சில்வியா பிளாத்

சில்வியா பிளாத் (Sylvia Plath, அக்டோபர் 27, 1932 - பிப்ரவரி 11, 1963) ஓர் அமெரிக்கப் பெண் கவிஞரும், புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார்.

குறிப்பாக, அவரது கவிதைகளுக்காக அறியப்படுகிறார்; பாவமன்னிப்பு வெளிப்பாட்டுக் கவிதைப்பாணியை முன்னெடுத்துச் சென்றதில் இவரது பங்கு சிறப்பானது. கொலொசஸ் மற்றும் பிற கவிதைகள், ஏரியல் ஆகியன இவரது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்புகள் ஆகும். தி பெல் ஜார் என்ற பகுதித் தன்வரலாற்றுப் புதினத்தை விக்டோரியா லூகாசு எனும் புனைப் பெயரில் எழுதினார். 1982இல் இவரது கலக்டெட் போயம்ஸ் கவிதைத் தொகுப்புக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. இறப்புக்குப் பின்னர் புலிட்சர் பரிசு பெற்ற முதல் கவிஞர் பிளாத்.

சில்வியா பிளாத்
1957இல் பிளாத்
1957இல் பிளாத்
பிறப்புஅக்டோபர் 27, 1932
சமேய்க்கா பிளெயின், பாசுட்டன், மாசாச்சுசெட்ஃசு, ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 11, 1963(1963-02-11) (அகவை 30)
இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
புனைபெயர்விக்டோரியா லூக்காசு
தொழில்கவிஞர், புதின எழுத்தாளர், சிறுகதையாளர்.
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
கல்விகேம்பிரிட்ச் பல்கலைக்கழகம்
கல்வி நிலையம்சுமித் கல்லூரி
காலம்1960–1963
வகைதன்வரலாறு, குழந்தைகள் இலக்கியம், பெண்ணியம், உளநலம், ரொமான் ஆ கிளே (roman à clef)
இலக்கிய இயக்கம்பாவமன்னிப்பு வெளிப்பாடு கவிதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி பெல் ஜார் மற்றும் ஏரியல்
குறிப்பிடத்தக்க விருதுகள்ஃபுல்பிரைட் உதவித்தொகை
கிளாஸ்காக் பரிசு
1955

புலிட்சர் பரிசு
1982 தி கலெக்டெட் போயம்ஸ்

வூட்ரோ வில்சன் கூட்டாளர் உதவித்தொகை
துணைவர்டெட் ஃகியூசு
பிள்ளைகள்ஃபிரீடா ஃகியூசு, நிக்கலோசு ஃகியூசு )

வாழ்க்கை வரலாறு

மாசச்சூசெட்சு மாநிலத்தில் பிறந்த பிளாத், சுமித் கல்லூரியிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நியூன்கம் கல்லூரியிலும் கல்வி கற்றார். எழுத்தாளராக புகழ் பெற்ற பின்னர் கவிஞரான டெட் ஹியூக்சை மணந்தார். அமெரிக்காவிலும் பின் இங்கிலாந்திலும் வாழ்ந்த இந்த இணைக்கு ஃபிரைடா, நிக்கோலசு என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். உளச்சோர்வினால் நெடுநாட்கள் பாதிக்கப்பட்டிருந்த பிளாத் தன் கணவரைப் பிரிந்து சில ஆண்டுகள் வாழ்ந்தார். 1963 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது வாழ்வு, தற்கொலை குறித்து பல விவாதங்கள் நிலவுகின்றன.

