவதனம் குறிப்பிடுகிறது.

ஆசீவக நெறி குறித்த குழப்பங்கள்

சமணம் மற்றும் ஜைனம் ஆகிய சொற்களின் பொருட்குழப்பம்

திவாகர முனிவரால் பொ.ஊ. 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.

     சாவகர் அருகர் சமணர் ஆகும்;      ஆசீ வகரும் அத்தவத் தோரே                             - திவாகர நிகண்டு 

அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.

     சாவகர் அருகர் சமணர் அமணர்      ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே                             - ஐயர் வகை, பிங்கல நிகண்டு 

இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,

  1. கண்ணகி சமண நெறியில் உள்ள சாவகத்தையும்
  2. கோவலன் மற்றும் மாதவியின் மகளான மணிமேகலை, இறுதியாக புத்தத்தையும்
  3. கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும்,கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தையும்

பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது. இதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான ஆசீவகம், சாவகம், ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள ஜைன நெறி மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவு எனுமொரு தவறான கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் சமணம் எனும் சொல்லிற்கு ஜைனம் என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.

இந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், சமணர் மற்றும் ஜைனர் ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆசீவகம் ஜைனத்தின் உட்பிரிவாக்கப்பட்ட குழப்பம்

திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு ஆகிய தமிழ் மொழி நிகண்டுகள் மட்டுமல்லாது,

  1. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தின் அசோகரின் கல்வெட்டு
  2. பௌத்தர்களின் நெறி நூலான மஜ்ஹிமா நிகாயம்
  3. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம்
  4. பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் சீத்தலைசாத்தனார் இயற்றிய புத்தக் காப்பியம் மணிமேகலை
  5. பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைனர்களின் ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றான நீலகேசி
  6. பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பெரியபுராணம்

ஆகிய கல்வெட்டு மற்றும் இலக்கியச் சான்றுகள், ஆசீவக நெறியையும் ஜைன நெறியையும் பிரித்துக் காட்டுகின்றன. பிறகு, பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆசீவக நெறி ஜைன நெறியின் உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானது. இதற்கான சான்றாக,

  1. பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் அருணந்தி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட சிவஞான சித்தியார்
  2. பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரை

ஆகிய இலக்கியங்கள் உள்ளன. இந்தத் தவறான கண்ணோட்டத்தினை மயிலை திரு.சீனி. வேங்கடசாமி அவர்கள், தான் இயற்றிய பௌத்தமும் தமிழும் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

ஆசீவக நெறியின் தோற்றத்தின் காலம் பற்றிய குழப்பம்

மற்கலி கோசாலரால் ஆசீவக நெறி தோற்றுவிக்கப்பட்டதென்றும், அவர் ஏற்கனவே பலகாலம் இருந்த நெறியைப் பின்பற்றினார் என இருவேறு கருத்துகள் நிலவி வருகின்றன.

ஆசீவக நெறியைப் பற்றி கல்வெட்டுகளில் மற்றும் இலக்கியங்களில் உள்ள செய்திகள்

மோரிய அரசர் அசோகரின் கல்வெட்டு

அசோகரின் கல்வெட்டுகளுள் ஒன்றில் ஆசீவக நெறி பற்றி சில செய்திகள் உள்ளன.

சந்திரகுப்தனின் பேரனான அசோகர் (பொ.ஊ.மு. 273-232) புத்த சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டார். அசோகரின் ஆணைகளில் ஆசீவகர் (அஜீவிகாஸ்) பற்றிய குறிப்பு உள்ளது, அங்கு தம்மமாத்மாவின் (சட்ட அதிகாரிகள்) கடமைகள் கையாளப்படுகின்றன. கல்வெட்டு கூறுகிறது:

அசோகவதனம்

பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பௌத்தர்களின் நூலான அசோகவதனம் எனும் நூலில் ஆசீவக நெறி பற்றி சில குறிப்புகள் உள்ளன.

சிலப்பதிகாரம்

பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும், கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதன்மூலம், புத்த ஜைன நெறிகள் இருப்பதாகக் குறிப்பிடும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும், ஆசீவக நெறி எனும் நெறியும் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன.

மணிமேகலை

சீத்தலைசாத்தனார் என்பவரால் இயற்றப்பட்ட மணிமேகலை எனும் காப்பியத்தில் சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை எனும் காதையில் உள்ளப் பாடலில் அக்காலத்தில் தமிழகத்தில் இருந்த ஆறு வகையான மதங்களில் ஆசீவக நெறியும் ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளது. ஆசீவக நெறியின் கோட்பாடுகளையும் இக்காப்பியம் விளக்குகிறது.

