இயற்பியல்

இயற்பியல் (பௌதிகம்) (பண்டைக் கிரேக்கம்: φύσις physis இயற்கை) என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும்.

விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.

இயற்பியல்

என்னால் நெடுந்தொலைவு காணஇயன்றது நான் மாபெரும் மனிதர்களின் தோள்களின் மேல் நின்றதாலேயே..

இயற்பியல்
இயற்பியலின் பல்வேறு நிகழ்வுகளின் உதாரணங்கள்

மிகப்பழமையான கல்வித் துறைகளுள் ஒன்று இயற்பியல் ஆகும்; வானியலையும் உள்ளடக்குவதால் மிகப் பழமையான தென்றே கூறலாம். கடந்த இரு ஆயிரவாண்டுகளாக வேதியியல், கணிதத்தின் சில கூறுகள், மற்றும் உயிரியலுடன் இயல் மெய்யியலின் பகுதியாக இயற்பியலும் உள்ளது. இருப்பினும் 17ஆம் நூற்றாண்டு அறிவியல் புரட்சிக்குப் பின்னர் இயற்கை அறிவியல் தனித்தன்மையுடன் தங்களுக்கே உரித்தான ஆய்வுநெறிகளுடன் வளர்ந்துள்ளது.

இயற்பியல் தேற்றக்கொள்கைகளை உடைய அறிவியல் மட்டுமன்று; ஓர் சோதனைமுறை அறிவியலும் ஆகும். இயற்பியல் அறிமுறை கொள்கைகளை, பிற அறிவியல் கொள்கைகளைப்போன்றே, சோதனைகள் மூலம் சரிபார்க்க இயலும்; அதேபோன்று அறிமுறைக் கொள்கைகளும் பின்னாளில் நடத்தப்படக்கூடிய சோதனைகளின் விளைவுகளை முன்னதாக கணிக்க கூடியன. இயற்பியல் உயிரி இயற்பியல், குவைய வேதியியல் என பல்வேறு துறையிடை ஆய்வுப்பகுதிகளிலும் பங்கேற்பதால் இயற்பியலின் எல்லைகள் இவையென வரையறுப்பது இயலாததாக உள்ளது. இயற்பியலின் பல புதிய கண்டுபிடிப்புகள் பெரும்பாலான நேரங்களில் மற்ற அறிவியல் துறைகளில் அடிப்படை இயக்குவிசைகளை விளக்குவதாகவும் புதிய ஆய்வுப்பகுதிகளைத் திறப்பதாகவும் உள்ளது.

இயற்பியல் அறிமுறைக்கொள்கை முன்னேற்றங்கள் புதிய தொழினுட்பங்கள் உருவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. காட்டாக, மின்காந்தவியல் அல்லது அணுக்கருவியல் குறித்த கண்டுபிடிப்புக்கள் மனித வாழ்வில் நேரடியாக மாற்றம் ஏற்படுத்திய தொலைக்காட்சி, கணினிகள், வீட்டுக் கருவிகள், மற்றும் அணு குண்டுகள் போன்ற கருவிகள் உருவாக்கத்திற்கு காரணமாயின; வெப்ப இயக்கவியல் ஆய்வுகளால் தொழில்மயமானது; விசையியல் முன்னேற்றங்கள் நுண்கணித வளர்ச்சிக்கு வித்தானது.

இயற்கை நிகழ்வுகளை திருத்தமாகவும் உள்ளபடியாகவும் கண்டறிய இயற்பியலில் எடுக்கப்படும் முயற்சிகளால் எண்ணவியலா எல்லைகளை இது எட்டியுள்ளது; தற்போதைய அறிவுப்படி, அணுவினும் மிகச்சிறிய நுண்துகள்களைப் பற்றியும் பேரண்டத்தின் தொலைவிலுள்ள விண்மீன்களின் உருவாக்கம் குறித்தும் எவ்வாறு நமது பேரண்டம் உருவாகியிருக்கலாம் என்றும் இயற்பியல் விவரிக்கிறது. இந்த மாபெரும் கற்கை டெமோக்கிரட்டிசு, எரடோசுதெனீசு, அரிசுட்டாட்டில் போன்ற மெய்யியலாளர்களிடம் துவங்கி கலீலியோ கலிலி, ஐசாக் நியூட்டன், லியோனார்டு ஆய்லர், ஜோசப் லூயி லாக்ராஞ்சி, மைக்கேல் பரடே, ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்சு போர், மேக்ஸ் பிளாங்க், வெர்னர் ஐசன்பர்க், பால் டிராக், ரிச்சர்டு ஃபெயின்மான், ஸ்டீபன் ஹோக்கிங் போன்ற இயற்பியலாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.

