ஜெர்மனி: மத்திய ஐரோப்பாவில் உள்ள நாடு

செருமனி (Germany, (உதவி·விவரம்)), அல்லது செருமன் கூட்டாட்சிக் குடியரசு (ஜெர்மானியம்: Bundesrepublik Deutschland (உதவி·விவரம்), IPA: ), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு.

இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆத்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்சு, லக்சம்பேர்க், பெல்சியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. செருமனியின் பரப்பளவு 357,021 கிமீ².

செருமானிய கூட்டாட்சி குடியரசு / இடாய்ச்சுலாந்து
Bundesrepublik Deutschland
கொடி of செருமனியின்
கொடி
சின்னம் of செருமனியின்
சின்னம்
குறிக்கோள்: செருமன்: Einigkeit und Recht und Freiheit
ஒற்றுமை நீதி மற்றும் விடுதலை
நாட்டுப்பண்: செருமனி நாட்டுப்பண்
(ஆங்கில மொழி: "Song of Germany")
(third verse only)
செருமனியின்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பெர்லின்
ஆட்சி மொழி(கள்)செருமன் 1
அரசாங்கம்கூட்டாட்சி குடியரசு
• அதிபர்
யோவாசிம் கவுக்
• முதலமைச்சர்
ஒலாஃப் சோல்த்சு
யேர்மன் இராச்சியம்
843
• ஒரு குடையாதல்
சனவரி 18 1871
• கூட்டாட்சி குடியரசு
மே 23 1949
• மீள் ஒரு குடையாதல்
அக்டோபர் 3 1990
பரப்பு
• மொத்தம்
357,050 km2 (137,860 sq mi) (63ஆவது)
• நீர் (%)
2.416
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
82,438,000 (14ஆவது)
• 2000 கணக்கெடுப்பு
N/A
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$2.522 திரில்லியன் (5ஆவது)
• தலைவிகிதம்
$30,579 (17ஆவது)
மமேசு (2003)0.930
அதியுயர் · 10ஆவது
நாணயம்யூரோ (€) 2 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (மத்திய ஐரோப்பிய கோடை நேரம்)
அழைப்புக்குறி49
இணையக் குறி.de
1 டனிசு மொழி, கீழ் யேர்மன், சோர்பிய மொழி, உறேமானி மொழி, மற்றும் பிரிசியன் மொழி என்பன ஐரோபிய சிறுபான்மை மொழிகளுக்கான மையத்தி மூலம் பாதுகாக்கப்பட்ட மொழிகளாகும். 2 1999க்கு முன்: டொயிசு மார்க்

82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது.

செருமனி கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-செருமனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-செருமனிக்கு பான் (Bonn) தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-செருமனியில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. 1989 இல் அச்சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட செருமனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது.

செருமனி இப்போது 16 மாநிலங்களை (Länder) கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.

செருமானியா என அறியப்பட்ட பிரதேசத்தில் கி.பி. 100க்கு முன்னரே செருமானிக் மக்கள் குடியேறியமைக்கு ஆதாரங்கள் உள்ளன. குடிப்பெயர்வுக் காலப்பகுதியில், செருமானிக் குழுக்கள் மேலும் தென்பகுதிக்குப் பரவியதோடு ஐரோப்பாவெங்கும் வெற்றிகரமான ராச்சியங்களை ஏற்படுத்தினர். 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், செருமனிப் பகுதிகள் புனித உரோமப் பேரரசின் மையப்பகுதிகளாக இருந்தன. 16ம் நூற்றாண்டில் வடக்கு செருமன் பகுதிகள் புரட்டசுதாந்து சீர்திருத்தத்தின் மத்திய நிலையமாக விளங்கியது. எனினும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் உரோமன் கத்தோலிக்கப் பகுதிகளாகவே இருந்தன. இதன் காரணமாக முப்பதாண்டுப் போர் ஏற்பட்டதோடு, கத்தோலிக்க்- புரட்டசுதாந்து பிரிவினையின் ஆரம்பமாகவும் அமைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, செருமானிய சமுதாயத்தின் பண்பைத் தீர்மானிப்பதாகவும் இது இருந்து வருகிறது. நெப்போலியப் போர்களின் போது, செருமானியப் பகுதிகளில் நாட்டுப் பற்று எழுச்சிபெற்றது. இதன் மூலம்,1871இல், புருசியாவைத் தலைமையாகக் கொண்டு, பெரும்பாலான செருமானியப் பகுதிகள் செருமன் பேரரசாக எழுச்சி பெற்றன.

1918-1919 செருமானியப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரில் சரணடைவு என்பவற்றைத் தொடர்ந்து, 1918 இல், நாடாளுமன்ற வைமார் குடியரசு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அதன் சில பகுதிகள் வெர்செயில்சு உடன்படிக்கையின்படி பிரித்தெடுக்கப்பட்டன. இக்காலப்பகுதியில், விஞ்ஞான மற்றும் கலைத் துறைகளில், பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக 1933 இல் மூன்றாவது முடியாட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பின்பு நாட்டில் நாசிசக் கொள்கைகள் பரவின. இதனால் இரண்டாம் உலகப்போரும் மூண்டது. 1945 இன் பின், செருமனி நேச நாடுகளால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவை கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனி என அழைக்கப்பட்டன. 1990 இல் செருமனி மீண்டும் ஒன்றிணைந்தது.

1957ல் ஐரோப்பிய சமூகத்தை உருவாக்குவதில் செருமனியும் பங்கு கொண்டது. இது 1993ல், ஐரோப்பிய ஒன்றியமாக மாறியது. இது சென்சென் பகுதியின் ஒரு பகுதியாகவும், 1999இலிருந்து, யூரோ பகுதியின் ஒரு உறுப்பினராகவும் ஆனது. செருமனி, ஐக்கிய நாடுகள், நேட்டோ, G8, G20, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் ஐரோப்பியச் சம்மேளனம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான, 2011-2012 காலப்பகுதிக்கான தற்காலிக உறுப்பினராகவும் உள்ளது.

செருமனி, உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் நான்காவது பாரிய பொருளாதார நாடாகவும், கொள்வனவுச் சக்தி அடிப்படையில், ஐந்தாம் இடத்திலும் உள்ளது. செருமனி உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இது ஒரு உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடாகவும், சமூகப் பாதுகாப்புடைய நாடாகவும் காணப்படுகிறது. செருமனி உலகின் மிகப் பழைமை வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு முறைமையையும் கொண்டுள்ளது. செருமனியில் பல சிறந்த தத்துவஞானிகள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், இதன் கலாச்சார மற்றும் அரசியல் வரலாறும் சிறப்பானதாகும்.

சொற்பிறப்பியல்

ஜெர்மனி என்ற ஆங்கிலச் சொல் இலத்தீனிய ஜெர்மானியா என்பதிலிருந்து வந்துள்ளது; ரைன் ஆற்றுக்கு கிழக்கில் வசித்த மக்களைக் குறிப்பிட யூலியசு சீசர் இச்சொல்லைப் பயன்படுத்தினார். குறிப்பாக, கால் இனத்தவர்கள் , இவர்களை ஜெர்மனி என அழைத்து வந்தனர். இதிலிருந்தே உரோமானியர்கள் ரைன் ஆற்றுக்கு கிழக்கேயும் தானூப் ஆற்றுக்கு வடக்கேயும் வாழ்ந்த மக்களைக் குறிக்க ஜெர்மனி என்ற பெயரைப் பயன்படுத்த துவங்கினர்.