நீலகேசி

பொ.ஊ. 6ஆம் நூற்றாண்டிற்கு பின் இயற்றப்பட்ட ஜைனர்களின் காப்பியமான நீலகேசி எனும் காப்பியத்தில் ஆசீவகவாதச் சருக்கம் என்ற சருக்கத்தில் ஆசீவக நெறியின் கோட்பாடுகள் பற்றி பல செய்திகள் உள்ளன.

திவாகர நிகண்டு

திவாகர முனிவரால் பொ.ஊ. 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.

அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது.

பிங்கல நிகண்டு

திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில் ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.

பெரியபுராணம்

தமிழ் ஆய்வுலகில் அமணர் ஜைனர் பற்றிய பொருள் குழப்பம் நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது. சமணர் என்ற சொல் அமணர் என்ற தமிழ் வடிவத்தின் திரிபாகும். இச்சொல் வைதீக எதிர்ப்பாளர் என்ற பொருளில் ஆளப்பட்டாலும் தமிழ் இலக்கியங்களில் இச்சொல் ஆசீவகர்களை மட்டுமே குறித்துள்ளது. ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களை அருகர்கள் என்றும் பெரிய புராணம்(பன்னிரெண்டாம் நூற்றாண்டு) இவ்விருவரையும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. அத்துடன் ஆசீவகர்களை அமணர்கள் என்றும் சைனர்களைச் சாதி அமணர் என்றும் பிரித்து அடையாளப் படுத்தும். இப்படிப் பெரிய புராணம் ஆசீவகர்களையும் சைனர்களையும் வேறுபடுத்திக் காட்டுவதை முதன்முதலாக ஆராய்ந்து உரைத்தவர் பேரா. முனைவர் தே. வே. மகாலிங்கம் ஆவார்.[சான்று தேவை] தமிழ்நாட்டிலுள்ள சங்க காலக் கற்படுக்கைகள் யாவும் ஆசீவகர்களுக்கு உரியன என்பதைச் சான்றுகளோடு நிறுவியவர் அவரே ஆவார். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுண்மையை அவர் வெளிப்படுத்தியிருந்த போதிலும் தமிழ் ஆய்வுலகம் அவரை இருட்டடிப்புச் செய்து வந்துள்ளது.

ஆசீவக நெறி ஜைனத்தின் ஒரு பகுதி எனத் தவறாக எழுதத் தொடங்கியதற்கான சான்றுகள்

சிவஞான சித்தியார்

பௌத்தமும் தமிழும் எனும் நூலில் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) அவர்கள் கொடுத்த விளக்கம்:

'சிவஞான சித்தியார்' என்னும் சைவ சமய நூலிலே(பரபக்கம் ஆசீவக மதம்), இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். 'திகம்பரமொப்பினும் அநேகாந்தவாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க' என்று எழுதியிருக்கிறார். அஃதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப் போன்ற கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். 'மணிமேகலை', 'நீலகேசி' என்னும் இரண்டு நூல்களைத் தவிரப் பிற்காலத்து நூல்களாகிய 'சிவஞான சித்தியார்' , 'தக்கயாகப்பரணி' முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம் என்றே கூறுகின்றன. இவ்வாறு கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவகமதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும் மேற்கொண்டு வந்த பொதுவான சில கொள்கைகளாகும். வெளிப்பார்வைக்குப் பொதுவாகத் தோன்றிய தோற்றக் கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும் இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு ஆசீவகமதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிறகாலத்தில் தவறாகக் கருதப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமன்று வடநாட்டிலும் அவர் இவ்வாறே கருதப்பட்டு வந்தனர்.

தக்கயாகப்பரணி உரை

பௌத்தமும் தமிழும் எனும் நூலில் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980) அவர்கள் கொடுத்த விளக்கம்:

ஆசீவக மதத்துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்று 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரையில் கூறப்பட்டுள்ளது. இதனை,

என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர் 'தாழி-முதுமக்கட் சாடி .. தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம்செய்வராதலின், அவரைச் சுட்டிநின்றது' என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம்.

மேலே காட்டிய உரைப்பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகிறது. அஃதாவது, ஆசீவகமதம் ஆருகதமதமாகிய ஜைனமதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், மேலே குறிப்பிட்டதைப் போல இந்த உரைநூலுக்கு முன் இயற்றப்பட்ட நூல்களில், ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவக மதம் வேறு என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இத்தவற்றினைத்தான் மேலே காட்டியபடி தக்கயாகப்பரணி உரையாசிரியர் எழுதியிருக்கிறார்.