வரலாறு

இயற்பியல் 
ஐசாக் நியூட்டன் (1643–1727)
இயற்பியல் 
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879–1955)
இயற்பியல் 
மேக்ஸ் பிளாங்க் (1858–1947)

பல தொன்மையான நாகரிகங்கள் விண்மீன்களும் வானத்தில் தோன்றும் நிகழ்வுகளும் குறித்து விளக்கம் தேடி வந்துள்ளன. இவற்றில் பல இயல்பானவையாக இல்லாது மெய்யியல் சார்ந்து இருந்தன. இயற்கை மெய்யியல் என்று அறியப்படும் இக்கருதுகோள்கள் கி.மு 650–480 கால கிரேக்கத்தில் பரவி இருந்தன. தேலேஸ் போன்ற சாக்ரடீசுக்கு முந்தைய மெய்யியலாளர்கள் இயற்கை நிகழ்வுகளுக்கு இயற்கைக்கு ஒவ்வாத விளக்கங்களை எதிர்த்து வந்துள்ளனர்;ஒவ்வொரு நிகழ்விற்கும் ஓர் இயற்கையான காரணம் இருக்கும் என வாதிட்டனர். இவர்கள் காரணங்களாலும் உய்த்துணர்வாலும் சரிபார்க்கப்பட்ட கருத்துக்களை முன் வைத்ததுடன் இவர்களது பல கருதுகோள்களும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. இருப்பினும் புவியை மையமாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட இக்கருதுகோள்கள் சமயங்களின் ஆதரவுடன் அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு கோலோச்சின.

அறிவியலின் இருண்ட காலமாக அறியப்படும் இக்காலம் 1543இல் தற்கால வானியலின் தந்தை என அறியப்படும் நிக்கோலசு கோப்பர்னிக்கசு வெளியிட்ட சூரியனை மையமாகக்கொண்ட ஆய்வுக் கட்டுரையால் முடிவுக்கு வந்தது. கோப்பர்னிக்கசு கோட்பாட்டளவில் முன்மொழிந்தாலும் இதற்கான சோதனைபூர்வ சான்றுகள் இயற்பியலின் தந்தை என அறியப்படும் கலீலியோ கலிலியால் வழங்கப்பட்டது. பைசா பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்த கலிலி தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ந்தும் சாய்தளங்களில் சோதனைகள் நடத்தியும் கோப்பர்னிக்கசு கோட்பாடுகளுக்கு சான்றுகள் அளித்தார். மேலும் அறிவியல் சோதனைகள் மூலமாக கோட்பாடுகளால் எட்டப்பட்ட தீர்வுகளை சரிபார்க்க இயலும் என்று நிறுவினார். இயற்பியல் முறைமைகள் தொடர்ந்து யோகான்னசு கெப்லர், பிலைசு பாஸ்கல், கிறித்தியான் ஐகன்சு போன்ற அறிஞர்களின் பங்களிப்பால் வலுப்பெற்றன.

நவீன ஐரோப்பியர்களின் துவக்ககாலத்தில் இந்த சோதனை மற்றும் அளவியல் சார்ந்த முறைமைகளைக் கொண்டு தற்போது இயற்பியல் விதிகள் என அறியப்படும் விதிமுறைகளை உருவாக்கினர். இக்காலத்திலிருந்து செவ்வியல் இயற்பியல் என அறியப்பட்டது. யோகான்னசு கெப்லர், கலீலியோ கலிலி மற்றும் குறிப்பாக நியூட்டன் பல்வேறு இயக்கவிதிகளை ஒருங்கிணைத்தனர். தொழிற்புரட்சியின் காலத்தில் ஆற்றல் தேவைகள் கூடியமையால் வெப்ப இயக்கவியல், வேதியியல் மற்றும் மின்காந்தவியல் குறித்த ஆய்வுகள் முன்னுரிமை பெற்றன.