இடாய்ச்சு சொல்லான இடாய்ச்சுலாந்து, *தியொடொ என்ற தொன்மைய செருமானிய வேரிலிருந்து வந்ததாகும்; இதன் பொருள் "மக்கள், இனம், நாடு" என்பதாக அமையும். இது ஜெர்மானிய மக்களின் பொதுமொழியைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட பரந்த சொல்லாக இருந்தது. இது குறிப்பாக செருமனி மொழியையோ மக்களையோ குறிப்பிடவில்லை. முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டபோது (பிந்தைய 8-ஆம் நூற்றாண்டு) இது மெர்சியா இராச்சியத்தின் மொழியைக் குறிப்பதாயிருந்தது; உண்மையில் அந்த மொழி பண்டைய ஆங்கிலம் ஆகும். பிற்பாடு பல்வேறு இனங்களும் தங்களுக்கான தனி அடையாளத்தை நிலைநிறுத்த முற்பட்டனர்; பிரித்தானியத் தீவிலிருந்தவர்கள் ஆங்கிலோ-சாக்சன் மக்கள், ஆங்கில்கள் பின்னர் ஆங்கிலேயர் எனப்பட்டனர். இவர்கள் தொன்மைய செருமனியின் அறிஞர்களால் "பவேரியர்கள்", "சாக்சன்கள்" அல்லது "இசுவாபியர்கள் " எனப் பிரித்தறியப்பட்டனர். இச்சொற்கள் பெரும் நிலப்பகுதிகளை ஆண்ட உள்ளக ஆட்சியாளர்களைக் கொண்டு உருவாகின.புனித உரோமைப் பேரரசு உடைபட்டபோது, இத்தகைய தனி அடையாளங்கள் மறைந்து அவரவர் பேச்சுவழக்கில் *தியுடொ என்ற சொல் அடிப்படையில் இதுவரை பெயரிடப்படாத செருமானிய இனக்குழுக்கள் அழைக்கப்பட்டன. இவ்வாறு 13-ம் நூற்றாண்டில் தியுடிக்சுலாந்து (டாய்ச்சுலாந்து, செருமனி) புழக்கத்திற்கு வந்தது.

வரலாறு

வரலாற்றுக்கு முந்தையக் காலம்

1907இல் கண்டெடுக்கப்பட்ட மாயுவர் 1 தாடையெலும்பு செருமனியில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்மையான மக்கள் வாழ்ந்துள்ளனர் எனக் காட்டுகிறது. உலகில் மிகவும் பழைமையான முழுமையான வேட்டைக்கருவிகள் செருமனியில் இசோனின்கென் என்னுமிடத்தில் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டன; 380,000 ஆண்டுகள் பழைமையான 6-7.5 அடி நீளமுள்ள மூன்று மர எறிவேல்கள் கிடைத்தன. செருமனியில் உள்ள நியாண்டர் பள்ளத்தாக்கில் (பள்ளத்தாக்கு செருமானிய மொழியில் தால் எனப்படும்) முதல்மனித தொல்லுயிர் எச்சம் கிடைக்கப்பெற்றது; 1856இல் இது புதிய மனித இனமாக நியண்டர்தால் மனிதன் என அங்கீகரிக்கப்பட்டது. இந்த நியாண்டர்தால் தொல்லுயிர் எச்சங்கள் 40,000 ஆண்டுகள் பழைமையானதாக மதிப்பிடப்படுகின்றது. இதேயளவு பழைமையான சான்றுகள் உல்ம் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சுவாபியன் யுரா குகைகளிலும் கிடைத்துள்ளன; 42,000 ஆண்டுகள் பழைமையான பறவையின் எலும்பு, பெரும் தந்தங்களிலான புல்லாங்குழல்கள் கண்டறியப்பட்டுள்ளன; இவையே உலகின் மிகவும் தொன்மையான இசைக்கருவிகளாகும். 40,000 ஆண்டுக்கு முந்தைய பனிக்கால சிற்பமான சிங்க மனிதன் உலகின் முதல் கலைவடிவமாக கருதப்படுகிறது.

ஜெர்மானிக் குழுக்களும் ஃபிராங்கியப் பேரரசும்

ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
ஜெர்மானியாவினதும் புனித உரோமப் பேரரசினதும் வரைபடம்

ஜெர்மானிக் குழுக்கள், நோர்டிக் வெண்கலக் காலம் அல்லது ரோமானியருக்கு முந்திய இரும்புக் காலத்திலிருந்தே காணப்பட்டமைக்குச் சான்றுகள் உண்டு. அவர்கள் தெற்கு ஸ்கண்டினேவியா மற்றும் வடக்கு ஜெர்மனியிலிருந்து கி.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிப் பரவத் தொடங்கினர். இதன் மூலம் கவுலின் செல்டிக் குழுக்கள், ஈரானியர்கள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் காணப்பட்ட பால்டிக் மற்றும் ஸ்லாவிக் குழுக்களுடனும் தொடர்பு கொண்டனர். அகஸ்டசின் கீழ், ரோமானியத் தளபதியான பப்லியஸ் குயின்டிலியஸ் வரஸ் ஜெர்மானியாவைக் கைப்பற்றினான் (அண்ணளவாக ரைனிலிருந்து யூரல் மலைத்தொடர் வரையிலான பகுதி). கி.பி. 9ல், வரசினால் வழிநடத்தப்பட்ட மூன்று ரோமப் படைப்பிரிவுகள், செருஸ்கன் தலைவரான ஆர்மினியசினால் தோற்கடிக்கப்பட்டன. டாசியஸ் ஜெர்மானியா என்ற நூலை எழுதிய காலப்பகுதியான கி.பி.100ல், ஜெர்மானியக் குழுக்கள், தற்கால கெர்மனியின் பெரும்பாலான பகுதிகளான, ரைன் மற்றும் டன்யூப் நதிக்கரையோரமாகக் குடியேறினர் (லைம்ஸ் ஜெர்மானிகஸ்). எனினும், ஆஸ்திரியா, தெற்கு பவேரியா மற்றும் மேற்கு ரைன்லாந்து என்பன ரோமானிய மாகாணங்களாகவே இருந்தன.

3ம் நூற்றாண்டில், அலெமனி, ஃபிராங்க்குகள், சட்டி, சாக்சன்கள், ஃபிரிசி, சிகம்ப்ரி மற்றும் துரிங்கி போன்ற பல மேற்கு ஜெர்மானிக் குழுக்கள் எழுச்சி பெற்றன. 260களில், ஜெர்மானிக் மக்களில் பலர் ரோமானியக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். 375ல் ஹன்களின் படையெடுப்பு மற்றும் 395ல் ரோமப் பேரரசின் வீழ்ச்சி ஆகியன காரணமாக ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்மேற்காக நகர்ந்தன. இதேவேளை, சில பாரிய குழுக்கள் உருவாகி, சிறிய ஜெர்மானிக் குழுக்களைப் பிரதியீடு செய்தன. பாரிய பகுதிகள் (மெரோவின்கியன் காலப்பகுதியிலிருந்து இவை ஆஸ்திரேசியா என அறியப்பட்டன.) ஃபிராங்குகளால் கைப்பற்றப்பட்டன. மேலும் வடக்கு ஜெர்மனி சாக்சன்களாலும், ஸ்லாவுகளாலும் ஆளப்பட்டது.

புனித உரோமப் பேரரசு

ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
மார்ட்டின் லூதர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தார்.