குழந்தைப்பருவம்

அமெரிக்காவின் மாசாச்சூசெட்சு மாநிலத்தின் ஜமைக்கா பிளெய்னென்ற ஊரில் பெரும் பொருளியல் வீழ்ச்சிக் காலத்தில் பிளாத் பிறந்தார். இவரது தாய் ஆரேலியா ஷோபர் பிளாத் முதல் தலைமுறை ஆத்திரிய குடிவழி அமெரிக்கர்; தந்தை ஓட்டோ எமில் பிளாத் இடாய்ச்சுலாந்தின் (செருமனியின்) கிராபோவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். பிளாத்தின் தந்தை ஓட்டோ பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியல், இடாய்ச்சு (செருமன்) பேராசிரியராகப் பணிபுரிந்தார். பம்பிள்பீ என்னும் ஒருவகைத் தேனீ பற்றிய ஒரு புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். பிளாத்தின் தாய் ஆரேலியா அவருடைய கணவரை விட ஏறக்குறைய இருபத்தோரு ஆண்டுகள் இளையவராவார். இவர் ஓட்டோவைச் சந்தித்தபோது ஓட்டோ தனது குடும்பத்திலிருந்து தனித்திருந்தார். ஏனெனில், அவரது பாட்டனார்களின் விருப்பப்படி அவர் உலூத்தரன் சமய குருவாக மறுத்ததால் குடும்பத்தினருடன் இவ்விரிசல் ஏற்பட்டிருந்தது. ஆசிரியர் பயிற்சிக் கல்வியின் முதுகலைப் படிப்பிற்காக ஓட்டோவின் வகுப்புகளில் மாணவியாய் ஆரேலியா சேர்ந்த போது இருவரும் முதலில் சந்தித்து திருமணம் செய்துகொண்டனர்.

1935 ஆம் ஆண்டு ஏப்ரலில், பிளாத்தின் தம்பி வாரென் பிறந்தார். அதன் பிறகு பிளாத் குடும்பம், மாசாசூசெட்சின் வின்த்ரோப் எனும் ஊரில் 1936 ஆம் ஆண்டில் குடியேறியது. பிளாத்தின் தாயார் ஆரேலியா, வின்த்ரோப்பில் வளர்ந்தவர். அவரது தாய்வழி பாட்டனார்களான ஷோபர் குடும்பம் வாழ்ந்த வின்த்ரோப் நகரின் 'பாயிண்ட் ஷெர்லி' என்ற இடம் பிளாத்தின் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் வாய்ந்த சில்வியா பிளாத்தின் முதல் கவிதை அவருக்கு எட்டு வயது ஆனபோது பாஸ்டன் ஹெரால்ட் இதழின் சிறுவர் பிரிவில் வெளியானது. துவக்கக் காலத்தில் எழுத்துத்திறனோடு ஓவியத் திறனும் கொண்டிருந்தார். தனது ஓவியங்களுக்காக 1947 இல் தி ஸ்கோலஸ்டிக் ஆர்ட் & ரைட்டிங் விருதினை வென்றார்.

சில்வியா பிளாத்தின் தந்தை ஓட்டோ பிளாத்துக்கு , நீரிழிவு நோயின் காரணமாக அவரின் ஒரு கால் வெட்டியெடுக்கப்பட்டிருந்தது. அதனால் விளைந்த சிக்கல்களால் 1940 ஆம் ஆண்டு நவம்பர் ஐந்தாம் தேதி ஓட்டோ மரணமடைந்தார். இதற்கு சில காலம் முன்னர் ஓட்டோவின் நெருங்கிய நண்பரொருவர் நுரையீரல் புற்று நோயால் மாண்டிருந்தார். அவரது நோய் உணர்குறிகள் தன்னுடையதைப் போலவே இருப்பதாகக் கருதிய ஓட்டோ தனக்கும் புற்றுநோய் தான் என்று நம்பினார். இதனால் அவரது நீரிழிவு நோய் முற்றும் வரை சிகிச்சை எடுப்பதைத் தாமதப்படுத்திவிட்டார். இறையொருமையாளராக (யூனிட்டேரியன் கொள்கையர்) வளர்க்கப்பட்டிருந்த சில்வியா பிளாத்தின் கடவுள் நம்பிக்கை தந்தையின் இறப்பால் தகர்ந்தது. அதன் பின் வாழ்நாள் முழுவதும் சமயம் குறித்து சில்வியா நிலையான கொள்கை எதுவும் கொண்டிருக்கவில்லை. ஓட்டோ பிளாத் விந்த்ரோப் கல்லறையில் புதைக்கப்பட்டார். அவரது கல்லறைக்குச் சென்ற அனுபவம் சில்வியாவை “எலெக்ட்ரா ஆன் அசெலியா பாத்” என்ற கவிதையை எழுதத் தூண்டியது. 1942 இல் சில்வியாவின் தாய் ஆரேலியா தன் பெற்றோர், குழந்தைகளுடன் மாசாச்சூசெட்சின் வெல்லெசுலி நகரில் எல்ம்வூட் சாலை, இலக்கம் 26 என்ற முகவரிக்கு குடிபெயர்ந்தார். வெல்லெசுலி நகரின் பிராட்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளியில் படித்த சில்வியா 1950 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வியை முடித்தார்.