மேக்ஸ் பிளாங்க்கின் குவாண்டம் கோட்பாடுகள் மற்றும் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாடுகளால் தற்கால இயற்பியல் உருவானது; ஐசன்பர்க், எர்வின் சுரோடிங்கர் மற்றும் பால் டிராக் பங்களிப்புகளால் குவாண்டம் விசையியல் தொடர்ந்து முன்னேறியது.

மையக் கோட்பாடுகள்

இயற்கையின் அடிப்படை உண்மையைக் கண்டறிய முற்படும் இயற்பியல், பல பிரிவுகளைக் கொண்டுள்ளபோதும், முதன்மையான ஐந்து கோட்பாடுகளாக இவற்றைக் குறிப்பிடலாம்: பேரியலளவிலான நகர்வுகளைக்குறித்த மரபார்ந்த விசையியல்; ஒளி முதலிய மின்காந்த நிகழ்வுகளை விவரிக்கும் மின்காந்தவியல்; வெளிநேரம் மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு விதிகளை விவரிக்கும் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாடு; மூலக்கூற்று நிகழ்வுகளையும் வெப்பப் பரிமாற்றத்தையும் விவரிக்கும் வெப்ப இயக்கவியல் மற்றும் அணு உலகின் நடத்தைகளை ஆராயும் குவாண்டம் விசையியல் ஆகும் .

மரபார்ந்த விசையியல்

இயற்பியல் 
ஒரு விசைக் கருவியான சுழல் காட்டி.

மரபார்ந்த விசையியல் ஒளியின் வேகதை விட மிகக் குறைவான விரைவோட்டத்துடன் நகரும் பெரிய அளவிலுள்ள பொருட்களை விவரிக்கிறது. விசைகளால் பாதிப்படைவதையும் பொருட்களின் நகர்வுகளையும் குறித்து ஆராய்கிறது. இதனை பொருட்கள் நிலையாக இருக்கும்போது அவற்றின் மீதான விசைகளின் தாக்கம் குறித்த நிலையியல் என்றும் காரணங்களைக் குறித்து இல்லாது நகர்வுகளை மட்டுமே ஆராயும் அசைவு விபரியல் என்றும் நகர்வுகளையும் அவற்றை பாதிக்கும் விசைகள் குறித்தும் ஆராயும் இயக்க விசையியல் உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். பொருண்ம விசையியல் மற்றும் பாய்ம இயந்திரவியல் எனவும் வகைப்படுத்தலாம். பாய்ம இயந்திரவியலில் பாய்ம நிலையியல், பாய்ம இயக்கவியல், காற்றியக்கவியல், மற்றும் காற்றழுத்தவியல் உட்பிரிவுகளாகும். காற்று அல்லது பிற ஊடகங்களில் உள்ள துகள்களின் அசைவுகளினாலேயே ஒலி கடத்தப்படுவதால் ஒலியைக் குறித்த ஒலியியல் விசையியலின் ஒரு பிரிவாகவே கருதப்படுகிறது. மனிதர்களால் கேட்கவியலாத அதியுயர் அதிர்வெண் உடைய ஒலி அலைகள் மீயொலி எனப்படுகின்றன.

மின்காந்தவியல்

இயற்பியல் 
காந்தக் கோளப் பரப்பு.

மின் புலத்தினாலும் காந்தப் புலத்தினாலும் செறிவூட்டப்பட்ட துகள்களின் வினையாற்றலை விவரிக்கும் இயற்பியல் பிரிவே மின்காந்தவியல் ஆகும். இது மேலும் நிலையான மின்மங்களின் இடையேயான வினையாற்றலான நிலைமின்னியல், அசைவிலுள்ள மின்மங்களின் இடைவினைகளை ஆராயும் இயக்க மின்னியல் மற்றும் கதிர்வீச்சு என உட்பிரிவுகளாகப்பிரிக்கலாம். மரபார்ந்த மின்காந்தவியல் கோட்பாடுகள் லாரன்சு விசை மற்றும் மாக்சுவெல்லின் சமன்பாடுகளைஅடிப்படையாகக்கொண்டவை.

