குறிஞ்சிக்கலி

கலித்தொகை என்னும் தொகைநூலில் ஐந்து திணைகளையும் சார்ந்த 149 பாடல்கள் உள்ளன.

அவற்றில் குறிஞ்சித்திணையைச் சேர்ந்த 29 பாடல்கள் 37 முதல் 65 வரையில் எண் கொண்டனவாக உள்ளன. இந்தப் பாடல்களைப் பாடிய புலவர் கபிலர்.

பாடல் 1 முதல் 5

  • அங்கண் உடையன் அவன் - அவள் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தபோது அவன் வந்தான். சிறிது ஆட்டிவிடு என்றாள். அவன் ஆட்டிவிட்டான். அவள் மயங்கியவள் போல அவன்மேல் விழுந்து தழுவிக்கொண்டாள். பின்னர் விலகினாள். அவன் கண்ணோட்டப் பண்பு கொண்டவன். 'செல்க' என அனுப்பிவைத்தான்.
  • அறஞ்சாரான் மூப்பு – இருளில், மலையில், இவளிடம் வருகிறாய். அதைக் கண்டு இவள் நீரில்லாத நிலம் போல் மனம் வருந்துகிறாள். இதனை வைகறையில் பெய்த மழை போல மாற்றலாமே. பொருளில்லாதவன் போல் வருந்துகிறாள். இதனை அருளாக்கம் பெற்றவன் மனம் போல் ஆக்கலாமே. அறம் செய்ய முடியாமல் அகவையால் மூத்தவன் மனம் போல் வருந்துகிறாள். இதனை அறம் செய்வான் ஆக்கம் போல் வளரச் செய்யலாமே. திருமணம் செய்துகொள்ளலாமே
  • கேள்வர்த் தொழுது எழல் – தலைவன் இல்லாதபோது தலைவி தன் கேள்வனாகிய தலைவனைத் தொழுது எழுகிறாள், எனவே அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையள். என்றெல்லாம் எண்ணிய பெற்றோர் இருவர்கண்ணும் குற்றமில்லை என்று எண்ணித் திருமணத்துக்கு உடன்பட்டனர்.
  • பயமலை ஏத்தி அகவினம் பாடுவாம் – வள்ளைப் பாட்டில் அவன் மலையைப் பாடிக்கொண்டே குற்றுகின்றனர். கொடிச்சியர் கை போல் காந்தள் தொடுத்த தேன் சோரும் மலை. கடுவனைப் பற்றி மந்தி குறை கூறும் செம்மலை. பூந்தளிர் வாடுவது போல் தலைவியை வாடச் செய்தவன் மலை. தாது உண்டு வண்டில் துறப்பான் மலை. கருவுற்ற பெண்யானைக்கு ஆண்யானை மூங்கில் நுனியை வளைத்துத் தரும் மலை. – என்றெல்லாம் பாடினர். மறைந்திருந்து கேட்ட தலைவன் நேரில் வந்து தலைவியைத் தழுவிக்கொண்டான்.
  • வாராது அமைவானோ வாராது அமைவானோ – வள்ளைப் பாட்டில் அவன் மலையைப் பழித்தும் இயற்பழித்தும் புகழ்ந்தும் இயற்பட மொழிந்தும் பாடுகின்றனர். அவன் வாராமல் இருக்கமாட்டான். நீரில் இருக்கும் குவளை மலர் வெந்துபோகுமா? அதுபோல அவனது ஈர நெஞ்சில் வாராமை இருக்கமுடியுமா? – என்கின்றனர்.