டிசெம்பர் 25, 800ல் ஃபிராங்கிய மன்னனான சார்லமக்னே பேரரசராக முடிசூட்டப் பட்டார். இவர் கரோலிங்கியப் பேரரசை உருவாக்கினார். 843ல் இது பிரிக்கப்பட்டது. இதன் கிழக்குப் பகுதியில் புனித உரோமப் பேரரசு உருவாக்கப்பட்டது. இது வடக்கே எய்டர் ஆற்றிலிருந்து, தெற்கே மத்தியதரைக் கடல் வரையும் பரந்திருந்தது. ஒட்டோனியப் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(919–1024), பல பாரிய அரசுகள் ஒன்றிணைந்தன. 962ல் இப்பகுதிகளின் புனித உரோமப் பேரரசராக ஜெர்மானிய மன்னர் முடிசூட்டப்பட்டார். சாலியன் பேரரசர்களின் காலத்தில் (1024–1125), புனித உரோமப் பேரரசு வட இத்தாலியையும் பர்கண்டியையும் உள்வாங்கிக் கொண்டது.

ஹொஹென்ஸ்டாஃபென் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(1138–1254), ஜெர்மானிய இளவரசர்கள் தமது ஆதிக்கத்தை, ஸ்லாவுகள் வசித்த தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிறுவிக் கொண்டனர். இதன்மூலம் இப்பகுதிகளிலும், மேலும் கிழக்குப் பகுதிகளிலும் ஜெர்மானியக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர் (ஓஸ்ட்சீட்லங்). வட ஜெர்மானிய நகரங்கள் வளமிக்க நகரங்களாக வளர்ச்சி பெற்றதோடு, ஹன்சியாட்டிக் லீக்கிலும் அங்கத்துவம் பெற்றன. 1315ல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தினாலும், 1348-50ல் இடம்பெற்ற கறுப்பு இறப்பினாலும் ஜெர்மனியின் சனத்தொகை வீழ்ச்சியடைந்தது. 1356ல் எழுதப்பட்ட கோல்டன் புல் எனும் அரசாணை பேரரசின் அடிப்படை யாப்பாகக் காணப்பட்டது. இதில் ஏழு சக்திமிக்க சிற்றரசுகள் மற்றும் ஆயர் ஆட்சிப் பகுதிகளை ஆண்டோர் மூலம் நடத்தப்படும் தேர்தல் மூலம் பேரரசரைத் தெரிவுசெய்யும் முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1517ல் மார்ட்டின் லூதர் தனது தொண்ணூற்றைந்து வாசகங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரையை விற்றன்பேர்க்கில் பிரசுரித்தார். இதன்மூலம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தையும் ஆரம்பித்தார். 1530ன் பின் ஒரு தனியான லூதரன் திருச்சபை பல ஜெர்மானியப் பகுதிகளில் உத்தியோகபூர்வ சமயமாக உருவானது. சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) ஆரம்பமானது இது ஜெர்மானியப் பகுதிகளின் அழிவுக்கும் காரணமானது. ஜெர்மானியப் பகுதிகளின் சனத்தொகை 30%த்தால் குறைவடைந்தது. வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் (1648), ஜெர்மானியப் பகுதிகளில் இடம்பெற்ற சமயப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும் ஜெர்மானியப் பேரரசு பல்வேறு சுதந்திர சிற்றரசுகளாகப் பிரிந்தது. 18ம் நூற்றாண்டில், புனித உரோமப் பேரரசில் இவ்வாறான 1,800 பகுதிகள் காணப்பட்டன. 1740இலிருந்து, ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் முடியரசினதும், பிரசிய ராச்சியத்தினதும் இரட்டை ஆட்சி ஜெர்மானிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. 1806ல் நெப்போலியப் போர்கள் காரணமாக இவ்வாட்சி அகற்றப்பட்டது.

செருமனிக் கூட்டமைப்பும் பேரரசும்

ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
கருப்பு-சிவப்பு-தங்கக் கொடியின் துவக்கம்: செருமன் புரட்சி 1848 (பெர்லின், 19 மார்ச்சு 1848)
ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
1871இல் வெர்சாயில் செருமானியப் பேரரசு நிறுவப்படுதல். பிஸ்மார்க்கு மத்தியில் வெள்ளைச் சீருடையில் உள்ளார்.

முதலாம் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு 1814இல் கூடிய வியன்னா மாநாடு செருமானியக் கூட்டமைப்பை (Deutscher Bund) நிறுவியது; இது இறையாண்மையுடைய 39 அரசுகளின் நெகிழ்வான கூட்டணியாகும். ஐரோப்பிய மீளமைப்பு அரசியலுக்கு உடன்படாததால் செருமனியில் முற்போக்குவாத இயக்கங்கள் வெளிவரத் தலைப்பட்டன. ஆஸ்திரிய அரசியல்வாதி மெட்டர்னிக்கின் அடக்குமுறைகள் இந்த எதிர்ப்புக்களை வலுவாக்கின. செருமானிய அரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட சோல்பெரைன் என்ற சுங்க ஒன்றியம், அவற்றிடையே பொருளியல் ஒற்றுமைக்கு வழிகோலியது.பிரெஞ்சுப் புரட்சியின் தேசிய முற்போக்கு கருத்துருக்கள் பலரிடையே, குறிப்பாக இளம் செருமானியரிடையே, ஆதரவு பெறத் தொடங்கின. மே 1832இல் நடந்த ஆம்பாக் விழா செருமன் ஒற்றுமைக்கும் விடுதலைக்கும் மக்களாட்சிக்கும் ஆதரவான முதன்மை நிகழ்வாகும். ஐரோப்பாவில் நிகழ்ந்த தொடர் புரட்சிகளின் விளைவாக, செருமனியிலும் பொதுமக்களும் அறிஞர்களும் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகளைத் தொடங்கினர். பிரசியாவின் நான்காம் பிரெடெரிக் வில்லியத்திற்கு, மிகுந்த குறைவான அதிகாரங்களுடன், பேரரசர் பதவி அளிக்க முன்வந்தனர்; இதனை ஏற்க மறுத்த பிரெடெரிக் வில்லியம் ஓர் அரசியலமைப்பை முன்மொழிந்தார். இது எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

பிரசிய மன்னர் முதலாம் வில்லியமிற்கும் முற்போக்கான நாடாளுமன்றத்திற்கும் இடையே 1862ஆம் ஆண்டு படைத்துறை சீர்திருத்தங்கள் குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. மன்னர் பிஸ்மார்க்கை புதிய தலைமை அமைச்சராக நியமித்தார். 1864இல் பிஸ்மார்க் டென்மார்க் போரில் வெற்றி கண்டார். தொடர்ந்து 1866இல் ஆஸ்திரோ-பிரசியப் போரில் இவரடைந்த வெற்றி வட செருமன் கூட்டமைப்பை நிறுவத் துணை நின்றது. முன்பு செருமானிய விவகாரங்களில் முன்னிலை வகித்த ஆஸ்திரியா இக்கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 1871இல் பிரான்சு தோல்வி கண்டபோது வெர்சாய் அரண்மனையில் 1871இல் செருமன் பேரரசு அறிவிக்கப்பட்டது; ஆஸ்திரியா தவிர்த்த அனைத்து பகுதிகளும் இதில் உள்ளடங்கின.

ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
செருமானியப் பேரரசு (1871–1918), ஆதிக்கம் மிக்க பிரசியா நீலத்தில்

புதிய நாட்டின் மூன்றில் இருபங்கு நிலப்பகுதியும் மக்கள்தொகையும் கொண்ட பிரசியா ஆதிக்கமிகுந்த அங்கமாக விளங்கியது; ஓயென்சொலார்ன் பரம்பரையைச் சேர்ந்த பிரசிய அரசர் அதன் பேரரசராக ஆட்சி செய்தார், பெர்லின் அதன் தலைநகரமாக விளங்கியது. செருமானிய ஒருங்கிணைப்பிற்குப் பிந்தைய காலகட்டத்தில் பிஸ்மார்க்கின் வெளியுறவுக் கொள்கைகள் செருமனியின் நிலையை, பெரும் வளரும் நாடாக, நிலைநிறுத்தியது. பிரான்சுடன் போர் தவிர்ப்பு உடன்பாடு கண்டார். 1884ஆம் ஆண்டு பெர்லின் மாநாட்டின்படி கமரூன் போன்ற செருமனியின் குடியேற்றப்பகுதிகளுக்கு புதிய பேரரசு உரிமை கொண்டாடியது. செருமனியின் இரண்டாம் வில்லியமின் கீழ், மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஆதிக்கவாதத்தை முன்னெடுத்ததால் அண்டைநாடுகளுடனான உறவில் விரிசல் கண்டது. பிஸ்மார்க் கண்ட பல உடன்பாடுகள் புதுப்பிக்கப்படவில்லை; புதிய கூட்டணிகளில் செருமனி இடம்பெறவில்லை.

சூன் 28, 1914இல் ஆஸ்திரியாவின் இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட் கொலையுண்டதை அடுத்து முதல் உலகப் போர் துவங்கியது. மைய சக்திகளில் அங்கமாகவிருந்த செருமனி நேசநாடுகளிடம் தோற்றது. இந்தப் போரில், ஏறத்தாழ இரண்டு மில்லியன் செருமானிய படைவீரர்கள் மடிந்தனர். நவம்பர் 1918இல் செருமன் புரட்சி வெடித்தது; பேரரசர் இரண்டாம் வில்லியமும் அனைத்து செருமானிய அரசுகளும் பதவி துறந்தனர். நவம்பர் 11இல் ஏற்பட்ட சமரசம் போரை முடிவுக்குக் கொணர்ந்தது. சூன் 1919இல் செருமன் வெர்சாய் உடன்பாட்டில் ஒப்பிட்டது. செருமானியர்கள் இந்த உடன்படிக்கை தங்களுக்கு அவமானகரமாகவும் நீதிபிறழ்ந்ததாகவும் உணர்ந்தனர். இதுவே பின்னாளில் இட்லர் மேலோங்க அடிப்படையாக அமைந்ததாக சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.

வீமர் குடியரசும் மூன்றாம் இராய்க்கும்

செருமன் புரட்சியின் துவக்கத்தில் செருமனி தன்னை குடியரசாக அறிவித்துக் கொண்டது. இருப்பினும், அதிகாரப் பகிர்விற்கான போராட்டம் தொடர்ந்தது; இடதுசாரி பொதுவுடைமை பவேரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகத்து 11, 1919இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது செருமனியின் குடியரசுத் தலைவராக இருந்த பிரெடிரிக் எபெர்ட்டு மக்களாட்சிக்கான வைமார் அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதன் ஆட்சிக்காலத்தில் பெல்ஜிய, பிரான்சிய ஆக்கிரமிப்புகள், விலைவாசி ஏற்றத்தைத் தொடர்ந்து 1922-23இல் மீயுயர் ஏற்றம், கடன் சீரமைப்புத் திட்டம், 1924இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நாணயம், தேசிய தன்னம்பிக்கை வளர்ச்சி, கலை ஆக்கங்கள், முற்போக்கான பண்பாடு மற்றும் பொருளியல் வளர்ச்சியை செருமனி எதிர்கொண்டது. இருப்பினும் பொருளியல்நிலை நிலையில்லாமலும் அரசியல்நிலை கிளர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தன. 1924 முதல் 1929 வரையிலான செருமனி "பகுதி நிலைபெற்ற" செருமனியாக வரலாற்றாளர் டேவிட் வில்லியம்சன் கூறுகிறார். இது 1929இல் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சியால் சீரழிந்தது.

ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
நாட்சி ஜெர்மனியின் இட்லர், பியூரர்

கூட்டமைப்பிற்கு 1930இல் நடந்த தேர்தல்களில் நாட்சி கட்சி 18% வாக்குகளையே பெற்றது. எந்தக் கூட்டணியும் அரசமைக்க இயலாதநிலையில் அரசுத்தலைவர் எயின்ரிக் புருன்னிங் வீமர் அரசியலமைப்பின் 48ஆம் பிரிவின்படி தம்மை நெருக்கடிநிலை அதிகாரங்களுடன் நாடாளுமன்ற ஒப்புதலின்றி ஆள அனுமதிக்குமாறு நாட்டுத்தலைவர் பவுல் ஃபொன் இன்டென்பெர்கை வேண்டினார். இதனை ஏற்றுக்கொண்ட பிறகு ஆட்சி செய்த புருன்னிங் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கத்தை குறைக்க பெரும் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கினார். இது வேலையற்றோர் எண்ணிக்கையை கூட்டியதுடன் சமூக சேவை வசதிகளையும் குறைத்தது.

1932இல் கிட்டத்தட்ட 30% செருமானிய தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்தனர். அந்தாண்டு நடந்த சிறப்புத் தேர்தலில் நாட்சி கட்சி 37% வாக்குகளைப் பெற்றது;இருந்தும் கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க இயலவில்லை. பல்வேறு மாற்று அமைச்சரவைகளை சோதித்து தோல்வியுற்ற பவுல் பொன் இன்டனெபெர்கு சனவரி 30, 1933இல் இட்லரை அரசுத்தலைவராக நியமித்தார். பெப்ரவரி 27, 1933இல் செருமானிய நாடாளுமன்றக் கட்டிடம் தீக்கிரையானது; இந்நிலையில் வழங்கப்பட்ட இராய்க்சுடாக் தீ தீர்ப்பாணையின்படி அடிப்படை குடிம உரிமைகள் இடைநீக்கம் செய்யப்பட்டு இட்லருக்கு]] எல்லையற்ற சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. இட்லர் முழுமையும் மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார். செருமனியின் முதல் செறிவக முகாம்களை பெப்ரவரி 1933இல் நிறுவினார். செப்டம்பர் 1933இல் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் உலக நாடுகள் சங்கத்திலிருந்து விலக செருமனி வாக்களித்தது. இட்லர் படைத்துறையை வலுப்படுத்தத் தொடங்கினார். பற்றாக்குறை நிதியைப் பயன்படுத்தி இட்லர் பல்லாயிரக் கணக்கான செருமானியர்களை பொதுத்துறை திட்டங்களில் வேலைக்கமர்த்தினார்.

ஆகத்து 1934இல் படைத்துறை வீரர்கள் நாட்டின் தளபதிக்கல்லாது இட்லருக்கு தனிப்பட்ட முறையில் விசுவாச உறுதிமொழி எடுக்கும் சட்டத்தை அமைச்சரவை இயற்றியது. 1934இல் நடந்த பொது வாக்கெடுப்பில் 90% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் பதவியும் நாட்டுத்தலைவர் பதவியும் ஒன்றிணைக்கப்பட்டது 1935இல் படைத்துறையில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டது; வெர்சாய் உடன்பாட்டிலிருந்து விலகிக் கொண்டது; யூதர்களையும் மற்றக் குழுக்களையும் இலக்கு வைத்து நுரெம்பர்கு சட்டங்கள் இயற்றப்பட்டன.