கல்லூரி ஆண்டுகள்

பிளாத், ஸ்மித் கல்லூரியில் படித்தார். இளங்கலை வகுப்புக்களின் போது யேலில் படித்த டிக் நார்டன் என்பவருடன் காதல் சந்திப்புக்களில் ஈடுபட்டார். நார்டன்,தி பெல் ஜார் புதினத்தின் (Buddy) கதாபாத்திரத்தின் அடிப்படையாக இருந்தவர். இவருக்கு எலும்புருக்கி நோய் தொற்றி சாரானக் ஏரிக்கருகிலிருந்த ரே பிரூக் எலும்புருக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிளாத் நார்டனைக் காண பனி நடைக் கட்டையில் செல்கையில் கால்களை உடைத்துக் கொண்டார், தி பெல் ஜார் புதினத்தில் கற்பனையாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிளாத், ஸ்மித் ரெவியூ இதழின் ஆசிரியாராகப் பணியாற்றினார். கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் மேடமோசெல் இதழில் ஒரு விருந்தினர்-ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதன் மூலம் நியூயார்க் நகரில் ஒரு மாதம் வாழும் வாய்ப்பு கிட்டியது. அந்த அனுபவம் அவர் எதிர்பார்த்தது போல அமையவில்லை, மாறாக அவரது மனநிலைச் சரிவின் துவக்கமாக அமைந்தது. அந்தக் கோடைக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் பின்பு தி பெல் ஜார் புதினத்தின் அடிப்படையாக அமைந்தன. இக்காலகட்டத்தில் பிளாத் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர் பயிலரங்கு ஒன்றுக்குத் தேர்வு பெறத் தவறினார். உளச்சோர்வுக்காக மின்வலிப்பு சிகிச்சை பெற்றார். ஆகஸ்ட் 1953இல், பிளாத் தன் வீட்டின் அடிப்புறம் ஒளிந்து கொண்டு ஏராளமான தூக்க மாத்திரைகளை விழுங்கித் தற்கொலை செய்ய முயன்றார். இதுவே மருத்துவ நோக்கில் பதிவு செய்த அவரது முதல் தற்கொலை முயற்சி. மூன்று நாட்கள் அங்கு நினைவற்றுக் கிடந்த பிளாத்தைக் கண்டுபிடித்துக் காப்பாற்றினார்கள். அடுத்த ஆறு மாதங்களை மக்லீன் மருத்துவமனையின் மனநிலைப் பிரிவில் கழித்தார். அங்கு மருத்துவர் ரூத் புரூஷர் மேற்பார்வையில் அவருக்கு மின் அதிர்வு, இன்சுலின் அதிர்வு சிகிச்சை வழங்கப்பட்டது. பிளாத்தின் மருத்துவமனைச் செலவுகளை அவருக்கு ஸ்மித் கல்லூரி உதவித்தொகை வழங்கிய ஆலிவ் ஹிக்கின்ஸ் புரோட்டி என்பவரே ஏற்றுக்கொண்டார். சிகிச்சை நல்ல பலனளித்தது போல் தோன்றியது; மீண்டு வந்த பிளாத் 1955ஆம் ஆண்டு ஸ்மித் கல்லூரியிலிருந்து மிக அதிகமான மதிப்பெண் தரத்துடன் பட்டம் பெற்றார். அவர் முன்வைத்த ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு - ”மாயக் கண்ணாடி - தஸ்தயெவ்ஸ்கியின் இரு புதினங்களில் இருமை பற்றிய ஒரு ஆய்வு” என்பதாகும். பிளாத் ஏற்கத்தக்க அளவில் மீண்டு வருவதாகக் காணப்பட்டது. மேலும், 1955ஆம் ஆண்டு சூன் மாதம் ஸ்மித்திலிருந்து ஹானர்ஸ் பட்டத்தை பெற்றார்.