பாடல் 6 முதல் 10

  • அஞ்சிவது அஞ்சா அறனிலி அல்லன் – யானைக் கோட்டால் மூங்கில் நெல்லைக் குற்றிக்கொண்டே பாடுவோம். தலைவி வாடுகையில் நாணாமல் இருப்பவன் மலை அருவி மட்டும் வெள்ளையாக ஒழுகுகிறதே என்றாள் தோழி. அவன் அறம் புரி நெஞ்சத்தவன் ஆதலால் ஆர்வுற்றார் நெஞ்சத்தை அழிய விடமாட்டான் என்று தலைவி தோழியை மறுக்கிறாள். இப்படிப்பட்ட பல வள்ளைப் பாட்டுகளைக் கேட்ட தலைவன் நேரில் வந்து தழுவியின் துன்பம் மறைந்தது.
  • நட்டார்க்குத் தோற்றலை நாணாதான் – அவன் நண்பர் முன் தோற்றுப்போக நாணாதவன். ஒருவர் தன் வறுமையைச் சொன்னால் அதனைப் போக்குவான். முடியாவிட்டால் தன் உயிரையே துறக்கும் பண்பினன். என்றெல்லாம் அவனது பண்பைப் போற்றி அவனது குன்றை வள்ளைப் பாட்டில் பாடினர். மறைந்திருந்து கேட்டவன் வந்து மணந்தான்.
  • பண்பினமை பிறர் கூறத் தான் நாணல் – தலைவன் வாராதிருக்கும் பண்பு இல்லாச் செயலைப் பிறர் கூறக் கேட்டால் தலைவி தனக்குப் பழி நேர்ந்தது போல நாணுவாளாம்.
  • சிதைத்ததை – இவள் கண்ணை அவன் சுனையில் பூத்த மலர் என்றோ, இவள் தோளை அவன மலையில் வளலும் மூங்கில் என்றோ, இவளது மேனியின் பொன்னிறத்தை அவன் மலையின் வேங்கைப்பூ என்றோ அவன் இல்லாமல் வாடிக்கிடக்கும் நிலையில் எப்படிக் கூறமுடியும் – என்றெல்லாம் பாடக்கேட்டு மணநாள் குறித்தனர்.
  • நயன் நாடி நட்பாக்கும் வினைவர் – அவன் வருவான் என்று அவள் இரவில் நொச்சிச்செடி அசைவைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவனோ அவள் வரவில்லை என ஏமாந்து திரும்பிவிட்டான். அவள் கடவுட்குக் கடம்பூண்டு அவனை நினைத்திருந்தாள். இப்படி இருவரும் அவரவர் துன்பத்தையே கூறிக்கொண்டிருந்தனர் இது கூறியதை எதிரொலித்துக் காட்டும் அவன் மலையின் தன்மை போல் உள்ளது.

பாடல் 11 முதல் 15

  • நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன் – அவன் அவளிடம் இரப்பவன் போல் கெஞ்சுகிறான். புரப்பவன் போல் பெருமிதம் கொள்கிறான். வல்லாரை வழிபட்டவன் போல நடந்துகொள்கிறான். நல்லவர்களிடம் தோன்றும் அடக்கம் இவனிடம் உள்ளது. இல்லாதவர்களின் இன்னலைப் போக்கும் வன்மை இவனிடம் உள்ளது. இப்படிப்பட்டவன் “நீ கைவிட்டால் உயிர் வாழமாட்டேன்” என்று சொல்கிறானே இவனை நம்பாமல் என்ன செய்வது என்கிறாள் தலைவி.
  • பொன்னுரை மணியன்ன மாமை – அவன் வாராமையை எண்ணி எண்ணி அவள் மேனி பொன் உரைத்த கட்டளைக்கல் போல் ஆகிவிட்டது.
  • காதலை என்பதோ இனிது – அன்பினை என்பதோ இனிது, அருளினை என்பதோ இனிது. இருளிடை வருதல்தான் இன்னா – என்கிறாள் தோழி தவைவனிடம்
  • நல்கூர்ந்தார் செல்வ மகள் – இவள் வறுமையில் வாடுபவனின் செல்வப்பெண். நீ தேரும் களிறும் மழைத்துளி போல் வழங்கும் வள்ளலின் மகன். மான்குட்டியை வளர்ப்பவர் சீராட்டுவது போல நீ இவளிடம் நடந்துகொள்கிறாயோ – என்கிறாள் தோழி.
  • சிறுபட்டி – என் சிற்றிலைச் சிதைத்துவிட்டுப் பந்தை எடுத்துக்கொண்டு ஓடிய குறும்புக்காரன் நானும் தாயும் இருக்கும்போது வீட்டுக்கு வந்தான். வேட்கைக்கு நீர் கேட்டான். தாய் பொற்கிண்ணத்தில் நீர் தந்து ஊட்டி வா என்றாள். சென்றபோது என் கையை வளையலோடு பற்றிக்கொண்டான். “அன்னா இவன் செய்வதைப் பார்” என்று ஓலமிட்டேன். அன்னை பதறி ஓடிவந்தாள். நான் அவன் செயலை மறைத்து “உண்ணும் நீர் விக்கினான்” என்றேன். அந்தக் கள்வன்-மகனோ என்னைக் கடைக்கண்ணால் பார்த்து நகைக்கூட்டம் செய்தான்.