1935இல் நேசப்படைகள் கையகப்படுத்தியிருந்த சார் பகுதியை செருமனி மீட்டது; 1936இல் வெர்சாய் உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்டிருந்த ரைன்லாந்திற்குள் துருப்புக்களை அனுப்பியது. 1938இல் ஆசுதிரியா கையகப்படுத்தப்பட்டது; செப்டம்பர் 1939இல் செக்கோசிலோவாக்கியாவைக் கைப்பற்றியது. பின்னர் போலந்து படையெடுப்பு நடத்துமுகமாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. செப்டம்பர் 1, 1939இல் போலந்து படையெடுப்பு நடைபெற்றது; சோவியத் செஞ்சேனையுடன் போலந்தைக் கைப்பறியது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செருமனி மீது போர் தொடுத்து இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. சூலை 22, 1940இல் பிரான்சின் பெரும்பகுதியை செருமனி கைப்பற்றியபின்னர் பிரான்சு செருமனியுடன் சமரசம் செய்து கொண்டது. பிரித்தானியர்கள் 1940இல் பிரித்தானியச் சண்டை என்றறியப்பட்ட செருமனியின் தாக்குதல்களை முறியடித்தனர். சூன் 22, 1941இல் செருமனி மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தை மீறி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தனர். அச்சமயத்தில் செருமனியும் மற்ற அச்சு நாடுகளும் ஐரோப்பாவின் பெரும்பகுதியையும் வடக்கு ஆப்பிரிக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1943 துவக்கத்தில் சுடாலின்கிராட் சண்டையை அடுத்து சோவியத் ஒன்றியத்திலிருந்து மீளத் துவங்கினர்.

செப்டம்பர் 1943இல் செருமனியின் கூட்டாளி இத்தாலி சரண்டைந்தது; இதனால் இத்தாலியிலிருந்த நேசப்படையினருடன் போரிட கூடுதல் துருப்புக்கள் வேண்டியிருந்தது. பிரான்சில் டி-டே படையிறக்கம் போரின் மேற்கு முனையை திறந்தது; செருமனியின் எதிர்த் தாக்குதல்களுக்கிடையே நேசப்படைகள் 1945இல் செருமனிக்குள் நுழைந்தன. பெர்லின் சண்டையையும் இட்லரின் மரணத்தையும் அடுத்து செருமானியப் படை மே 8, 1945இல் சரணடைந்தது. மனித வரலாற்றின் குருதிமிக்க போராக விளங்கிய இந்த உலகப்போரில் ஐரோப்பாவில் மட்டும் 40 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்; செருமன் படையில் மட்டும் 3.25 மில்லியன் முதல் 5.3 மில்லியன் வீரர்கள் இறந்து பட்டனர். 1 முதல் 3 மில்லியன் செருமானிய குடிமக்கள் மடிந்தனர்.

சிறுபான்மையர், அரசியல், சமய எதிர்ப்பாளர்களை இலக்காக கொண்டு இயற்றப்பட்ட நாட்சி ஆட்சி கொள்கைகள் பின்னதாக பெரும் இன அழிப்பு என அறியப்பட்டன. இந்த இனவழிப்பில் 6 மில்லியன் யூதர்கள், 220,000இலிருந்து 1,500,000 வரையான ரோமானி மக்கள், 275,000 மனநலம்/உடல்நலம் இல்லாதவர்கள், ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள், ஆயிரக்கணக்கான தற்பால்சேர்க்கையினர், நூறாயிரக்கணக்கான அரசியல் அல்லது சமய மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் உள்ளிட்ட 10 மில்லியன் குடிமக்கள் அழிக்கப்பட்டனர். தவிர ஆறு மில்லியன் உக்ரைனியர் மற்றும் போலந்துக்காரர்களும் 2.8 மில்லியனாக மதிப்பிடப்படும் சோவியத் போர்க்கைதிகளும் நாட்சி ஆட்சியில் உயிரிழந்தனர்.

ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
இரண்டாம் உலகப் போரில் இடிபட்ட பெர்லின்.

போரில் தோல்வியடைந்ததால் செருமனி நிலப்பகுதிகளை இழந்ததோடன்றி செருமனியின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்தும் பல மில்லியன் செருமானிய இனத்தினர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சில நாட்சிகள் பெரும் இன அழிப்பு போன்ற குற்றங்களுக்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் குற்ற விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டனர்.

கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள்

ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
செருமனியில் நேசப்படைகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள், 1947.

செருமனி சரண்டைந்த பிறகு செருமனியின் மிஞ்சியிருந்த பகுதிகளையும் பெர்லினையும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள் நான்கு இராணுவ ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரித்துக் கொண்டன. இந்த மண்டலங்களில் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6.5 மில்லியனுக்கும் கூடுதலான செருமானிய இன மக்கள் குடியேற்றப்பட்டனர். பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றிணைத்து மே 23, 1949இல் செருமானியக் கூட்டு மக்களாட்சியாக (Bundesrepublik Deutschland) நிறுவப்பட்டது; அக்டோபர் 7, 1949இல் சோவியத் பகுதி ஜெர்மன் சனநாயகக் குடியரசாக(GDR) (Deutsche Demokratische Republik) அறிவிக்கப்பட்டது. இவை முறைசாராது "மேற்கு ஜெர்மனி" என்றும் "கிழக்கு ஜெர்மனி" என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனிக்கு கிழக்கு பெர்லின் தலைநகராயிற்று; மேற்கு ஜெர்மனிக்கு பான் தற்காலிகத் தலைநகராயிற்று. செருமானியக் கூட்டு மக்களாட்சிக்கு மார்ஷல் திட்டத்தின் கீழான மீள்கட்டமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன.

ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
1989இல் இடிபடுவதற்கு முன்னதாக பிரான்டென்போர்க் வாயில் அருகே பெர்லின் சுவர். இன்று இவ்வாயில் செருமனியின் முதன்மையான தேசிய அடையாளமாக விளங்குகிறது.

மேற்கு செருமனி, மக்களாட்சி குடியரசாக சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து செயல்பட்டது. 1949இல் இதன் முதல் அரசுத்தலைவராக (சான்சுலர்) கொன்ராடு அடேனார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1963 வரை இப்பதவியில் நீடித்தார். மேற்கு செருமனி 1955இல் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்புடன் இணைந்தது.

கிழக்கு செருமனி கிழக்கத்திய திரளணி நாடாக சோவியத் ஒன்றியத்தின் அரசியல் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது. கிழக்கு செருமனி மக்களாட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் பொதுவுடமையாளர்களின் செருமானிய சோசியலிச ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த பொலிட்பீரோ உறுப்பினர்களிடமே அரசியல் அதிகாரம் இருந்தது. சோவியத்-பாணி திட்டமிட்ட பொருளாதாரம் அமைக்கப்பட்டது; கிழக்கு செருமனி பின்னாளில் காம்கான் நாடாக இணைந்தது.

1961இல் கிழக்கு செருமானியர்கள் மேற்கு செருமனிக்கு தப்பிச் செல்வதைத் தடுக்குமாறு பெர்லின் சுவர் கட்டப்பட்டது. இது பனிப்போரின் ஓர் அடையாளமாக விளங்கியது. எனவே போலந்திலும் அங்கேரியிலும் ஏற்பட்ட மக்களாட்சி மாற்றங்களை அடுத்து 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது பொதுவுடமையின் வீழ்ச்சி, செருமானிய மீளிணைவு மற்றும் டை வென்டே (திருப்பம்) அடையாளமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 12, 1990இல் இரண்டு+நான்கு உடன்பாடு காணப்பட்டு நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு செருமனிக்கு முழுமையான இறையாண்மை கிட்டியது. அக்டோபர் 3, 1990இல் செருமானிய மீளிணைவு ஏற்பட இது வழிவகுத்தது.