பிளாத், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நியூன்ஹாம் கல்லூரியில் சேர ஃபுல் பிரைட் உதவித்தொகை கிடைத்தது. அங்கு தொடர்ந்து தன் கவிதைகளை எழுதியவர், தன் படைப்புகளை மாணவர் செய்தித்தாளான வார்சிட்டி யில் பதிப்பிக்கவும் செய்தார். நியூன்ஹாம் கல்லூரியில் பிளாத் இசுரேலிய இலக்கிய ஆய்வாளர் 'டோரத்தியா குரூக்' என்பவருடன் படித்தார்; குரூக் மீது அவருக்கு நல்ல மதிப்பு இருந்தது. தனது முதலாமாண்டு குளிர்கால, வசந்தகால விடுமுறை நாட்களின் போது ஐரோப்பிய கண்டத்தைச் சுற்றிப் பார்த்தார்..

தொழில் வாழ்க்கையும் திருமணமும்

கேம்பிரிட்ஜில் ஒரு கொண்டாட்டத்தின் போது, பிளாத் கவிஞர் டெட் ஹியூக்சைச் சந்தித்தார். ஹியூக்சின் சில கவிதைகளை முன்பே படித்து ரசித்திருந்தார். இருவரும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர்; சில மாதங்கள் கழித்து திருமணம் செய்து கொண்டனர். சூன் 16, 1956ம் ஆண்டு அவர்களது திருமணம் நடைபெற்றது. அவர்கள் தங்கள் தேனிலவை பெனிடோர்மில் கழித்தனர். அக்டோபர் 1956இல் நியூன்ஹாம் திரும்பிய பிளாத் தனது இரண்டாமாண்டு படிப்பைத் தொடங்கினார். இக்காலகட்டத்தில் அவருக்கு சோதிடம், மீயியற்கை போன்றவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. 1957 தொடக்கத்தில் பிளாத்தும் ஹியூக்சும் அமெரிக்கா திரும்பினர். பிளாத் தான் படித்த ஸ்மித் கல்லூரியில் ஆசிரியரானார். டிசம்பர் 1959 வரை இருவரும் அமெரிக்காவில் வாழ்ந்தும் பணியாற்றியும் வந்தனர். ஆனால் ஆசிரியப் பணிச்சுமையினூடே எழுதுவது கடினமாக இருந்ததால் 1958 நடுப்பகுதியில் தன் வேலையைத் துறந்தார். ஹியூக்சும் பிளாத்தும் பாஸ்டன் நகருக்குக் குடி பெயர்ந்தனர்.

மாசச்சூசெட்ஸ் பொது மருத்துவமனையில் வரவேற்பாளராக வேலைக்குச் சேர்ந்த பிளாத் மாலை நேரங்களில் கவிஞர் ராபர்ட் லோவெல் நடத்திய எழுத்துப் பயிலரங்கு வகுப்புகளில் கலந்து கொண்டார். அதே வகுப்புகளில் ஆனி செக்ஸ்டன், ஜார்ஜ் ஸ்டார்பக் ஆகிய எழுத்தாளர்களும் கலந்து கொண்டனர். லோவல் மற்றும் செக்ஸ்டனின் தூண்டுதலால் தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கவிதை எழுதத் தொடங்கினார். தனது உளச்சோர்வு, தற்கொலை முயற்சிகள் பற்றிய செய்திகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். செக்ஸ்டனின் தூண்டுதலால், பெண்களின் நோக்கிலிருந்து கவிதைகளை எழுதத்தொடங்கினார். இச்சமயத்தில் பிளாத்தும் ஹியூக்சும் முதல் முறையாக கவிஞர் டபிள்யூ. எஸ் மெர்வினை சந்தித்தனர். அவர்களது எழுத்துப் பணியைக் கண்டு வியந்த மெர்வின் அன்று முதல் அவர்களது நண்பரானார். டிசம்பர் 1958 இல் பிளாத் மீண்டும் மனநல சிகிச்சை எடுக்கத் தொடங்கினார்.