பாடல் 16 முதல் 20

  • வதுவை அயர்தல் வேண்டும் – இரவில் வந்தால் கவணை, ஞெகிழி, வில்லம்பு ஏந்திய இங்குள்ள காவலர் உன்னைக் களிறு என எண்ணக்கூடும். எனவே வைகறைப் பொழுதில் தமருடன் வந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் – என்கிறாள் தோழி, தலைவனிடம்.
  • மறையினின் பணந்து ஆங்கே மரு அறத் துறந்தான் – மணத்தல் என்பது சேர்தல் தணத்தல் என்பது பிரிதல். மருவுதல் என்பது தழுவுதல். அவன் அவளை ஆருக்கும் தெரியாமல் மறைமுகமாக மணந்தான். பின் மருவுதலையும் விட்டுவிட்டான். அதனால் வளையல் கழல்தலையும் ஏற்றுக்கொள்வேன். அதைப் பார்த்து ஊரார் அலர் தூற்ற, கயல் உமிழும் நீர் போல கண்கள் கலுழ்கின்றனவே, என் செய்வேன் – என்கிறாள் தலைவி
  • குரலமை ஒருகாழ் விரல்முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் .- அவள் விரலில் வயிரத்தால் செய்யப்பட்ட குரல் என்னும் மோதிரத்தைச் சுழற்றி விட்டான். சுற்றிவிட்டு முத்தம் கொடுத்தான். இதற்கு மோத்தல் என்று பெயர். தொய்யில் முலையைத் தடவிக்கொடுத்தான்.
  • தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான் – தொழூஉம், தொடூஉம் அவன் பண்பு, ஏழைத்தன்மை உடையது அன்று என்கிறாள் தலைவி.
  • தூதுணம் புறவு – மென்மையால் அவள் ‘ஆய்தூவி அன்னம்’. ஆடா அடக்கத்தால் அவள் ‘அணிமயில் பேடை’. நடக்கும் அழகால் அவள் ‘தூதுணம் புறா’. மருண்ட பார்வையால் அவள் மான். – இவற்றைக் கண்டால் பித்து ஏறாதா? என்கிறான் அவன்.

பாடல் 21 முதல் 25

  • அறிவு அகப்படுத்தே – அவள் என் அறிவைக் கட்டி எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள் என்கிறான் தலைவன். இது குறிஞ்சியில் வந்த கைக்கிளை
  • வளமையால் போத்தந்த நுமர் – உன்மேல் தவறு இல்லை. வளம் மிக்க உடலோடு அனுப்பிவைத்த ஊன் பெற்றோரே தவறு உடையவர் என்கிறான் தலைவன். இது குறிஞ்சியில் வந்த கைக்கிளை
  • தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ – தை மாதத்தில் மகளிர் தவக்கோலத்துடன் சென்று ‘சிறுமுத்தன்’ என்னும் தெய்வத்தைப் பேணி நீராடுவர். அவன் அவளை இந்தக் கோலத்தில் கண்டு தகுமா எனக் கூறி ஏங்குகிறான்.
  • பொன்செய்வாம் – என் நோய்க்கு உன்னைத் தவிர வேறு மருந்து இல்லை என்கிறான். என்ன செய்யலாம் என வினவுகிறாள் தலைவி. அதற்கு விடையாகத் தோழி பொன்செய்வாம் என்கிறாள். இத் தொடருக்குச் சிறப்புச் செய்யலாம் என்பது ஒரு பொருள். அவனை நினைத்து நினைத்து மேனி வாடிம் பொன் நிறம் பெலாம் என்பது மற்றொரு பொருள்.
  • படுமடல் மா ஏறி மல்லல் ஊர் ஆங்கண் படுமே – நீ இணங்காவிட்டால் அவன் மடலேறி வந்து உன்னை அடைவான் என்று கூறித் தோழி தலைவியை இணங்க வைக்கிறாள். – பொருள் கைக்கிளை