செருமானிய மீளிணைவும் ஐரோப்பிய ஒன்றியமும்

ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
செருமானிய மீளிணைவிற்கான தேசிய நினைவுறலாக அக்டோபர் 3, 1990இல் ரெய்க்ஸ்டாக் கட்டடத்தின் வெளியே ஜெர்மன் ஒற்றுமைக் கொடி, ஏற்றப்பட்டது. ரெய்க்ஸ்டாக் கட்டடத்தில்தான் செருமனியின் நாடாளுமன்றம் புன்டேசுடாக் கூடுகிறது.

மார்ச்சு 10, 1994இல் இயற்றப்பட்ட பெர்லின்/பான் சட்டப்படி பெர்லின் ஒன்றுபட்ட செருமனிக்கு மீண்டும் தலைநகராயிற்று; பான் நகருக்கு தனிப்பட்ட நிலையாக Bundesstadt (கூட்டு நகரம்) என்ற தகுதி வழங்கப்பட்டது. சில அமைச்சரகங்கள் இங்கு இயங்குகின்றன. அரசு இடமாற்றம் 1999இல் முழுமையடைந்தது.

மீளிணைவிற்குப் பிறகு செருமனி ஐரோப்பிய ஒன்றியத்திலும் நாடோவிலும் முனைப்பான பங்காற்றி வருகின்றது. 1999இல் யூகோசுலோவியாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது அமைதிகாப்புப் படையை அனுப்பியது. தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானித்தானிற்கு பாதுகாப்பு வழங்க நாடோவின் முயற்சிகளில் இணைந்து தனது படைகளை அனுப்பியது. இவை பாதுகாப்புப் படைகளை நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற செருமானியச் சட்டங்களுக்கு புறம்பானதால் சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது. 2005இல் அங்கெலா மேர்க்கெல் செருமனியின் முதல் பெண் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புவியியல்

செருமனி மேற்கு மற்றும் நடு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் அகலக்கோடுகள் 47°, 55° வ ஆகியவற்றுக்கு இடையிலும், நெடுங்கோடுகள் 5°, 16° கி ஆகியவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. 357,021 ச.கிமீ (137,847 ச.மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 349,223 ச.கிமீ (134,836 ச.மைல்) நிலப் பரப்பும், 7,798 ச.கிமீ (3,011 ச.மைல்) நீர்ப் பரப்பும் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் ஐரோப்பாவின் 7 ஆவது பெரிய நாடாகவும், உலகின் 62 ஆவது பெரிய நாடாகவும் செருமனி விளங்குகிறது.

உயரம், அதி கூடிய அளவாகத் தெற்கில் ஆல்ப்சு மலைப்பகுதியில் தொடங்கி வடமேற்கில் வடகடல் கரையோரம் வரையும், வடகிழக்கில் பால்டிக் கடல் கரையோரம் வரையும் குறைகிறது. நடு செருமனியின் காடுகளைக் கொண்ட மேட்டு நிலங்களிலும், வட செருமனியின் தாழ் நிலப் பகுதியிலும் பெரிய ஆறுகளான ரைன், தன்யூப், எல்பே போன்றன ஓடுகின்றன. அல்பைன் பகுதியில் பனியாறுகள் காணப்படினும், தற்போது உருகி இல்லாது போகும் நிலை காணப்படுகிறது. இரும்புத் தாது, நிலக்கரி, பொட்டாசு, மரம், லிக்னைட்டு, யுரேனியம், செப்பு, இயற்கை வளிமம், உப்பு, நிக்கல், விளைநிலங்கள், நீர் என்பன செருமனியின் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள்.

தட்ப வெப்பம்

செருமனியின் பெரும்பாலான பகுதிகளில், ஈரலிப்பான மேற்குக் காற்று முதன்மை பெறும் மிதவெப்பப் பருவகாலத் தட்பவெப்ப நிலை காணப்படுகின்றது.

உயிரிப்பல்வகைமை

செருமனிக்கு உட்பட்ட பகுதிகளை இரண்டு சூழல்மண்டலங்களாகப் பிரிக்கலாம். இவை, ஐரோப்பிய-நடுநிலக்கடல் மலைசார் கலப்புக் காடுகளும், வடகிழக்கு-அத்திலாந்திய அடுக்கக் கடல்சார் பகுதிகளும் ஆகும். 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, செருமனியின் நிலப்பகுதியின் 34% விளை நிலங்களாகவும், 30.1% காடுகளாகவும் உள்ளன. 13.4% மட்டுமே நிரந்தரமான புல்வெளிகள். 11.8% குடியிருப்புக்களும், சாலைகளுமாக உள்ளன.

நடு ஐரோப்பாவுக்குப் பொதுவான தாவரங்களும் விலங்குகளுமே இங்கும் காணப்படுகின்றன. செருமனியின் காடுகளின் மூன்றில் ஒரு பகுதி "பீச்", "ஆக்" போன்ற இலையுதிர் மரங்களால் ஆனவை. மீள்காடாக்க முயற்சிகளினால் ஊசியிலை மரங்கள் அதிகமாகி வருகின்றன. உயர் மலைப் பகுதிகளில், "இசுப்புரூசு", "ஃபர்" மரங்கள் அதிக அளவில் உள்ளன. மணற் பகுதிகளில் "பைன்", "லார்ச்" போன்ற மர வகைகள் காணப்படுகின்றன. பல வகையான பெரணிச் செடிகள், பூஞ்செடிகள், பூசணங்கள், பாசிகள் என்பனவும் உள்ளன. இங்குள்ள காட்டு விலங்குகளுள், மான், காட்டுப்பன்றி, நரி, பாட்கர், முயல் போன்ற வகைகள் அடங்கும். குறைந்த அளவில் நீரெலிகளும் உள்ளன.

செருமனியின் மாநிலங்கள்

தமிழில் செருமன் மொழியில்
செருமனியின் மாநிலங்கள் தலைநகரம் Bundesland Hauptstadt
1 பாடன் - வூர்ட்டம்பெர்க் ஸ்டுட்கார்ட் Baden-Württemberg Stuttgart
2 பயர்ன் முன்ச்சென் (Freistaat) Bayern München
3 பெர்லின் - Berlin Berlin
4 பிரண்டென்பேர்க் போட்ஸ்டம் Brandenburg Potsdam
5 பிறேமன் பிறேமன் (Freie Hansestadt) Bremen Bremen
6 ஹாம்பேர்க் - (Freie und Hansestadt) Hamburg Hamburg
7 ஹெஸன் வீஸ்பாடன் Hessen Wiesbaden
8 மெக்லென்பேர்க் - ஃபோர்போமென் சுவேரீன் Mecklenburg-Vorpommern Schwerin
9 நீடர்சாக்ஸன் ஹனோஃபர் Niedersachsen Hannover
10 நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் டுஸ்சல்டோர்ப் Nordrhein-Westfalen Düsseldorf
11 ரைன்லண்ட் - ஃபால்ஸ் மைன்ஸ் Rheinland-Pfalz Mainz
12 சார்லாந்த் சார்புருக்கன் Saarland Saarbrücken
13 சாக்ஸ்சன் டிரேஸ்டன் (Freistaat) Sachsen Dresden
14 சாக்ஸ்சன் - அன்கால்ட் மாக்டபேர்க் Sachsen-Anhalt Magdeburg
15 ஷ்லேஸ்விக் - ஹோல்ஷ்டைன் கீல் Schleswig-Holstein Kiel
16 தூறிங்கென் ஏர்ஃபூர்ட் (Freistaat) Thüringen Erfurt
ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
செருமனி
ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
அதன் மாநிலங்கள்

நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் அதிக மக்கள்தொகை-அடர்த்தி கொண்டது. ஹெஸன் மாநிலத்தில் உள்ள ஃபிரான்க்ஃபர்ட் ஜெர்மனியின் வர்த்தக தலைநகரமாகும். தேசிய விமான சேவையான 'லுஃப்ரான்சாஸா'வின் தலைமைச்செயலகம் மற்றும் விமான கிடங்கும் இங்குதான் உள்ளன. இசையமைப்பாளர் பித்தோவன் பானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மன் மொழி

ஜெர்மனியில் அதிகம் பேசப்படும் மொழி ஜெர்மன் ஆகும். இதுவே தேசிய மொழியும் ஆகும். இது ஆங்கிலம் போன்ற எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் மிகவும் வேறுபட்ட ஒலி உடையதாகும் . கூடுதலாக ä,ö,ü,ß போன்ற எழுத்துக்களும் உள்ளன. இவ்வெழுத்துகளுக்கு மேல் இருக்கும் புள்ளிக்கு 'உம்-லௌட்' (umlaut) என்று பெயர். பெயர்சொற்களுக்கு பால் (ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் எனும்) அடிப்படையில் டெயர் ('der'- ஆண்பால்), டீ ('die' - பெண்பால்), டாஸ் ( 'das' - ஒன்றன்பால்) எனும் அடைமொழி சேர்க்கப்படுகின்றது.

இந்தியாவில் ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஜெர்மனியின் புகழ்பெற்ற கோத்தே-இன்ஸ்டிட்யூட் (Goethe-Institute) இந்தியாவின் பத்து பெரிய நகரங்களில் ஜெர்மன் மொழி வகுப்புகள் நடத்தி வருகின்றது.

முக்கிய ஆறுகள்

ஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான ரைன் ஆறு 1232 கி.மீ. நீளம் கொண்டது. எல்பா மற்றும் தன்யூப் ஆகியன ரைனிற்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன.

பொருளியல் நிலை

ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
செருமனியின் நிதியத் தலைநகராக விளங்கும் பிராங்க்ஃபுர்ட் (புதிய ஐரோப்பிய நடுவண் வங்கித் தலைமை அலுவலகத்தின் படம்)
ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
ஐரோப்பாவில் தொழிலாளர் உற்பத்தித் திறன் மிக உயர்ந்த நிலையில் உள்ள நாடுகளில் செருமனியும் ஒன்று. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, 2012
ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
மெர்சிடிஸ்-பென்ஸ் மகிழுந்து. 2003 முதல் 2008 வரை உலகின் முன்னணி ஏற்றுமதியாளராக இருந்துள்ளது.
ஜெர்மனி: சொற்பிறப்பியல், வரலாறு, புவியியல் 
நாணயஞ்சார் ஒன்றியமான ஐரோ வலயத்திலும் (கரும் நீலம்), ஐரோப்பிய ஒன்றிய தனிச்சந்தையிலும் செருமனி பங்கேற்கிறது.

செருமனியின் சமூகச் சந்தைப் பொருளாதாரம் மிகவுயர் திறனுடைய தொழிலாளர்களையும் பெரும் மூலதனப் பங்குகளையும், மிகக் குறைந்த நிலையில் ஊழலையும், மிக உயர்ந்த புத்தாக்கத் தூண்டலையும் கொண்டதாக விளங்குகிறது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய, செல்வாக்குள்ள தேசிய பொருளாதாரமான செருமனி உலகில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நான்காவதாகவும்மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவதாகவும் உள்ளது. 2011இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் நிகர பங்களிப்பாளர்களில் பெரும் நாடாக செருமனி இருந்துள்ளது. மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 71% சேவைத்துறையிலும் 28% தொழிலுற்பத்தியிலும் 1% வேளாண்மையிலும் கிடைக்கின்றது. தேசிய வேலையில்லாதோர் விழுக்காடு அலுவல்முறையாக ஏப்ரல் 2014இல் 6.8% ஆக இருந்தது. இதில் முழுநேர வேலைத் தேடும் பகுதிநேர ஊழியரும் அடங்கி உள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார, அரசியல் ஒற்றுமைக்கு செருமனி முயன்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையேயான உடன்பாடுகள் மற்றும் ஐ.ஒ. சட்டங்களுக்கேற்ப இதன் வணிகக் கொள்கைகள் வரையறுக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொது நாணயம், ஐரோ, செருமனியில் சனவரி 1, 2002இல் அறிமுகப்படுத்தப்பட்டது. செருமனியின் நாணயஞ்சார் கொள்கைகளை ஐரோப்பிய நடுவண் வங்கி தீர்மானிக்கின்றது. செருமானிய மீளிணைவின் இருபதாண்டுகளுக்குப் பிறகும் வாழ்க்கைத்தரமும் தனிநபர் வருமானமும் முந்தைய மேற்கு செருமனிப் பகுதிகளில் முந்தைய கிழக்கு செருமனிப் பகுதிகளை விடக் கூடுதலாக உள்ளது. கிழக்கு செருமனியின் நவீனமயமாக்கலும் ஒன்றிணைப்பும் நீண்டநாள் செயற்பாடாக உள்ளது; 2019 வரை நீடிக்கும் என மதிப்பிடப்படுகின்றது. மேற்கிலிருந்து கிழக்கிற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ $80 பில்லியன் பரிமாறப்படுகின்றது. சனவரி 2009 இல் செருமானிய அரசு பொருளியல் நிலையைத் தூண்டும் விதமாகவும் நலிந்த துறைகளைக் காப்பாற்றவும் €50 பில்லியன் திட்டம் அறிவித்துள்ளது.

உலகில் நடக்கும் முன்னணி வணிக விழாக்களில் மூன்றில் இரண்டு செருமனியில் நடக்கின்றன.

2010ஆம் ஆண்டில் வருமானத்தின் அடிப்படையில், பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட, உலகின் முதல் 500 பெரிய நிறுவனங்களில் (பார்ச்சூன் குளோபல் 500) 37 செருமனியைத் தலைமையிடமாகக் கொண்டவை. செருமனியின் மிகவும் அறியப்பட்ட வணிக நிறுவனங்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ், பி.எம்.டபிள்யூ, எஸ்ஏபி, சீமென்ஸ், போல்க்ஸ்வேகன், அடிடாசு, ஆடி, அலையன்ஸ், போர்ஷ், பேயர், போஸ்ச், மற்றும் நிவியா. செருமனியின் சிறு,குறு நிறுவனங்கள் அவற்றின் சிறப்புத்திறனுக்காக அறியப்பட்டவை. தங்கள் துறையில் தனிச்சிறப்பு பெற்றுள்ள இத்தகைய 1000 நிறுவனங்கள் மறைந்துள்ள வாகையாளர்களாக மதிப்பிடப்படுகின்றனர்.