கனடா, அமெரிக்கா முழுக்க சுற்றி வந்த பிளாத்தும் ஹியூக்சும் 1959 இல் நியூயார்க் மாநிலத்தின் யாட்டோ கலைஞர் குடியிருப்பில் தங்கினர். பிளாத் இங்கு தான் தனது புதிரான தன்மையை உணர்ந்ததாக பின்பு குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பிறகு தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் பாவமன்னிப்பு வெளிப்பாடு நடையில் கவிதைகளை எழுதத் தொடங்கினார். திசம்பர் 1959இல் இருவரும் ஐக்கிய இராச்சியத்துக்குத் திரும்பி இலண்டனில் குடியேறினர். ஏப்ரல் 1, 1960இல் அவர்களது முதல் மகள் ஃபிரீடா பிறந்தார். அதே ஆண்டு அக்டோபர் மாதம் பிளாத்தின் முதல் கவிதைத் தொகுதியான தி கலோசஸ் வெளியானது. பிப்ரவரி 1961இல் பிளாத்துக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அவரது பல கவிதைகள் இந்த நிகழ்வைக் குறிப்பிடுகின்றன. அதே ஆண்டு ஆகத்து மாதம் 'தி பெல் ஜார்' புதினத்தை எழுதி முடித்தார். பின் பிளாத் குடும்பம் இலண்டனில் இருந்து டெவன் கவுண்ட்டியிலிருந்த நார்த் டாட்டன் என்ற சிறுநகரத்துக்கு குடி பெயர்ந்தது. இங்கு சனவரி 1962-இல் பிளாத்தின் மகன் நிக்கோலஸ் பிறந்தார். 1962 கோடைக்காலத்தில் ஹியூக்ஸ் தேனீ வளர்க்கத் தொடங்கினார். பிளாத்தின் பல கவிதைகளில் தேனீக்களைக் குறிப்பிட்டுள்ளார்.

சூன் 1962இல் பிளாத் தன் மகிழுந்தை விபத்துக்குள்ளாக்கித் தற்கொலைக்கு முயன்றார். சூலை மாதம் தனது கணவர் ஹியூக்ஸ் அஸ்சியா வெவில் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்தார். செப்டம்பர் மாதம் பிளாத்தும் ஹியூக்சும் பிரிந்து வாழத் தொடங்கினர். அக்டோபர் 1962 இல் பிளாத்தின் படைப்பாற்றல் உச்சத்தை எட்டியது. பிற்காலத்தில் மிகவும் அறியப்பட்ட அவரது படைப்புகள் பெரும்பாலும் இக்காலகட்டத்தில் எழுதப்பட்டவை தாம். திசம்பர் 1962இல் பிளாத் தன் குழந்தைகளுடன் இலண்டனுக்குத் திரும்பினார். ஃபிட்ஸ்ராய் சாலை இலக்கம் 23 என்ற வீட்டில் குடியேறினார். அவரது உளச்சோர்வு மீண்டும் திரும்பினாலும், தனது கவிதைத் தொகுப்பை எழுதி முடித்தார். சனவரி 1963இல் அவரது 'தி பெல் ஜார்' புதினமும் வெளியானது.

இறப்பு

சில்வியா பிளாத் 
பிளாத்தின் ஹெப்டான்ஸ்டால் சர்ச், வெஸ்ட் யார்க்ஷயர்

பெப்ரவரி 11, 1963 அன்று பிளாத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வுக்குச் சில வாரங்கள் முன்பு அவரது மருத்துவர் அவருக்கு உளச்சோர்வு எதிர்ப்பு மருந்துகளைத் தந்திருந்தார். பிளாத் இருந்த மனநிலையில் அவரைக் குழந்தைகளுடன் தனித்து விடக் கூடாதென்பதால் அவர்களுடன் வாழ ஒரு செவிலியரையும் ஏற்பாடு செய்திருந்தார். பெப்ரவரி 11 அன்று காலை பணிக்கு வந்த செவிலி, பிளாத் தனது சமையலறையில் இறந்து கிடப்பதைக் கண்டார். பிளாத் தனது மின் அடுப்பில் தலையை நுழைத்து எரிவாயுவைத் திறந்து விட்டிருந்தார். இதனால் கார்பன் மோனாக்சைடு வாயுவினை முகர்ந்து அதன் நச்சுத்தன்மை காரணமாக இறந்திருந்தார். கார்பன் மோனாக்சைடு சமையலறையிலிருந்து தன் குழந்தைகள் இருந்த பிற அறைகளுக்குப் பரவாமலிருக்க கதவிடுக்குகளை ஈரத்துணிகள் கொண்டு அடைத்திருந்தார். அடுத்த நாள் நடந்த காவல்துறை புலனாய்வு அவரது இறப்பு தற்கொலை என உறுதி செய்தது. பிளாத்தின் இறப்பு குறித்த சில சர்ச்சைகள் உருவாகின. அவர் தன்னைத் தானே கொல்வதை நோக்கமாகக் கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டது. எனினும் காலப்போக்கில் அவரது இறப்பு தற்கொலையே என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