ஆசீவக நெறியின் கோட்பாடுகள்

ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய நெறிகளின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்

வேறுபாடுகள்

வேறுபாடு ஆசீவக நெறி ஜைன நெறி
நெறியின் பெயர்கள் ஆசீவகம், ஏகாந்த வாதம்(ஜைனர்கள் படி) அருகம், ஆருகதம், நிகண்ட வாதம், சாதி அமணம், ஜைனம்
நெறியைப் பின்பற்றுபவரின் வேறு பெயர்கள் ஆசீவகர், மற்கலியர், ஏகாந்த வாதி(ஜைனர்கள் படி), சித்தர் (அ) ஆசீவக சித்தர், அண்ணர் (அ) அண்ணல், தீர்த்தங்கரர், தீர்த்தவிடங்கர். ஜைனர், நிகண்ட வாதி, அருகர், ஆருகதர், சாதி அமணர், தீர்த்தங்கரர்.
விதிக் கொள்கை தமிழரின் நாடி சோதிடத்தில் உள்ளதைப் போல ஒருவருக்கு நடக்கும் நன்மை தீமை அனைத்தும் முன்னமே நிர்ணயிக்கப்பட்டது. ஒருவரால் விதியை மாற்ற முடியாது. துறவறத்தால் வீடுபேறடைதலை முன்னதாகவே பெறுதல் முடியும். அதாவது, துறவறத்தால் விதியை மாற்ற முடியும்.[சான்று தேவை]
கருமபலன் கொள்கை ஒருவர் தான் ஏற்கனவே செய்த கருமத்தின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். அதை மாற்ற முடியாது. ஆனால், துறவறத்தின் மூலம் புதிய கருமபலன் உருவாகுவதை மட்டுமே தடுக்க முடியும். அதுவும் விதிப்படிதான். ஒருவர் தான் ஏற்கனவே செய்த கருமத்தின் பலனை, அவர் துறவறத்தின் மூலம் நீக்க முடியும். மேலும், துறவறத்தின் மூலம் புதிய கருமபலன் உருவாகுவதையும் தடுக்க முடியும்.
வீடுபேறடைதல் கொள்கை உயிர்கள் வீடுபேறடைதல் முன்னமே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. உயிர்கள் என்ன முயன்றாலும் வீடுபேறடைதல் என்பதை முன்னதாகவோ பின்னதாகவோ அடைய முடியாது. உயிர்கள் தாழாது முயன்றால் வீடுபேறடைதல் உறுதி.
துறவறக் கொள்கை துறவறம் முறையானதாகக்(Professional) கருதப்பட்டது. இல்லறத்திலும் வீடுபேறுண்டு. வீடுபேறு பெற துறவறம் மேற்கொள்ளப்பட்டது. துறவிக்கு உலகியல் பற்றிய சிந்தனை இருந்தால் துறவறம் கை கூடாது.
மறுபிறப்பு கொள்கை வீடுபேறு அடையும் வரை உயிர்கள் பிறப்பெடுக்கும். வீடுபேறடைந்த உயிர்கள், மறுபடியும் பிறப்பெடுக்கும். வீடுபேறு அடையும் வரை உயிர்கள் பிறப்பெடுக்கும். வீடுபேறடைந்த உயிர்கள், மறுபடியும் பிறப்பெடுப்பதில்லை.
ஊழின் பொருள் மற்றும் வகை ஊழ் என்பதற்கு ஆசீவகம் கூறும் பொருள் இயற்கை நிகழ்வு என்பதே. அணுக்களின் புணர்வினாலும், பிரிவினாலும் (காலம், கருவி போன்றவற்றின் துணையினால்) ஏற்படும் இயற்கை மாற்றத்தையே இந்த ஊழ் எனும் சொல் குறிக்கும். நல் ஊழ் மற்றும் தீ ஊழ் என்ற பாகுபாடு இல்லை. ஊழ் என்ற சொல்லுக்குப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வரும் பாவம், புண்ணியம் ஆகியவற்றின் தொகுப்பு என்பது பொருள். நல் ஊழ் மற்றும் தீ ஊழ் உண்டு.

நிறுவியவர்கள்

  • மற்கலி கோசாலர் - நியதிக்கொள்கை
  • பூரணகாசியபர் - அகரியாவாதம்
  • பகுத கச்சானர் - அணுக்கொள்கை

நூல்கள்

மகாநிமித்தங்கள்

  • திவ்வியம் - தெய்வம் பற்றியன
  • ஒளத்பாதம் - அற்புதம் பற்றியன
  • ஆந்தரிக்சம் - வான் பற்றியன
  • பௌமம் - பூமி பற்றியன
  • அங்கம் - உடல் உறுப்புகள் பற்றியன
  • சுவாரம் - ஓசை பற்றியன
  • இலக்கணம் - இயல்புகள் பற்றியன
  • வியஞ்சனம் - குறிப்புக்கள் பற்றியன