மின்காந்தவியல் ஒளி போன்ற பல நிகழ் உலக நிகழ்வுகளை விளக்குகிறது. ஒளியானது விரைந்தோடும் மின்னூட்டப்பெற்ற துகள்களிலிருந்து அலைவு மின்காந்தப் புலம் பரப்பப்படுவதாகும். ஈர்ப்பு விசையை அடுத்து நாள்தோறும் நாம் காணும் பெரும்பாலான நிகழ்வுகள் மின்காந்தவியலின் தாக்கத்தாலேயாகும்.

நுண்ணலை, அலைவாங்கிகள், மின்கருவிகள், தகவல் தொடர்பு செயற்கைக்கோள், உயிரிமின்காந்தவியல், பிளாஸ்மா, அணுக்கரு ஆய்வுகள், ஒளியிழை, மின்காந்த குறுக்கீடு மற்றும் ஒவ்வுமை, மின்னியந்திர ஆற்றல் மாற்றுதல், கதிரலைக் கும்பா மூலம் வானிலை மற்றும் சேய்மை கண்காணிப்பு போன்ற பல துறைகளில் மின்காந்தவியலின் தத்துவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்மாற்றி, உணாத்திகள், வானொலி / தொலைக்காட்சி, தொலைபேசிகள், மின் இயக்கிகள், அலைச்செலுத்திகள், ஒளியிழை மற்றும் சீரொளி ஆகியன சில மின்காந்தவியலைப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும்.

இயற்பியல் 
மின்காந்த அலைக்கற்றை.

சார்புக் கோட்பாடு

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அறிமுகப்படுத்திய சார்புக் கோட்பாடு இரு ஆய்வுப் பிரிவுகளாக பிரிந்துள்ளது:சிறப்புச் சார்புக் கோட்பாடு மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடு.

சிறப்புச் சார்புக் கோட்பாட்டில், ஐன்ஸ்டைன், என்ட்ரிக் லொரன்சு மற்றும் ஹெர்மான் மின்கோவ்ஸ்கி போன்றோர் வெளி மற்றும் நேரம் குறித்த கருத்துக்களை ஒன்றிணைத்து நான்கு பரிமானங்களைக் கொண்ட வெளிநேரம் என்ற கோட்பாட்டை நிறுவினார். நியூட்டனின் அறுதியிட்ட நேரத்தைப் புறக்கணித்ததுடன் மாற்றவியலா ஒளியின் வேகம், கால விரிவு, நீளக் குறுக்கம் மற்றும் பொருண்மைக்கும் ஆற்றலுக்கும் உள்ள சமானம் ஆகிய புதுக்கருத்துக்களை இக்கோட்பாடு அறிமுகப்படுத்தியது. நியூட்டனின் விதிகள் இக்கோட்பாட்டின் ஒரு சிறப்புநிலைத் தீர்வாக உள்ளது.

மேலும், பொதுச் சார்புக் கோட்பாடு வெளிநேரத்தின் வடிவியல் உருக்குலைவாக நியூட்டனின் ஈர்ப்பு விதியை ஆராய்கிறது. திணிவுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்ட முந்தைய கோட்பாடுகளைப் போலன்றி இந்தக் கோட்பாடு ஆற்றலையும் வெளிநேர வளைவுகள் மூலம் கணக்கில் கொள்கிறது. இதற்கென தனியான கணிதப் பிரிவாக பல்திசையன் நுண்கணிதம் உருவாகியுள்ளது. ஈர்ப்புவிசையால் ஒளி வளைக்கப்படுதல், புதனின் சுற்றுப்பாதையினால் மாற்றம் போன்ற நிகழ்வுகளை இக்கோட்பாட்டால் விளக்க முடிகிறது. பொதுச் சார்புக் கோட்பாட்டினால் வானியற்பியலில் பயன்படும் ஓர் புதிய ஆய்வுத்துறையாக அண்டவியல் உருவாகியுள்ளது.