படைப்புகள்

இதழ்கள்

பதினோராம் வயதில் நாட்குறிப்பு எழுதுவதைத் துவங்கிய பிளாத் தனது இறப்பு வரையிலும் அதைத் தொடர்ந்தார். சிறுமிப் பருவத்துக்குப் பிறகான அவருடைய நாட்குறிப்புகள், ஸ்மித் கல்லுரியில் முதல் ஆண்டு இளங்கலை மாணவராக இருந்த 1950ஆம் ஆண்டில் துவங்குகிறது. அவை 1980ஆம் ஆண்டில் முதல் முறையாக தி ஜர்னல்ஸ் ஆஃப் சில்வியா பிளாத் என்ற பெயரில் பிரான்செஸ் மெக்கால்லோவினால் தொகுத்து வெளியிடப்பட்டன. 1982ஆம் ஆண்டில், ஸ்மித் கல்லூரி பிளாத்தின் மீதமுள்ள நாட்குறிப்புகளை கையகப்படுத்தியபோது அவற்றில் இரண்டை மட்டும் 2013ஆம் ஆண்டு வரை (பிளாத் இறந்து ஐம்பது ஆண்டுகள் வரை) திறக்காது வைத்திருக்க அவரது கணவர் ஹியூக்ஸ் ஏற்பாடு செய்து விட்டார்.

ஹியூக்ஸ் தனது வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் பிளாத்தின் நாட்குறிப்புகளின் முழுமையான பதிப்பினை வெளியிடும் பணியைத் துவங்கினார். 1998ஆம் ஆண்டில், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், முன்பு திறக்காது இருக்கச் செய்த இரு நாட்குறிப்புகளைப் பதிப்பிக்கும் தடையினை நீக்கி, முழுப்பதிப்பினை கொண்டுவரும் பணியினை தன் குழந்தைகளிடம் ஒப்படைத்தார். அவர்கள் கரேன் வி.குகில்லிடம் அப்பொறுப்பினை ஒப்படைத்தனர். குகில் டிசம்பர் 1999ஆம் ஆண்டில் தன் தொகுப்புப் பணியை முடித்தார்; 2000ஆம் ஆண்டில் அதனை ஆங்கர் புக்ஸ் நிறுவனம் ”தி அனப்ரிட்ஜ்ட் ஜர்னல்ஸ் ஆஃப் சில்வியா பிளாத்” என்ற பெயரில் வெளியிட்டது. பிளாத்தின் நாட்குறிப்புகளை கையாண்ட விதத்திற்காக ஹியூக்சை விமரிசித்தனர். ஹியூக்ஸ் பிளாத்தின் இறுதி நாட்களைப் பதிவு செய்த நாட்குறிப்பை தன் குழந்தைகள் படிப்பதை விரும்பவில்லையாததால் அதனை அழித்து விட்டதாகப் பதிவு செய்துள்ளார்.