பாடல் 26 முதல் 29

  • மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் – பாம்பு பற்றும் நிறைமதி பொன்றவர்களை வௌவிக் கொளலும் அறன் என்று இவன் செயல்படுகிறான். பருகும் நீர் வேட்கை உள்ளவனுக்குத்தான் இன்பம் தரும். நீருக்கா இன்பம்? இது பெருந்திணை.
  • கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல் – “தோளில் கரும்பு எழுதிவிடு” என்று சொல்லிக்கொண்டு அவனிடம் செல் என தோழி, நாணும் தலைவிக்கு நல்வழி காட்டுகிறாள்.
  • பொய்த்து ஒருகால் என்னை முயங்கினை சென்மோ – பொய்யாக என்னை அணைத்துக்கொண்டாலே போதும் என்கிறான் அவன். பொருள் கைக்கிளை
  • முடமுதிர்ப் பார்ப்பான் – தலைவி தலைவனுக்காகக் குறியிடத்தில் காத்திருந்தாள். தலைவன் குறியிடம் தவறிச் சென்றுவிட்டான். முதிர்ந்த பார்ப்பன முடவன் ஒருவன் அங்கு வந்தான். தம்பலம் தின்றியோ எனக் கேட்டுக்கொண்டே வெற்றிலைப்பாக்கை நீட்டினான். தலைவி பேசாமல் நின்றாள். “சிறுமி நீ அகப்பட்டுக்கொண்டாய்” என்று சொல்லிக்கொண்டு அவள் கையைப் பிடித்தான். அவள் வுடுவித்துக்கொண்டாள். ஊரில் சொல்லி உனக்குச் சோறு கிடைக்காமல் செய்துவிடுவேன் என்று கூச்சலிட்டாள். அத்துடன் ஒரு கை மண்ணை வாரி அவன்மேல் போட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். பார்ப்பான் செய்தியைக் கூறுபவர் அந்தணப் புலவர் கபிலர்.

மொழிநடை

திருக்குறள் ஆட்சி – அருமழை தரல் வேண்டின் தருகிற்கும் கற்பினளே, குறவர் மகளிர் தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் தம் ஐயரும் தாம் பிழையார் தாம் தொடுத்த கோல் என வரும் இப் பாடல் அடிகளில் தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுது எழுவாள், பெய் எனப் பெய்யும் மழை என்னும் திருக்குறளின் தாக்கம் இருப்பதைக் காண முடிகிறது.

காந்தருவ இடைமடக்கு

    புனவேங்கை தாதுறைக்கும் பொன் அறை முன்னில்,
    நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ,
    நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே,
    கனவிற் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ

என வரும் பாடலில்

    புன்னை நீழல் புலவுத் திரைவாய்
    அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்,
    அன்னம் நடப்ப, நடப்பாள் செங் கண்
    கொன்னே வெய்ய! கூற்றம், கூற்றம்!

என்னும் சிலப்பதிகார அடிகளின் இசைத் தாக்கத்தைக் காணமுடிகிறது.

புராணக் கதை பதிவு

நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல் என்னும அடியில் வீமன் துரியாதனனின் தொடையைப் பிளந்த கதை சொல்லப்பட்டுள்ளது.