வெப்ப இயக்கவியல்

இயற்பியல் 
மேற்காவுகை மூலம் வெப்பத்தின் இடப்பெயர்வு.

வெப்ப இயக்கவியல் எவ்வாறு வெப்பப் பரிமாற்றம் நிகழ்கிறது என்றும் இந்த ஆற்றலைக் கொண்டு எவ்வாறு வேண்டியப் பணியை செய்திட இயலும் என்றும் ஆராய்கிறது. இந்த பிரிவில் பொருட்களின் (திண்மம், நீர்மம், வளிமம் போன்ற) நிலை எவ்வாறு மாற்றமடைகின்றன எனவும் ஆயப்படுகிறது. பேரளவில் காணும்போது, கன அளவு, அழுத்தம், வெப்பநிலை போன்ற மாறிகளின் மாற்றங்களால் எவ்வாறு பொருட்கள் தாக்கமடைகின்றன என்பதையும் விவரிக்கிறது. வெப்ப இயக்கவியல் நான்கு முதன்மை விதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது: வெப்பவியக்கவிசைச்சமநிலை (அல்லது சூன்ய விதி), ஆற்றல் அழிவின்மை கொள்கை (முதல் விதி), சிதறத்தின் தற்காலிக உயர்வு (இரண்டாம் விதி) மற்றும் தனிச்சுழியை எட்டவியலாமை (மூன்றாம் விதி).

வெப்ப இயக்கவியலின் தாக்கத்தால் தற்போது புள்ளிநிலை இயக்கவியல் என அறியப்படுகின்ற புதிய இயற்பியல் பிரிவு உருவானது. இந்தப் பிரிவு வெப்ப இயக்கவியலைப் போன்றே வெப்ப பரிமாற்ற செயல்முறைகளை குறித்ததாக இருப்பினும் பெருநோக்கில் அல்லாது பொருட்களின் மூலக்கூறுகளின் நோக்கில் ஆராய்வதாகும். பொருட்கள் பல்லாயிரக் கணக்கான மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டிருப்பதால் ஒரு மூலக்கூற்றின் தன்மையைக் கொண்டு தீர்வு காண்பது பிழையாக முடியம்; எனவே இவற்றை ஒரு தொகுப்பாக அல்லது குழப்பமான சமவாய்ப்புடைய இயக்கங்களாக புள்ளியியல் மற்றும் விசையியலைக் கருத்தில் கொண்டு பொருட்களின் நடத்தையை விவரிக்கிறது. சுருக்கமாக நுண்ணிய கட்டமைப்பைக் கொண்டு பேரளவு விளைவுகளை விவரிப்பதாக இப்பிரிவு உள்ளது.

வெப்ப இயக்கவியல் விசைப்பொறிகள், நிலை மாறிகள், வேதியியற் தாக்கம், போக்குவரத்து நிகழ்வுகள், கருங்குழி போன்ற பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. வெப்பவியக்கவியல் தீர்வுகள் மற்ற இயற்பியல் பிரிவுகளிலும் வேதியியல், வேதிப் பொறியியல், வான்வெளிப் பொறியியல், பொருளியல், இயந்திரவியல் பொறியியல், உயிரணு உயிரியல், உயிர்மருத்துவப் பொறியியல், மற்றும் பொருளறிவியல் போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

குவாண்டம் விசையியல்

அணு அமைப்புகள் மற்றும் அணு உட்கூறமைவுகள் குறித்தும் மின்காந்த அலைகளுடன் இவற்றின் இடைவினைகள் குறித்தும் கண்காணிக்கக்கூடிய அளவுகளால் விவரிக்கின்ற இயற்பியலின் பிரிவே குவாண்டம் விசையியல் ஆகும். இது அனைத்து சக்தியும் தனித்தனி துணுக்கங்கள் அல்லது பொதிகள் அல்லது குவாண்டங்களாக வெளிப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது.