கவிதைகள்

பிளாத் ஸ்மித் கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற ஆண்டில் (1955) டூ லவ்வர்ஸ் அண்ட் அ பீச்கோம்பர் பை தி ரியல் சீ என்ற கவிதைக்காக 'கிளாஸ்காக்' பரிசை வென்றார். பிளாத் மனிதப் பேரழிவினை மறைமுகமாக சர்ச்சைக்குரிய விதத்தில் குறிப்பிடுவதற்காக விமரிசித்தனர். அவரது உலக இயல்பிற்கு மாறான இரு பொருள் சொல் ஒப்பீடுகளின் பயன்பாடு இவரது கவிதைகளில் காணப்பட்டது. அவரது படைப்புகளை ஆன் செக்ஸ்டன், டபிள்யூ.டி. ஸ்னோட்கிராஸ் மற்றும் பிற பாவ மன்னிப்புத் தொனி கவிஞர்களின் படைப்புகளுடன் ஒப்பிட்டுத் தொடர்புப்படுத்துகிறார்கள். பிளாத்தின் முதல் கவிதை நூல் கலோசஸ் விமரிசகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்றது. அவரது பின்னாளைய படைப்புக்களில் தாராளமாகப் பாயும் கற்பனை, ஆழத்துடன் ஒப்பிடும் போது "கலோஸஸ்" ஏதோ ஒரு வகையில் தடுமாறும் மரபு அடிப்படையிலான படைப்பாக இருந்தது.

ஏரியலில் காணப்படும் கவிதைகள் அவரது முன்னாளைய படைப்புக்களிலிருந்து விலகி தனிப்பட்டக் கவிதைத் தளங்களுக்கு அதிகமாகச் சென்றதைக் குறித்தன. இந்த மாற்றத்தில் லோவெல்லின் ”பாவமன்னிப்புக் கவிதைப்" பாணியின் தாக்கம் உள்ளது. பிளாத் இறப்பதற்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் லோவெல்லின் லைஃப் ஸ்டடீஸ் தனது படைப்புகளில் தாக்கம் ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். 1982ஆம் ஆண்டில் தி கலெக்டட் போயம்ஸ் தொகுப்புக்காகப் புலிட்சர் பரிசை வென்றார். இதன் மூலம் இறந்த பிறகு புலிட்சர் விருதை வென்ற முதல் கவிஞரானார்.

டெட் ஹியூக்ஸ் சர்ச்சை

பிளாத் இறந்த போது சட்டப்படி ஹியூக்ஸ் அவரது கணவராக இருந்தபடியால், பிளாத்தின் சொத்துகள் அனைத்துக்கும் அவரே வாரிசானார். பிளாத்தின் நாட்குறிப்புகளுள் ஒன்றை அழித்தது, ஒன்றைத் தொலைத்தது, சிலவற்றை 2013 வரை வெளியிடக் கூடாது என்று தடை விதித்தது போன்ற அவரது செயல்கள் சர்ச்சைகளை உருவாக்கின. பிளாத்தின் நூல்கள் விற்பனையிலிருந்து வரும் வருவாயை அவர் சொந்த நலனுக்காகப் பயன்படுத்துகிறார் என்ற சர்ச்சைகளும் எழுந்துள்ளன. (அந்த வருவாய் ஃபிரைடா மற்றும் நிக்கோலசின் பராமரிப்புக்காக நிறுவப்பட்ட அறக்கட்டளையால் நிருவகிக்கப்படுகின்றது). பிளாத் இறந்து வெகுநாட்களுக்கு அவருடன் கொண்டிருந்த உறவு பற்றி ஹியூக்ஸ் வெளிப்படையாக ஒன்றும் சொல்லவில்லை. 1998 க்குப்பிறகு தங்கள் இருவருக்கிடையேயான உறவு பற்றி தான் எழுதிய 88 கவிதைகளை பர்த்டே லெட்டர்ஸ் என்ற கவிதைத் தொகுப்பாக வெளியிட்டார்.

நூல்விவரத் தொகுப்பு

கவிதை

  • தி கலோசஸ் அண்ட் தி அதர் போயம்ஸ் (1960)
  • ஏரியல் (1965), கவிதைகளான "டூலிப்ஸ்", "டாடி", "ஏரியல்", "லேடி லாசருஸ்" மற்றும் "தி ம்யூனிச் மன்னெகுயின்ஸ்"
  • த்ரி வுமன்: அ மோனோலாக் ஃபார் திரீ வாய்சஸ் (1968)
  • கிராசிங் தி வாட்டர் (1971)
  • விண்டர் ட்ரீஸ் (1971)
  • தி கலெக்டெட் போயம்ஸ் (1981)
  • செலக்டட் போயம்ஸ் (1985)
  • பிளாத்: கவிதைகள் (1998)