சொல்லாட்சி

மன், மன என்னும் இடைச்சொற்கள் , பாடித்தை என்னும் ஏவல் வினைமுற்று, 'எல்லா' என்னும் இடைச்சொல் காணியவா என்னும் ஏவல் , யூகம் என்னும் குரங்கைக் குறிக்கும் சொல், மழைநீரைக் குறிக்கும் 'அயம்' என்னும் சொல்லாட்சி முதலானவை இந்த நூலில் காணப்படும் புதுமைகள்.

மாலை உவமம் - முகம் மதி போன்றது, மதி முகம் போன்றது என்று உவமையை மாலையாக்கிக் கொள்ளும் இந்நூலின் பாங்கு சங்க இலக்கியத்தில் புதுமையானது.

அடிக்குறிப்பு

  • எண்கள் கலித்தொகைப் பாடல் வரிசை எண்களைக் குறிப்பன

Tags:

குறிஞ்சிக்கலி பாடல் 1 முதல் 5குறிஞ்சிக்கலி பாடல் 6 முதல் 10குறிஞ்சிக்கலி பாடல் 11 முதல் 15குறிஞ்சிக்கலி பாடல் 16 முதல் 20குறிஞ்சிக்கலி பாடல் 21 முதல் 25குறிஞ்சிக்கலி பாடல் 26 முதல் 29குறிஞ்சிக்கலி மொழிநடைகுறிஞ்சிக்கலி புராணக் கதை பதிவுகுறிஞ்சிக்கலி சொல்லாட்சிகுறிஞ்சிக்கலி அடிக்குறிப்புகுறிஞ்சிக்கலிகபிலர்கலித்தொகைகுறிஞ்சித்திணை

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலையாளம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திவ்யா துரைசாமிஐராவதேசுவரர் கோயில்மருமகன் (திரைப்படம்)வட்டார வளர்ச்சி அலுவலகம்விருத்தாச்சலம்கார்லசு புச்திமோன்பௌத்தம்பிள்ளைத்தமிழ்அண்ணாமலையார் கோயில்அம்பேத்கர்காதல் கொண்டேன்இந்திய வட்டமேசை மாநாடுகள்முத்தொள்ளாயிரம்அற்புதத் திருவந்தாதிகருத்தரிப்புமறைமலை அடிகள்முதுமலை தேசியப் பூங்காகட்டபொம்மன்இயற்கை வளம்ஆபுத்திரன்திராவிட மொழிக் குடும்பம்சுரைக்காய்நயன்தாராமருதமலை முருகன் கோயில்புவி சூடாதல்வெப்பநிலைபரதநாட்டியம்விண்ணைத்தாண்டி வருவாயாநெசவுத் தொழில்நுட்பம்பனைதஞ்சைப் பெருவுடையார் கோயில்வேதநாயகம் பிள்ளைதமிழ் படம் 2 (திரைப்படம்)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சுந்தரமூர்த்தி நாயனார்பொருநராற்றுப்படைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கல்லணைகண்ணப்ப நாயனார்வெள்ளி (கோள்)நெடுநல்வாடைபீலிக்கணவாய்கொங்கு வேளாளர்சிலேடைதமிழ் இலக்கியப் பட்டியல்இந்தியத் தலைமை நீதிபதிதிருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தேவ கௌடாபாண்டியர்ஒற்றைத் தலைவலிஇலங்கையின் மாவட்டங்கள்சிலம்பம்புரோஜெஸ்டிரோன்எயிட்சுபவுல் (திருத்தூதர்)ஒத்துழையாமை இயக்கம்புதுமைப்பித்தன்நல்லெண்ணெய்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்குறிஞ்சி (திணை)கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்அக்பர்மேற்கு வங்காளம்கலிங்கத்துப்பரணிசுந்தர காண்டம்தீவட்டிப்பட்டி ஊராட்சிநாளந்தா பல்கலைக்கழகம்சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து இராஜ்யம்இரட்சணிய யாத்திரிகம்செஞ்சிக் கோட்டைபிரியா பவானி சங்கர்பெரியபுராணம்சுற்றுலாஇந்தியாவின் பசுமைப் புரட்சி🡆 More