குவாண்டம் கோட்பாட்டின்படி, அலைச்சார்பு மூலமாக அறிந்துகொள்ளக்கூடிய அடிப்படைத் துகள்களின் கவனிக்கப்படும் பண்புகளை குவாண்டம் விசையியல் நிகழ்தகவு அல்லது புள்ளிநிலை கணக்குகள் மூலமே நிரூபிக்கிறது. மரபார்ந்த விசையியலின் மையமாக நியூட்டனின் இயக்க விதிகளும் ஆற்றல் அழிவின்மையும் அமைந்துள்ளதைப் போன்று குவாண்டம் விசையியலில் சுரோடிங்கர் சமன்பாடு மையமாக உள்ளது. ஓர் இயங்கு அமைப்பின் வருங்கால நடத்தையை முன்னறியவும் பகுத்தாய்ந்து நிகழ்வுகளின் அல்லது முடிவுகளின் சரியான நிகழ்தகவுகளை அலை இயக்க சார்புகள் மூலம் தீர்மானிக்கவும் இச்சமன்பாடு உதவுகிறது.

இயற்பியல் 
1927இல் நடைபெற்ற சோல்வே மாநாட்டில் புகழ்பெற்றியற்பியலாளர்கள்: ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், வெர்னர் ஐசன்பர்க், மேக்ஸ் பிளாங்க், என்ட்ரிக் லொரன்சு, நீல்சு போர், மேரி கியூரி, எர்வின் சுரோடிங்கர் மற்றும் பால் டிராக்.

மரபார்ந்த விசையியலில் பொருட்கள் குறிப்பிட்ட தனித்தன்மையான வெளியை நிரப்பியிருப்பதுடன் தொடர்ந்து இயங்குகிறது. ஆனால் குவாண்டம் விசையியலில் ஆற்றல் துணுக்கங்களாக வெளியிடப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் இயங்குகிறது. இந்த சத்திச்சொட்டு சில நேரங்களில் அணு உட்கூற்றுத் துகள்களைப் போன்றே நடந்து கொள்கின்றன. மேலும் சில துகள்கள் நகரும்போது அலைப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன; இவை வெளியிடத்தில் குறிப்பிட்ட இடத்தை எடுத்துக்கொள்ளாது பரவி உள்ளது. குறிப்பிட்ட அதிர்வெண்களில் (அல்லது அலைநீளங்களில்) உள்ள ஒளியை அல்லது பிற கதிர்வீச்சை அணுக்கள் வெளியிடவோ உன்கொள்ளவோ செய்கின்றன; இவற்றை அந்த அணுக்களால் ஆன தனிமத்தின் அலைக்கற்றைக் கோட்டிலிருந்து அறிய முடிகிறது. குவாண்டம் கோட்பாடு இந்த அதிர்வெண்கள் குறிப்பிட்ட ஒளி குவாண்டம்களுக்கு (ஒளியணு) ஒத்திருப்பதாக காட்டுகிறது. இது அணுவிலுள்ள எதிர்மின்னிகள் குறிப்பிட்ட ஆற்றல் மதிப்புக்களையே கொள்ள அனுமதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. ஒர் எதிர்மின்னி தனது ஆற்றல் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாறும்போது இவ்விரு ஆற்றல் மதிப்புக்களுகிடையே ஆன ஆற்றல் சத்திச்சொட்டாக வெளியிடப்படுகிறது அல்லது உட்கொள்ளப்படுகிறது. இந்த ஒளியலையின் அதிர்வெண் ஆற்றல் வேறுபாட்டிற்கு நேரடித் தொடர்புடன் உள்ளது.

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கண்டறியப்பட்ட குவாண்டம் விசையியல் இயற்பியலில் ஓர் புரட்சியாக அமைந்தது. தற்கால இயற்பியலின் ஆய்வுகளில் அடிப்படையாக குவாண்டம் விசையியல் அமைந்துள்ளது.