உரைநடை

  • தி பெல் ஜார் (1963), "விக்டோரியா லூகாஸ்" என்ற புனைப்பெயரின் கீழ்.
  • லெட்டர்ஸ் ஹோம் (1975)
  • ஜானி பேனிக் அண்ட் தி பைபிள் ஆஃப் ட்ரீம்ஸ் (1977)
  • தி ஜர்னல் ஆஃப் சில்வியா பிளாத் (1982)
  • தி மேஜிக் மிர்ரர் (1989), பிளாத்தின் ஸ்மித் கல்லூரி முதுகலைப் பட்ட ஆய்வறிக்கை.
  • தி அன்பிரிட்ஜ்ட் ஜர்னல்ஸ் ஆஃப் சில்வியா பிளாத் , கரேன் வி. குகில் (2000)

ஒலிப்பதிவு கவிதை வாசிப்புக்கள்

  • சில்வியா பிளாத் ரீட்ஸ் , ஹார்ப்பர் ஆடியோ 2000

சிறார் புத்தகங்கள்

  • தி பெட் புக் (1976)
  • தி டஸ் நாட் மேட்டர் சூட் (1996)
  • கலெக்டட் சில்ரன் ஸ்டோரீஸ் (இங்கிலாந்து, 2001)
  • மிஸ்ஸெர்ஸ். செர்ரீ'ஸ் கிச்சன் (2001)

குறிப்புகள்

சில்வியா பிளாத் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sylvia Plath
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

சில்வியா பிளாத் வாழ்க்கை வரலாறுசில்வியா பிளாத் படைப்புகள்சில்வியா பிளாத் நூல்விவரத் தொகுப்புசில்வியா பிளாத் குறிப்புகள்சில்வியா பிளாத் மேற்கோள்கள்சில்வியா பிளாத் புற இணைப்புகள்சில்வியா பிளாத்19321963அக்டோபர் 27கவிதைசிறுகதைபிப்ரவரி 11புதினம்புலிட்சர் விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

திதி, பஞ்சாங்கம்பாரத ரத்னாசவாய் மான்சிங் விளையாட்டரங்கம்திருவண்ணாமலைதிரிகடுகம்தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்அழகர் கோவில்இந்திரா காந்திகலிங்கத்துப்பரணிவிந்துமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஅறுபது ஆண்டுகள்சேரர்திராவிட முன்னேற்றக் கழகம்ஆகு பெயர்கல்விமருத்துவம்அதிமதுரம்லோகேஷ் கனகராஜ்பஞ்சபூதத் தலங்கள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்தங்கர் பச்சான்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்செயற்கை நுண்ணறிவுமலையாளம்பேரூராட்சிமீனா (நடிகை)இரவு விடுதிசனீஸ்வரன்மாமல்லபுரம்சவூதி அரேபியாசூரியக் குடும்பம்கெத்சமனிமுதுமொழிக்காஞ்சி (நூல்)உணவுசித்தார்த்பல்லவர்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)திருவிளையாடல் புராணம்அ. கணேசமூர்த்திபால் கனகராஜ்இராமலிங்க அடிகள்கலாநிதி வீராசாமிஆசிரியர்தேனி மக்களவைத் தொகுதிமுதலாம் இராஜராஜ சோழன்புறநானூறுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005கிரிமியா தன்னாட்சிக் குடியரசுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்மதுரை மக்களவைத் தொகுதிஇந்திய தேசியக் கொடிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்அகத்தியமலைகம்பராமாயணம்வி. சேதுராமன்மோசேதிருமந்திரம்தமிழிசை சௌந்தரராஜன்வியாழன் (கோள்)பனைஇராமர்ஆழ்வார்கள்இந்திய மக்களவைத் தொகுதிகள்சிவாஜி (பேரரசர்)விண்ணைத்தாண்டி வருவாயாவேதநாயகம் பிள்ளைஐ (திரைப்படம்)கல்லீரல்மதுரைமருதமலை முருகன் கோயில்சிவாஜி கணேசன்மாதவிடாய்வாழைப்பழம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவரி🡆 More