புகழ் பெற்ற ஜெர்மானியர்கள்

உணவு

செருமானியர்களின் உணவுப்பழக்கம் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான உணவை தமது பிரத்தியேக உணவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதும், அதன் பின்னும் அவர்கள் அனுபவித்த வறுமையும், பட்டினியும் அதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. இறைச்சி, மீன், முட்டை, மரக்கறி என்று எல்லாவிதமான உணவுகளும் இவர்களது சமையலில் இடம்பெறும். சமைப்பதில் பலவிதமான முறைகளை வைத்திருக்கிறார்கள். உணவில் எல்லாச் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பால், பாலாடைக் கட்டி, பழங்கள் போன்றவற்றையும் அதிகளவு கவனம் செலுத்தி உண்கிறார்கள். வடக்கு செருமானியர் உருளைக்கிழங்கைப் பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். உருளைக்கிழங்கை அவித்து, பொரித்து, வறுத்து, வெதுப்பி என்று பலவித முறைகளில் செய்து அதற்கு இறைச்சியோ, மீனோ சேர்த்து உண்கிறார்கள். தெற்கு செருமானியர் நூடில்ஸ், ஸ்பெற்சிலே(நூடில்ஸ்வகையில் பிரத்தியேகமான ஒன்று) க்னொய்டெல் போன்றவற்றைப் பிரதான உணவாகக் கொள்கிறார்கள். இவர்களிடம் ஏறத்தாழ 300 வகையான பாண் வகைகள் (Bread) உள்ளன. பாணை பெரும்பாலும் மாலை உணவாகவும், காலை உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். மாலையில் பாணுக்கு இடையில் மரக்கறிகள், இறைச்சித்துண்டங்கள், வூஸ்ற், சீஸ் போன்றவற்றை வைத்துச் சாப்பிடுகிறார்கள். இதை இரவுப்பாண் (Abendbrot) என்பார்கள். காலையில் பெரும்பாலும் பாணை வெண்ணெய், ஜாமுடன் சாப்பிடுவார்கள். கூடவே மரக்கறித் துண்டுகள், பாலாடைக் கட்டி போன்றவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். காலை உணவில் கண்டிப்பாக ஒரு கிண்ணம் தோடம்பழச் சாறு சேர்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு கிண்ணம் பால் கொடுக்கப்படும். காலை உணவில் தானியவகைகள் கொண்ட Cereal என்னும் உணவும் பிரதான உணவாகக் கொள்ளப்படுகிறது.

வூஸ்ட் எனப்படும் உணவு வகை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. துருக்கி நாட்டு உணவு வகையான கேபாப் ஜெர்மன் மக்களிடையே மிகுந்த வரவேற்பபைப் பெற்றுள்ளது. இத்தாலி உணவான பிற்ஸா, பாஸ்தா, லசாணியா போன்ற உணவு வகைகளும் இங்கு விரும்பப் படுகின்றன. இந்திய மற்றும் சீன உணவங்காடிகளும் இங்குள்ளன.

ஜெர்மனியில் கோயில்கள்

ஜெர்மனியில் அதிகமானோர் கிறித்தவத்தைப் பின்பற்றினாலும் மற்ற மதங்களும் இங்கு ஆதரிக்கப்படுகின்றன. ஜெர்மனியின் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் உள்ள ஹம் என்னும் ஊரில் கோபுரத்தோடு கூடிய அம்மன் கோயில் உள்ளது . ஜெர்மனியின் பல ஊர்களில் கோயில்கள் இருந்தாலும்,கோபுர அமைப்போடு இருப்பதால் ஜெர்மனியின் மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அதிக அளவில் ஹம்மில் இருக்கும் கோயிலுக்கு வருகின்றனர்.

ஜெர்மனியில் கல்வி வாய்ப்புகள்

ஜெர்மனியின் பல நகரங்களில் பல்கலைக்கழங்கள் உள்ளன . அயல் நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்க விரும்பும் மாணவர்கள் http://www.daad.de/deutschland/index.en.html எனும் இணையதளத்திலிருந்து விபரங்களை அறியலாம்.

இவற்றையும் பார்க்கவும்

செருமனி தேசிய காற்பந்து அணி
பிரான்சு ஜெர்மனி உறவு
செருமானிய உயிரியலாளர் பட்டியல்

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஜெர்மனி சொற்பிறப்பியல்ஜெர்மனி வரலாறுஜெர்மனி புவியியல்ஜெர்மனி செருமனியின் மாநிலங்கள்ஜெர்மனி ஜெர்மன் மொழிஜெர்மனி முக்கிய ஆறுகள்ஜெர்மனி பொருளியல் நிலைஜெர்மனி புகழ் பெற்ற ஜெர்மானியர்கள்ஜெர்மனி உணவுஜெர்மனி யில் கோயில்கள்ஜெர்மனி யில் கல்வி வாய்ப்புகள்ஜெர்மனி இவற்றையும் பார்க்கவும்ஜெர்மனி குறிப்புகள்ஜெர்மனி மேற்கோள்கள்ஜெர்மனி வெளி இணைப்புகள்ஜெர்மனிDe-Bundesrepublik Deutschland.oggEn-uk-Germany.oggen:Wikipedia:Media helpஆஸ்திரியாஉதவி:IPAகிமீசுவிட்சர்லாந்துசெக் குடியரசுஜெர்மன் மொழிடென்மார்க்நடு ஐரோப்பாநெதர்லாந்துபடிமம்:De-Bundesrepublik Deutschland.oggபடிமம்:En-uk-Germany.oggபால்ட்டிக் கடல்பிரான்சுபெல்ஜியம்போலந்துலக்சம்பேர்க்வட கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்கண்ணகிஏற்காடுநீதிக் கட்சிபாரத ரத்னாகடல்கொடுக்காய்ப்புளிசுதேசி இயக்கம்வட சென்னை மக்களவைத் தொகுதிதேவநேயப் பாவாணர்குணங்குடி மஸ்தான் சாகிபுஇந்தியாவின் பொருளாதாரம்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிசாகித்திய அகாதமி விருதுஉலகம் சுற்றும் வாலிபன்மருத்துவம்பயிர் வகைகள்குரோதி ஆண்டுஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சங்கம் (முச்சங்கம்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)பதினெண் கீழ்க்கணக்குமாதவிடாய்சுப்பிரமணிய பாரதிதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஐங்குறுநூறுஊராட்சி ஒன்றியம்வெ. இராமலிங்கம் பிள்ளைதமிழ் இலக்கியம்அரண்மனை (திரைப்படம்)அழகர் கோவில்மொழிபெயர்ப்புகில்லி (திரைப்படம்)குப்தப் பேரரசுகுண்டூர் காரம்பீப்பாய்கும்பகோணம்நடுகல்அன்புமணி ராமதாஸ்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைதமிழச்சி தங்கப்பாண்டியன்பெண் தமிழ்ப் பெயர்கள்வாழ்த்துகள் (திரைப்படம்)குறுந்தொகைதமிழ் தேசம் (திரைப்படம்)சிறுபஞ்சமூலம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)ஆபிரகாம் லிங்கன்சீர் (யாப்பிலக்கணம்)ஒன்றியப் பகுதி (இந்தியா)சப்தகன்னியர்நாம் தமிழர் கட்சிதிருவள்ளுவர்கருணீகர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுதனுசு (சோதிடம்)இரவீந்திரநாத் தாகூர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அய்யா வைகுண்டர்சிட்டுக்குருவிபுறநானூறுநாட்டு நலப்பணித் திட்டம்திராவிசு கெட்அருணகிரிநாதர்இரண்டாம் உலகப் போர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்சிங்கப்பூர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்எழுத்து (இலக்கணம்)ராஜஸ்தான் ராயல்ஸ்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக் கடமைகள்மூங்கில்இந்தியன் பிரீமியர் லீக்வன்னியர்பெண்🡆 More