நவீன இயற்பியல்

இயற்பியல் 
இயற்பியலின் அடிப்படை பிரிவுகள்

மரபார்ந்த இயற்பியல் வழமையான அளவுகளில் காணப்படும் பொருட்கள் மற்றும் ஆற்றலின் பண்புகளைக் குறித்து விவரிக்கையில் நவீன இயற்பியல் மிகவும் வழக்கத்திற்கு மாறான அளவுகளில், மிகப்பெரும் அளவுகளில் அல்லது மிகச்சிறிய அளவுகளில் காணப்படும் பொருட்கள் மற்றும் ஆற்றலின் நடத்தையை விவரிக்கிறது. காட்டாக, அணு மற்றும் அணுக்கருவியல் ஆய்வுகள் ஓர் தனிமத்தின் மிக மிகச் சிறிய அளவில் ஆய்கின்றன. அடிப்படைத் துகள்களைக் குறித்த ஆய்வுகளில் இவற்றைவிட சிறிய அளவிலான பொருட்கள் ஆராயப்படுகின்றன. மாபெரும் துகள் முடுக்கிகளில் இத்துகள்களை உருவாக்க மிக மிக உயர்ந்த நிலையில் ஆற்றல் வழங்கப்பட வேண்டி உள்ளதால் இந்த இயற்பியல் பிரிவு மிக உயர் ஆற்றல் இயற்பியல் எனவும் அறியப்படுகிறது. இந்த அளவுகளில் நாம் வழக்கமாக கொள்ளும் வெளியிடம், நேரம், பொருள், ஆற்றல் குறித்த நிலைப்பாடுகள் ஏற்கக் கூடியனவாக இல்லை.

ஆராய்ச்சி

இயற்பியலாளர்கள் இயற்பியல் கோட்பாடுகளை நிறுவ அறிவியல் முறையை பயன்படுத்துகின்றனர். ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையை பயன்படுத்தி கோட்பாட்டின் உள்ளார்ந்த கேள்விக்கு சோதனைகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளையும் சோதனையை அவதானித்ததின் மூலம் பெறப்பட்ட முடிவையும் தொடர்புபடுத்தி விடையை கண்டறிகிறார்கள். சோதனையையும் அதை அவதானிப்பதின் மூலமும் பெறப்படும் முடிவுகளையும் சேகரித்து அவற்றை கோட்பாட்டின் கருதுகோளுடனும் ஊகங்களுடனும் ஒப்பிட்டுவதன் மூலம் கோட்பாட்டின் ஏற்புத்தன்மையை முடிவு செய்கிறார்கள்.

கோட்பாடு சோதனை

இயற்பியலாளர்கள் சோதனைகளால் எதிர்பார்கப்பட்ட பண்புகளை கண்டறியும் கருவிகளையும் புதிய நிகழ்வுகளையும் கண்டறிய முயலும் அதே சமயத்தில் கோட்பாடுகளை விளங்கிக்கொள்ள இயற்பியலாளர்கள் சோதனைகளையும் அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட பண்புகளையும் கண்டறிய உதவ கோட்பாட்டாளர்கள் கணித மாதிரியை உருவாக்க முயல்கிறார்கள். கோட்பாடும் சோதனையும் தனித்தனியாக உருவானாலும் அவை இரண்டும் ஒன்றுக்கொன்று அதிகளவில் சார்ந்துள்ளன. கோட்பாடுகளை இயற்பியலாளர்கள் நிறுபிக்க முடியாத போதும் புதிய கோட்பாடுகள் இயற்பியலாளர்கள் எதிர்பார்த்த முடிவுகளை தரும் போதும்கூட இயற்பியல் முன்னேற்றம் காண்கிறது.

கோட்பாட்டிலும் சோதனையிலும் ஈடுபடுபவர் கோட்-இயல்பாளர் என்று அழைக்கபடுகிறார். இவர்கள் சிக்கலான நிகழ்வை சோதனையில் அவதானித்து அதை அடிப்படை கோட்பாட்டுடன் நிறுவ முயல்பவர்கள்.

கோட்பாட்டு இயற்பியல் என்பது தத்துவத்தால் ஈர்கப்பட்டது என்பது அதன் வரலாற்றை பார்க்கும் போது தெரிகிறது. மின்காந்தவியல் இதில் ஒன்று. நமது அண்டத்துக்கு அப்பால் இருப்பவற்றை கோட்பாட்டு இயற்பியல் தத்துவார்த்த முறையில் அவ்வாறு இருக்கலாம் என்ற முறையிலேயே கணிக்கிறது. பேரண்டம், இணையண்டம் போன்றவை அப்படிப்பட்டவையே. ஏற்கனவே உள்ள கோட்பாட்டின் சில சிக்கல்களுக்கு விடை காண முடியும் என்ற நம்பிக்கையில் கோட்பாட்டாளர்கள் இத்தகைய எண்ணங்களை உருவாக்குகிறார்கள்.