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

நூல்கள்

பழைய ஆய்வு நூல்கள்

தற்கால ஆய்வு நூல்கள்

  • ஆதித் தமிழர் மெய்யியல், ஆதி. சங்கரன்
  • ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள், ஆதி. சங்கரன்
  • ஆசீவகமும் ஐயனார் வரலாறும், முனைவர் க. நெடுஞ்செழியன்
  • தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், முனைவர் க. நெடுஞ்செழியன்
  • தமிழர் தருக்கவியல், முனைவர் க. நெடுஞ்செழியன்
  • ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம், முனைவர் க. நெடுஞ்செழியன்
  • சங்ககாலத் தமிழர் சமயம், முனைவர் க. நெடுஞ்செழியன்
  • சித்தண்ண வாயில், முனைவர் க. நெடுஞ்செழியன்
  • எண்ணியம், முனைவர் க. நெடுஞ்செழியன்
  • உலகாய்தம், முனைவர் க. நெடுஞ்செழியன்
  • எண்ணியம், வெங்காலூர் குணா
  • வள்ளுவத்தின் வீழ்ச்சி, வெங்காலூர் குணா
  • வள்ளுவப் பார்ப்பாரியம்(வள்ளுவத்தின் வீழ்ச்சி, பாகம் - 2), வெங்காலூர் குணா
  • தமிழர் மெய்யியல், வெங்காலூர் குணா
  • இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள், எழுத்தாளர் ஜெயமோகன்
  • ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - புத்தக விமர்சனம்

வெளி இணைப்புகள்

Tags:

ஆசீவகம் பெயர்க்காரணம்ஆசீவகம் வேறு பெயர்கள்ஆசீவகம் ஆசீவக நெறியும் மோரியப்(மௌரிய) பேரரசும்ஆசீவகம் ஆசீவக நெறி குறித்த குழப்பங்கள்ஆசீவகம் ஆசீவக நெறியைப் பற்றி கல்வெட்டுகளில் மற்றும் இலக்கியங்களில் உள்ள செய்திகள்ஆசீவகம் ஆசீவக நெறியின் கோட்பாடுகள்ஆசீவகம் மற்றும் ஜைனம் ஆகிய நெறிகளின் ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்ஆசீவகம் நிறுவியவர்கள்ஆசீவகம் நூல்கள்ஆசீவகம் இவற்றையும் பார்க்கஆசீவகம் மேற்கோள்கள்ஆசீவகம் நூல்கள்ஆசீவகம் வெளி இணைப்புகள்ஆசீவகம்தத்துவம்துறவுதொல்பொருளியல்புத்தர்பொது ஊழிமகாவீரர்மற்கலி கோசாலர்மெய்யியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கார்த்திக் (தமிழ் நடிகர்)விடுதலை பகுதி 1இந்து சமயம்ஏலகிரி மலைபதினெண்மேற்கணக்குதேவயானி (நடிகை)இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்புறப்பொருள்பாலை (திணை)நரேந்திர மோதிதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்காச நோய்கல்விக்கோட்பாடுஅறுபடைவீடுகள்நவதானியம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)வீரமாமுனிவர்விஜய் (நடிகர்)நீரிழிவு நோய்வரலாறுஉடன்கட்டை ஏறல்சங்க காலம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஐம்பெருங் காப்பியங்கள்எல் நீனோ-தெற்கத்திய அலைவுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெண்களின் உரிமைகள்சைவத் திருமுறைகள்முல்லைப்பாட்டுஇலங்கையின் தலைமை நீதிபதிதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்அக்கிஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தூது (பாட்டியல்)நாழிகைநீர்புதினம் (இலக்கியம்)மரபுச்சொற்கள்ஆந்திரப் பிரதேசம்தாயுமானவர்வன்னியர்மகாபாரதம்எஸ். ஜானகிபசுமைப் புரட்சிவிவேகானந்தர்69 (பாலியல் நிலை)கொன்றைதனிப்பாடல் திரட்டுபாசிப் பயறுமியா காலிஃபாபுறாமுதற் பக்கம்2019 இந்தியப் பொதுத் தேர்தல்உலா (இலக்கியம்)இரண்டாம் உலகம் (திரைப்படம்)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்திராவிட முன்னேற்றக் கழகம்வராகிகணியன் பூங்குன்றனார்முத்தொள்ளாயிரம்மூகாம்பிகை கோயில்ஊராட்சி ஒன்றியம்பல்லவர்தஞ்சைப் பெருவுடையார் கோயில்மாநிலங்களவைபெரியபுராணம்கூர்ம அவதாரம்பரிபாடல்ரெட் (2002 திரைப்படம்)புற்றுநோய்பாரிஅகத்திணைபூனை🡆 More