இயற்பியலின் பிரிவுகள்

இயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு:

இயற்பியல் அளவுகளும் பரிமாணங்களும்

நேரடியாகவோ பிற வழிமுறைகளின் மூலமாகவோ அளவிடப்படும் இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும். ஒரு பொருள் ஒன்றின் நீளம், அகலம், உயரம், நிறை ஆகியவை பொருத்தமான அளக்கும் கருவிகளினால் அளக்கப்படக்கூடியவை. எனவே இவை அடிப்படை அளவுகள் என அழைக்கப்படும். அப்பொருளின் பரப்பளவு, கன அளவு, அடர்த்தி போன்றவற்றை கணித்தல் சமன்பாடுகள் மூலம் பெறக்கூடியவையாகும். இவை வழி அளவுகள் எனவும் அழைக்கப்படும். அடிப்படை அளவுகள் நீளம், காலம், நிறை, மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு, பொருளின் அளவு ஆகிய ஏழு ஆகும். வழி அளவுகள் வேகம், முடுக்கம், விசை, வேலை, ஆற்றல், பரப்பளவு மற்றும் பல.

முதன்மை இயற்பியல் அளவுகள்

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

    பொதுவானவை
    அமைப்புகள்

Tags:

இயற்பியல் வரலாறுஇயற்பியல் மையக் கோட்பாடுகள்இயற்பியல் நவீன இயற்பியல் ஆராய்ச்சிஇயற்பியல் இயற்பியலின் பிரிவுகள்இயற்பியல் அளவுகளும் பரிமாணங்களும்இயற்பியல் இவற்றையும் பாக்கஇயற்பியல் மேற்கோள்கள்இயற்பியல் வெளி இணைப்புகள்இயற்பியல்ஆற்றல்இயற்கைபண்டைக் கிரேக்க மொழிபேரண்டம்பொருள்விசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிமுத்துலட்சுமி ரெட்டிஇராவணன்யூடியூப்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்விண்ணைத்தாண்டி வருவாயாபம்மல் சம்பந்த முதலியார்உருவக அணிடி. டி. வி. தினகரன்இந்தியக் குடியரசுத் தலைவர்கே. என். நேருஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்அயோத்தி இராமர் கோயில்தமிழ்நாடுதமிழ்நாடு அமைச்சரவைகம்பர்திராவிடர்தூது (பாட்டியல்)மத்திய சென்னை மக்களவைத் தொகுதிஐயப்பன்சினேகாபெண் தமிழ்ப் பெயர்கள்சோழர்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகருணாநிதி குடும்பம்தேசிக விநாயகம் பிள்ளைஅகத்தியர்அயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்மாணிக்கவாசகர்தனுசு (சோதிடம்)நவமிதிருப்பாவைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)முதுமொழிக்காஞ்சி (நூல்)வி. ஜெயராமன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நுரையீரல் அழற்சிராதிகா சரத்குமார்கவுண்டர்திருவண்ணாமலைகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசிதம்பரம் நடராசர் கோயில்நாயன்மார்காவிரி ஆறுசச்சின் (திரைப்படம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்புதுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)மனித உரிமைவீரமாமுனிவர்தலைவாசல் விஜய்திரைப்படம்வௌவால்டிரைகிளிசரைடுகுண்டலகேசிஸ்ரீலீலாஇயோசிநாடிதிருவிழாசின்னக்கண்ணம்மாவிஜய் (நடிகர்)அழகு முத்துக்கோன்தாயுமானவர்வடிவேலு (நடிகர்)கருக்காலம்நீர்சிலப்பதிகாரம்போயர்பஞ்சாயத்து ராஜ் சட்டம்நாடாளுமன்றம்கணையம்இன்னா நாற்பதுசூல்பை நீர்க்கட்டிபாரதிதாசன்திருச்சிராப்பள்ளிகுறிஞ்சி (திணை)மெய்யெழுத்து2024 இந்தியப் பொதுத் தேர்தல்சிறுபாணாற்றுப்படைஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்🡆 More